சமீபத்திய பதிவுகள்

சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

>> Wednesday, March 14, 2012


 

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 19

குரானின் திட ஆதாரங்களில் அடுத்து வருவது மறைக்கப்பட்ட ஏடுகள் எனக் கருதப்படும் இஞ்சீல் வேதம். இஸ்லாமிய நம்பிக்கைகளை பொருத்தவரை அனேக இறைத்தூதர்கள் அனேக வேதங்கள் இருந்தாலும், குரான் பெயர் குறிப்பிடுவது நான்கைத்தான். தாவூது (தாவீது) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட ஸபூர், மூஸா (மோசஸ்) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட தவ்ராத், ஈசா அல்லது மஸீஹ் (ஏசு) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட இஞ்சீல், முகம்மது எனும் இறைத்துதருக்கு வழங்கப்பட்ட குரான். இந்த நான்கில் எஞ்சியிருப்பது குரான் மட்டுமே, ஏனையவை அழிந்து விட்டன அல்லது அழிக்கப்பட்டுவிட்டன. இதில் ஈசாவுக்கு வழங்கப்பட்ட வேதமான இஞ்சீல் மனிதக்கரங்களால் திருத்தப்பட்டு உருமாறி அதன் தன்மையை இழந்து இருப்பதுதான் பைபிள் எனும் கிருஸ்தவர்களின் வேதம் என்பது இஸ்லாமியர்களின் கருத்து (இஸ்லாமின் கருத்தும் கூட).

கடந்த 1947 ஆம் ஆண்டு ஜோர்டான் நாட்டின் சாக்கடலை அடுத்துள்ள குவாரடானியா (கும்ரான்) எனும் மலையின் குகை ஒன்றிலிருந்து சில தோல் ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கோ, மொழிபெயர்த்து பரவலாக படிப்பதற்கோ அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆவனங்கள் தான் குரானை மெய்ப்படுத்தும் ஆதாரங்கள் என்கிறார்கள் மதவாதிகள். எப்படி? ஈசா மக்களிடம் பிரச்சாரம் செய்தது அவருக்கு அல்லாவால் கொடுக்கப்பட்ட வேதமான இஞ்சீலைத்தான். ஆனால் அதன் பின்னர் வந்தவர்களால் ஈசாவின் போதனைகள் திரிக்கப்பட்டு (பவுல் அல்லது பால்) புதிய மதமாகவும் புதிய வேதமாகவும் உருவாக்கப்பட்டன. அது தான் இன்றிருக்கும் பைபிளும், கிருஸ்தவமும். ஆனால் ஈசா பிரச்சாரம் செய்தது இஸ்லாத்தைத் தான். அதனால் புதிய திரிக்கப்பட்ட போதனைகளை ஏற்காதவர்கள். மெய்யான இஞ்சீல் வேதத்துடன் வெளியேறி மலைக்குகைகளில் மறைந்து வாழ்ந்தனர். அப்படி அவர்களால் மறைத்து வைக்கப்பட்ட அந்த ஏடுகள் தான் 1947ல் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள். அது இன்றிருக்கும் குரானையும் இஸ்லாத்தையும் மெய்ப்படுத்துவதால் தான் மக்கள் பார்வையிலிருந்து மறைத்து விட்டார்கள். இப்படி அந்த ஏடு வெளிப்படுத்தப்படும் என்று குரான் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டதால் குரான் இறைவனின் வேதம் தான் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

இது குறித்து குரான் கூறும் கதை என்ன? குகை (கஹ்பு) என்னும் அத்தியாயத்தில் இந்தக்கதை வருகிறது. "அந்தக் குகையிலிருந்தோரும், சாசனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?" குரான் 18:9 என்று தொடங்கும் வசனங்களிலிருந்து அந்த கதை தொடங்குகிறது. சிலர் ஒரு நாயுடன் அந்த குகையில் வந்து தங்குகிறார்கள், தங்களின் இறைவனிடம் தங்களை பாதுகாக்குமாறு வேண்டுகிறார்கள், இறைவனும் அவர்களது கோரிக்கையை ஏற்று அவர்களை தூங்கச்செய்கிறார். எவ்வளவு காலத்திற்கு? 309 ஆண்டுகள் அவர்கள் தூங்குகிறார்கள். தாங்கள் எவ்வளவு காலம் தூங்கினோம் என்று அவர்களுக்கு தெரியாது. அதை தெரிந்து கொள்ளும் பொருட்டு, தங்களுக்கு உணவு வாங்கிவர அவர்களில் ஒருவரை கவனத்துடன் நடந்து கொள்ளுமாறு எச்சரித்து ஊருக்குள் அனுப்புகின்றனர். 18:9 ல் தொடங்கி 26ம் வசனம் வரை குரான் கூறுவது இது தான். இதில் குரான் இரண்டு செய்திகளை அடிக்கோடிடுகிறது. அவர்கள் மொத்தம் எத்தனை பேர்? எவ்வளவு காலம் அவர்கள் உறங்கினர்? உனக்கு தெரியாத விசயங்களில் நீ தர்க்கிக்கவேண்டாம் என்றும் இதுபற்றி யாரிடமும் விளக்கம் கேட்கவும் வேண்டாம் என்று தன்னுடைய தூதருக்கு(!) அல்லா கட்டளையும் போடுகிறார். ஆனால் இந்தக்கதையில் முக்கியமான செய்தியாக இப்போது கருதப்படும்  அந்த ஏடு குறித்து குரான் விளக்கவேயில்லை 18:9ல் வரும் 'சாசனத்தையுடையோரும்' எனும் ஒரு வார்த்தையை தவிர. முக்கியமான இந்த விசயத்தை விட்டுவிட்டு அவர்கள் எத்தனை பேர் என்பதற்கு அவர்கள் மூவர் நான்காவதாக அவர்களது நாய்,  அவர்கள் ஐவர் ஆறாவதாக அவர்களது நாய்,  அவர்கள் ஏழு பேர் எட்டாவதாக அவர்களது நாய் என்றெல்லாம் விரிக்கிறது கடைசியில் அவர்கள் எத்தனை பேர் என்று குரான் கூறவும் இல்லை. முன்னூறு ஆண்டுகள் உறங்கினார்கள் என்றும் பின் ஒன்பது ஆண்டுகள் அதிகமாக என்றும் கூறுகிறது. முன்னூறா? முன்னூற்று ஒன்பதா? தெரியாது. முக்கியமில்லாத இவைகளை பலவாக்கியங்களில் விவரிக்கும் குரான் முக்கியமான அந்த ஏட்டை ஒரு வார்த்தையோடு முடித்துக்கொண்டுவிட்டது. இந்த வசங்களை வைத்துத்தான் மேலுள்ள கதையும் உருவகிக்கப்படுகிறது.

எத்தனை பேர் என்பது ஒருபுறமிருக்கட்டும், மனிதர்களால் முன்னூறு ஆண்டுகள் அல்லது முன்னூற்று ஒன்பது ஆண்டுகள் தூங்க முடியுமா? மூன்று நூற்றாண்டுகளாய் தூங்கியவர்கள் தூங்கி எழும்போது எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தார்கள் என்றும் குரான் கூறுகிறது. அவர்கள் தங்களுக்குள் ஒரு நாள் அல்லது நாளின் சிறிய பாகம் தூங்கியதாய் பேசிக்கொண்டார்கள் குரான் 18:19

இந்தக்கதையில் குரான் எதை வலியுறுத்த விரும்புகிறது? அதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறது? ஒற்றைச் சொல்லில் சொன்னது தான் முக்கியமானது என்றால் இந்தக்கதையை நீளமாக வளர்த்தது ஏன்? அந்த சாசனங்கள் கண்டெடுக்கப்படும் என்றோ, அது தான் அத்தாட்சி என்றோ அந்த வசங்களில் எந்தக் குறிப்புமில்லை. மாறாக அவர்கள் குகையில் தங்கியிருப்பது தான் நம் அத்தாட்சி என்றும் கூறுகிறது குரான் 18:17.

கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள் எந்தக்காலத்தைச் சேர்ந்தவை? கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எஸ்ஸீனர்களுடையவை என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த சாசனங்கள் ஈசாவின் காலத்தைச் சார்ந்தவை அல்ல, அதற்கும் முன்னூறு ஆண்டுகளுக்கு முந்தயவை. ஆகவே அது ஈசாவுக்கு அருளப்பட்ட வேதமாக,  இஞ்சீலாக இருக்கமுடியாது.  அது ஈசாவுக்கு அருளப்பட்ட வேதம், அது குரானை ஒத்திருக்கிறது அதனால் தான் திருச்சபைகளும், கிருஸ்தவர்களும் அதை மறைக்கிறார்கள் என்று இஸ்லாமியவாதிகளின் பிரச்சாரத்தில் உண்மையில்லை.

அடுத்து ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது பின் ஏன் திருச்சபைகள் அதை மறைக்கவேண்டும்? இதில் தான் கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்களின் முக்கியத்துவமே அடங்கியிருக்கிறது. என்னதான் திருச்சபைகள் உலகத்தின் பார்வையிலிருந்து அதை மறைக்கப் பாடுபட்டாலும் அவை வெளியே கசிந்தே இருக்கின்றன. ஈசாவின் அதாவது ஏசுவின் வாழ்வில் நடந்ததாக கூறப்படும் அனேக நிகழ்ச்சிகளும், அவரின் உரையாடல்களும் அவர் கூறிய எடுத்துக்காட்டுகளும் அந்த சாசனங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அது எப்படி? முன்னூறு ஆண்டுகளுக்கு பிறகு பிறக்கப்போகும் ஒருவரின் செயல்களும் பேச்சுகளும் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னமே எப்படி எழுதி வைக்கப்பட்டிருக்க முடியும்? இங்கு தான் இதில் புத்தரின் பங்களிப்பு வருகிறது.

இங்கிலாந்து முதல் ஈராக் வரை நீண்டிருந்த பேரரசாகிய ரோமப் பேரரசின் பாலஸ்தீனப் பகுதியில் வாழ்ந்ததாக கருதப்படும் தெய்வத்திருமகனாக போற்றப்படும் ஏசு குறித்த வரலாற்றுத்தடங்கள் என்ன? அங்கு கிமு நான்கில் ஆட்சி புரிந்த ஜூலியஸ் சீசர், அவருக்குப்பின் அகஸ்டஸ் சீசர், கிமு மூன்றாம் நூற்றாண்டின் கிரேக்கத்தின் அலெக்ஸாண்டர் என்று பலர் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. இந்தியாவில் புத்தர் (கிமு 563- 483) சந்திரகுப்த மௌரியர் (கிமு நான்காம் நூற்றாண்டு) அசோகன் (கிமு மூன்றாம் நூற்றாண்டு) போன்ற மன்னர்களுக்கு கல்வெட்டு சான்றுகள் இருக்கின்றன. மன்னர்கள் மட்டுமல்ல. சாக்ரடீஸ் (கிமு 427- 347) அரிஸ்டாட்டில் (கிமு 384- 322) போன்ற தத்துவ அறிஞர்கள், ஈஸ்கிளீஸ் (கிமு 525 – 456) யூரிபிடஸ் (கிமு 480 – 406) ஆஸ்ரிடோபான்ஸ் (கிமு 445 – 385) போன்ற கிரேக எழுத்தாளர்கள் குறித்த விபரங்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இவர்களைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஒரு புரட்சி வீரரான ஏசு குறித்த எந்தவித ஆதாரங்களும் கிடைக்காமல் போனதெப்படி?

ஏசு எனும் ஒருவர் வரலாற்றில் வாழ்ந்திருந்தார் என்பதற்கு முன்வைக்கப்படும் ஆதாரங்களான ரோமர்கள் யூதர்கள் ஆகியோரின் நூல்களான பிலாவியஸ் ஜோசபஸ் எழுதிய தி ஆன்டிகுடீஸ் ஆப் தி ஜெவ்ஸ்(The Antiquities of the Jews), யூதர்களின் சிறப்பைக் கூறும் டால்முட்(Talmud), பிளீனிதியங்கர் ரோமப் பேரரசன் டார்ஜானுக்கு எழுதிய கடிதம், டாஸிடஸ் எழுதிய அன்னல்ஸ் (Annals) போன்ற அனைத்தும் ஐயத்திற்கிடமானவை என வரலாற்றாசிரியர்களால் தெளிவுபடுத்தப் பட்டிருக்கின்றன.. எனவே ஏசு என்பவர் வரலாற்று மனிதரல்ல, மாறாக கற்பனை மனிதராகவே இருந்திருக்கிறார். இதை இன்னும் தெளிவதற்கு நாம் புத்தரிலிருந்து தொடங்க வேண்டும்.

புத்தரின் வாழ்வை விவரிக்கும் நூலகளான திரிபீடகங்கள், லலிதவிஸ்தாரம், தம்மபதம் போன்ற நூல்களில் கூறப்படும் புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த அனேக நிகழ்வுகள் ஏசுவின் வாழ்விலும் நிகழ்ந்திருப்பதை காணலாம்,

1) சித்தார்த்தனின் அன்னையின் பெயர் மாயா தேவி, ஏசுவின் அன்னை மேரி. இருவருமே ஆண் துணையின்றி குழந்தையை ஈன்றனர்.

2) சித்தார்த்தன் பிறந்ததும் மன்னன் பிம்பிசாரன் அக்குழந்தையை கொல்ல முயற்சித்தான். ஏசுவை ஏரோது மன்னன் கொல்ல முயற்சித்தான்.

3) ஏசுவின் மக்களுக்கான பணியில் சாத்தான் குறுக்கிடுவதைப்போல் புத்தரின் பணியில் மாரன் குறுக்கிடுகிறான்.

4) புத்தரின் சீடரான ஆனந்தர் மாதங்கி எனும் தாழ்த்தப்பட்ட பெண்ணிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்க அவளோ தாழ்த்தப்பட்ட இனத்தைச்சார்ந்த என்னிடம் உயர்ந்த குலத்தைச்சார்ந்த நீங்கள் தண்ணீர் அருந்தலாமா எனக்கேட்க ஆனந்தர் பதிலாக நான் தண்ணீர்தான் கேட்டேன் குலம் கேட்கவில்லை என்று அவளிடம் தண்ணீர் பெற்று அருந்துகிறார். ஏசு ஒருமுறை ஒரு சமாரிய பெண்ணிடம் தண்ணீர் கேட்க அவளோ நீரோ யூதர் நான் சமாரியப் பெண் என்னிடம் தண்ணிர் கேட்கலாமா எனக்கேட்க , ஏசு பதிலாக நீ தண்ணீருடன் இருக்கிறாய் நான் தாகத்துடன் இருக்கிறேன் என்று தண்ணீர் வாங்கி அருந்துகிறார்.

5) புத்தர் ஞானோபதேசம் செய்ய காசி நகருக்கு செல்கிறார், அங்கு அவரது சொற்பொழிவைக்கேட்ட அவரின் எதிரி உட்பட நால்வர் சீடராக மாறுகிறார்கள். இதே கதை ஏசு வாழ்விலும் உண்டு ஒரே வித்தியாசம் காசி நகருக்கு பதிலாக கபர்னகூம்.

6) ஏசு உபதேசிக்கிறார், தன்னைப்போலவே எதிரிகளிடமும் நட்புக்கொள்ளவேண்டும்; புத்தர் உபதேசிக்கிறார், நம்முடைய எல்லாச்செயலும் நட்பும் தயவும் நிறம்பியதாய் இருக்கவேண்டும்.

7) தன்னுடன் சேருபவர்கள் சொத்து சுகங்களை துறந்து எளிமையாக வாழவேண்டும் என்பது புத்தரின் கட்டளை. புனிதப்பயணம் தொடங்கும் போது ஊன்றுகோல் அன்றி வேறு எதையும் எடுத்துச்செல்லக்கூடாது, இரண்டு உடைகள் உடுத்தக்கூடாது இது ஏசுவின் கட்டளை.

8) சாத்தானின் சூழ்ச்சி வலையிலிருந்து மீண்ட ஏசு கபர்னகூம் செல்கிறார். மாரனின் சோதனையிலிருந்து மீண்ட புத்தர் காசி செல்கிறார் (காசி கபர்னகூம் ஒற்றுமை காண்க)

9) புத்தர் கூறுகிறார் வானம் பூமியின் மீது இடிந்து விழுந்து இந்த உலகம் அழிந்து போகலாம், வலிமை மிகுந்த கடல் வற்றிப்போகலாம் ஆனந்தா என்னுடைய வாக்குகள் நிலைத்திருக்கும். கிருஸ்து கூறுகிறார் வானமும் பூமியும் அழிந்து போகலாம்  ஆனால் என்னுடைய வாக்கிற்கு அழிவு கிடையாது.

10) ஏசு இறந்தபின் மூன்றாம் நாள் மீண்டு வருகிறார். புத்தர் இறந்த மூன்றாம் நாள் அவரை அடக்கம் செய்த கல்லறையின் கதவு ஏதோஒரு சக்தியால் திடீரென திறக்கிறது.


புத்தரின் வாழ்வில் நிகழ்ந்தவையாக கூறப்படும் இந்தநிகழ்வுகள் புத்தர் இறந்து 130 ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட நூல்களில் இடம்பெற்றிருக்கின்றன, அதேநேரம் ஏசு பிறப்பதற்கு 250 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

மாக்ஸ்முல்லர் இவை குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார் "புத்தரும் அவருடைய சீடர்களும் சொல்லிய மொழி நடைக்கும், கிருஸ்துவும் அவருடைய சீடரும் சொல்லிய மொழி நடைக்கும் பெரும் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். புத்தமத நூல்களில் காணப்படுகின்ற சில உவமைகளும் கதைகளும் புதிய ஏற்பாட்டிலிருந்து எடுத்தது தானோ என்று ஐயம் தோன்றலாம், ஆனால் அவையெல்லாம் கிருஸ்து பிறப்பதற்கு முன்பே எழுதப்பட்டவை"

ஆக ஏசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்த ஒருவரல்ல என்பது உறுதியாகிறது. அடிமைகளின் எழுச்சியை அடக்குவதற்கு புத்த மதத்திலிருந்து உருவப்பட்ட கதைகளுடன் ஒரு கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் இதிலிருந்து விளங்குகிறது. இது திருச்சபைகளுக்கும் தெரிந்து தான் இருந்திருக்கவேண்டும். அதனால் தான் அதை அம்பலப்படுத்தும் விதத்தில் கண்டெடுக்கப்பட்ட சாக்கடல் சாசனச் சுருள்கள் என்றழைக்கப்படும் அந்த ஆவணங்களை மறைத்து விட்டனர். இதன்பின்னரும் இன்னொரு கேள்வி தொக்கி நிற்கிறது. இந்திய நேபாள எல்லையில் நிகழ்ந்த கதைகளும் நூல்களும் பாலஸ்தீனத்திற்கு எப்படி பரவியது? இதற்கும் வரலாற்றில் சான்றுகள் இருக்கின்றன.

கிமு 327ல் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்து  தான் வென்ற நாடுகளிலிருந்து தத்துவ கலை சாத்திர நூல்களை தன்னுடன் எடுத்துசென்றான் என்பது வரலாறு. எகிப்தில் தான் உருவாகிய அலெக்ஸாண்டிரியா நகருக்கு இந்தியாவிலிருந்து புத்த பிக்குகளை அழைத்துச்சென்றது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது மட்டுமன்றி அசோகன் கலிங்கப்போரில் வென்று மனம்  திரும்பி புத்த மதத்தில் ஈடுபாடு கொண்டு அன்றைய உலகின் எகிப்து, பார்சீகம், ரோம் உட்பட எல்லாப் பகுதிகளுக்கும் தூதுவர்களை அனுப்பிவைத்திருக்கிறான். இப்படி அனுப்பப்பட்ட புத்தமத தூதர்களின் கொள்கைகளால் கவரப்பட்ட குழுவினருக்குத்தான் எஸ்ஸீனர் என்று பெயர். இந்த எஸ்ஸீனர்களுக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது, நாசரேயர்கள் என்பதுதான் அது.

ஏசு நாசரேத் எனும் ஊரில் பிறந்தார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீனத்தில் நாசரேத் எனும் ஊர் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பழைய ஏற்பாடில் எந்த இடத்திலும் நாசரேத் எனும் ஊரைப்பற்றிய குறிப்பும் இல்லை. எனவே நாசரேயனாகிய கிருஸ்து எனும் பதம் நாசரேயர்கள் என்றழைக்கப்பட்ட புத்தக்கொள்கைகளால் கவரப்பட்ட குழுக்களையே குறிக்கும். எனவே பௌத்தக்கொள்கைகளைப் பற்றிய குறிப்பேடுகள் தான் கண்டெடுக்கப்பட்ட அந்த சாசனங்கள். ஏசு பொய் எனும் குட்டு உடைந்துவிடக்கூடதே என்று திருச்சபைகள் அதை மறைக்க; அதுவே குரானை உறுதிப்படுத்துவதாக இவர்கள் கதைக்கிறார்கள்.

இஸ்லாமியர்கள் வழக்கமாக கேட்கும் கேள்வி ஒன்றிருக்கிறது. எல்லம் சரி இது எப்படி 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முகம்மதுவுக்கு தெரிந்தது? இதற்கான பதிலும் அந்த குரான் வசனங்களிலேயே இருக்கிறது. குரான் 18:22 "இன்னும் அவர்கள் குறித்து இவர்கள் எவர்களிடமும் நீர் தீர்ப்பு கேட்கவும் வேண்டாம்" முகம்மதின் காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு இந்தக்கதை தெரிந்திருக்கிறது என்பதும், இது அவர்களிடம் இருந்துவரும் புராணக்கதை என்பதும் இந்த வசனத்திலிருந்தே விளங்குகிறது.

ஆக இவர்களின் அத்தாட்சிகளும் சான்றுகளும் எந்தவகைப் பட்டவை என்பது தெளிவாகிறதல்லவா. கேள்வரகில் எண்ணெய் வடிந்தால் என்று ஒரு பழமொழி சொல்வார்களே அது நினைவுக்கு வருகிறதா?

இத்தொடரின் முந்தைய பகுதிகள்


18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13.  கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9.  பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….


source:senkodi

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP