சமீபத்திய பதிவுகள்

போர் முனைக் காயங்களோடு வன்னியிலிருந்து சோகத்தை சுமந்து வந்த மாணவர்கள்!

>> Friday, October 9, 2009

 

stவன்னிப் போருக்குப் பின்னர் அகதிகள் பிரச்சினையே எல்லோருடைய கவனத்திலும் முழு இடத்தையும் பிடித்துள்ளது. இந்த அகதிப் பிரச்சினையினுள்ளே ஏராளம் துயரமிக்க சங்கதிகள் உண்டு. உறவுகளை இழந்தோர், உறவுகளைப் பிரிந்தோர், உடல் உறுப்புகளை இழந்தோர், தொழில் வாய்ப்புகளை இழந்தோர், கல்வியைத் தொடரமுடியாதோர் என பல வகைகளிலும் பாதிப்புகளையும் கவலைகளையுமுடைய சங்கதிகள் இவை. மீள் குடியமர்வின் மூலமே இவற்றில் பலவற்றுக்கான தீர்வினைக்காண முடியும். அது உண்மையே. ஆனால், மீள் குடியமர்வு குறித்து எவராலும் ஒரு சரியான திட்ட வரைபு செய்ய இல்லாதவிடத்து சில தீர்வுகள், சில பரிகாரங்கள் நடப்பது வரவேற்கத்தக்கது.

அண்மையில் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 57 மாணவர்கள் நலன்புரி முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டு கல்வியைத் தொடர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களின் கதியும், கதையும் மிகவும் சோகமானதும் வியப்பானதுமாகும்.

இவர்களில் சிலர் ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று இடையில் தொடர முடியாமல் போனவர்கள். சிலர் இறுதி ஆண்டு மாணவர்கள். வேறு சிலர் கடந்த ஆண்டில் கல்வியை ஆரம்பித்திருக்க வேண்டியவர்கள். இன்னும் சிலர் இந்த வருடம் ஆரம்பிக்கவுள்ளவர்கள். எல்லோரும் வன்னிப்போர் மற்றும் அதன் விளைவான நிலைமைகளினால் பெரும் இடைஞ்சற்பாடுகளில் சிக்கியிருந்தவர்கள். போதாக்குறைக்கு இடைத்தங்கல் முகாம் வாழ்க்கை வேறு. இப்போது யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரவும் ஆரம்பிக்கவும் உள்ளனர். இவர்கள் வவுனியா முகாம்களில் இருந்தே வந்துள்ளனர். இதைப்போல இன்னும் பல மாணவர்கள் புல்மோட்டை மற்றும் யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள முகாம்களில் உள்ளனர். அவர்கள் எவரும் இதுவரை அழைத்துவரப்படவும் இல்லை. கல்வியைத் தொடரலாம் என்று உத்தரவாதப்படுத்தப்படவும் இல்லை.

இப்போது வவுனியாவிலிருந்து வந்திருக்கும் 57 மாணவர்கள் கல்வியைத் தொடருவதற்கு வாய்ப்புக் கிடைத்திருந்தாலும் அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகள் ஏராளம். முதலில் பலர் போர்க்காயங்களுக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள். இந்தக் காயங்கள் இரண்டு வகை. ஒன்று உடற்காயம், இரண்டாவது மனக்காயம். அதாவது உளரீதியான பாதிப்பு. குறிப்பாக மருத்துவ பீடத்துக்குரிய மாணவர் ஒருவர் இரண்டு கால்களுமே இல்லாதிருக்கின்றார். வேறொரு மாணவர் நடக்க முடியாத நிலையிலிருக்கின்றார். வேறொரு மாணவர் பெற்றோரை இழந்திருக்கின்றார். இன்னொருவருக்கு குடும்பத்தில் யாருமே மிஞ்சவில்லை. எல்லோரையும் போர் தின்றுவிட்டது. சித்தங்கலங்கிய நிலையில் வேறுசிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய கடினமான நிலையிலேயே இவர்கள் தமது கல்வியைத் தொடரவுள்ளனர். இதன் பின்னாலுள்ள கதியும் நிலையும்தான் இங்கே முக்கியமானது. போரில் முழுமையாகப் பாதிக்கப்பட்ட இவர்கள், பின்னர் அகதிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். போர் எல்லாவற்றையும் ஏற்கனவே தின்றுவிட்டது. போதாக்குறைக்கு அது அவர்களை எவ்வளவுக்கு உறிஞ்ச முடியுமோ அந்த அளவுக்கு உறிஞ்சிவிட்டது. எனவே, "வெறும் நடைபிணமாகி" வெளித்தள்ளப்பட்டுள்ள இவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு பொருளாதார வசதிகள் இல்லை; போதிய உடைகள் இல்லை; உறவினர்களுடன் தொடர்பு கொள்வதற்கான வசதிகள் இல்லை என்ற நிலையில் இருக்கின்றார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் இவர்களுக்கான உதவிகளுக்காக "முதலுதவி" என்ற அளவில் சிறு உதவியை மட்டுமே அளிக்கும் நிலையில் உள்ளது. ஆனால், இவர்களின் தேவையோ பெரியது. நிலைமையோ மிகவும் சோகமானது. எனவே, இவர்களுக்கான உதவிகள் அதிகளவில் தேவைப்படுகின்றன.

இந்த மாணவர்களுக்கு பிரத்தியேகமான வகையில் உதவிகளை அரசாங்கம் செய்திருக்க வேண்டும். போரின் போதும் சரி, போர் ஓய்ந்த பின்னர் முகாம்களில் இருந்த போதும் சரி இவர்களுடைய குடும்பங்கள் உழைப்போ வருமானமோ இல்லாத நிலையிலேயே கடந்த இரண்டாண்டுகளாக இருந்தன. இப்போதும் அதுதான் நிலைமை. எனவே, குடும்பத்தினரிடமிருந்து எந்த உதவியும் பெற முடியாது. இது பற்றி அரசாங்கத்துக்கு எதுவுமே தெரியாததொன்றல்ல. இதே இடத்தில் சிங்கள மாணவர்கள் இருந்திருந்தால் அவர்களுக்கான உதவிகளையும் பிற ஏற்பாடுகளையும் அரசாங்கம் எவ்வாறு செய்திருக்கும் என்பது எல்லோருக்குமே தெரியும். இந்தவிதமான அணுகுமுறைதான் இலங்கையின் ஐக்கியத்துக்குச் சவாலான விடயங்களாகின்றன.

வருங்காலத் தலைமுறையினரின் இதயங்களை வெல்வதற்கான வழி முறைகளை உருவாக்காத வரையில் வெறும் வார்த்தைகளினால் எந்தப் பயனும் கிட்டிவிடாது. அரசாங்கத்தின் உதவிகள் கிட்டுமா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, இந்த மாணவர்களுக்கு உதவுவதற்கு தமிழ்ச் சமூகம் முன்வர வேண்டும். குறிப்பாக இந்த மாணவர்களில் சிலர் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர்கள். போர்காரணமான மிக இளவயது திருமணங்களில் துணையை இழந்த மாணவிகளும் உள்ளனர், மாணவர்களும் உள்ளனர். இவை எல்லாவற்றுக்குமான உதவியாக தமிழ்த் தரப்புகள், தமிழ் அமைப்புகள் ஏதாவது செய்வது அவசியம். புலம் பெயர் மக்களோ மாணவர் தரப்புகளோ கூட இது குறித்து கனதியாக சிந்திப்பது தேவை.

இந்த மாணவர்களைப் போல, இன்னும் வேறு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவானோரும் உள்ளனர். அவர்களின் நிலைமையும் இதுதான். இன்னும் பள்ளிக் கல்வி, கல்வியியற் கல்லூரிக் கற்கை என்று அங்கெல்லாம் சென்று படிக்கவேண்டியவர்களின் கதியும் இதேதான். எனவே, கல்வியை மதித்துப் போற்றும் பண்புள்ள நமது சமுதாயம் இவர்களின் கல்விக்கு உதவவேண்டும்.

"ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்" என்ற கோட்பாட்டுடன் இயங்கும் "யுனிசெவ்" அமைப்பிடம் கூட இதற்கான இந்த நிலைமைக்கான தீர்வு நோக்கிய வேலைத்திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறே "சேவ் த சில்ரன்" அமைப்பும் உள்ளது. ஆகவே, பிறரின் கைகளை நம்பியிருக்காமல், அவர்களுடைய கால்கள் எப்போது வருகை தரும் என்று காத்திருக்காமல் இந்த மாணவர்களின் கல்விக்கு உதவும் ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இதற்குக் காலதாமதம் கூடாது. விரைவான நடவடிக்கையே அவசியம். தொடரும் துயரங்களிலிருந்து இவர்களை மீட்டெடுக்கும் உதவிப்பணி மீட்புப்பணி தமிழ் மக்கள் அனைவருக்குமுண்டு, அதுவே தமிழ்த்தரப்பைப் பலப்படுத்தும். அதுவே தேவையும். காலத்தே செய்யும் பணியே காலத்தைக் கடந்தும் நிற்கும், காலத்தை உருவாக்கியும் விடும்.

அருள் மனோகரன்.


source:tamilspy


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP