சமீபத்திய பதிவுகள்

கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறைகள்

>> Tuesday, October 28, 2008

 

கிளாடிஸ் ஸ்டெயின்ஸ் -இந்தப் பெயர் நம் மனங்களில் தவறான காரணங்களுக்காகப் பதிந்துள்ளது. அவருடைய கணவரும், இரு மகன்களும் பத்தாண்டுகளுக்கு முன்பு தீயில் கருகி மடிந்தார்கள். இந்த சம்பவம் ஒரிசா மாநிலம், கியோன்ஜார் மாவட்டம், மனோகர்பூரில் நடந்தது. ஒரிசாவில் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் நிலைநாட்டும்படி ஸ்டெயின்ஸ் அண்மையில் பிரதமர் மன்மோகனுக்கு கடிதம் எழுதினார். டிசம்பர் 24, 2007இல் நடந்த தொடர் தாக்குதல்களில் மட்டும் ஒரிசாவில் 40 தேவாலயங்கள் தாக்கப்பட்டன. இந்தப் பின்னணியில் தான் கிளேடிஸ் ஸ்டெயின்ஸ் பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரங்களில் பலர் காயமடைந்தனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் பல கிராமத்தினர், அருகில் உள்ள காடுகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த முறையும் வன்முறை சம்பவங்கள் அனைத்தும் கிறிஸ்துமஸ் திருநாளை ஒட்டியே நடந்தது.

ஒரிசாவை ஆளும் கூட்டணியில் பா.ஜ.க. முக்கியப் பங்கு வகிப்பதும், ஆர்.எஸ்.எஸ்.இன் துணை அமைப்புகளான வனவாசி கல்யாண் ஆஸ்ரம், பஜ்ரங் தளம் ஆகியவைதான் இதில் நேரடித் தொடர்புடையவை என்பதும் தற்செயலானது அல்ல. இது தொடர்பாக உண்மை அறியச் சென்ற 'குடிமக்கள் விசாரணைக் குழு' -அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

குறுகிய, நீண்ட கால நலன்களை மனதில் கொண்டு தான் இத்தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு தாக்குதலும் தீவிர திட்டமிடுதலுடன் நடைபெறுகிறது. இந்த முறை சுவாமி லட்சுமானந்தாவை கிறித்துவர்கள் தாக்கியதாகக் கூறப்பட்டது. பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த, நிறைய பக்தர்கள் கொண்ட ஒரு சாமியாரை எப்படி சிறுபான்மையினர் தாக்க முடியும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. கிறித்துவ எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு, பொதுவாக கிறிஸ்துமஸ் திருநாளையே தேர்வு செய்கிறார்கள். பல நேரங்களில் இந்த காலத்தில் தான் தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த முறை புல்பாணி பகுதியில் சுவாமி, ஒரு வெளிப்படையான அறிவிப்பை செய்தார். பழங்குடியினர் வாழும் பகுதியில் கிறித்துவர்களின் இருப்பை எங்களால் சகிக்க இயலாது என்றார் அவர்.

1996 முதலே கிறித்துவர்கள் மீதான தாக்குதல்கள் தொடங்கியது. குஜராத் முதல் ஒரிசா வரையிலான பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் நகரங்களில் நடைபெறுவது போல அல்ல இது. அங்கு ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகிவிடும். இங்கு ஆண்டு தோறும் பதற்றம் சூழ்ந்த வண்ணம் உள்ளது. தொடர் தாக்குதல்கள் சிதறலாக நடத்தப்படுகின்றன.
கிறித்துவர்களுக்கு எதிரான தாக்குதல்களின் பெரும் அவலம், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த தாரா சிங், பழங்குடியிரை வைத்தே பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸை கொளுத்தியதுதான். அந்த பாதிரியார் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்ததே, இங்கிருக்கும் பழங்குடியினர் அனைவரையும் கிறித்துவர்களாக மாற்றத் தான் என்று தாராசிங் மற்றும் அவரது அமைப்பினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.

அவர் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை மறைக்கவே அவர் தொழுநோயாளிகளுக்கு சிசிச்சை அளித்ததாகக் கூறப்பட்டது. அவரது மரணத்துக்குப் பிறகு அப்பொழுது தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, இது குறித்து விசாரிக்க வாத்வா கமிஷனை நியமித்தார். அந்தக் குழு மிகத் தெளிவாக ஆய்வு செய்து, பாதிரியார் எந்த மதமாற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அங்கு கிறித்துவர்களின் மக்கள் தொகையில் மாறுதல்கள் ஏதும் இல்லை எனக் கூறியது.

நாடு முழுவதிலும் கிறித்துவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் குறித்த ஆய்வறிக்கைகள் - 'கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குப் பின்னால் உள்ள அரசியல்' என்கிற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வன்முறை நிகழ்வுகள் பழங்குடியினர் பகுதியில்தான் நடந்துள்ளன. கல்வி சார்ந்து இயங்கும் மிஷினரிகள் தான் இவர்களின் இலக்கõக உள்ளனர். நகரங்களில் கல்வி சார்ந்து இயங்கும் மிஷினரிகள் பெரிதாக மதிக்கப்படுகிறார்கள், அங்கீகரிக்கப்படுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் தொடர்ந்து பல பகுதிகளுக்குச் சென்று, 'இந்து மதத்திற்கு மீண்டும் மாற்றுவது' என்பது போன்ற திட்டங்களை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றன.

'பழங்குடியினர் அனைவரும் இந்துக்களே. முகலாயர்களின் படையெடுப்பிலிருந்து தப்பவே அவர்கள் காடுகளில் சென்று தஞ்சம் புகுந்தனர்' என ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. காட்டுக்குச் சென்றதும் அவர்கள் இந்து மத சடங்குகள் மற்றும் நடைமுறைகளை மறந்து விட்டனர். அதனால் தான் அவர்கள் சமூகத்தில் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். நாங்கள் அவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றி, இந்து மதத்தின் பெருமையை காக்கப் போகிறோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

ஒரிசா விஷயத்தை தனியாக 'இந்திய மக்கள் வழக்கு மன்றம்' விசாரித்தது. அதற்கு கேரள உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.கே.உஷா தலைமை வகித்தார். அந்த மன்றம் வருங்கால ஆபத்துகளையும் சுட்டிக் காட்டியது. ஒரிசாவில் எவ்வாறு மதவாத அமைப்புகள் பரவியுள்ளன என்பது கணக்கிடப்பட்டது. அந்த அமைப்புகளின் பரவல் எப்படி சிறு, குறு வன்முறை சம்பவங்களால் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் அனைத்தும் பெரும் கலவரங்களுக்கான முன் அறிவிப்பு போலவே தெரிகிறது. மாநில அரசுகள் இந்த சம்பவங்கள் அனைத்திலும் செயலற்றுக் கிடக்கிறது. இந்த சம்பவங்கள் தொடர்ந்தால், அது இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து சவாலாகவே திகழும்.
இந்த பழங்குடியினர் பகுதிகள் அனைத்திலும் சாமியார்கள் நிரந்தர ஆசிரமங்களை அமைத்துள்ளனர்: ஒரிசாவில் லட்சுமனாந்த், டாங்க்ஸில்

ஆசீமானந்தா, ஜபுவாவில் ஆசாராம் பாபு அவர்களில் சிலர். அங்கு இந்துக்களின் பெரும் அணி திரட்டல்களும் இடையறாது நடைபெற்றன. டாங்க்சில் நடைபெற்ற 'கும்பத்தில்' ஆயிரக்கணக்கான பழங்குடியினர் நாடெங்கிலுமிருந்து சங்பரிவாரால் கொண்டு வரப்பட்டனர். இந்த திருவிழாக்களுக்கு வராத பழங்குடியினர், கடும் நெருக்கடிகளை சந்திப்பார்கள் என வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த பகுதி தான் இந்தியாவின் பின்தங்கிய பகுதியாகத் திகழ்கிறது. முதலில் முஸ்லிம், இரண்டாவது கிறித்துவர்கள் என்கிற ஆர்.எஸ்.எஸ்.இன் முழக்கத்தின்படி தான் தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

கிறித்துவர்களுக்கு எதிரான கலவரம், இந்து ராஷ்டிர கனவின் ஒரு பகுதியே. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு மதமாற்ற நடவடிக்கையில் சில கிறித்துவ நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் கிறித்துவம் இந்தியாவுக்குள் நுழைந்து 19 நூற்றாண்டுகள் ஆன பின்பும், அவர்களது மக்கள் தொகை 2.3 சதவிகிதம் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல மிஷினரிகள் பழங்குடியினருக்கு கல்வி அளிப்பதில் ஈடுபட்டு வருகிறார்கள். கல்வி பெற்ற பழங்குடியினர், தங்கள் உரிமைகளை அறிந்து விழிப்படைந்தவர்களாக இருப்பார்கள். இதனைத் தான் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. மிகச் சிறுபான்மையினரான ஒரு சமூகம், பெரும்பான்மை இந்துக்களுக்கு ஆபத்தை விளைவித்திடும் என்பது வேடிக்கையாக உள்ளது. இந்த மனித உரிமை மீறல்களை நாம் அழுத்தமான நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க வேண்டும். இந்த அவதூறான வதந்திகள் பரவுவதைத் தடுத்து, கல்வி மற்றும் நலத் திட்டங்கள் அந்த மக்களை சென்றடைய வழிவகை செய்ய வேண்டும். திருவிழாக் காலமாகத் திகழ வேண்டிய கிறிஸ்துமஸ் திருநாட்களை, ஆர்.எஸ்.எஸ். வன்முறை சடங்காக உருமாற்றி வருகிறது.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP