சமீபத்திய பதிவுகள்

வேட்பாளரை அடித்தாரா விஜயகாந்த்?கிளியர் ரிப்போர்ட்

>> Monday, April 4, 2011


டந்த 29-ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில், தே.மு.தி.க. மற்றும்கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக விஜயகாந்த்தின் கிறுகிறு பிரசாரம்! 
மாலை 3 மணிக்கு தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே, பேச்சைக் கேட்கக் கூட்டம் திரண்டிருக்க... வேனில் விஜயகாந்த்தோடு பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி​யின் அ.தி.மு.க வேட்பாளர் பழனியப்பன், பென்னாகரம் தொகுதியின் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளர் நஞ்சப்பன், தர்மபுரி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் ஆகியோர் இருந்தனர்!பேசத் தொடங்கிய விஜயகாந்த், ''ஊழலும், குடும்ப ஆதிக்கமும் நிறைந்த கருணாநிதியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கணும். அதுக்குத்தான் மக்களாகிய உங்கள் விருப்பப்படி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வெச்சுக்கிட்டேன். நமது கூட்டணி வேட்பாளர்களுக்கு நீங்கள் ஒவ்வொருவரும் போடும் ஓட்டு, தி.மு.க. ஆட்சிக்கு வைக்கப்போகும் வேட்டு.

ஊழலில் கொட்டமடிக்கும் தி.மு.க-வோடு சில சாதித் தலைவர்களும் கைகோத்திருக்காங்க. 'தமிழ் வாழ்க'ன்னு வெளியில சொல்லிக்கிட்டுத் திரிஞ்சாலும், தமிழும், தமிழ் இனமும் அழியக் காரணமா இருப்பதே இந்தக் கருணாநிதிதான். ஆனா, அவர்கூட போய் திருமாவளவன் இருப்பதை நினைச்சாத்தான் எனக்கு வேடிக்கையா இருக்குது. அதே மாதிரி 'மரம் வெட்டி'ன்னு ஒரு சாதித் தலைவர் இருக்கார். என் பெயரைத் தன் வாயால் உச்சரிக்க மாட்டேன்னு அவர் சொல்லிட்டதால், நானும் அவர் பெயரை சொல்ல விரும்பலை. அந்த மரம் வெட்டித் தலைவரும், ஊழல்வாதியான கருணாநிதியுடன் ஆதாயத்துக்காகக் கூட்டுப் போட்டிருக்கார். 'சாதியே வேண்டாம்'கிற வர்க்கத்தைச் சேர்ந்தவன் நான். ஆனா, இங்கே பல தலைவர்கள் சாதியைக் கையில் எடுத்துத்தான் பிழைப்பை ஓட்டிக்கிட்டு இருக்காங்க. தன் சொந்த சாதி சனங்களுக்கு அவங்களால் என்ன நன்மைன்னு யோசிங்க... மக்களின் நலனைப்பத்திக் கவலைப்படாம, சுயலாபத்துக்காகத்தானே கருணாநிதி​யைத் தூக்கிப் பிடிக்கிறாங்க...'' என்று விளாசினார்.
பேச்சை முடிக்கும் தறுவாயில், வேனுக்குள் அமர்ந்திருந்த தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கர் எழுந்து நின்று, விஜயகாந்த் அருகில் நின்று கூட்டத்தைப் பார்த்து கும்பிட்டார், உடனே விஜயகாந்த், ''அதனால் மக்களே, இதையெல்லாம் மனசுல வெச்சு, உங்க வேட்பாளர் பாண்டியனுக்கு மறக்காம ஓட்டுப் போடுங்க!'' என்று கேட்டுக்கொண்டார். பெயரை மாற்றிச் சொன்னதும் வேட்பாளர் பாஸ்கர், விஜயகாந்த் காதைக் கடிக்கவே, ''மன்னிக்கனும்... ஏதோ ஞாபகத்துல பாண்டியன்னு சொல்லிட்டேன். பாஸ்கருக்கு ஓட்டுப் போடுங்க!'' என்று திருத்திக் கூறி, பிரசாரத்தை நிறைவு செய்தார்.
விஜயகாந்த் பேசியபோது, நடுநடுவே கையில் இருந்த இரண்டு மைக்குகளும் கோளாறாகி சவுண்ட் கட் ஆனது. மைக்கையும், கூடியிருந்த மக்களையும் மாறி மாறிப் பார்த்தபடியே ''இது வேற ஒண்ணு...'' என்றவர், மைக்குகளை அசைத்துச் சரிசெய்ய முயல... அப்போது மைக்குகளின் பாகங்கள் கழன்று, வேனுக்குள் விழுந்தன. அதைப் பார்த்து மைக்செட் அமைப்பின் லட்சணத்தை மேலும் கிண்டல் செய்யும் தோரணையில் மக்களைப் பார்த்தவர்... தன் ஸ்டைலில் நாக்கை மடித்துக் கடித்தபடியே வண்டிக்குள் இருந்த மைக்செட் அமைப்பாளரிடம் மைக்குகளைக் கொடுத்துவிட்டு, அவர் தலையில் தட்டினார்.
ஆனால், சில மணி நேரத்தில் நடந்ததுதான் ஹைலைட்... ஒரு டி.வி-யில், ''தர்மபுரி பரப்புரையின்போது பொது இடத்தில் விஜயகாந்த், வேட்பாளரை அடித்து உதைத்தார்... மக்கள் கடும் அதிர்ச்சி... இன்றிரவு 10 மணி செய்தியில் காணத் தவறாதீர்கள்'' என்று ஃப்ளாஷ் நியூஸ்  ஓடியது. பின்னர் இரவு 10 மணிச் செய்தியில் ஒரு வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது.
உயரமான இடத்தில் இருந்து படமாக்கப்பட்ட அந்த வீடியோவில் விஜயகாந்த் கை, வேனுக்கு  உள்ளே இருந்த ஒருவரின் தலையில் படுவதை மட்டும் சவுண்ட் எஃபெக்ட் சேர்த்து, மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினார்கள். அதைத் தொடர்ந்து அந்தக் காட்சி, 'மக்கள் தொலைக்காட்சி', 'கலைஞர் செய்தி', 'சன் செய்தி' சேனல்களிலும் ஒளிபரப்பாகவே... தமிழகம் முழுக்கப் பரபரப்பு!
நடந்த சம்பவம் பற்றி தர்மபுரி தே.மு.தி.க. வேட்பாளர் பாஸ்கரிடம் நாம் கேட்டோம். ''மைக் தொல்லை செய்தபோது, சரிசெய்யும்படி மைக் அமைப்பாளரிடம் கேப்டன் கொடுத்தார். அப்போது கீழே இருந்த அவரது தலையில் இயல்பாக கேப்டன் கைபட்டது. அப்போது நானும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாள​ரான பழனியப்​பனும் வேனுக்குள்​தான் உட்கார்ந்து இருந்தோம். ஆனா, 'என்னைத்தான் கேப்டன் அடிச்​சார்'னு தப்பான ஒரு செய்தியை ஆளும் கட்சி தரப்பு சேனல்களும் திட்டமிட்டுப் பரப்புறாங்க. இதுக்கு சட்டரீதியாகப் பாடம் புகட்டுவோம்!'' என்றார் கொதிப்பாக.
விஜயகாந்த் கை ஓங்கியதை ஒரு குறிப்பிட்ட டி.வி. இவ்வளவு பெரிதாக்க என்ன காரணம் என்று தே.மு.தி.க. புள்ளிகளிடம் விசாரித்தபோது, ''விஜயகாந்த், தன் பேச்சுக்கிடையில் ராமதாஸை மரம் வெட்டித் தலைவர் என்றுதான் குறிப்பிடுகிறார். மேலும் சாதி அரசியலை ஒரு பிடி பிடித்தார். அந்தக் கோபத்தின் உச்சகட்ட வெளிப்பாடுதான் இவ்வளவு பரபரப்புக்கும் காரணம். இதுவரைக்கும் ராமதாஸைத் திட்டி எந்தத் தலைவரும் இவ்வளவு காரசாரமாகப் பேசியது இல்லை. முதல் தடவையாக அவரைப்பற்றி கடுமையாக கேப்டன் பேசுகிறார் என்றதும், அதைத் திசைதிருப்ப இப்படிச் செயல்படுகிறார்கள். எங்கள் கேப்டன் கேட்ட கேள்விகளுக்கு ராமதாஸை முதலில் பதில் தரச் சொல்லுங்கள்!'' என்றார்கள்.
தமிழக அரசியலில் டாக்டர் ராமதாஸ் பற்றி விஜயகாந்த் வைக்கும் விமர்சனங்களை இதுவரை எந்த அரசியல் தலைவரும் செய்தது இல்லை என்பதுதான் உண்மை!
- எஸ்.ராஜாசெல்லம்

source:vikatan

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP