சமீபத்திய பதிவுகள்

இந்தியத் துரோகத்தால் நாம் இழந்தது போதும்!!

>> Thursday, October 1, 2009


indian-and-sla'எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே அதிக ஆபத்தானவர்கள்' என்பது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது தீர்க்கமான கருத்து. தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிரிகளால் பலவீனமுற்றது என்பதிலும் பார்க்க, துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிதைவுற்றது என்பதே உண்மை.

இப்போது ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு எதிரிகளுடன் சமரசம் செய்து கொள்வதா? அல்லது துரோகிகளுடன் கூட்டுச் சேர்வதா என்பதே.
'அமைதிப்படை' என்ற பெயரோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் துரோகத்திற்கு முதல் களப்பலியானவர் லெப். கேர்ணல் திலீபன் அவர்கள். காந்திய மொழியில் இந்தியத் தவறுகளை எடுத்துரைக்க அதே காந்திய பாதையில் பயணித்து, உண்ணா நோன்பிருந்து கேர்ணல் திலீபன் அவர்கள் தன் உயிரைத் தமிழீழ இலட்சியத்திற்காக அர்ப்பணித்தார். தொடர்ந்து, குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் இந்தியத் துரோகத்தால் பலியானபோது விடுதலைப் புலிகள் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகப் போராட முடிவு செய்தார்கள். அப்போதும் அவர்களுக்கு இதே விதமான குழப்பம் உருவாகியது.

சிங்கள எதிரிகளா? இந்தியத் துரோகிகளா? என்று தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் எதிரியுடன் சமரசம் செய்து கொண்டு துரோகியை எதிர்க்கும் முடிவை எடுத்தார். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் அனுமதிக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் பிரசன்னம் சிங்கள மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறவில்லை. தெற்காசிய நாடுகளின் தாதாவாகத் தன்னை நிலைநிறுத்த முணலும் இந்தியாவின் அணுகுமுறை சிங்கள இனவாதிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. இதனை விடுதலைப் புலிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தீர்மானித்தார்கள்.

பிரேமதாஸ தலைமையிலான சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இந்தியப் படைகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற விரும்பிய பிரேமதாஸ விடுதலைப் புலிகளுக்கு வேண்டிய அனைத்து வளங்களையும் அள்ளி வழங்கினார். இந்திய இராணுவம் பலத்த இழப்புக்களுடன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியது. தமிழீழத் தேசியத் தலைவரது 'எதிரியைப் பின்னர் பார்த்துக்கொள்வோம்' என்ற தத்துவம் மீண்டும் அரங்கேறியது. இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் விடுதலைபர் புலிகளை அழித்து விடலாம் என்ற பிரேமதாஸவின் கனவு கனவாகவே நிலைபெற, பிரேமதாஸ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டார்.

தமிழீழத் தேசியத் தலைவரது வார்த்தையும் செயலும் ஒன்றாகவே இருந்தது. துரோகிகள் விரட்டப்பட்டார்கள். எதிரியின் முக்கிய தலைவன் காவு கொள்ளப்பட்டான். கருணா என்ற துரோகி வீழ்த்தப்படாததாலேயே தமிழீழத்தின் இராணுவம் சிதைக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடலாகாது.
இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கக் கனவுக்கு பல்லாயிரக்கணக்கான தமிழாகளையும், தமிழீழக் கனவோடு போராடிய விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பையும் பலி கொடுத்தாகிவிட்டது. இனிமேலாவது தமிழீழ மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.

சிங்களக் கொடூரங்களிலிருந்து விடுதலை பெற்ற இனமாக ஈழத் தமிழர்கள் வாழ்வதை இந்திய அரசு அனுமதிக்கப் போவதில்லை. இந்தியச் சதிக்கும், சிங்களக் கொடூரங்களுக்கும் இடையே ஈழத் தமிழர்களது உயிர்வாழ்தல் என்பது சாத்தியமே இல்லாதது. இத்தனை இன அழிப்பிற்கும், இத்தனை துயரங்களுக்கும், இத்தனை இழப்புக்களுக்கும் பின்னரும் 'சிங்கள தேசத்துடன் சேர்ந்து வாழ்' என்ற சாத்தானின் வேதம் இலங்கைத் தீவில் தமிழர்களை முற்றாகவே அழிக்கும் நிலையையே உருவாக்கும்.

ஈழத் தமிழர்கள் எப்போதுமே இந்திய நலனுடன் சேர்த்தே தமது விருப்பங்களை நிறைவேற்ற எண்ணியதன் விழைவாக பல பிராந்திய நாடுகளின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டார்கள். ஈழத் தமிழர்களை இந்திய உதிரிகளாகக் கருதிய சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தமது இந்திய எதிர்ப்பு நிலைக்குள் ஈழத் தமிழர்களையும் அடக்கி விட்டதனால் சிங்கள தேசத்தின் பக்கம் அவர்களும் நின்று கொண்டார்கள். இந்த நிலை மாற்றம் பெறாத வரை ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை இலங்கைத் தீவில் நிலைநிறுத்தப்படப் போவதில்லை. மாறாக, இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கக் கனவுக்காக ஈழத் தமிழர்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டு இலங்கைத் தீவில் இல்லாமலேயே போய்விடுவார்கள்.

ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், 'நீங்கள் வவுனியா தடை முகாம் ஒன்றினுள் அடைக்கப்பட்டவராக இருந்தால், வெளியே வரும் சூழலில் என்ன செய்வீர்கள்?'.  நிச்சயமாக இலங்கைத் தீவிலிருந்து வெளியேறி, எங்கேயாவது கரை ஒதுங்கவே முயற்சி செய்வீர்கள். அல்லது, வெட்கத்தை விட்டாவது கடல் கடந்து தமிழகம் செல்ல முற்படுவீர்கள். இதுதான் மனித யதார்த்தம். அப்படியாயின், தமிழீழம் நிரந்தர கனவாகவே புலம்பெயர் தேசங்களில் நிலைத்து  விடும்.

இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், புலம்பெயர் தேசத்து மக்கள் தாம் வாழும் நாடுகளின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். மேற்குலக நாடுகள் கடந்தகாலத்தின் தவறான கணிப்புக்களைத் திருத்தி, தமிழீழ மக்களுக்கு நீதி வழங்கத் தவறினால், எமது வாழ்வைத் தனது பிராந்திய நலனுக்காகப் பலி கொள்ளும் இந்தியாவை விட்டு விலகி, அதன் எதிர்த் துருவமான சீனாவின் பக்கம் ஈழத் தமிழர்கள் முழுமையாகச் சாயவேண்டும்.

இந்தியாவின் பக்கம் நின்று நாம் இழந்தது போதும். இந்தியாவை நம்பி நாம் அழிந்தது போதும். இந்தியாவின் சிதைவில்தான் தமிழீழம் மலருமானால், அதற்காகவேனும் நாம் சீனாவின் பக்கம் நின்றேதான் ஆகவேண்டும். இந்திய புராணம் பாடி, ஈழத் தமிழர்களுக்கு மகுடி ஊதும் பலரும் ஈழத் தமிழர்களின் அத்தனை துயரங்களுக்கும் இந்தியாவே காரணம் என்பதை வசதியாக மறந்து விடுகின்றார்கள். தன்னிடம் ஒடுங்க மறுத்த சிறிலங்காவை அடிபணிய வைக்கும் மந்திரக் கோலாகவே ஈழத் தமிழர்களது பிரச்சினையை இந்தியா பயன்படுத்தியுள்ளது. இன்றும் சிறிலங்காவைக் குளிர்வித்துக் காரியமாற்ற ஈழத் தமிழர்களைப் பலிக்கடா ஆக்குவதற்கு இந்தியா தயங்கப் போவதில்லை. இந்தியத் துரேகம் இன்றுடன் முடிவுறப் போவதில்லை. இதிலிருந்து விடுபடுவதே ஈழத் தமிழர்களுக்கிருக்கும் மிகப் பெரிய சவாலாகும்.

'எதிரிகளிலும் பார்க்க துரோகிகள் ஆபத்தானவர்கள்' இது தேசியத் தலைவர் அவர்களது வார்த்தை. 

நன்றி:
சி. பாலச்சந்திரன்
ஆசிரியர் (பாரிஸ் ஈழநாடு)


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP