சமீபத்திய பதிவுகள்

புலம்பெயர் தமிழர்கள் திறந்துள்ள புதிய போர்க்களம் தமிழீழத்தை இயல்பாகவே பிரசவிக்கும் சூழலை ஏற்படுத்தும்!

>> Thursday, October 22, 2009


புலம்பெயர் தமிழர்கள் திறந்துள்ள புதிய போர்க்களம் தமிழீழத்தை இயல்பாகவே பிரசவிக்கும் சூழலை ஏற்படுத்தும்!

 நீங்கள் ஒரேயடியாகமரணிக்கப் போகிறீர்களா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாக எனது தேவைகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்றவாறு இரையாகப் போகிறீர்களா?' என்று அந்த வனராஜாவான சிங்கம் அங்கு வாழ்ந்த விலங்குகளைப் பார்த்து கர்ச்சித்தது. நடுங்கிப்போன வன விலங்குகள் வனராஜாவுக்கு உணவாக, தினமும் சிலவாக மரணிக்கச் சம்மதித்தன.

ourlandஇந்த நிலையில்தான் சிங்கள கொலைக் கரங்களின் பிடியிலிருந்து தப்பி வவுனியா முள்வேலி முகாம்களில் வதைபடும் வன்னித் தமிழர்களும், வாயடைக்க வைக்கப்பட்டு வெளியே வாழ மட்டும் அனுமதிக்கப்பட்ட தமிழர்களும் உள்ளார்கள். இலங்கைத் தீவில் தொடர்ந்தும் வாழ வேண்டுமானால் அவர்கள் சிங்கள தேசத்துடன் இதுபோன்றதொரு உடன்படிக்கைக்கு வந்தேயாகவேண்டும் என்பதே விதியாக்கப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்காக எதையும் அர்ப்பணிக்கத் தயாரான வன்னி மக்கள் அடுத்த வேளை உணவை மட்டுமே சிந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வாழ்ந்த வாழ்க்கையையும், அனுபவித்த சுதந்திரத்தையும் மறக்க முடியாத அந்த மக்களது ஏக்கப் பெருமூச்சின் வெப்பம் அந்த வாழ்விட வான் வெளியை தகிக்க வைக்கின்றது. விடுதலை வேள்விக்காகத் தமது பிள்ளைகளை, உறவுகளை அர்ப்பணித்த அந்த மக்கள் அவர்களது கல்லறைகளில் கதறி அழத் தவிக்கின்றார்கள். இறுதி யுத்த காலத்தில் வன்னி மண் எங்கும் வித்துக்களாகி, புதைக்கவும் விதியின்றிச் சிதைந்து போன தம் உறவுகள் வீழ்ந்த நிலத்தில் முத்தமிட ஏங்குகின்றார்கள்.

நாளைய எதிர்காலத்தைத் தொலைத்து நிற்கும் அந்த உறவுகளுக்கு இன்றைய பொழுதும் உத்தரவாதம் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. தினம் தினம் அங்கு கடத்தப்படும் இள வயதினர் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள்? என்ன ஆனார்கள்? என்பது தெரியாமலேயே உள்ளது. சிங்களவனால் விதிக்கப்பட்ட மரணம் எப்போது வரும் என்று அறியாமலேயே அந்த முகாமின் கூடாரங்களுக்குள் ஒடுங்கிக் கிடக்கிறார்கள்.

பருவ மழை ஆரம்பமாவதற்கு முன்னராக அந்த மக்கள் வதை முகாம்களிலிருந்து விடுவிக்கப்படாவிட்டால், ஏற்படப் பொகும் பேரழிவுகள் எண்ணிப் பார்க்க முடியாதது. சிங்கள அரசு விருப்பம்போல, விரும்பும் வகையில் அவர்களைப் பலி கொண்டு வருகிறது.

இந்த நிலையில், 'இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண முடியுமேயொழிய, தனிநாடு சாத்தியமில்லை என்பதை ஏற்றுக்கொண்டு அரசு வழங்கும் தீர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்று சிங்கள ஜனாதிபதி மகிந்த அறிவித்துள்ளார்.

இலங்கைத் தீவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னர், 1983 கறுப்பு ஜுலை வரை சிங்களவர்களால் நிகழ்த்தப்பட்ட அத்தனை இனக் கலவரங்களையும் எதிர்கொண்ட ஈழத் தமிழர்கள், அதன் பின்னரான யுத்தங்களில் எதிர்கொண்ட இழப்புக்களை, சிங்கள அரசு நிகழ்த்திய கொடூரங்களை, அவமானங்களை, வன்புணர்வுக் குற்றங்களை, அம்மணமாக்கிச் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த வாலிபர்களின் நினைவுகளை, முள்ளிவாய்க்கால் அவலங்களை… இவற்றை எல்லாம் மறந்து ஈழத் தமிழர்கள் இனியும் சிங்கள தேசத்துடன் சமரசம் செய்து வாழ்வது சாத்தியம்தானா? என்ற கேள்விகள் அந்த சிங்களத்து மூளைகளில் உதிப்பதே இல்லை.

முள்ளிவாய்க்கால் பேரழிவை யுத்த வெற்றியாகக் கொண்டாடியபோதே சமாதானத்திற்கான அத்தனை பாதைகளும் மூடப்பட்டு விட்டன. வன்னி மக்களை வதை முகாம்களுக்குள் அடைத்த போதே ஐந்தாவது கட்ட ஈழப் போர் அவசியம் என்பது தமிழர்களுக்கு உணர்த்தப்பட்டு விட்டது. இதன் பின்னர் சமாதானம் எங்கிருந்து வரும்? சமரசம் எப்படி உருவாகும்?

பல நாடுகளில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பரிகாரங்களும், அந்தக் கோர அனுபவங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆற்றுப்படுத்தல்களும் வழங்கப்பட்டு அமைதி கொண்டு வருவதே வழக்கமாக இருந்துள்ளது. ஆனால், சிங்கள தேசம் இதற்கு மாறாக, முன்னரிலும் பார்க்க கொடுமைகளையும், அவமானங்களையும், அழிவுகளையுமே தமிழ் மக்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த நிலையில், இலங்கைத் தீவில் சமாதானம் என்பது சிங்கள இனவாதத்தால் சாத்தியமில்லாத கருவாகவே ஆக்கப்பட்டு விட்டது.

இந்திய பிராந்திய வல்லாதிக்க கனவும், சிங்கள இனவாதமும் இணைந்து பயணிக்கும் இன்றைய காலப் பொழுது ஈழத் தமிழருக்கு மிகவும் சவாலானதாகும். தனது வல்லாதிக்க கனவுக்காக ஈழத் தமிழர்களைத் தொடர்நதும் இந்தியா பலி கொடுக்கவே போகின்றது. இது சிங்களத்தை ஈழத் தமிழர்கள் எதிர்ப்பதனால் மட்டும் உருவானதல்ல. தமிழக மீனவர்களையும் இதே காரணத்திற்காக இந்தியா பலி கொடுத்தே வருகின்றது.

83 வரை இனக்கலவரங்கள் மூலம் தமிழர்களை அச்சுறுத்திய சிங்கள இனவாதம் முள்ளிவாய்க்காலின் பின்னர் மீண்டும் மூர்க்கம் பெற்று வருகின்றது. சிங்களத்து போர்முனை வெற்றியைக் கொண்டாட தமிழர்களிடம் கட்டாய வசூலிப்பு, வர்த்தக நிறுவனங்களில் கப்பம் அறவிடல், தமிழ்ப் பெண்களிடம் அத்து மீறல், தமிழர்களை அவமானப்படுத்தல்… எனத் தொடரும் சிங்கள இனவாதத் திமிர் மீண்டும் கறுப்பு ஜுலைகளை எதிர்காலத்தில் உருவாக்கப் போவதையே எதிர்வு கூறுகின்றது.

அத்துடன், சிங்கள அரசின் தொடர் கைதுகளும், சந்தேக சித்திரவதைகளும், விசாரணைகள் அற்ற தடுப்புக் காவல்களும் தமிழ் இளம் சமுதாயத்தின் எதிர்காலத்தைத் தொடர்ந்தும் சீரழித்து வருகின்றது.

தமிழீழ மக்கள் சிங்கள இனத்துடன் இணைந்து வாழ்வதற்கான எந்த அனுகூலங்களையும் சிங்கள தேசம் விட்டு வைக்கவில்லை. சிங்கள இனவாத லோதிக்க சிந்தனைக்குப் பலியான சிங்கள மக்களிடமிருந்து வரக்கூடிய ஆபத்துக்களிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் உத்தரவாதம் இல்லாத நிலையில் சமரசம் என்பது அங்கே சாத்தியமில்லாததாகவே உள்ளது.

இன்றுவரை, வவுனியா முள்வேலி முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள மக்களைப் பார்ப்பதற்கு பொது அமைப்புக்களுக்கோ, பத்திரிகையாளர்களுக்கோ, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை. யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் நடாத்தி முடிக்கப்பட்ட மனிதப் பேரவலங்களின் தடையங்கள் மறைக்கப்படும் வரை அந்தப் பகுதிகளும் தடை செய்யப்பட்ட பிரதேசமாகவே இருக்கப் போகின்றது.

சிங்கள அரசு தன்னால் பிரயோகிக்கக்கூடிய அத்தனை அடக்குமுறைகளினூடாகவும் அங்குள்ள தமிழ் மக்களை மவுனிக்கச் செய்துள்ளது. ஆனாலும், சிங்கள தேசத்தின் அத்தனை கொடுமைகளும் புலம்பெயர் தமிழர்களைக் கொதித்தெழவும், போராடவும் நிர்ப்பந்தித்துள்ளது. புலம்பெயர் தமிழர்கள் திறந்துள்ள புதிய போர்க்களம் சிங்கள தேசத்திற்குப் பல புதிய நெருக்கடிகளை உருவாக்கப் போகின்றது. அது தமிழீழத்தை இயல்பாகவே பிரசவிக்கும் சூழலை ஏற்படுத்தும் என்பது உறுதி.


source:nerudal.

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP