சமீபத்திய பதிவுகள்

300 இராமாயணங்கள் 5 உதாரணங்கள்

>> Monday, December 12, 2011



ந்துத்வா சக்திகளால் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு இன்னொரு மண்டையிடி வேண்டாமென்று தான் அந்தக் கட்டுரையை டெல்லி பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டார்கள் என்கிறார்கள் இந்திய வரலாற்று ஆய்வாளர்கள்.

பன்முகத் தன்மை கொண்ட நாடு இந்தியா. இங்கே பண்பாடு, கலாச்சாரம், இறை வழிபாடு போன்றவை இடத்துக்கு இடம் மாறுபடுகின்றன.  வேற்றுமையிலும் ஒன்றுபட்டு வாழ்வதே நம் தேசத்தின் சிறப்பு.  இந்த ஒற்றுமைக்கு ஊறு விளைவிக் கின்ற காரியங்களை அவ்வப்போது சிலர் அடாவடியாகச் செய்வதுண்டு. கடந்த மாதம், டெல்லி பல்கலைக் கழகத்தில் இளங்கலை வரலாறு படிக்கின்ற மாணவர்கள் படித்து வந்த ராமாயணங்கள் குறித்த கட்டுரை ஒன்றை பாடத் திட்டத்திலிருந்து  நீக்கியதையும்  அப்படி ஒரு நிகழ் வாகத்தான் பார்க்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.  

என்ன கட்டுரை? யார் எழுதியது? ஏன் நீக்கினார்கள்?

300 ராமாயணங்கள்.. 5 எடுத்துக்காட்டுக் கள்..' என்னும் தலைப்பில் பண்டிதர் ஏ.கே.ராமா னுஜன் தொகுத்து எழுதிய கட்டுரை அது. அய்யங்கார் பிரிவைச் சார்ந்த இவர் பிறந்தது மைசூரில்.  வரலாற்று அறிஞரான இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. 1993-ல் இயற்கை எய்தினார் ராமானுஜன். 2006-ல் இவரது கட்டுரை  பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது. 

இந்துக்கள்  கடவுளாக வணங்கும் ராமனையும் சீதையையும் பழிக்கின்ற இந்தக் கட்டுரையை நீக்க வேண்டும் என்று 2008-ல்  பாரதிய ஜனதாவின் மாணவரணியான அகில பாரத வித்யார்த்த பரிஷத் திடமிருந்துதான் முதன் முதலில்  எதிர்ப்பு கிளம்பியது. சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய ராமாயணம் மட்டுமே  சிறப்புடையது. மற்ற ராமாயணங்கள் ஏற்புடையவை அல்ல என்றனர்.  டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக் கொன்றும் பதிவானது. உயர்நீதி மன்றமோ, இந்த விவகாரத்தில் குழு ஒன்றை அமைத்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று டெல்லி பல்கலைக் கழகத்துக்கு உத்தர விட்டது.  சில நடைமுறைகள் மேற் கொண்ட பிறகு, இப்போது அகடமிக் கவுன்சில் கூடி  வாக்கெடுப்பு நடத்தி, பாடத்திட்டத்திலிருந்து இக்கட்டுரையை நீக்கிவிட்டது.  

மதரீதியான தலையீடுகள் பல் கலைக் கழகம் வரை நீண்டு பாடத்திலும் கை வைத்திருப்பதைக் கண்டித்து, பாடத்திட்டத்தில் மீண்டும் கட்டுரையைச் சேர்க்கக் கோரி பேராசிரியர்களும் மாணவர்களும் உடனே போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் வரலாற் றுத் துறை பேராசிரியர்களில் ஒருவர் உபிந்தர் சிங். டாக்டரேட் பட்டம்  பெற்று, பழங்கால இந்தியா பற்றிய பல புத்தகங்களை எழுதிய உபிந்தர்சிங், வேறு யாருமல்ல... பிரதமர் மன்மோகன்சிங்கின் மகள். பாடத் திட்ட கமிட்டியில் இவரும் இடம் பெற்றிருந் தார். யுனிவர்சிட்டி அகடமி கவுன்சிலிலும் இவர் இடம் பெற்றிருந்தார். பிரதமர் மகள் தான் ராமாயண பாடத்தை பாடத்திட்டத்தில் சேர்த்தார் என்று பா.ஜ.க.வும் சங்பரிவாரங்களும் பிரச்சினையை கிளப்புமோ என்ற அச்சத்தினால் தான், அரசியல் நிர்பந்தம் காரணமாக அந்தப் பாகம் நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சர்சை டெல்லி வட்டாரங்களில் கிளம்பியுள்ளது.

அந்தக் கட்டுரையில் ஏ.கே.ராமானுஜன் சொல்வதென்ன?

ஒன்றா? இரண்டா?  முன்னூறு ராமாயணங் கள்  இருக்கின்றன.. அதுவும் அன்னமேசி, பாலினேசி, பெங்காலி, கம்போடியன், சைனீஸ், குஜராத்தி, ஜாவனிஸ், கன்னடம், காஷ்மீரி, கோட்டனேசி, மலேசியன், மராத்தி, ஒரியா, பிராகிருதம், சமஸ்கிருதம், சாந்தலி, சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய், திபேத்தியன் என இத்தனை மொழிகளில். 

முன்னூறு விதமாகப் பேசவும் எழுதவும் பட்டிருக்கிறது என ராமாயணங்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டிருக்கிறார் காமில் பல்கே என்ற அறிஞர். முன்னூரா? மூவாயிரமா? இத்தனை ராமாயணங்கள் எப்படி இருக்க முடியும்? என்ற கேள்விக்கு ராமா யாணத்திலிருந்தே ஒரு கதையை பதிலாகத் தருகிறார் கட்டுரையாளர் ஏ.கே.ராமானுஜன்.  

சிம்மாசனத்தில் வீற்றிருந்த ராமனின் விரலிலிருந்து நழுவி விழுந்த மோதிரம் அப்படியே பூமிக்குள் புதைந்து விடுகிறது. "மோதிரத்தை எடுத்து வா...''என்ற  ராமனின் கட்டளையை ஏற்று தன் உருவத்தை மிக மிகச் சிறிய தாக்கி,  பூமியைத் துளைத்துக் கொண்டு செல்கிறான் அனுமன். பாதாள உலகம் வந்து விடுகிறது. அங்கிருந்த பூதகணங் களின் தலைவனிடம் மாட்டிக் கொண்ட அனுமன் விசாரிக்கப் படுகிறான். "பூமிக்குள் சென்ற ராமனின் மோதிரத்தைத் தேடியே நான் வந்திருக்கிறேன்...''என்று அனுமன் சொல்ல.. மோதிரங்கள் குவியலாகக் கிடந்த  ஒரு பெரிய தட்டினை எடுத்து வருகிறது அந்த பூதம். "இதிலிருந்து ராமனின் மோதிரத்தை நீயே தேடி எடுத்துக்கொள்...''என்கிறது. எல்லாம் ஒரே மாதிரி இருந்த அந்த மோதிரங்களில் தேடி வந்த ராமனின் மோதிரம் எதுவென்று அனுமனுக்குத் தெரியவில்லை. அப்போது பூதங்களின் தலைவன் சொல்கிறான்... "ராம அவதாரங்கள் பல இருக்கின்றன.  ஒவ் வொரு ராம அவதாரமும் முடியும் போது மோதிரம் தானாகவே கழன்று விழும். அப்படி நான் சேகரித்த மோதிரங்கள்தான் இவை. நீ பூமிக்கு திரும்பும் போது அங்கே ராமன் இருக்க மாட்டான். ஏனென்றால், அவன் இப்போது எடுத்த அவதாரம் முடிந்து விட்டது''என்று விளக்குகிறான். 

முன்னூறு விதமான ராம கதைகள் ஒருபுறம் இருக்கட்டும். வால்மீகியும், கம்பரும் சமஸ்கிருதம், தமிழ் மொழியில் எழுதிய இரண்டு ராமாயணங்களில் கூறப்படும்   அகலிகை கதையை முதலில் கவனிப்போம்.   

வால்மீகி ராமாயணத்தில் கவுதம மகரிஷியின் பத்தினியான அகலிகை மீது மோகம் கொண்டு கவுதமரின் உருவத்தில் வரும் இந்திரனை முதலிலேயே அடையாளம் கண்டுகொள்கிறாள் அவள். ஆனாலும், உணர்வுகளால் உந்தப்பட்டு விரும்பியே உறவு கொள்கிறாள். தனது குடிலுக்கு திரும்பி வந்த கவுதம மகரிஷி,  இவ்விருவரும் தவறிழைத்ததை தனது ஞானத்தால் அறி கிறார். கல்லாகிப் போ...'என்று அகலிகை யை சபிக்கிறார். இந்திரனிடமோ ""இது போன்ற தவறினை இனி எப்போதும் நீ பண்ண முடியாது. உனது  விரைக் காய் களை இப்போதே நீ இழப்பாய்...''என்று சாபமிடுகிறார். அவரது சாபத்தால் இந்திரனின் விரைகள் அந்த இடத்தி லேயே கீழே விழுந்து விடுகின்றன. பிறகு இந்திரன் அக்னி தேவ னிடம்  சென்று  ""கடவுளர்களுக்காகவே (?) இப்படி ஒரு காரியத் தைச் செய்தேன்...''என்று முறையிட,  ஒரு செம்மறி ஆட்டுக் கிடாவின் விரைகளைப் பிடுங்கி அவனுக்குப் பொருத்தி சரி பண்ணிவிடுகிறார் அக்னி. 


கம்ப ராமாயணத்திலோ, கவுதமரின் உருவம் தாங்கி வரு வது இந்திரன் என்பதை அறியாதவளாக இருக்கிறாள் அகலிகை. அவன் உறவில் ஈடுபடும் போதுதான்  வித்தியாசத்தை உணர் கிறாள். ஆனாலும், இந்திரனின் மாயவலையில் சிக்குண்டு சிற்றின்பம் காண்கிறாள். பெண்ணுறுப்பின் மீது கொண்ட வெறி யினால்தானே  இப்படி ஒரு தவறைச் செய்தான் இந்திரன் என்ற கோபத்தில் ""உன் உடல் முழுவதும் ஓராயிரம் யோனிகள் தோன் றட்டும்...''என்று சாபம் விடுகிறார் கவுதம மகரிஷி.  பிறகு தேவர் களின் முயற்சியில், பெண்ணுறுப்புக்கள் அத்தனையும் கண்களாக மாறி, ஆயிரம் கண்கள் உடையவன் ஆகிறான் இந்திரன். நூல் ஒன்றுதான். அதற்காக,  ஊடும், பாவும், நெருக்கமும், அழுத்தமும், வண்ணங் களும், டிசைன்களும் வெவ்வேறாக இருக்கின்ற  துணிகளை ஒரே துணி என கருத்தில் கொள்ள முடியுமா? ராமாயணக் கதைகளும் அப்படித்தான் இருக்கின்றன.

உறவு முறைகளில் வெவ்வேறாக முரண்படுகின்ற கதைகள் உண்டு. ராமனையும் சீதையையும் அண்ணன் - தங்கையாக சித்தரிக்கிறது பௌத்த ராமாயணம். சமணர்களோ தங்களின் ராமாயணத்தில் ராவணனின் மகள் சீதை என்கிறார்கள். தாழ்த்தப்பட்டவர் கள் எனப்படும் தம்பூரி தாஸையாக்கள், கன்னட மொழியில்  மேடைகளில் கதா கலாட்சேபங்களாக நடத்துகின்ற ராமா யணங்களிலும் சீதையை ராவணனின் மகள் என்றே பாடுகிறார்கள்.  அதற்கு கதை ஒன்றும் சொல்கிறார்கள். குழந் தை இல்லாத கவலையில் இருக்கிறார் கள் ராவணன்-மண்டோதரி தம்பதியர். இந்த வேண்டுதலை நிறைவேற்ற மாம்பழம் ஒன்றைத் தரும் சிவனிடம் பழத்தின் சதைப் பகுதியை மண்டோ தரிக்கு கொடுத்து விட்டு, கொட்டை யை நான் சப்பிக் கொள்கிறேன் என்கிறான் ராவணன். ஆனால், சொன்னதற்கு மாறாக சதை யை தான் தின்றுவிட்டு கொட்டையை மண்டோதரிக்கு கொடுக்கிறான். சிவனிடம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாததற்கு தண்டனையாக ஆணாக இருந்தும் கர்ப்பம் அடைகிறான் ராவணன். சரியான நிறை மாதத்தில் அவன் தும்மும்போது மூக்கு வழியாக பிறந்ததால் சீத்தம்மா என்று பெயர் வைக்கிறான். தம்பூரி தாஸையாக்கள் ராவணனை ரவுலா என்று அழைக்கின்றனர்.  

கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும் மாறுகின்றன.  'ராமகியென்' எனப்படும் தாய்லாந்து ராமாயணத்தில் அனுமனை பெண் பித்தனாகக் காட்டுகின்றார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் அடுத்தவன் மனைவியை கள்ளத்தனமாக ரசிப் பவன், பிற வீடுகளின் படுக்கை அறைகளை எட்டிப் பார்ப்பவன் என அனுமன் பாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.  ராம பக்தன் என்றெல்லாம் அதில் இல்லை. வெறும் தூதுவன் என்றே சொல்லப்பட்டிருக்கின்றான்.  வனவாசத்துக்குப் பிறகு  சந்தேகம் கொண்டு சீதையை விரட்டிய ராமன், காட்டுக்குள் வைத்து அவளைக் கொன்று விடும்படி லட்சுமணனுக்கு உத்தரவு பிறப்பிக்கின்றான். லட்சுமணனோ ஒரு மானைக் கொன்று விட்டு, அதன் இதயத்தை சீதையின் இதயம் என்று ராமனிடம் காண்பிக்கிறான். "ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதையே.. உங்கள் செவி குளிர பாடிடுவோம் கேளுங்கள் இதையே...''என மிகச் சிறந்தவனாக தமிழர்களும் போற்றும் ராமனை, சந்தேக புத்தி கொண்ட ஒரு கொலைகாரனாகச் சித்தரிக்கிறது தாய்லாந்து ராமாயணம். 

சம்பவங்களும் வேறுபடுகின்றன. விமலசூரியின் ஜெயின் ராமாயணமோ ராவணனைக் கொல்வது ராமன் அல்ல.. லட்சு மணன் என்கிறது. ராவணனைக் குத்திக் கொல்கிறாள் சீதை எனக் கூறுகிறது சடகந்த ராவணா என்னும் தமிழ்க்கதை. சாந்தலர்களின் ராமாயணத்தில் லட்சுமணன், ராவணன் இருவருமே சீதையை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குறிப்புக்கள் இருக்கிறது.   

யாரை மையப்படுத்தி கதை சொல்கிறார்கள் என்பது அந்தந்த இடங்களின் சூழல், சாதி மற்றும் பாலினத்தைச் சார்ந்த விஷயமாக இருக்கிறது. சமணர்களும், தாய்லாந்து நாட்டினரும் ராவணனுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். உயர்ந்த குணா ளனாகச் சொல்கின்றனர். போர்க்களம் மற்றும் யுத்தத்தை முன் னிறுத்தி வீர, தீர, சாகசங்கள் நிறைந்த கதையாகப் படைத்திருக் கின்றனர்.  சமஸ்கிருதத்திலும், தமிழிலும் ராமனைக் கொண்டாடு கின்றனர். ஆந்திராவில், ரங்கநாயகி அம்மாள் தொகுத்திருக்கும் ராமாயணக் கதைகளை தங்கள் வீட்டுக் கொல்லைகளில் அமர்ந்து கொண்டு பாடுகின்ற பிராமணப் பெண்களுக்கு,  சீதையைப் பற் றிய கவலையே மிகுந்து காணப்படுகிறது. ராமனையே விஞ்சு கிறாள் என்று சீதையை உயர்த்திப் பிடிக்கின்றனர். ராமனைப் பழிவாங்குவதில் சூர்ப்பனகை காட்டும் தீவிரத்தையும் சிலாகித் துச் சொல்கின்றனர்.  

கதைக் களமும் வெவ்வேறாகச் சொல்லப்பட்டிருக்கிறது. "பௌத்த ஜாதகக் கதைகளின்படி பார்த்தால்  தசரதனின் நாடு காசி..'' என்கிறார், ராமாயணக் கதைகள் பலவற்றை அச்சிட்டிருக்கும் பதிப்பாசிரிய ரான  பாலா ரிச்மேன். "கேரளா-வயநாடு பகுதிகளில் இருக்கின்ற மலைவாழ் மக்கள், இங்கே புல்லப் பள்ளியில் வால்மீகிக்கு ஆசிரமம் இருக்கிறது. வால்மீகியின் ஊர் புல்லப்பள்ளிதான். ராமாயண சம்பவங்கள் அத்தனையும் நடந்தது கேரளாவில்தான். இலங்கை என்பது   இங்கே உள்ள ஒரு நீர் நிலையினைக் குறிக்கிறது. இதைக் கடந்தே ராவணனிடமிருந்து சீதையை மீட்டான் ராமன். அனுமன் கட்டிய பாலமும் இங்கே இருக்கிறது.'' என்று  நம்பியும் பாடியும் வருவதாகச் சொல்கிறார் கேரளாவில் உலவு கின்ற பல்வேறு கதைகளைத் தொகுத்து வரும் அஜீஸ்.


ஆரியர் என்பதால் திராவிடர்களை இழிவு படுத்தி இயற்றியிருக்கிறார் வால்மீகி. சீதையை மீட்க ராமனுக்கு உதவிய தென் னிந்தியர்களை குரங்குகளாகக் காட்டியிருக் கிறார் என்பது போன்ற சர்ச்சைகளுக் கிடையே சில சந்தேகங்களைக் கிளப்புகின்ற னர் ஜைனர்கள். . "வருடத்தில் ஆறு மாதங் கள்  இடைவிடாமல் தூங்குவானாம் கும்பகர்ணன். கொதிக்கின்ற எண்ணெய்யை காதில் ஊற்றியும், யானைகளால் மிதிக்க விட்டும்கூட  போர் நடந்த போது அவனை எழுப்ப முடியவில்லையாம். உயர்ந்த பண்பு களுடைய வீரனும் சமணத் தலைவர்கள் 63 பேரில் ஒருவனுமான ராவணனைக் கெட்டவனாகச் சித்தரிப்பது நம்பும்படி யாகவா இருக்கிறது?'என்று கேள்வி எழுப்புகின்றனர். 

"ராமாயண கதைக்கு மூலம் எது என்றே சொல்ல முடியாது. வால்மீகி காலத்திலேயே வேறு ராமாயணங்களும் இருந்திருக் கின்றன. எல்லா ராமாயணங் களையும் ஏதோ ஒன்றின் தழு வல் என்றோ,  மொழி பெயர்ப்பு என்றோ உறுதியாகச் சொல்லி விட முடியாது. இவை அனைத் திலும் உள்ள ஒரே   ஒற்றுமை ராமன் என்ற கதாபாத்திரத்தை உள் ளடக்கிய ராமாயணம் என்பதே..'' என்கிறார் பிரபல வரலாற்று ஆய்வாளரான ரொமிலா தாபர். 

"இதிகாசங்களில் பின்னாளில் தெய்வீகத் தன்மையைப் புகுத்தி விட்டார்கள் பிருகு பிராமணர் கள்...''எனச் சொல்கிறார் வரலாற்று அறிஞர் வி.எஸ்.சுக்தாங்கர்.

"வேறு எந்த மொழியிலும், வேறு யாரும், ராமாயணக் கதை களைச் சொல்வதோ, எழுதுவதோ அவற்றைப் பாடமாகப் படித்து தெரிந்து கொள்வதோ கூடாது  என்று.. மனு ஸ்ம்ருதியின்படி பிரம்மனின் முகத்திலிருந்து தோன்றிய உயர் சாதியினர் எனச் சொல்லிக் கொள்பவர்கள்... சட்டத்தின் துணையோடு இப்போதும் ஆதிக்கம் செலுத்துவது கொடுமையிலும் கொடுமை அல்லவா?  ராமனும் ராமாயண கதாபாத்திரங்களும் கற் பனை அல்ல.. உண்மையே.. என்று டெக்னாலஜி வெகுவாக முன்னேறிவிட்ட இந்தக் காலத்திலும் அரசியல் பண்ணுகின் றார்களே... பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட  ஏ.கே.ராமா னுஜனின் கட்டுரையை ஒரு முறை  படித்துப் பார்த்து இவர் கள் தெளிவு பெற வேண்டும் என்று பொதுநல நோக்கில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் அங்கப்பன்.

இனி சொல்வதற்கு என்ன இருக்கிறது?

அட, ராமா.. ராமா..!      

-சி.என்.இராமகிருஷ்ணன்

source:nakkheeran

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP