சமீபத்திய பதிவுகள்

இந்து மதமும் பெண்களும் (பாகம் 4)

>> Wednesday, October 1, 2008

மனுதர்மத்தை நல்ல புத்தி உள்ள யாருமே ஆதரிக்க மாட்டார்கள். அதை படிக்கின்ற போது குமட்டிக் கொண்டு வரும். ஆனால் மனுதர்மச் சிந்தனைதான் பார்ப்பனியத்தின் அடிப்படைச் சிந்தனை ஆகும்.

மனுதர்மத்தின் இன்னொரு பிரதியான பகவத் கீதை பெண்களைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை இப்பொழுது பார்ப்போம். பகவத் கீதையின் 9ஆவது அத்தியாயத்தில் சுலோகம் 32 இப்படிச் சொல்கிறது.

மாம் ஹி பார்த்த வ்யபாச்ரித்ய யே அபி ஸ்யு பாப யோனய
ஸ்திரியோ வைச்யாஸ்ததா சூத்ராஸ்தே அபி யாந்திபராம் கதிம்

அதாவது பெண்களும் சூத்திரர்களும் வைசிகர்களும் பாவ யோனியில் இருந்து பிறந்தவர்களாம். தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள பகவத் கீதைகளில் "பாவ யோனி" என்பதை "கீழான பிறப்பு", "இழி பிறப்பு" என்று மொழி பெயர்த்துள்ளார்கள். ஆங்கிலத்தில் நேரடியாகவே "born out of the womb of sin" என்று மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

பகவத் கீதையின் பார்வையிலும் பெண் என்பவள் இழி பிறப்புத்தான். அவள் ஒரு பார்ப்பன வீட்டில் பிறந்திருந்தாலும், அது செல்லுபடியாகாது. கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும். சூத்திரர்களுக்கு மறுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான உரிமைகள் பெண்களுக்கும் மறுக்கப்பட்டுள்ளன.

முற்பிறப்பில் செய்த பாவத்தின் பயனாகத்தான் ஒருவன் பெண்ணாகவோ சூத்திரனாகவோ பிறக்கிறான் என்றுதான் இந்து மத வேதங்கள் சொல்கின்றன. அந்த வகையில் சூத்திரர்களை இழிவுபடுத்துகின்ற வேதங்கள், சாத்திரங்கள், மந்திரங்கள் போன்றவை பெண்களையும் இழிவுபடுத்துவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

"இந்து மதமும் பெண்களும்" என்ற தொடர் முடிந்த பிற்பாடு பகவத் கீதை பற்றியும் தொடராக எழுத இருப்பதால், தற்பொழுது பகவத் கீதையைப் பற்றி நான் அதிகம் எழுதாது மிகுதியை தொடர்கிறேன்.

இந்து மதத்தைப் பற்றி அறிந்தவர்கள் ராமானுஜர் பற்றி அறிந்திருப்பார்கள். குறிப்பாக வைணவ சமய மக்களால் ராமானுஜர் கடவுளின் அவதாரம் என்று போற்றப்படுகிறார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணூல் போடுவதில் பாரதிக்கு அவர்தான் அனேகமாக முன்னோடியாக இருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை பூணூல் அணிவித்து பார்ப்பனர்களாக ராமனுஜர் மாற்றுவித்தார் என்று அவரைப் பற்றிச் சொல்வார்கள். அனைவரும் பெருமாளின் குழந்தைகளே என்றும், பெருமாள் பக்தர்களுக்குள் வேறுபாடுகள் கிடையாது என்றும் பிரச்சாரம் செய்தவராக கருதப்படும் ராமனுஜர் பல நூல்களை எழுதியுள்ளார். அவைகள் வைணவத்தின் வேதங்களாக கருதப்படுகின்றன.

அதில் "ஸ்ரீபாஸ்யம்" என்ற நூல் மிக முக்கியமானது. அதில் பெண்கள் பற்றி இப்படி சொல்லப்படுகிறது.

பகவத் பலன தானக்ருதாம்
விஸ்தீரணாம் ப்ரம்ம சூத்ர வ்ருத்திம்
பூர்வாச்சாரியாஹா சஞ்சிக்ஷபூஹி
தன்மதானு சாரேந சூத்ரா அக்ஹதாரீ
வ்யாக்யாஸ்யந்தே….

அதாவது மோட்சம் என்பது பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் உண்டு. சூத்திரர்களுக்கோ பெண்களுக்கோ இல்லை. சூத்திரர்களும் பெண்களும் முற்பிறப்பில் செய்த பாவத்தின் பலனாகத்தான் அவர்கள் அவ்வாறு பிறந்திருக்கிறார்கள். அவர்கள் இப்பிறப்பில் புண்ணியம் செய்து அடுத்த பிறப்பில் பார்ப்பனராக பிறந்து பின்பு மோட்சம் அடையலாம் என்பதுதான் இதன் பொருள். அத்துடன் இதை பிரம்மசூத்திரத்தை உருவாக்கிய ஆச்சாரியர்கள் சொன்னதையே தான் சொல்வதாகவும் ராமானுஜர் குறிப்பிடுகின்றார்.

பக்தர்களுக்குள் வேறுபாடு இல்லை என்று சொன்ன ராமானுஜர்தான் இப்படி எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார். சைவத்துடன் மோதல் இருந்த காலத்தில் வாழ்ந்த ராமனுஜர் சைவத்திற்கு எதிராக ஆள் பிடிப்பதற்காக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணுல் அணிவித்து வைணவப் பார்ப்பனர்களாக மாற்றினாரா என்பது ஆராயத்தக்கது. சிவன் கோயிலாக இருந்த திருப்பதியை ராமனுஜர் பெருமாள் கோயிலாக மாற்றினார் போன்ற விடயங்களும் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது. இதை சந்தர்ப்பம் கிடைத்தால் தனியாக பிறிதொரு முறை பார்ப்போம்.

ராமானுஜர் "ஸ்ரீபாஸ்யத்தில்" எழுதி வைத்ததுதான் பெண் குறித்த இந்து மதத்தின் உண்மையான பார்வை. அதற்கு இந்து மதத்தின் வேதங்கள், சாத்திரங்கள், புராணங்கள் அனைத்துமே ஆதரங்களாகின்றன.

பெண்களை கீழ்பிறப்பு என்று இழிவுபடுத்துகின்ற இந்து மதம் பெண்களுக்கு கல்வியையும் தடைசெய்தது. ஒரு பெண் மந்திரங்களோ, வேதங்களோ, சாத்திரங்களோ எதுவும் கற்கக் கூடாது என்று பெண்ணுக்கு கல்வியை மறுத்தது. வேத, சாத்திரங்களின் படி ஆணிற்கு மட்டும்தான் கல்வி உண்டு. சொத்து உண்டு. பெண்ணிற்கு எதுவும் இல்லை.

பெண்கள் இழிபிறப்பினர் என்ற இந்து மத கருத்தின்படி மந்திரங்களிலும் பெண் இழிவுபடுத்தப்பட்டாள். பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்டதால், அவளால் அதை புரிந்து கொள்ளவோ தட்டிக் கேட்கவோ முடியவில்லை. இதே நிலையில்தான் சூத்திரர்கள் என்று சொல்லப்பட்டவர்களும் இருந்தனர்.

ரிக், யதூர் போன்ற வேதங்களில் இருந்து பெறப்பட்ட மந்திரங்கள் பெண்ணை இழிவுபடுத்தியதைப் பார்த்தோம். மனுதர்ம சாத்திரத்தை பார்த்தோம். பகவத்கீதையைப் பார்த்தோம். இப்பொழுது இந்து மதத்தின் புராணம் ஒன்றையும். பார்ப்போம்.

ஒரு முறை இந்திரன் விஸ்வரூபன் என்பவனைக் கொன்று விட்டான். விஸ்வரூபன் ஒரு பார்ப்பனத் தந்தைக்கும் அசுர குல தாய்க்கும் பிறந்தவன். விஸ்வரூபன் ஒரு பார்ப்பனின் பிள்ளை என்பதால், அவனைக் கொன்ற இந்தரனுக்கு தோசம் உண்டாகி விட்டது.

தோசம் பிடித்ததால் இந்திரன் மிகவும் விகாரமான உருவோடு மிக அருவருப்பாகக் காட்சி அளித்தான். தன்னுடைய தோசத்தை எங்கே இறக்கி வைக்கலாம் என்று அவன் தேடித் திரிந்தான்.

இந்திரன் தன்னுடைய தோசத்தை எங்கே இறக்கி வைத்தான் தெரியுமா?

தொடரும்…..
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP