சமீபத்திய பதிவுகள்

"யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க?

>> Friday, March 14, 2008

"யாருங்க இப்பல்லாம் ஜாதி பாக்குறாங்க?''

தீண்டாமை என்பது சாதி இந்துக்களின் ஒருவகையான மனநோய். இந்த நோய் எனக்கில்லை. ஆனால், இது ஒரு மனச்சுளுக்கு. தீண்டாமையை கடைப்பிடிப்பது சரியானது என்று ஒவ்வொரு இந்துவும் நம்புகிறார். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்துக்களிடம் உள்ள இந்த மனச்சுளுக்கினை என்னுடைய நண்பர் எப்படி தீர்க்கப்போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. இந்துக்கள் அனைவரும் ஒருவகையான மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டால் ஒழிய, அவர்களை இந்நோயிலிருந்து குணப்படுத்துவது மிகவும் கடினமாகும்.

1. சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சூர்யா (25) என்ற தலித் இளைஞர், வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதால் அந்த இளைஞரை தேடிப்பிடித்து, துன்புறுத்தி, அதன் உச்சகட்டமாக ஆவடி காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 2.2.2008

2. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள பேய்கரும்பன் கோட்டை என்ற கிராமத்தில், மாட்டுப் பொங்கலையொட்டி நிகழ்ந்த ஜல்லிக்கட்டில், ஒரு தலித்துக்கு சொந்தமான மாடு வெற்றி பெற்றுவிட்டது என்பதற்காக, 30க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் மாட்டின் சொந்தக்காரரைத் தாக்கியுள்ளனர். அவருக்கு ஆதரவாக சென்ற தலித்துகள் மீதும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட தலித்துகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற போதும், இந்தக் கும்பல் அவர்களை வழிமறித்து கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. காயமடைந்த எட்டு தலித்துகள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.-இந்தியன் எக்ஸ்பிரஸ் - 25.1.2008,

3. தேனி மாவட்டத்தில் உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் காதர் பாட்சா என்பவரின் தோட்டத்திற்குள் மூன்று தலித் சிறுவர்கள்-பெருமாள் சாமி (10), நாகலிங்கம் (15) மற்றும் ரிக்கி கெவின் (14) முகம் கழுவச் சென்றனர். அவர்களை அந்தத் தோட்ட உரிமையாளர் அடித்து, துன்புறுத்தி, நிர்வாணமாக்கி துரத்தியுள்ளார். ஆனால், இவர்களுடைய பெற்றோர்கள் அளித்த புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்துள்ளனர். இறுதியில் உயர் அதிகாரிகளின் தலையீட்டுக்குப் பிறகே இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 5.2.2008

4. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 65 தனி பஞ்சாயத்துகளில் 35 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைய அனுமதி மறுப்பு, இழிவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துதல் போன்ற பாகுபாடுகள் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து நீடிப்பதாக இவர்கள் பத்திரப் பேப்பரில் கையெழுத்திட்டு, பத்திரிகைகளுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த மாவட்ட அரசு அதிகாரிகள், இந்த வாக்குமூலத்தை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டி வருகின்றனர்.- தி இந்து - 10.2.2008

5. மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன்பட்டியில் உள்ள கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி, மூன்று வாரத்திற்கு முன்னால் அதே கிராமத்தில் உள்ள சாதி இந்துவால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டுள்ளார். இக்குற்றவாளி (சுப்பிரமணி) ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகும், உள்ளூர் காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. அங்குள்ள தலித் இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகே காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனாலும் சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ்- 21.2.2008

6. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடம் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்து மூன்று ஆண்டுகளில் மூன்று முறை இந்நினைவிடம் சேதப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு முறை கூட சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலிஸ் கைது செய்யவில்லை, வழக்கும் பதிவு செய்யவில்லை. இரண்டு வாரத்திற்குள் இது தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை எனில், புதிய தமிழகம் போராட்டத்தில் ஈடுபடும்.- தினமணி -14.2.2008

7. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களான அ. அண்ணாதுரை, பாக்கியம் உள்ளிட்ட ஆறு தனி பஞ்சாயத்து தலைவர்கள் 11.1.08 அன்று செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் மீது கடுமையான சாதி பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினர். இத்தலைவர்கள் யாருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை.- இந்தியன் எக்ஸ்பிரஸ் - 12.1.08

8. நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித்துகள் பொது சாலைகளில் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க சாதி இந்துக்கள் அனுமதிப்பது இல்லை. மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், 'தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கூட தங்களுடைய செருப்புகளை கையால் தூக்கிக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்' என்று கூறினார். தேனிமாவட்டத்தில் உள்ள நரியூத்து பஞ்சாயத்துத் தலைவரான பழனியம்மாள் கூட அந்த ஊரின் கோயிலுக்குள் நுழைய முடியாது, அவர்களுடைய கிராமத்தின் தேநீர்க்கடைகளில் உள்ள பெஞ்சுகளில் சமமாக உட்கார முடியாது, இரட்டை டம்ளர் முறையும் நீடிப்பதாகக் கூறுகிறார். கடலூர் மாவட்டம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்ப்பதால், தலித் குழந்தைகளை அங்குள்ள பக்கத்து ஊருக்கு அனுப்புகின்றனர்.

'எவிடன்ஸ்' என்ற அமைப்பின் இயக்குநர் கதிர், "அரசு அறிக்கையின்படி தலித்துகளுக்கு எதிராக 538 கிராமங்களில் பாகுபாடு நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை குறித்து ஏழு லட்சம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை'' என்கிறார்.- தி வீக் - 13.1.2008.

9. உத்திரப் பிரதேசத்தில் உள்ள எட்டவா கிராமத்தில் ஒரு மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்த தலித் இளைஞன் தொடர்ந்து அந்தக் கடையில் பணி செய்ய மறுத்ததற்காக, அவரை அந்தக் கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயில் தள்ளி கொன்றுவிட்டார்.- தி இந்து - 4.2.2008

நன்றி: தலித்முரசு

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP