சமீபத்திய பதிவுகள்

கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள்.

>> Wednesday, March 14, 2012

  

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 13


வானத்திலிருக்கும் பற்பல கோள்களிடையே தொழிற்படும் விசைகள் குறித்து நியூட்டன் விரிவாக விளக்கியிருக்கிறார். நியுட்டனின் தேற்றங்களைப் போல் அவர் அறிந்து வெளிப்படுத்துவதற்கு முன்பே யாருக்கும் அறியாமல் குரான் விளம்பியிருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் குரானின் தேற்றங்களை பாருங்கள்.

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்……….. குரான் 13:2; 31:10.

இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்பதன் பொருள் தெரியுமா? அதன் பொருள் தான் ஈர்ப்புவிசை. புவி ஈர்ப்பு விசை என்றால் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலிருக்கும் கண்களால் பார்க்கமுடியாத தூண் என்று பொருள். மேல்நோக்கி எறியப்பட்ட பொருள் ஏன் மீண்டும் புவியை நோக்கி வரவேண்டும் என்று தேவையில்லாமல் சிந்தித்த நியூட்டன் அதற்குப்பதிலாக குரானைப் படித்திருந்தால் இன்னும் சுலபமாக தன்னுடைய விண் பொருட்களுக்கு இடையேயான ஆற்றல்கள் குறித்த அறிவியல் விதிகளை தந்திருக்கலாம்.

அறிவியல் வளராத காலங்களில் அனுபவம் அதிகம் பெற்ற முதியவர்களிடம் தங்கள் ஐயங்களை இளையவர்கள் கேட்ப்பார்கள். நீண்ட தூரம் போனால் என்னவாகும்? பூமி முடிந்து கீழே விழுந்து விடுவோம். காற்று எப்படி வீசுகிறது? பொழுது போகாத தேவதைகள் வானிலிருந்து காற்றை வாயால் ஊதுகிறார்கள். சூரியனும் சந்திரனும் எப்படி அந்தரத்தில் நிற்கின்றன? தூண்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. அப்படி தூண்கள் இருப்பதாக தெரியவில்லையே? என்று சிறுவர்கள் கேட்டால் தலையில் குட்டி வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் முகம்மது பார்க்கமுடியாத தூண்கள் என்று வசனத்தை கட்டி அனுப்பிவிட்டார். இன்றோ அது ஈர்ப்புவிசை எனும் அறிவியல் ஆடை கட்டிக்கொண்டு வந்துநிற்கிறது.

ஒரு கோளின் ஈர்ப்புவிசை என்றால் அது அந்தக்கோளின் எல்லா இடத்திலும் இருக்கும், வானமும் சூழ இருக்கிறது. சூழ இருக்கும் வானத்துடன் எல்லா இடங்களிலும் இணைக்கப்பட்டிருக்கும் ஒன்றை தூண்கள் என்று ஒப்பீடு செய்வது சரியாக இருக்குமா? தூண் என்றால் ஒரு இடத்தில் இருக்கும் இன்னொரு இடத்தில் இருக்காது. ஒன்றை ஒன்று தாங்கிப்பிடிப்பதற்கு எல்லா இடத்திலும் தூண்களாகவே இருக்கவேண்டும்  என்பது அவசியமில்லை. பூமிக்கு புவியீர்ப்பு விசை இருக்கிறது இதைத்தான் குரான் பார்க்கமுடியாத தூண் எனக் குறிப்பிடுகிறது என்றால், இரண்டு தூண்களுக்கிடையே இடைவெளி போல் புவியில் ஈர்ப்புவிசை செயல்படாத இடமும் இருக்கிறதோ?

தாங்கிப்பிடிக்கிறது, விலகிவிடாமல் இருக்க உதவுகிறது என்பதற்கு தூண் எனும் குறியீடு ஓரளவு பொருந்துவதாகவே கொள்வோம். ஆனால் ஈர்ப்புவிசை என்றால் தன்வசம் பொருட்களை ஈர்க்க வேண்டுமே, மேலே எறிந்த பொருள் செலுத்து வேகம் தீர்ந்ததும் திரும்ப வரவேண்டுமே, இதை எப்படி தூண்களோடு ஒப்பிடுவது? இது ஒரு புறமிருக்கட்டும் இதே வசனம்  வேறொரு குரானில் "அவன் வானங்களை தூணின்றியே உயர்த்தியுள்ளான் நீங்கள் அவற்றை பார்க்கிறீர்கள்." என்று இருக்கிறது.

……..சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்……..குரான் 31:29

முதலில் நியுட்டனின் ஈர்ப்புவிசை இப்போது கோப்பர்நிகஸின் கோள்களின் இயக்கம். குரானில் இருப்பதெல்லாம் அறிவியல் கூறுகள் தான் என்று நிரூபிக்கவேண்டுமென்றால், குரான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த காலமாக இருக்கவேண்டும். மதவாதிகள் அந்த அடிப்படையில்தான் எல்லாவற்றையும் தொடங்குவார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவை குறிப்பதற்கு அறியாமைக்காலம் எனும் சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதன்படி அந்தக்கால மக்கள் பூமி தட்டை என நினைத்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறுவார்கள், ஏனென்றால் குரான் உருண்டை எனக்கூறுவதாக விளக்கினால்தான் அறிவியல் என்று கூறமுடியும். அந்த வழியில்தான் விண்ணின் கோள்கள் எல்லாம் அப்படியே நிலையாக நின்றுகொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் இப்படி ஒரு வசனத்தை இறக்கியவன் எல்லாம் அறிந்த இறைவனாகத்தானே இருக்கமுடியும்? என்று வியக்கிறார்கள். ஆனால் விண்ணின் கோள்கள் எல்லாம் சுழன்று சுற்றிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு கோள்களின் இடைப்பட்ட தூரங்கள் என்ன என்பதை எல்லாம் அரிஸ்டார்க்கஸ் (கிமு320-250) ஹிப்பார்க்கஸ் (கிமு 190-120) காலத்திலேயே உலகம் அறிந்திருந்தது. ஆனால் இவர்களோ குரான் தான் எல்லாவற்றையும் அறியாமைக்காலத்திலேயே சொல்லிவிட்டதாக கதையளந்து கொண்டிருக்கிறார்கள். மெய்யாகவே இதுபோன்ற வசனங்கள் அறிவியலை கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை. எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் 'குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்' என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை.

"சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது" குரான் 36:38 என்றொரு வசனம். இந்த ஒற்றை வசனம் இரண்டு அறிவியல் பேருண்மைகளை உணர்த்துகிறது என்று விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது எனும் அண்மைகால அறிவியலை தான் இந்த வசனம் சூரியன் சென்றுகொண்டிருப்பதாக சொல்வதன் மூலம் உணர்த்துகிறது. இரண்டு, சூரியனின் ஆயுட்காலம் இன்னும் 300 கோடி ஆண்டுகள் தான் அதன்பின் செம்பூதமாகி, தன் ஆற்றலை படிப்படியாக இழந்துவிடும் இதைத்தான் அதற்குரிய இடத்தை நோக்கி எனும் வார்த்தைகள் மூலம் உணர்த்துகிறது. இப்படி இவர்கள் அந்த வசனம் சுமக்கமுடியாமல் தள்ளாடும் அளவிற்கு அதன் தலையில் அறிவியலை ஏற்றிவைக்க, குரானை எழுதிய முகம்மது இந்த வசனத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பொருளைச்சொல்கிறார்.

புகாரி ஹதீஸ் எண் 3199 அபூ தர் எனும் முகம்மதின் தோழர் அறிவிக்கிறார்," நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறையும் நேரத்தில் அது எங்கு செல்கிறது என்று தெரியுமா? என என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்றேன். நபி அவர்கள், அது அர்ஷுக்கு கிழே சஜ்தா செய்வதற்காக செல்கிறது. அங்கு அது மீண்டும் கிழக்கில் உதயமாவதற்கு அனுமதி கேட்கிறது. உடனே அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நாள் அது சஜ்தா செய்ய அது ஏற்க்கப்படாமல் வந்த வழியே திரும்பிச்சென்றுவிடு என்று கூறப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும். இதைத்தான் சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்கவனின் நிர்ணயமாகும் எனும் 36:38ம் இறைவசனம் குறிக்கிறது என்றார்கள்.

குரானை எழுதிய இவர்களின் நம்பிக்கைப்படி அல்லாவிடமிருந்து மக்களுக்காக குரானை கொண்டுவந்த தூதரின் விளக்கம் இப்படி இருக்கிறது, ஆனால் இவர்களோ குருவி தலையில் பனங்காயை இல்லையில்லை யானையையே ஏற்றி வைக்கிறார்கள்.

அர்ஷ் – இறைவனின் சிம்மாசனம். சஜ்தா – வணக்கம்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்


source:senkodi

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP