சமீபத்திய பதிவுகள்

பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை எடுக்க ஐந்தாவது முறை முதலமைச்சராக வேண்டி இருந்திருக்கிறது.

>> Tuesday, June 3, 2008




பெரியாரின் நெஞ்சில் தைத்து, நீண்ட நாளாக நெருடிய முள் ஒன்று இனிமேலும் நீங்குகிற விதமாகத் தெரியவில்லை.`அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற தமிழக அரசின் திட்டம் இன்னும் ஆட்டத்திலேயே உள்ளது. அர்ச்சக மாணவர்களை அந்தந்தக் கோயில் அர்ச்சகர்கள், எங்களை கருவறைக்குள் விட மறுக்கிறார்கள். திருமேனியைத் தீண்டக்கூடாது என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, அர்ச்சகர் தேர்வு தள்ளிக் கொண்டே போவதைப் பார்த்தால் அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகராகும் திட்டம் இன்னும் அபாய கட்டத்தைத் தாண்டவில்லை என்றே தோன்றுகிறது'' என அங்கலாய்க்கிறார்கள் இளம் அர்ச்சகர்கள்.

இந்தப் பிரச்னைக்குள் நுழையும் முன்னால் தமிழக அரசு கொண்டுவந்த அந்தத் திட்டத்தைப் பற்றி நமது நினைவலைகளை பின்னோக்கிச் சுழல விடுவோம்.

அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகும் ஒரு புதிய திட்டத்தை 2007-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக அரசு அறிவித்தது. `பெரியார் அவர்களின் நெஞ்சில் நீண்டநாளாக தைத்துக் கிடந்த முள்ளை எடுக்கும் விதத்தில் அனைத்து, சமூகத்தவர்களும் இனி அர்ச்சகராகலாம்' என அறிவித்து தமிழகம் முழுவதும் ஆறு இடங்களில் அதற்கான பயிற்சிப் பள்ளிகளை ஆரம்பித்தார் முதல்வர் கலைஞர்.

சைவ சமயக் கோயில்களான மதுரை, திருவண்ணாமலை, பழநி, திருச்செந்தூர் ஆகியவற்றிலும், வைணவக் கோயில்களான ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஆகியவற்றிலும் இந்தப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, பதினெட்டு வயதுக்கு மேல் இருபத்து நான்கு வயதுக்குள் இருக்கும் ஆண்கள் இதில் சேரலாம் என்ற விதியுடன், அப்படிப் பயில்பவர்களுக்கு மாதாமாதம் உதவித் தொகையாக ஐநூறு ரூபாய் மற்றும் உணவு, தங்குமிடம் ஆகியவற்றை இலவசமாக அளித்து இந்தப் பள்ளிகளை ஆரம்பித்தது அரசு. ஒரு பள்ளிக்குத் தலா நாற்பது மாணவர்கள் என்ற விதத்தில் மொத்தம் 240 மாணவர்கள் இதில் சேர்ந்தார்கள். பின்னர் ஏதேதோ காரணங்களுக்காக 33 மாணவர்கள் நின்றுவிட, 207 இளம் மாணவர்கள் விடாப்பிடியாகப் பயின்று ஓராண்டை நிறைவு செய்யப் போகிறார்கள்.

அர்ச்சகர் பயிற்சியில் இரண்டு செய்முறைப் பாடங்கள் உள்பட மொத்தம் ஆறு பாடங்கள். தமிழ் இலக்கணம், ஆகமவிதிகள் மற்றும் அதன் உட்பிரிவுகளான கிரந்தம், தேவநாகரி, அடுத்ததாக பஞ்சகவ்யம், நித்தியபூஜை, சுலோகம் ஆகியவையே அந்த ஆறு பாடங்கள். இங்கு பயின்று வந்த இளம் அர்ச்சகர்களுக்கு இரண்டுமுறை தீட்கைஷயும் வழங்கப்பட்டது. கோயில் அர்ச்சகர்களைப் போல இவர்களும் பூணூல் அணிந்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதிகாலை 4.30 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை வகுப்பு நேரம்.

அர்ச்சக மாணவர்கள் ஆறு பாடங்களைத் தவிர தியானம், விநாயகர் அகவல், பூஜை, மந்திரம், சாமி அலங்காரம் ஆகியவற்றையும் கற்றுத் தேர்ந்தார்கள். இந்த ஓராண்டு பட்டயப் படிப்பை முடித்து, முதல் பேட்ச் மாணவர்கள் தேர்வைச் சந்திக்க இருந்த நிலையில்தான் சர்ச்சை சாமரசம் வீசத் தொடங்கியது.

`கடந்த 26-ம்தேதி தேர்வு ஆரம்பித்து மே 30-ம்தேதி வரை அது நீடிக்கும்' என அறிவிக்கப்பட்டிருந்தது. அர்ச்சக மாணவர்கள் ஆவலோடு தேர்வுக்குத் தயாராக இருந்த நிலையில், ஏதோ காரணத்துக்காகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு இப்போது ஜூன் 2-ல் தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தமுறையாவது திட்டமிட்டபடி தேர்வு நடக்குமோ? நடக்காதோ? என்கிற அங்கலாய்ப்புடன்தான் காத்திருக்கிறார்கள் அர்ச்சக மாணவர்கள்.

இதற்கிடையே, `அர்ச்சகர் தேர்வு இனி அரோகராதான். அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகர் திட்டம் இதோடு பணால்' என்பதுபோல சில வதந்திகள் இறக்கை கட்டிப் பறக்கத் தொடங்கியுள்ளன. அதோடு `கோயில் கருவறைக்குள் அர்ச்சகர்கள் எங்களை நுழைய விட மறுக்கிறார்கள்' என்ற கொதிப்பும், அர்ச்சக மாணவர்களுக்கு இடையே அலைபாயத் தொடங்கியுள்ளது.

`ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல நாம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் படிக்கும் அர்ச்சக மாணவர்களிடம் நாடி பிடித்துப் பார்த்தோம்.திருவண்ணாமலை திருக்கோயிலில் மொத்தம் 39 மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களில் ஆறுபேர் மலைவாழ் மக்கள் மற்றும் தலித் சமூகத்தினர். இந்த 39 மாணவர்களில் சிலரிடம் நாம் பேசியபோது, கோயில் அர்ச்சகர்கள் எப்படியெல்லாம் இம்சை அரசர்களாக மாறி தங்களைச் சீண்டுகிறார்கள் என புட்டுப்புட்டு வைத்தனர். பெயர், போட்டோ எதுவும் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் நம்மிடம் பேசினார்கள்.

``இந்தக் கோயில் அர்ச்சகர்கள் எங்களைத் தீண்டத்தகாதவர்களாகத்தான் பார்க்கிறார்கள். அவர்களது தொழிலுக்கு நாங்கள் போட்டியாக வந்து முளைத்து விட்டதாகவே நினைக்கிறார்கள். எங்களுக்கு வெறுப்பேற்றி, அர்ச்சகர் படிப்பை நாங்கள் அம்போ என்று பாதியிலேயே விட்டுப் போகும் எண்ணத்தில் செயல்படுகிறார்கள். இதற்காக அவரவர் ஊரில் உள்ள அர்ச்சகர்களை விட்டு எங்கள் குடும்பத்தினரை இழிவாகப் பேச வைக்கிறார்கள். `இவன்கள் எல்லாம் அர்ச்சகராகி கோயிலுக்குள் நுழைந்தால் என்ன ஆகும்? இப்படிப்பட்ட ஆட்கள் எல்லாம் கருவறைக்குள் வந்து திருமேனியைத் தொட்டால் ஊரே பாழாகிப் போகும்' என்பது போல அவதூறு பேசுகிறார்கள். சமயங்களில் `அடிப்போம், உதைப்போம்' என மிரட்டவும் செய்கிறார்கள்.

`உங்கள் பையன் பூணூல் போட்டுக்கொண்டால் எங்கள் பெண்ணை உங்கள் பையனுக்குக் கட்டி வைப்போமா? இந்த வேலையை எல்லாம் நீங்க கத்துக்கிட்டு வந்து என்னடா செய்யப் போறீங்க?' என்று கிண்டல் வேறு செய்கிறார்கள். இருந்தும் நாங்கள் அசரவில்லை.

இத்தனைக்கும் நாங்கள் அர்ச்சகர் பயிற்சிக்காகப் படிப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. படிப்பு நேரம் போக பௌர்ணமி கிரிவலத்தன்று பக்தர் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது, சாப்பாடு ஏற்பாடுகளுக்கு உதவி செய்வது, அபிஷேகத்துக்கான எடுபிடி வேலைகளைச் செய்வது என்று சேவையும் செய்கிறோம்.

ஆனால், இதுவரை ஒருமுறைகூட எங்களை கருவறைக்குள் போகவோ அல்லது திருமேனியைத் தொடவோ அர்ச்சகர்கள் அனுமதித்ததே இல்லை. திருமேனியைத் தொட்டுக் கழுவி அலங்கரிப்பதும் ஒரு பயிற்சிதான். ஆனால், எங்களுக்கு அந்த வாய்ப்புத் தரப்படவேயில்லை. இதனால் எங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் செய்த சிமெண்ட் சிவலிங்கம், அம்மன், நந்தி, சிலைகளுக்குத்தான் அலங்கார வேலைகளைச் செய்து வருகிறோம். எங்களுக்கு இம்சை தருவதற்காகவேஇங்குள்ள அர்ச்சகர்கள், ஓர்உதவி ஆய்வாளரைப் போட்டு வைத்துள்ளனர். நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த அவர் எங்களை நோட்டம் விட்டுக்கொண்டே இருந்து அர்ச்சகர்களிடம் போட்டுக் கொடுத்துவிடுவார்.

அதேபோல் அர்ச்சகர் பயிற்சியை மூன்றாண்டு காலம் வேறு இடத்தில் படித்துவிட்டு வந்த ஓர் அர்ச்சக மாணவர்தான் எங்களுக்குப் போதிய பயிற்சியை அளித்து ஊக்குவிக்கிறார். எங்கள் கிராமங்களில் நடக்கிற சின்னச் சின்ன விழாக்களுக்கு நாங்களே பூஜை செய்கிற அளவுக்கு எங்களைத் தயார்படுத்தியுள்ளார். இந்நிலையில், தற்போது பயிற்சிக் காலம் முடிந்து தேர்வு எழுதுகிற கட்டம் வந்து விட்டது. ஆனால் சிலரது திட்டமிட்ட சதியால் தேர்வு தள்ளிப்போய் விட்டது. தற்போது ஜூன் 2-ம்தேதி தேர்வு என்கிறார்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். அன்றாவது தேர்வு நடக்குமா பார்க்கலாம்'' என்றார்கள் அந்த இளம் அர்ச்சகர்கள்.

இதுபற்றி திருவண்ணாமலை கோயில் தரப்பில் சில முக்கியஸ்தர்களிடம் பேசிப் பார்த்தோம்.

`` `அனைத்துச் சமூகத்தினர் அர்ச்சகர்' விஷயத்தில் உண்மையில் சதிதான் நடக்கிறது. இளம் அர்ச்சகர்களுக்கு ஓராண்டு பயிற்சி போதாது, அதை நீட்டிக்க வேண்டும். எடுத்த எடுப்பில் இவர்களை திருவண்ணாமலை போன்ற பெரிய கோயில்களில் போட முடியாது. சின்னச் சின்னக் கோயில்களில் முதலில் வேலைக்கு அமர்த்தலாம். அதோடு `அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற திட்டம் சரிவராது என்பது போன்ற பல `அழுத்தங்கள்' பல்வேறு தரப்பினரிடமிருந்தும் முதல்வருக்குத் தரப்பட்டிருக்கிறது. ஆனால் முதல்வரோ, அதற்கு ஒப்புக் கொள்ளவில்லையாம். `எனது காலத்திலேயே அனைத்துச் சமூகத்தினரும் அர்ச்சகர் ஆகும் அந்தக் காட்சியை நான் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும்' என்றிருக்கிறார்'' என்றனர் அவர்கள். அதோடு ஏற்கெனவே இளம் அர்ச்சகர்களுக்குப் பயிற்சி அளித்த இரண்டு ஆசிரியர்களை அர்ச்சகர்கள் அடித்து மிரட்டி, அந்த விவகாரம் காவல்துறை வரை போன சம்பவங்களையும் நமக்கு நினைவுபடுத்தினார்கள் அவர்கள்.

அண்மையில் துறை சார்பான கூட்டம் நடந்த போது, ஓர் அதிகாரி, ``பயிற்சி முடித்த இளம் அர்ச்சகர்கள் தேர்வில் தேறினாலும் கூட அர்ச்சகர்கள் அவர்களைக் கோயில் கருவறைக்குள் விடமாட்டார்கள். அப்போது போலீஸ் பாதுகாப்புடன்தான் இளம் அர்ச்சகர்கள் உள்ளே நுழைய வேண்டியிருக்கும்'' என்று கண் கலங்கியிருக்கிறார். மற்றொரு அதிகாரி, ``அர்ச்சகர் பயிற்சித் திட்டத்தை இரண்டாண்டு பயிற்சித் திட்டமாகமாறுதல்செய்துவிட்டு,பதினெட்டுவயதுக்குள் இருப்பவர்களையும், பத்தாம் வகுப்புக்கு மேல் படித்தவர்களை மட்டுமே அட்மிஷன் செய்ய வேண்டும்'' என்றிருக்கிறார்.

பெரியாரின் நெஞ்சில் குத்திய முள்ளை எடுக்க, கலைஞர் ஐந்தாவது முறை முதலமைச்சராக வேண்டி இருந்திருக்கிறது. அப்படியிருந்தும், இன்னும் இந்தத் திட்டம் முழுமை பெற மறுப்பதுதான் வேடிக்கையான வேதனை.
ஸீ ம.பா.கெஜராஜ்
படங்கள்: சு.வி.ராஜ்


நன்றி:குமுதம் ரிப்போர்ட்டர்

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP