சமீபத்திய பதிவுகள்

குரானின் மலையியல் மயக்கங்கள்.

>> Wednesday, March 14, 2012

 

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே: பகுதி 11

மலைகள் பற்றி குரான் குறிப்பிடும் சில செய்திகள் விந்தையானவை. மதவாதிகள் வழக்கம் போலவே இதற்குள்ளும் அறிவியலை திரித்து இறக்கியிருக்கிறார்கள்.

பூமியை தொட்டிலாகவும் மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா? குரான் 78:7 இதில் மலைகளை முளைகளாக ஆக்கியிருப்பதாக குரான் கூறுகிறது. இந்த வசனத்தில் மட்டுமல்லாது இன்னும் பல வசனங்களில் (15:19; 16:15; 21:31; 27:61; 31:10; 41:10; 79:32; 77:27) மலைகளை முளைகள் என குரான் குறிப்பிடுகிறது. ஒரு வேடிக்கை என்னவென்றால் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த எல்லா வசனங்களிலும் மலைகளை முளைகளாகவே பிஜே அவர்கள் மொழிபெயர்த்த குரானில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் பிஜேவுக்கு முன்னரே மொழிபெயர்ப்பை வெளியிட்ட ஜான் டிரஸ்ட் வெளியீட்டில் 78:7 ஐ தவிர ஏனைய அனைத்து இடங்களிலும் முளைகளாக அல்ல மலைகளாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. மலைகளை முளைகளாக குறிப்பிடுவதில் உள்ள அறிவியல் என்ன?

நாம் வாழும் பூமி பலவித அடுக்குகளாக உள்ளது. ஒவ்வொரு அடுக்கும் வெவ்வேறு கனத்தில் அமைந்திருக்கிறது. வெவ்வேறு கனத்தில் பல்வேறு அடுக்குகளாக அமைந்துள்ள பூமி சுற்றிக்கொண்டேயிருக்கிறது. ஒரு சீரான வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் பூமியில் எப்படி பல்வேறு அடுக்குகளும் அதே சீர்வேகத்தில் சுழல முடியும்? ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு வேகத்தில் சுழலும் சாத்தியமுண்டல்லவா? ஆனால் அப்படி வெவ்வேறு வேகத்தில் சுழன்றால் பூமி பூமியாக இருக்குமா? உயிரினங்கள் நிலைத்து வாழ முடியுமா? இருப்பினும் அப்படி வெவேறு வேகத்தில் சுழலாமல் ஒரே வேகத்தில் எப்படி சுழல்கிறது என்றால், மலைகள் பூமியில் முளைகளாக நடப்பட்டு பல்வேறு அடுக்குகளையும் ஒன்றாக இறுக்கிப்பிடித்து வைத்திருப்பதனால் தான் பூமி ஒரே சீரான வேகத்தில் சுழல்கிறது. அதனால் தான் நாமெல்லாம் வாழ முடிகிறது. இவ்வளவு அற்புதமான இந்த அறிவியல் உண்மை, அண்மைக்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விஞ்ஞானம் 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவருக்கு தெரிந்திருக்க முடியுமா? ஆனால் குரான் எவ்வளவு தெளிவாக இதை குறிப்பிடுகிறது. எல்லாவற்றையும் அறிந்த ஒரே இறைவனான அல்லாவைத்தவிர வேறு யாரால் இப்படி 1400 ஆண்டுகளுக்கு முன் கூறியிருக்க முடியும்?

நாம் வாழும் இந்த பூமி பல அடுக்குகளாகத்தான் இருக்கிறது. ஆனால் மலைகள் முளைகளாக இறுக்கிப் பிடித்துவைத்திருப்பதால் தான் பூமியால் சீராக சுழலமுடிகிறது என்பது மதவாதிகளின் அசட்டுத் துணிச்சல். முதலில் பூமியின் அடுக்குகளைப்பார்ப்போம். பூமியை குறுக்குவெட்டுத் தோற்றத்தில் அதன் திணிவை மூன்றாக பிரிக்கலாம், ௧) இன்னர் கோர் ௨) அவுட்டர் கோர் ௩) மேண்டில். இதில் இன்னர் கோர் திடப்பொருளாகவும், அவுட்டர் கோர் பாறைக்குளம்பாக திரவப்பொருளாகவும், மேண்டில் கனிம வளங்களை உள்ளடக்கிய திடப்பொருளாகவும் இருக்கிறது. மேண்டிலை மட்டும் அணுக்கமாகப் பார்த்தால் ஏதினோஸ்பியர், லிதோஸ்பியர், க்ரஸ்ட் என்று சில அடுக்குகளாகப்பிரிக்கலாம். இவற்றில் க்ரஸ்ட் என்பதில் தான் நாம் காணும் கடல், மலை, நிலம் என்று அணைத்தும் உள்ளன. இந்த க்ரஸ்டின் கனம் அதிகபட்சம் நூறு கிமீ வரை இருக்கிறது. அதாவது எல்லா இடங்களிலும் நூறு கிமீ அளவுக்கு இல்லை சமமற்ற முறையில் ஏற்ற இறக்கங்களோடு அமைந்திருக்கிறது. சில இடங்களில் பத்து கிமீ இருக்கலாம், சில இடங்களில் 20, 30 என அதிகபட்சம் 100 கிமீவரை. இந்த அதிகபட்ச ஆழமானது மலைப்பகுதிகளில் இருக்கிறது. இதை வைத்துத்தான் இவர்கள் மலைகளை முளைகள் என்கிறார்கள். கவனிக்கவும் (படம்) மலைகளின் வேர்கள் எந்த அடுக்கையும் ஊடுறுவிச்செல்லவில்லை. மற்ற இடங்களை விட அதிக ஆழ‌மாக இருக்கிறது அவ்வளவு தான். இதை முளை என்றும் எல்லா அடுக்குகளையும் இறுக்கிப்பிடித்திருக்கிறது என்றும் கூறுவதற்கு அசட்டுத்துணிச்சல் தேவைதான்.

குரான் வசனம் 16:15,16 பூமி உங்களை அசைத்துவிடாதிருக்க அதில் முளைகளையும், …………அமைத்தான்………. இந்த வசனத்தில் மலைகள் அதாவது முளைகள் இருப்பதால் தான் பூமி உங்களை அசைத்துவிடாதிருக்கிறது என்று கூறுகிறது குரான். மலைகள் என்று கொண்டாலும் முளைகள் என்று கொண்டாலும் இதில் பொருள் மயக்கம் வருவதில்லை ஆனால் சொற்றொடரின் பொருளோ மயக்கம் வர‌வைக்கும் அளவிற்கு இருக்கிறது. பூமி நம்மை அசைப்பதே இல்லையா? அவ்வப்போது அது நம்மை அசைத்து பல உயிர்களை கொள்ளையிட்டுக்கொண்டிருக்கிறது நிலநடுக்கம் எனும் பெயரில். தூரப்பகுதிகளை விட்டுவிடுவோம், மலைப்பகுதிகளிலாவது நிலநடுக்கம் வராமலிக்கிறதா? சில மாதங்களுக்கு முன் இத்தாலிய மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 300 பேர் வரை மரணமடைந்தனர். ஆனால் குரான் சொல்கிறது பூமி உங்களை அசைத்துவிடாதிருக்க மலைகளை அமைத்ததாக.

பூமியின் மேற்பரப்பு கண்டத்தட்டுகளாக அமைந்திருக்கிறது.  நிலப்பகுதியிலும் கடல்களுக்கு அடியிலுமாக பூமி ஆபிரிக்க, அண்டார்ட்டிக்,ஆஸ்திரேலிய, யூரேசிய, வட அமெரிக்க, தென் அமெரிக்க, பசிபிக், கோகோஸ், நாஸ்கா, இந்தியா என்று பத்து பெரிய தட்டுகளாகவும்; இன்னும் சில சிறிய தட்டுகளாகவும் அமைந்துள்ளன. இந்த கண்டத்தட்டுகள் நகர்ந்துகொண்டிருக்கிறன. ஆண்டுக்கு ஒரு செமீ முதல் 13 செமீ வரை நகர்கின்றன. சில ஒன்றை ஒன்று விலகி நகர்கின்றன. சில ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. இந்த நகர்வுகளை அல்லது அசைவுகளை மலைகள் கட்டுப்படுத்துகின்றனவா? மாறாக இந்தியத்தட்டு யுரேசியத்தட்டுடன் மோதுவதால் தான் இமய மலை தோன்றியது இன்னும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்துகொண்டும் இருக்கிறது. புவியியல் அமைப்புகள் இப்படி இருக்க, மலைகள் எந்த அசைவைக்கட்டுப்படுத்துகின்றன? குரானில் இதற்கு விளக்கம் ஒன்றுமில்லை, அல்லாவோ பதில் கூறப்போவதில்லை. பின் யார் இதை விளக்குவது? வாய்மையுள்ளவர்கள் விளக்கவும்.

பூமிக்குள் மனிதனால் எவ்வளவு ஆழத்திற்கு செல்லமுடியும்? அதிக அளவாக மூன்று கிமீ வரை சுரங்கம் அமைத்திருக்கிறார்கள். பத்து கிமீ க்கு அதிகமான ஆழத்திற்கு குழாய்களை இறக்கியிருக்கிறார்கள். மூன்று கிமீ க்கு கீழே மனிதர்கள் இறங்கவோ, இன்னும் ஆழமாக குழாய்களை இறக்கவோ தேவை ஒன்றும் இப்போதைக்கு ஏற்படவில்லை என்றாலும் இன்னும் ஆழமாக கீழே செல்வது சாத்தியக்குறைவானது தான். ஆழம் செல்லச்செல்ல அதிகரிக்கும் வெப்பம், ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நச்சு வாயுக்கள் என பல பிரச்சனைகள். ஆனால் செல்லமுடியாது என குரான் கூறியிருக்கிறது எனவே தான் செல்லமுடியவில்லை என அடித்துக்கூறுகிறார்கள் மதவாதிகள். பூமியை பிளந்து மலையின் உச்சியளவுக்கு மனிதனால் செல்லமுடியாது என குரான் உறுதியாக குறிப்பிட்டிருப்பதாக கதைக்கிறார்கள். பூமியில் உயரமான மலை இமயமலை, எவெரெஸ்ட் சிகரம் உயரம் சற்றேறக்குறைய 9 கிமீ. பூமியின் உயரமான மலையளவான இந்த அளவிற்கு பூமிக்குள் மனிதனால் செல்லமுடியாது என குரான் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது, இன்றுவரை யாராலும் செல்லமுடியவில்லை. இது குரான் இறைவனின் வெளிப்பாடுதான் என்பதை நிரூபிக்கிறதா இல்லையா? என்று விவரிக்கிறார்கள். குரான் அப்படி கூறியிருக்கிறதா?

"பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்" குரான் 17:37. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பு இப்படிக்கூறுகிறது. ஆனால் இதே வசனம் ஜான் டிரஸ்ட் வெளியீட்டில் இப்படி இருக்கிறதா? "நீர் பூமியில் பெருமையாய் நடக்கவேண்டாம். நிச்சயமாக நீர் பூமியை பிளந்துவிட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது." இரண்டுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம்? கர்வம் பிடித்தலையும் மனிதர்களுக்கு குரானின் அறிவுரை இது பூமியை பிளந்துவிட முடியுமா? மலையின் உச்சிக்கு சென்றுவிட முடியுமா? எனவே உன்னை பெரிதாய் நினைத்து கர்வத்துடன் நடக்காதே. இதுதான் குரான் வாயிலாக முகம்மது சொல்லவருவது. ஒரு ஒப்பீட்டுக்காக கூறுவது. பின்னர் மனிதர்கள் மலையின் உச்சியை அடைந்து விடுவார்கள், பூமியை பிளந்து விடுவார்கள் (பிளப்பது என்றால் இரண்டு துண்டுகளாகவா?) என்பதெல்லாம் முகம்மதுவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் இதை எப்படி திரித்துவிட்டார்கள்.

எங்கள் மதம் அறிவியலை எதிர்க்காதமதம், அறிவியலை முன்னறிவித்த மதம் என்று காட்டுவதற்காக எந்தவித செயலையும் செய்வதற்கு இவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகள் தான் இவை.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

source:senkodi

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP