சமீபத்திய பதிவுகள்

சர்வதேசத்தின் நகர்வுகள் களத்தில் மாறுதலை ஏற்படுத்துமா?-இதயச்சந்திரன்

>> Wednesday, March 4, 2009

 
வன்னிக் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. புதுக்குடியிருப்பை கைப்பற்றிவிட்டோமென கூறிய மறுதினமே, அங்கு தொடர்ந்தும் சண்டை நடைபெறுவதாக உதய நாணயக்கார கூறுகிறார்.
இராணுவம் நிலைகொண்டுள்ள, பின் தளப்பகுதிகளில், விடுதலைப் புலிகளின் அணிகள், ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்வதாக களச் செய்திகள் வெளிப்படுத்துகின்றன.

அதேவேளை இரு வாரங்களிற்கு முன்னர், ஒட்டிசுட்டானில் அமைந்துள்ள கட்டளை மையம்

தாக்கப்பட்டதாக பாதுகாப்பு இணையத்தளம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் எதிர் வினையாக, முன்னரங்கில் மோதலில் ஈடுபட்டுள்ள சில அரச படையணிகள் பின்னகர்த்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அரசு கூறும் குறுகிய நிலப்பரப்பில், சமர்கள் தீவிரம் அடையும் அதேவேளை கொழும்பு மீதான வான் கரும்புலிகளின் தாக்குதல்கள் பலத்த சேதத்தை உண்டு பண்ணியுள்ளன. அரச இறைவரித் திணைக்களம் மீது இத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக இராணுவப் பேச்சாளர், உண்மையை மூடி மறைக்க முயன்றுள்ளார். பாதுகாப்புக் காரணங்களைக் கூறி, வான்படைத் தலைமையகத்தைப் பார்வையிட, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அயல்நாட்டு வானோடிகள் 12 பேர், இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆதார பூர்வமான செய்தியன்று வெளிவந்துள்ளது.இந்த அந்நியப்படை வானோடிகளே, முன்னரங்கில் யுத்த உலங்கு வானூர்திகளை இயக்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கடைசியாகக் கையிருப்பில் இருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்களையும் சுட்டு வீழ்த்தி, வான்புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டிய சிங்களத்தின் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, விடுதலைப் புலிகளின் விமானங்களால் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்படலாமென்று ஒன்றுக்குப் பின் ஒன்று முரணான தகவல்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

அச்சமூட்ட இவ்வாறான கண்டுபிடிப்புக்களை வெளியிடும் சரத்பொன்சேக்கா, தாக்குதல் நடாத்திய விமானத்தில் காணப்பட்ட தொடர் இலக்கங்களிலிருந்து, அவை தென்னாபிரிக்காவிலிருந்து பெறப்பட்டதாக புதிய தகவலொன்றையும் உலவ விட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் அதிகரித்து வரும் ஈழ ஆதரவுப் போராட்டங்களைச் சிதைப்பதற்கு, அந்நாட்டின் மீது அவதூறுகளை சுமத்தும் உத்திகளை சிங்களம் கையாளத் தொடங்கியுள்ளதென்று கருதலாம். ஆனாலும் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் பல இன அழிவுக்கெதிரான அமைப்புக்களும் இணைந்து குவாசுலு என்கிற மாநிலத்தில் நிகழ்த்திய ஈழ அங்கீகாரப் போராட்டமே சிங்களத்தை அதிர வைத்துள்ளதென்பதை இவர்களின் பரப்புரைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அதேவேளை பிரித்தானிய நாடாளுமன்றத்திலும், அமெரிக்க செனட் சபை விசேட கூட்டத்திலும் சிறீலங்கா விவகாரம் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளதை நோக்கலாம். ஆனாலும் இலங்கையில் நடைபெறுவது பயங்கரவாதப் பிரச்சனை என்கிற தனது கோட்பாட்டிலிருந்து, இன்னமும் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் மாறவில்லைபோல் தெரிகிறது.சிறீலங்காவிற்கான பிரித்தானியாவின் விசேட தூதுவராக. திரு. டெஸ் பிறவுனி (DES BROWNE) அவர்களை நியமித்திருப்பதாக, பல வாரங்களாகக் கூறப்படும் கதையே திரும்பவும் பெருமையாக முன் வைக்கப்பட்டது.

பிரித்தானியா ஓரங்கட்டிய விவகாரத்தை ஒரு உறுப்பினர் அம்பலமாக்கியபோது டேவிட் மிலிபாண்ட் கொடுத்த விளக்கம், மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.அதாவது இவ் விவகாரத்தை பாதுகாப்புச்சபையில் முன்வைக்கும் போது, யாராவது ஒரு உறுப்பினர் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்நகர்வினைத் தடுத்தால், அதனை மறுபடியும் கொண்டுவர முடியாத இக்கட்டான நிலையன்று ஏற்படலாமென்பதால், தாம் அதற்கு அநுசரணை வழங்கவில்லையென்று புதிய வியாக்கியானமொன்றை பிரி, வெளியுறவு செயலர் கூறியிருந்தார்.

அதேவேளை அமெரிக்க செனட்சபையின் விசேட கூட்டத்தில் சிறீலங்கா விவகாரம் சற்று ஆழமாக விவாதிக்கப்பட்டது.வெளியுறவிற்கான உப குழு ஏற்பாடு செய்திருந்த இக்கட்டத்தினை திரு. கேசி ( Casey)வழிநடாத்த, 2003 - 2006 வரை சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதுவராகவிருந்த திரு. ஜெவ்ரி, லன்ஸ்டெட் அவர்களும், மனித உரிமைக்கண்காணிப்பகத்தின் விசேட ஆய்வாளர் அனா. நைஸ்ரட் (Ms. Anna Neistat)அம்மையாரும், செனட்டர் திரு. பொப். பீட்ஸ் (BOB.DDIETZ) அவர்களும் பங்குபற்றினர்.

சிறீலங்காவின் ஊடக அடக்கு முறை குறித்து விரிவாக ஆராய்ந்த பொப். பீட்ஸ் அவர்கள், எதிர்கால சிறீலங்கா அரசின் மாற்றங்கள் குறித்து பேசுகையில், அந்நாடு இன்னுமொரு சிம்பாம்வேயாகவோ அல்லது இராணுவ ஆட்சி நடக்கும் மியன்மார் (பர்மா) போன்றோ தோற்றம் பெறலாமெனக் கூறினார்.ஆயினும் ஜோர்ஜ் புஷ்சின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கத் தூதுவராகப் பணிபுரிந்த ஜெவ்ரி லன்ஸ்டேட்டின் பேச்சில், சிங்களத்திற்கு சார்பான தொனியே அதிகம் காணப்பட்டது.மகிந்த இராஜபக்ச ஒரு இனவாதி அல்ல என்கிற கருத்தை உறுதிபடக் கூறினார் லன்ஸ்டேட். அத்தோடு அமெரிக்காவைப் பொறுத்தவரை, எந்தவிதமான கேந்திர நலனும் சிறீலங்காவில் இல்லையென்பதை அவர் கூற முற்பட்டாலும், ஏனையோர் நிகழ்த்திய உரைகளில் அதன் உண்மைத் தன்மை வெளிப்பட்டது.

தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதால், அமெரிக்கா இப்பிரச்சனையில் தலையிட்டு, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இது குறித்த தீர்மானமொன்றினை நிறைவேற்ற வேண்டுமென அனா. நைஸ்ராட் அம்மையார் கூறுகையில், இதனை ரஷ்யாவும், சீனாவும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்குமென்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது.இந்த விவாதத்தில் கலந்துகொண்ட அனைவரும், இரண்டு முக்கிய விடயங்கள் குறித்து பேசுவதை தவிர்த்தார்களென்றே கூற வேண்டும்.

தமிழ்மக்களின் ஏக தலைமை, தமிழீழவிடுதலைப் புலிகள் என்கிற பேருண்மையை இப்பெருமக்கள் ஒத்துக்கொள்ள விரும்பவில்லை. இரண்டாவதாக, சர்வதேச வல்லரசாளர்களின் ஆடுகளமாக சிறீலங்கா மாறிவிட்டதென்கிற பிராந்திய யதார்த்தத்தையும் இவர்கள் ஆராய முயலவில்லை. சீனாவும் பாகிஸ்தானும், சிறீலங்காவின் நிரந்தர நண்பர்கள் என்பதையும், தற்காலிக தந்திரோபாய நண்பன் இந்தியா என்பதையும், இவர்களின் விவாத உட்பொருள் உணர்த்தினாலும், சிங்களத்தின் சர்வதேசப் பார்வை குறித்து இவர்களின் சந்தேகம் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாகவிருக்கிறது.விடுதலைப்புலிகளை சிங்களத்தால் அழிக்க முடியாதென்கிற கருத்தும் இவர்களிடம் தென்படுகிறது.

உருமாற்றமடையக்கூடிய போராட்ட வடிவங்கள் பற்றி எல்லோரும் பேசினார்கள்.இந்தியாவை மீறி, புதிய நகர்வொன்றை துணிவாக முன்னெடுக்க முடியாத தடுமாற்றமும், பொருளாதார நண்பன் ஜப்பான் சுமத்தும் சிங்கள சார்பு அழுத்தங்களும், அமெரிக்காவை ஆட்டிப்படைப்பதுபோல் தெரிகிறது.ஆயினும் வலிந்த தாக்குதல்களை முன்னெடுத்து சில பிரதேசங்களை விடுதலைப் புலிகள் மீட்டெடுத்தால், அமெரிக்கத் தயக்கம் மாறுதலடையலாம்.அதனையே அமெரிக்க அரசு எதிர்பார்ப்பது போலுள்ளது.

-இதயச்சந்திரன்-


நன்றி ஈழமுரசு.

நன்றி:தமிழ்கதிர்

 

http://www.swisstamilweb.com/

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP