சமீபத்திய பதிவுகள்

ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

>> Wednesday, March 14, 2012

 

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 6

முஸ்லீம்களின் ஒரே வேதம் குரான் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் அது மட்டுமே போதுமானதல்ல. குரான் ஒரு முஸ்லீமுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியதல்ல. அது மட்டுமன்றி குரான் கூறியிருக்கும் செய்திகளிலேயே விளங்குவதற்கு சிரமமான, இறைவனை தவிர வேறு யாராலும் முழுமையாக பொருள் விளங்கிக்கொள்ள முடியாத வசனங்களும் இருக்கின்றன. 'நீங்கள் அறிந்து கொள்வதற்க்காக இதனை இலகுவாக்கியிருக்கிறோம்' எனும் பொருளில் குரானில் சில வசனங்கள் இருந்தாலும் குரானை மட்டுமே வைத்துக்கொண்டு அதனை முழுமையாக புறிந்துகொள்ள முடியாது. எடுத்துக்காட்டாக குரான் குறிப்பிடும் வணக்கங்களான தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவைகளை ஒவ்வொரு முஸ்லீமும் நிறைவேற்ற வேண்டும் என குரான் வலியுறுத்துகிறது, ஆனால் அந்த வணக்கங்களை எப்படி நிறைவேற்றுவது என்றால் அதற்கு குரானில் விளக்கம் கிடைக்காது. விபச்சாரம் செய்தால் கல்லெறிந்து கொல்லும் தண்டனை குறித்து அநேகம் பேர் அறிந்திருக்கக்கூடும் ஆனால் இந்த தண்டனை பற்றிய விபரங்களை குரானில் தேடினால் இருக்காது. இப்படி விடுபட்ட, விளங்கிகொள்ள முடியாதவைகளுக்கு விளக்கமாக வருபவைகள் தாம் ஹதீஸ்கள் எனப்படுபவை.

ஹதீஸ் எனும் சொல்லிற்கு செய்தி அல்லது புதிய விசயம் என்பது பொருள். முகம்மது இறப்பதற்கு முன் ஆற்றிய கடைசிப் பேருரையில், "நான் உங்களிடம் இரண்டை விட்டுச்செல்கிறேன். ஒன்று இறைவனின் வேதம். மற்றது என்னுடைய வழிகாட்டுதல். இந்த இரண்டையும் பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கும் வரை நீங்கள் வழிதவறமாட்டீர்கள்" என்று கூறினார். இதில் என்னுடைய வழி காட்டுதல் என்று அவர் குறிப்பிடுவது தான் ஹதீஸ் எனப்படுகிறது. அதாவது முகம்மது கூறிய, செய்த அல்லது செய்வதற்கு அனுமதியளித்தவைகள் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டு ஹதீஸ் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

முகம்மதிற்கு இறைச்செய்தி (வஹி) வரும்போது அவர் கேட்டுச்சொல்வதை உடனிருந்தவர்கள் எழுதிவைத்துக்கொள்வார்கள் அது குரான். அந்த குரானின் வாசகங்களில் ஐயம் ஏற்பட்டால் அல்லது செயல் முறையில் நடைமுறையில் ஏதாவது சந்தேகம் வந்தால், இன்னும் நடப்பு வாழ்வில் ஏற்படும் குழப்பங்கள், அறியாமைகள் ஏற்பட்டால் அவைகளை முகம்மதுவிடம் விளக்கம் கேட்பார்கள். அவர் அவைகளுக்கு வேண்டிய விளக்கங்களை அளிப்பார், இது தான் ஹதீஸ். ஆனால் அவ்வப்போது அவர் அளிக்கும் விளக்கங்களும் குறிப்புகளும் எழுதிவைக்கப்படவில்லை. முகம்மதின் சம காலத்தவர்கள், சற்றே பிந்தியவர்கள் போன்றவர்களுக்கு அது ஆவணமாக வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஆனால் பின்னர் வந்தவர்களுக்கு அவைகளின் தேவை தோன்றியது. அதனால் உமர் இப்னு அஜீஸ் (அபூபக்கருக்கு பின்னர் ஆட்சிசெய்த உமர் அல்ல இவர் இரண்டாம் உமர்) என்பவர்தான் முதன் முதலில் ஹதீஸ்களை தொகுக்கவேண்டியதன் தேவையறிந்து ஆபூபக்கர் இப்னு ஹஸம், இப்னு இஸ்ஹாக்,  ஸூஃப்யானுத் தவ்ரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, இப்னு ஜூரைஜ், அப்துல்லாஹ் இப்னு முபாரக் போன்றோர்களைக்கொண்டு நூல்களாகத்தொகுத்தார். எப்போது? முகம்மது இறந்து சற்றேறக்குறைய நூற்றைம்பது ஆண்டுகள் கழித்து. இதனைத்தொடர்ந்து இமாம்கள் என இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் ஷாபி, ஹன்பலி, மல்லிக் ஆகியோர்களால் தனித்தனியே முஸ்னத் ஷாபி, முஸ்னத் அஹ்மது, முவத்தா போன்ற ஹதீஸ் நூலகள் தொகுக்கப்பட்டன. இவைகளில் முஸ்னத் அஹ்மது மட்டும் இன்னும் இருப்பதாக தெரிகிறது. மற்றவைகள் பற்றி தகவல் இல்லை.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். முகம்மது இறந்து நூற்றைம்பது முதல் இருநூறு ஆண்டுகள் கழித்து இவைகளை எப்படி தொகுத்திருப்பார்கள் என்பது தான். செவி வழிச்செய்திகள் தான். இன்னாரிடமிருந்து இன்னார் கேட்டார், அவரிடமிருந்து இவர் செவியுற்றர் என்று தொகுத்தவர்களை அடைந்தவைகள் தான் தொகுக்கப்பட்டன. இவைகளில் முகம்மது சொல்லி செய்தவைகள் மட்டுமன்றி அவர் சொல்லாததும் செய்யாததும் அவரின் பெயரில் கலந்துவிடுவது இயல்பானது தான். இதனால் இவர்களுக்கு பிறகு வந்த அறுவர் கிடைத்த ஹதீஸ்களை எல்லாம் தொகுத்து பல முறைகளில் சரிபார்க்கப்பட்டு தவறானவைகள் என அறியப்பட்டவைகளை எல்லாம் நீக்கி ஆறு தொகுப்புகள் வந்தன‌

1) முகம்மது இஸ்மாயீல் புஹாரி என்பவர் சுமார் ஆறு லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 7500 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை ஸஹீஹுல் புஹாரி என்ற பெயரில் நூலாக்கினார்.

2) முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் என்பவர் சுமார் மூன்று லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 7500 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை ஸ்ஹீஹ் முஸ்லிம் என்ற பெயரில் நூலாக்கினார்.

3) அபூதாவூது சுலைமான் அல் சஜஸ்தானி என்பவர் சுமார் ஐந்து லட்சம் ஹதீஸ்களை சேகரித்து அவற்றிலிருந்து 5200 ஹதீஸ்களை சரியானவை எனக்கண்டு அவற்றை சுனது அபீதாவூது என்ற பெயரில் நூலாக்கினார்.

4) அபூஈஸா முஹம்மது இப்னு ஈஸா திர்மிதீ என்பவர் 4000 ஹதீஸ்களை ஜாமிஉத் திர்மிதி என்ற பெயரில் நூலாக்கினார்.

5) அபூ அப்துர்ரஹ்மான் அந்நஸாயீ என்பவர் 5700 ஹதீஸ்களை ஸூனனுந் நஸாயீ என்ற பெயரில் நூலாக்கினார்.

6) அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யாசீர் என்பவர் 4300 ஹதீஸ்களை ஸீனனு இப்னுமாஜா என்ற பெயரில் நூலாக்கினார்.

இவர்கள் அனைவரும் கிபி 800 ம் ஆண்டிலிருந்து கிபி900 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். அதாவது முகம்மது இறந்து இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு வாழ்ந்தவர்கள். மேற்குறிப்பிட்ட ஆறு நூல்களும் அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ் தொகுப்புகளாக இருந்தாலும் முதல் இரண்டு நூல்களான ஸஹீஹுல் புஹாரி, ஸ்ஹீஹ் முஸ்லிம் என்பவை தான் குரானுக்கு அடுத்தபடியான இடத்தில் உண்மையான, கலப்பில்லாத‌ ஹதீஸ் தொகுப்புகளாக ஏற்கப்பட்டுள்ளன.

இவர்கள் இது சரியான ஹதீஸ் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்? பொதுவாக ஹதீஸ் எனப்படுவது இரண்டு பகுதிகளை கொண்டிருக்கும். முதலாவது சொல்லப்படும் செய்தி அடுத்தது அறிவிப்பாளர்கள் அதாவது தொகுத்த ஆசிரியருக்கு அந்த ஹதீஸ் யார் யார் மூலமாக வந்து சேர்ந்தது என்பது. ஒவ்வொரு ஹதீஸுக்கு பின்னாலும் குறைந்தது எட்டு பேராவது இடம்பெற்றிருக்கும். இந்த அறிவிப்பாளர்களின் வரிசை சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள், அதன் படி ஆசிரியருக்கு குறிப்பிட்ட ஹதீஸை சொன்னவரிலிருந்து பின்னோக்கி முகம்மதுவிடமிருந்து நேரடியாக கேட்டவர்வரை செல்லவேண்டும். அடுத்து அறிவிப்பாளர்களின் குணநலன்களில் ஏதாவது குறையிருக்கிறதா? அவர் பொய் சொல்லக்கூடியவரா? மறந்து விடக்கூடியவரா? என்று பார்ப்பார்கள். அறிவிப்பாளர்கள் அடையாளம் காணப்பட்டவரா? என்று பார்ப்பார்கள் இப்படி சில விதிமுறைகளை வைத்துக்கொண்டு இவற்றில் சிக்கியவைகளை தள்ளிவிட்டு ஏனையவற்றையே தொகுத்தார்கள். இதன்படி அறிவிப்பவர்களில் ஆண்களில் முகம்மதின் நண்பர்களில் ஒருவரான‌அபூ ஹுரைரா என்பவர் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த முதல் அறிவிப்பாளராவார், இவர் 5300 ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார். பெண்களில் அதிகமான ஹதீஸ்களை அறிவித்த முதல் அறிவிப்பாளர் முகம்மதின் மனைவியான ஆயிஷா, இவர் 2200 ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார்.

ஹதீஸ்களை திரட்டிய ஆசிரியர்களின் உழைப்பு மிகமிகக் கடினமானது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் ஹதீஸ்களின் நம்பகத்தன்மை என்பது தோராயமானது தான். ஹதீஸ் ஆசிரியர்களின் தேடல் எப்படி இருந்தது என்பதற்கு நிறைய கதைகள் உலவுகின்றன. ஹதீஸ் சேகரிக்கச்செல்லும் போது ஒருவர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொண்டிருந்தார், அவர் ஆட்டை ஏமாற்ற ஆட்டின் குட்டியைப்போன்ற ஒன்றை ஆட்டின் கண்முன் நிருத்தியிருந்தாராம். பாலுக்காக ஆட்டை ஏமாற்றுபவர் கூறும் ஹதீஸை ஏற்பதற்கில்லை என அவரின் ஹதீஸை கேட்காமலேயே திரும்பிவிட்டாராம். ஒருவேளை அவர் கறந்து முடித்து ஆட்டை ஓட்டிவிட்டு பாலை குடித்துக்கொண்டிருந்த போது சென்றிருந்தால் ஹதீஸ் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் அல்லவா? அல்லது ஹதீஸை கேட்டுச்சென்ற பின் இதுபோல் நிகழ்ந்திருந்தால்? இன்னொருவர் தம் பொருட்களை திருட்டு கொடுத்துவிட்டு சோகத்தில் அமர்ந்திருந்தாராம். களவு போன பொருட்களின் பாதிப்பு ஹதீஸிலும் வந்துவிட்டால் என்றெண்ணி அவரிடம் ஹதீஸை கேட்காமலேயே திரும்பினாராம். ஏற்கப்பட்டிருக்கும் ஹதீஸ்களில் ஆசிரியருக்கு தெரியாமல் இதுபோன்ற விசயங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்? இது தேவையில்லாத யூகம் என இவற்றை ஒதுக்கித்தள்ளலாம். ஆனால் இதனால் இந்த ஹதீஸை நிராகரிக்கவேண்டும், இதனால் இந்த ஹதீஸை சேர்க்கவேண்டும் என்றெல்லாம் கூறவரவில்லை. இங்கு சுட்டிக்காட்டப்பட விரும்புவதெல்லாம், அதன் தோராயமான தன்மையைத்தான். இவைகளும் கூட முகம்மது இறந்து நூறு ஆண்டுகளிலிருந்து இருநூறு ஆண்டுகள் வரையில் தான். முகம்மது இறந்த பிறகான முதல் நூறு ஆண்டுகளில் உள்ள அறிவிப்பாளர்களின் தன்மை எப்படி அறியப்பட்டது? ஏனென்றால் ஹதீஸ்களை திரட்டும் பணி நூறு ஆண்டுகளுக்குப்பிறகுதான் தொடங்குகிறது. அதன் பிறகு தான் ஹதீஸ் ஆசிரியர்கள் அறிவிப்பாளர்களின் குண நலன்களைப்பற்றிய குறிப்புகளை திரட்டியிருக்கிறார்கள்.

ஒரு ஹதீஸ் உண்மையானதா இட்டுக்கட்டப்பட்டதா என்பதை தெரிவதற்கு அறிவிப்பாளர் வரிசை, தன்மை, அடையாளம் காணப்பட்டவரா என்பனவற்றையெல்லாம் விட அதன் உள்ளடக்கம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. எடுத்துக்காட்டாக கீழ்காணும் இரண்டு ஹதீஸ்களை கொள்வோம்.

ஹதீஸ் 1.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனசாட்சி அடிப்படையில் நடந்து மரணத்திற்குப் பிறகுள்ள வாழ்க்கைக்காக நற்காரியங்களை செய்கிறவன் அறிவாளியாவான். தன் உள்ளத்தை மனோ இச்சையில் விட்டுவிட்டு அல்லாஹ்விடத்தில் ஆசைப்படுகிறவன் வீணனாவான்.

ஹதீஸ் 2.

உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். தவறை உணர்ந்த அவன் இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டான். "இல்லை!" என்று அந்த ராஹிப் பதில் கூறினார். உடனே அவரையும் கொன்றான். இதுவரை நூறு பேர்களைக் கொன்று விட்டான். பின்னர், இந்த ஊரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். அறிஞர் ஒருவர் பற்றி அவனிடம் கூறப்பட்டது. அவரிடம் வந்தான். 'தான் 100 நபர்களைக் கொலை செய்ததாகவும், தனக்கு பாவமன்னிப்பு உண்டா?' என்றும் கேட்டான். "உண்டு, உனக்கும், நீ பூமியில் இன்ன இன்ன இடங்களுக்குச் செல். அங்கே சில மனிதர்கள் இருப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவார்கள். அவர்களுடன் சேர்ந்து அல்லாஹ்வை நீ வணங்குவாயாக! உன் ஊர் பக்கம் திரும்பிச் செல்லாதே! அது கெட்ட பூமியாகும்" என்று கூறினார். அவன் நடக்க ஆரம்பித்தான். பாதி தூரத்தைக் கடந்திருப்பான். அதற்குள் அவனுக்கு மரணம் வந்துவிட்டது. அவன் விஷயமாக அருள் தரும் வானவர்களும், வேதனைதரும் வானவர்களும் (உயிரைக் கைப்பற்றுவதில்) போட்டியிட்டனர். அருள் தரும் வானவர்கள், 'தவ்பா செய்தவனாக தூய உள்ளத்துடன் அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி வந்தான்' என்று கூறினார்கள். வேதனை தரும் வானவர்களோ, 'அவன் நன்மையை அறவே செய்ததில்லை' என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம் மனித தோற்றத்தில் ஒரு வானவர் வந்தார். அவரை தீர்ப்புக் கூறுபவராக தங்களிடையே ஏற்படுத்தினார்கள். அவர் கூறினார்; 'அவன் (பயணித்த தூரத்தை) அளந்து, எந்த ஊர் அவனுக்கு நெருக்கமாக உள்ளது என்று பாருங்கள்!' என்று கூறினார். அவர்கள் அளந்தார்கள். அவன் சென்று கொண்டிருந்த பாதை அவனுக்கு நெருக்கமாக இருந்ததைக் கண்டார்கள். ஆகவே, அருள் தரும் வானவர்கள் அவன் உயிரைக் கைப்பற்றினார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் அதிகாரபூர்வமான தொகுப்புகளில் உள்ளது. முதலாவது திர்மிதியிலும் இரண்டாவது புஹாரியிலும் இடம் பெற்றுள்ளது. இவற்றில் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றொன்று ஏற்றுக்கொள்ளப்படாதது. திர்மிதி, நவவி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று குறிப்பிட்டிருந்தாலும் முதல் ஹதீஸ் ஏற்றுக்கொள்ளப்படாதது. ஆனால் இரண்டாவது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டாவது ஹதீஸில் நூறு கொலைகள் என்று வந்தாலும் அல்லாவின் மன்னிக்கும் தயாள குணத்திற்கு மெருகூட்டுவதாய் அமைந்துள்ளது. ஆனால் முதல் ஹதீஸில் "மனசாட்சி அடிப்படையில் நடந்து" என்பது அல்லாவின் எல்லைக்கு அப்பாற்பட்டு போகும்கூறு இருக்கிறது. ஆக இந்த இரண்டு ஹதீஸ்களின் ஏற்பிலும் உள்ளடக்கம் தீர்மானகரமான பங்காற்றியிருக்கிறது.

இன்னொரு சமகால எடுத்துக்காட்டு ஒன்றை பார்ப்போம். புஹாரியில் முறையான அறிவிப்பாளர் வரிசையுடன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஒன்று "முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு செய்யாததையெல்லாம் செய்ததாக கூறும் அளவிற்கு பாதிக்கப்பட்டிருந்தார்" என்று கூறுகிறது. ஒரு குழுவினர் 'முகம்மதுவிற்கு சூனியம் வைக்கப்பட்டிருந்தது என்றால் மொத்த குரான் மீதே சந்தேகம் வந்துவிடும் எனவே அதிகாரபூர்வமான ஹதீஸாக இருந்தாலும் குரானோடு முரண்படுவதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது' என்றும் மற்றொரு குழுவினரோ 'ஆதாரபூர்வமான ஹதீஸை மறுக்கக்கூடாது இதில் முரண்பாடு ஒன்றுமில்லை. அல்லாவே குரானின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிப்பதால் குரானில் பாதுகாப்பில் சந்தேகம் ஒன்றுமில்லை. அதேநேரம் ஆதாரபூர்வமான ஹதீஸ் முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டதாக கூறுவதால்; முகம்மதுவுக்கு சூனியம் வைக்கப்பட்டு அவர் பாதிக்கப்பட்டார் ஆனால் அது குரானை பாதிக்கும் அளவில் இல்லை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்' என்றும் வாதிட்டுக்கொண்டிருக்கின்றனர். இங்கு ஹதீஸ் ஆசிரியர்கள் வகுத்த விதிமுறைகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஆனால் அந்த ஹதீஸின் உள்ளடக்கமான கருத்து விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஏற்பதா? மறுப்பதா? என விவாதிக்கப்படுகிறது.

இவைகளின் மூலம் விளங்குவதென்ன? ஒரு ஹதீஸ் என்ன கூறுகிறது என்பது தான் மையப்படுத்தப்பட்டு ஏற்பதும் மறுப்பதும் தீர்மானிக்கப்படுகிறது, அவற்றை மறைப்பதற்குத்தான் அறிவிப்பாளர் வரிசை போன்ற விதிமுறைகளெல்லாம் என்பது தெளிவு. முதலிடத்தில் இருக்கும் குரானிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன எனும் நிலையில் இரண்டாம் இடத்திலிருக்கும் ஹதீஸ்களின் கற்பை தொட்டுப்பார்ப்பது மாற்றுக்குறைவானதாகவே இருக்கும். ஹதீஸ்களை பற்றி குறிப்பிடும் போது சொலவடையாக ஒன்றை கூறுவார்கள் "முகம்மதின் தலையில் எத்தனை நரைமுடி இருந்தது என்று எண்ணிச்சொல்லும் அளவுக்கு ஹதீஸ்கள் அவரின் வாழ்க்கையை படம்பிடித்துக்காட்டுகின்றன" என்று. பல்லாயிரம் ஹதீஸ்கள் இருந்தாலும் அவைகள் அவ்வளவு தெளிவாக முகம்மதின் வாழ்வைச்சொல்லுகின்றன என்றெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது. எப்படியென்றால் குரானின் மொத்த வசனங்களில் சில மக்காவில் அருளப்பட்டவை, சில மதீனாவில் அருளப்பட்டவை; இன்னும் சில வசனங்கள் மக்காவில் அருளப்பட்டதா? மதீனாவிலா என்று முடிவுசெய்ய இயலாதவை. குரான் வசனங்களிலேயே மக்காவிலா மதீனாவிலா எங்கு அருளப்பட்டது என்பதை ஹதீஸ்களின் துணையோடு தீர்க்கமுடியவில்லை எனும்போது நரை முடி என்பதெல்லாம் உயர்வு நவிற்சி தான்.

ஆனாலும் ஹதீஸ் தொகுப்புகளின் காலத்திற்கு முன்பே முகம்மதின் வரலாறு தபரி, இபின் இஷாக், இபுன் ஸைத் போன்றவர்களால் எழுதப்பட்டிருக்கிறது.


source:senkodi


--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP