சமீபத்திய பதிவுகள்

முல்லை பெரியாறு அணை - உண்மை நிலை என்ன

>> Tuesday, December 20, 2011


அடுத்த உலகப்போர், தண்ணீருக்காகத்தான் நடக்கும் என்ற அனுமானம் உண்மையாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது முல்லைப் பெரியாறு அணை விவகாரம். இரு மாநிலங்களுக்கு இடையேயான இந்த பிரச்னையில், கேரள அரசின் செயல்பாடு தேசிய ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக தொடரும் நிலையில், நதி நீர் விவகாரங்களில் தீர்க்கமான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு என அடுத்தடுத்து பிரச்னைகளில், அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வஞ்சித்து வருகின்றன. இவற்றை தமிழக அரசியல் கட்சிகள், ஆட்சியில் இருப்போர் சில நேரங்களில், "சீரியசாகவும்' பல நேரங்களில், "சீசன்' விவகாரமாகவும் கையாண்டு வருகின்றனர்.


இதில் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய கட்சிகள் இருவகையான நிலைப்பாட்டை எடுத்து வருகின்றன.தி.மு.க.,வைப் பொறுத்தவரை நதிநீர் பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வதிலேயே எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறது. எப்போதெல்லாம் பிரச்னை எழுகிறதோ, அப்போதெல்லாம் அமைச்சர்கள் நிலையில், அதிகாரிகள் நிலையில், முதல்வர்கள் நிலையில் என பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. 
இந்த பேச்சுவார்த்தைகள் நிரந்தர தீர்வை பெற்றுத் தராவிட்டாலும், அப்போதைக்கு பிரச்னையை தள்ளிப்போடவே உதவியாய் இருந்து வருகின்றன.ஆனால், அ.தி.மு.க., தரப்போ நீதிமன்றம் மூலம், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதில்தான் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை வைத்துள்ளது. அதற்கேற்பவே, காவிரியில் துவங்கி முல்லைப் பெரியாறு வரை தனது சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது.


இந்த இரு கட்சிகளின் நிலைப்பாட்டினால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதே தற்போதைய நிலை. பேச்சுவார்த்தை என்பது காலத்தை தள்ளிப்போடவே உதவியாக இருந்து வந்திருக்கிறது; அது அண்டை மாநிலங்களுக்கு சாதகமாக மாறி விடுகிறது. "திருவள்ளுவருக்கு பதிலாக சர்வக்ஞர்' என்ற, "பார்முலா'வெல்லாம் அரசியல், "ஸ்டண்ட்' காட்சிகள் எல்லாம் வரலாற்றுப் பக்கத்தில் நகைப்புக்குள்ளாக்கப்படும் என்பது உறுதி.
மறுபுறம், அ.தி.மு.க.,வின் சட்டரீதியான போராட்டமும் பல உத்தரவுகளை பெற்றுத் தந்துள்ளது. இந்த உத்தரவுகள் எல்லாம் பலனுக்கு வந்ததா என்றால் விடை பூஜ்யம்தான். காவிரி நடுவர் மன்றம், அது பிறப்பித்த உத்தரவு, அதை அரசு இதழில் வெளியிடுவது, நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு என சட்டப் போராட்டம் நீண்ட தொடர் கதையாய் நடந்தது... நடக்கிறது... நடக்கும்... என்பதுதான் உண்மை நிலை.


முல்லைப் பெரியாறு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிறகும், அதை கேள்விக்குள்ளாக்கும் வகையில், கேரள அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுகிறது. ஆனால், தமிழக சட்டசபையோ அந்த தீர்மானத்தை கண்டிப்பது தவறாகப் போய்விடும் என்பதால், தீர்மானம் குறித்து வருத்தத்தையே பதிவு செய்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் இந்த விவகாரங்களை சரியாக கையாளாததன் விளைவாகத்தான், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக்கட்சி என்று எந்த கட்சியும் அழைக்காமல் லட்சக்கணக்கில் உணர்வுபூர்வமாக பொதுமக்கள் திரண்டு வரக்கூடிய நிலையை ஏற்படுத்தியுள்ளன. இரு மாநில நதிநீர் பிரச்னை எல்லைப் பிரச்னையாக மாறியுள்ளது.


இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டால், அதை தீர்க்க வேண்டியது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு அதிர்ச்சியளிப்பதாய் மாறியுள்ளது. இரு மாநிலங்களின் பிரதிநிதிகளையும் பிரதமர் சந்திக்கிறார்; அவர்களது தரப்பு கருத்துக்களை கேட்கிறார்; தன் வருத்தத்தை பதிவு செய்வதோடு மத்திய அரசின் பங்களிப்பு முடிந்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக, நியாயத்தின் பக்கம் நிற்க முடியாத நிலையில் மத்திய அரசு இருக்கிறது.


நதி நீர் பிரச்னைக்கு தீர்வு காண உறுதியான நிலைப்பாடுகளை எடுத்தால் மட்டுமே, பிரச்னைகள் சுமூகமாக தீர்க்கப்படும். நதிகளை இணைப்போம் என்ற கோஷங்கள் உயிர்பெற்றபோது, "இது சாத்தியமில்லாத விஷயம்' என்ற ஒருவரி, "கமென்ட்'டை காங்கிரசின் இளம்தலைவர் வெளியிட, உயிர்பெற்ற கோஷங்கள் மவுனித்து போய்விட்டது.
நதிநீர் பிரச்னை தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே தோன்றும் இது போன்ற மோதல்கள் தேச ஒற்றுமையை தகர்த்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 
இந்த அச்சத்தை போக்க, அரசியல் வேறுபாடுகளை தவிர்த்து மத்திய அரசு துணிந்து எடுக்கும் நடவடிக்கைகள் தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இருக்கும். நதிநீர், அணைகள், நீர்வழிகள் என, அனைத்தையும் மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் வகையில் சட்டத்தை திருத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.


source:dinamalar


--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP