சமீபத்திய பதிவுகள்

கங்குலி சதம்:"பாலோ-ஆன்" தவிர்க்க ஆஸி.,போராட்டம்

>> Saturday, October 18, 2008

 
lankasri.comமொகாலி டெஸ்டில் கங்குலி சதம் அடிக்க,இந்திய அணி முதல் இன்னிங்சில் 469ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடியாக விளையாடிய தோனி சதம் எட்டும் வாய்ப்பை நழுவவிட்டார்.

அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து, "பாலோ-ஆனை"தவிர்க்க போராடி வருகிறது. சுழலில் மிரட்டிய மிஸ்ரா 2 விக்கெட் கைப்பற்றினார்.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் "டிரா"வில் முடிந்தது. இரண்டாவது டெஸ்ட் மொகாலியில் நடக்கிறது. முதல் நாளில் சூப்பராக விளையாடிய சச்சின்,லாராவின் உலக சாதனையை முறியடித்தார். இந்திய அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்திருந்தது. கங்குலி 54, இஷாந்த் 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தோனி விளாசல்:நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. "நைட்-வாட்ச்மேன்" இஷாந்த் 9 ரன்களுக்கு சிடில் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் தோனி அதிரடியாக விளையாடினார். ஒயிட் பந்தில் ஒரு இமாலய சிக்சர் அடித்து அரைசதம் கடந்தார். மறுமுனையில் கங்குலியும் பவுண்டரிக்கு அனுப்ப, இந்தியா 400 ரன்களை தொட்டது. சிறப்பாக விளையாடிய இவர் டெஸ்ட் அரங்கில் 16வது சதம் கடந்து, விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார். ஏழாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 109 ரன்கள் எடுத்தநிலையில் கங்குலி, ஒயிட் பந்தில் பிரட் லீயிடம் "கேட்ச்" கொடுத்து அவுட்டானார். இவர் 8 பவுண்டரிகள் உட்பட 225 பந்தில் 102 ரன்கள் எடுத்தார். பெங்களூரு டெஸ்டில் அரைசதம் கடந்து கலக்கிய ஹர்பஜன் (1) இம்முறை சோபிக்கவில்லை.

சதம் நழுவல்: அடுத்த வந்த ஜாகிர் (2) ரன்-அவுட்டானார். சிடில் ஓவரில் 13 ரன்கள் எடுத்து மிரட்டிய தோனி ஒயிட் வீசிய அடுத்த ஓவரையும் விட்டுவைக்கவில்லை. இதில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து சதத்தை நோக்கி விரைவாக முன்னேறினார். ஆனால், சிடில் பந்தில் "எல்.பி.டபிள்யு."ஆக, சதம் கடக்கும் வாய்ப்பு 8 ரன்களில் பறிபோனது. இவர் 4 சிக்சர், 8 பவுண்டரிகளின் உதவியுடன் 92 ரன்கள் எடுத்தார். இந்தியா முதல் இன்னிங்சில் 129 ஓவரில் 469 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. அமித் மிஸ்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஜான்சன், அறிமுக வீரர் சிடில் தலா3 விக்கெட் வீழ்த்தினர்.

துவக்கம் ஏமாற்றம்: இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு துவக்கம் அதிர்ச்சிகரமாக அமைந்தது. ஜாகிர் வீசிய முதல் ஓவரில் ஹைடன் "டக்"அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த பாண்டிங்கை(5) இஷாந்த் வெளியேற்ற, ஆஸ்திரேலியாவின் "டாப்-ஆர்டர்"நிலை குலைந்தது.

மிஸ்ரா மிரட்டல்: இந்நிலையில்களமிறங்கிய ஹசி நிலைமையை உணர்ந்து நிதானமாக விளையாடினர். இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த காடிச்(33), அமித் மிஸ்ரா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இது மிஸ்ராவின் முதல் சர்வதேச விக்கெட்டாக அமைந்தது. அடுத்து வந்த மைக்கேல் கிளார்க்கும் (23) மிஸ்ரா சுழலில் சிக்க, ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது. 367 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா "பாலோ-ஆனை' தவிர்க்க கடுமையாக போராடி வருகிறது. ஹசி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மிஸ்ரா 2 விக்கெட் வீழ்த்தினர்.நாளை ஆஸ்திரேலியாவை விரைவில் சுருட்டினால் மொகாலி டெஸ்டில் இந்தியா வெற்றிக் கொடி நாட்டலாம்.

தோனி அசத்தல்: இன்று பேட்டிங்கில் 92 ரன்கள் எடுத்து அசத்திய தோனி சிறந்த கேப்டனாகவும் ஜொலித்தார். பந்து வீச்சாளர்களை சரியான நேரத்தில் பயன்படுத்தி கொண்ட இவர் பீல்டர்களையும் தேவையான இடத்தில் நிற்க வைத்து, அசத்தினார். இதையடுத்து ரன்கள் சேர்க்க தடுமாறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், நெருக்கடியில் தவறான "ஷாட்"களை தேர்வு செய்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

* நேற்று எடுத்த 92 ரன்களே டெஸ்ட் போட்டிகளில் தோனி கேப்டனாக எடுத்த அதிகபட்ச ஸ்கோர். முன்னதாக கடந்தாண்டு நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கான்பூர் டெஸ்டில் இவர் 32 ரன்கள் எடுத்திருந்தார். இது தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இவரதுஅதிகபட்ச ஸ்கோர்.

* பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் ஜொலித்த தோனி இன்று பீல்டிங்கில் சொதப்பினார். ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி கொடுத்தஇரண்டு எளிய "கேட்ச்"களை பிடிக்க தவறினார். இதை பயன்படுத்தி கொண்ட ஹசி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.

ஓய்வு முடிவில் மாற்றம்?: இன்று சதம் கடந்த கங்குலி, இத்தொடருக்கு பின் ஓய்வு பெறும் தனது முடிவில் எவ்வித மாற்றமுமில்லை என்றார். இது குறித்து அவர் அளித்த பேட்டி: இது தான் என்னுடைய கடைசி டெஸ்ட் தொடர். இதில் எந்த மாற்றமும் இல்லை. சிறப்பாக விளையாட வேண்டும் என நினைத்தேன். முழு திறமையையும் வெளிப்படுத்தி சதம் கடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. நாங்கள் நால்வரும் (சச்சின், டிராவிட், கங்குலி மற்றும் லட்சுமண்) கடந்த 13 ஆண்டுகளாக விளையாடி வருகிறோம். லட்சுமண் 98 டெஸ்டில் விளையாடி விட்டார். 100 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற நான்கு வீரர்கள் ஒரே சமயத்தில் விளையாடுவது என்பது அரிதானது. இவ்வாறு கங்குலி தெரிவித்தார்.

சூப்பர் மிஸ்ரா. : அறிமுக போட்டியில் இரண்டு விக்கெட் கைப்பற்றி அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திருப்பினார் அமித் மிஸ்ரா. டில்லியை சேர்ந்த 25 வயதான இவர் இந்திய அணிக்காக மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஐ.பி.எல்., தொடரில் சேவக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணியில் விளையாடிய இவர் 77 முதல்தரப் போட்டிகளில் விளையாடி 303 விக்கெட் எடுத்துள்ளார். 15 உள்ளூர் "டுவென்டி-20" போட்டியில் 26 விக்கெட் கைப்பற்றியுள்ளார். சிறந்த "லெக் ஸ்பின்னரான"இவர் கும்ளேவுக்கு பதிலாக களமிறக்கப்பட்டார். இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார் மிஸ்ரா.
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1224358303&archive=&start_from=&ucat=4&

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP