`தெண்டுல்கர் சாதனை செய்வார்'-கும்பிளே
>> Thursday, October 16, 2008
இந்திய அணியின் கேப்டன் கும்பிளே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன். ஆனால் நான் இந்த போட்டியில் விளையாடுவேனா, இல்லையா என்பது நாளை காலை (இன்று) தான் முடிவு செய்யப்படும். இன்னும் 24 மணி நேரம் இருக்கிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பதை பார்ப்போம். ஆடுகளத்தை பார்க்கையில், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் போல் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் இங்கு நாங்கள் நிறைய ரன்கள் குவித்து இருக்கிறோம். எனவே இது எங்களது பேட்ஸ்மேன்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
தெண்டுல்கர் உலகின் தலைசிறந்த வீரர். அவர் லாராவின் சாதனையை சீக்கிரம் முறியடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த போட்டியிலேயே சாதனைக்கு தேவையான ரன்களை எடுத்து விடுவார் உறுதியாக நம்புகிறேன். இது அவருக்கு மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டுக்கே மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாக அமையும்.
இவ்வாறு கும்பிளே கூறினார்.
`சாதனை செய்ய விடமாட்டோம்'-பாண்டிங்
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறியதாவது:-
ஸ்டூவர்ட் கிளார்க் இல்லாதது எங்களுக்கு பின்னடைவு என்று கருத முடியாது. எங்கள் அணியில் உள்ள 11 வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்தக்கூடியவர்கள். எங்கள் அணி, உலகின் எந்த அணிக்கு கடும் சவால் அளிக்கக்கூடிய அணியாகும்.
முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை நன்கு `ரிவர்ஸ் ஸ்விங்' செய்தனர். குறிப்பாக ஜாகீர்கான், அதில் சிறப்பாக செயல்பட்டார். ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் எங்கள் அணியின் பிரெட்லீ திறமை மிக்கவர். மொகாலி ஆடுகளத்தில் `ரிவர்ஸ் ஸ்விங்' பந்து வீச்சு எடுபட்டால், அந்த பணியை எங்களது வீரர்கள் நன்றாக செய்வார்கள்.
பெங்களூர் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் தெண்டுல்கர் நிறைய ரன்கள் குவிக்கும் வெறியுடன் ஆடியது தெரிந்தது. லாராவின் சாதனையை அவர் உடைத்தால், அவருக்கு நாங்கள் அனைவரும் வாழ்த்துக்கள் சொல்வோம். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் அந்த சாதனையை செய்ய விடாமல் பார்த்துக் கொள்வார்கள். தெண்டுல்கர் இந்த டெஸ்டில் சாதனைக்கு தேவையான ரன்களை எடுக்க மாட்டார் என்று நம்புகிறோம்.
இவ்வாறு பாண்டிங் கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=444945&disdate=10/17/2008