சமீபத்திய பதிவுகள்

சமர்க்களங்களின் துணை நாயகன் தீபன் அண்ணா :இந்தப் புயல் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது

>> Saturday, June 27, 2009

தீபன் அண்ணாவும் தமிழீழ போராட்டமும் – ஒரு பார்வை

theepanannaகிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார்.

யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.

தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.

தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.

1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.

இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.

1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.

1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.

இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.

பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.

1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.

தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.

தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.

இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.

1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.

1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.

1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.

யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.

தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.

ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.

இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.

1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.

1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.

ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.

இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.

குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.

2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.

அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான 'L' வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.

கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக் குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானார்.

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை "என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்."

தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.

 

பால்ராஜ் அண்ணாவின் இறுதி நிகழ்வில் தீபன் அண்ணா, இதுவே தீபன் அண்ணா இறுதியாக கலந்து கொண்ட நிகழ்வு.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP