சமீபத்திய பதிவுகள்

முழு நிலவு... திகில் இரவு! பரப்பிக்குளம் பரவசம்

>> Monday, October 26, 2009

 

பரப்பிக்குளம் பரவசம்!

நிறைய த்ரில்... நிறைய திகில் கலந்த சாகசப் பயணம் செல்ல ஆசையா?

'ஃபுல்மூன் சென்சஸ்' சரியான சாய்ஸ்! பரம்பிக் குளத்தின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு பௌர்ணமி இரவு முழுக்கத் தங்கலாம். ஆனால், அதற்கு உங்களுக்கு ரொம்பவே தில் தேவைப்படும்!டாப் ஸ்லிப்பில் இருந்து 30 கி.மீ. தூரத்தில்இருக் கிறது பரம்பிக்குளம். இன்னமும் வெளியுலகம் அறியாத ரகசியங்களைப் பதுக்கிவைத்திருக்கும் வனப் பகுதி. டாப் ஸ்லிப் தாண்டியதுமே குளிர் டிகிரி டிகிரியாய் எகிறியடிக்கிறது.

குறுகலான மலைப் பாதையெங்கும் ஓங்கி உயர்ந்த தேக்கு மரங்கள். ஆனைப்பாடி எகோ சென்டர் அலுவலகத்தில் வரவேற்கிறார் வன இலாகா அதிகாரி சஞ்சயன் குமார் ஐ.எஃப்.எஸ். வனக் குடில்களில் சின்ன ஓய்வுக்குப் பிறகு தொடர்கிறது பயணம். வனத் துறை ஜீப் செல்லும் வழியெல்லாம் மூங்கில் மரங்கள். ஆங்காங்கே மேய்ந்துகொண்டு இருக் கின்றன மான் கூட்டங் கள். சாலையைக் கடக்கின்றன மயில்கள். கும்பலாக நின்று ஜீப்பை முறைக்கின்றன காட்டெருமைகள். காட்டெருமைதான் பரம்பிக்குளம் வனச் சின்னம்.

ஜீப் ஓரிடத்தில் நிற்க, சில நிமிடங்கள் நடைப் பயணம். அச்சமூட்டுகிறது வன அமைதி. தூரத்தில் எங்கெங்கோ பறவைச் சத்தங்கள். சிறிது தூரத்தில் காடு விலகிக் கண் முன் விரிகிறது பெரிய ஏரி. கரை யோரம் காத்திருக்கிறது மூங்கில் தோணி. அரை மணி நேர ட்ரிப். லைஃப் ஜாக்கெட் கட்டாயம். ஏரித் தண்ணீரை மூங்கில் கட்டை கிழிக்கும் 'ப்ளக் ப்ளக்' சத்தம் மட்டுமே. தூரத்துக் கரையில் ஒரு கறுப்பு முதலை இளம் வெயிலில் சன்பாத் எடுத்துக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் மான்கள் கூட்டமாகத் தண்ணீர் குடிக்கின்றன.

ஏரியில் இருந்து ஒரு மணி நேரம் மோட்டார் போட்டில் தண்ணீரைக் கிழித்தால், ஏரிக்கு நடுவே 4 சதுர கி.மீ. பரந்துகிடக்கிறது பறவைக்கூடு தீவு. தண்ணீர் மட்டம் எவ்வளவு உயர்ந்தாலும் அந்தப் பகுதி மட்டும் மூழ்காதாம். வேம்பு, சந்தனம், எட்டி மரங்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பகல் வெளிச்சத்தில் இந்தச் சங்கதிகளை முடித் தால், நிலா வெளிச்சம் வரவேற்கிறது ஃபுல் மூன் சென்சசுக்கு!

ஜொலிக்கும் முழு நிலவு வெளிச்சத்தில் காட்டை யும், வன விலங்குகளையும் கொஞ்சம் உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் மர வீட்டில் தங்கி ரசிப்பது தான் ஃபுல் மூன் சென்சஸ். அந்த மர வீட்டை அடைய எட்டு கிலோ மீட்டர் நடந்துதான் காட்டின் மையப் பகுதியை அடைய வேண்டும். இரவு உணவை பார்சல் எடுத்துக்கொள்ள வேண் டும். இரண்டு வழிகாட்டிகள், ஒரு பாதுகாவலர் உடன் வருவார்கள்.

ஒரு சின்ன ஏரிக்கரையில் 20 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது அந்த மரக் குடில். குறுகலான மரப்படிகள், வீட்டைச் சுற்றி நடக்க நடைபாதை. வெளிச்சத்தைக் கண்டால் விலங்கு கள் ஓடிவிடும் என்பதால் மின் இணைப்பு கிடையாது. குடிலெங்கும் வெளவால்களின் வீச்சம். குடிலில் இருக்கும்போது மூச்சைக்கூட அடக்கித் தான் விட வேண்டியிருக்கும். சத்தம் காட்டினால் விலங்குகள் சுதாரித்து காட்டுக்குள் மறைந்து விடும்.

மாலை 6 மணி... மங்கிய வெளிச்சத்தில் நான் கைந்து உருவங்கள் அசைந்தன. செந்நாய்க் கூட்டம் இறந்த காட்டெருமையைக் கூறு போட்டுக் கொண்டு இருந்தன. கிட்டத்தட்ட நரியைப் போல இருக்கும் இந்தச் செந்நாய்கள் மான் குட்டிகளைத் துரத்தி வேட்டையாடுமாம்.

இரவு 8.20 மணி... இப்போது வந்தவை சாம்பர் மான்கள். இவை கொஞ்சம் அசமந்த டைப். நம்மைப் பார்த்தால், 'யார்றா இவன்?' என்று நின்று யோசிக்கின்றன. இந்தச் 'சுறுசுறுப்பினாலேயே' புலிகளுக்கு வேலைவைக்காமல் தானாக மாட்டிக்கொண்டு உயிரைவிடும் பாவப்பட்ட ஜீவன்கள்!

இரவு 10.50 மணி... ''தூக்கத்துல அசந்திருக்கும்போது படியைப் பிராண்டுற சத்தம் கேட்டா, கீழே இறங்கிப் போகாதீங்க. சமயங்கள்ல கரடி எதுனா ஏறிக்கிட்டு இருக்கும்!'' என்று கிலி ஏற்றினார் பாதுகாவலர். அவரே பிறகு, ''கவலைப்படாதீங்க. டார்ச் லைட்டை முகத்தில் அடிச்சா பயந்து ஓடிரும்!'' என்று உயிர் பயம் நீக்கினார்.

இரவு 11.05 மணி... 'உஸ்... உஸ்...' எனச் சீறும் சத்தம் கேட்டது. ''ஏதாவது ராஜநாகம் இரையைச் சாப்பிட்டுட்டு இருக்கும். அது ஜீரணமாகாம உடம்பைச் சுத்தி முறுக்கிட்டு இருக்கும்'' என்றார் வழி காட்டி.

இரவு 12.15 மணி... ஏதோ வாசனையை முகர்ந்து பரபரப்பான வழிகாட்டிகள் நம்மை அலர்ட் ஆக்கினார்கள். சில நிமிடங்களில் புள்ளிமான்கள் விநோத சத்தம் எழுப்பிக் கலைந்து ஓடின. ''வேட்டைக்காரன் வந்துட்டு இருக்கான்!'' என்றார்கள். அடுத்த நொடி காட்டையே அதிரச் செய்யும் உறுமல். புலி! ஆர்வம், சிலிர்ப்பு, பயத்தோடு எட்டிப் பார்த்தோம். இருட்டில் சின்னச் சின்னச் சலனங்களைத் தொடர்ந்து... திடீரென மழை சடசடக்க... புலி காட்டுக்குள் பதுங்கியது.

இரவு 12.55 மணி... மழை ஓய்ந்த நேரம் மூங்கில்கள் உடையும் சத்தம். ''கொம்பன்!'' என்று காது விறைத்தார்கள் வழிகாட்டிகள். புதரை விலக்கியபடி முன்னேறியது ஒற்றைக் கொம்பன் அல்ல... 10 கொம்பன்கள். நனைந்த கறுப்பு நிறத்தில், புஷ்டியாக, கம்பீரமான யானைகள். அதன் ஒவ் வோர் அடிக்கும் அதிர்ந்து அடங்கு கிறது காடு!

இரவு 2.10 மணி... தூக்கம் கண்களை அழுத்தியபோது மெள்ள முதுகைச் சுரண்டினார்கள் வழிகாட்டிகள். கொஞ்சம் பார்வையைக் கூர்மையாக்கிப் பார்த்தால் சிறுத்தை ஒன்று தண்ணீர் குடித்துக்கொண்டு இருந்தது. திடீரென காது விடைத்த சிறுத்தை சடாரெனப் பாய்ந்து புதருக்குள் பதுங்கிவிட்டது. ''நம்ம வியர்வை வாசனையை உணர்ந்திருக்கும். அதான் ஓடிருச்சு!'' என்றார்கள். அதிகாலையில் அடிவாரம் திரும்பிய பிறகும் காதுக்குள் பிளிறல், உறுமல் கர்ஜனைகள். ஆயுளுக்கும் மறக்காது அந்த ஓர் இரவு!

வனவாச ட்ரிப் டிப்ஸ்!

முதல் நாள் நண்பகல் 12 மணி முதல் மறுநாள் 12 மணி வரை ஒரு ஜோடிக்கு ரூ.4,000. சீஸன் இல்லாத நாட்களில் ரூ.3,500. தங்குமிடம், உணவு, வழிகாட்டிகள், வாகனம் என்று அத்தனை செலவுகளும் இதில் அடங்கும்.

மது, புகை பிடிக்க அனுமதி கிடையாது. பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை.

காட்டில் சத்தமாகப் பேசவோ, பாடவோ கூடாது. சிவப்பு, மஞ்சள் வண்ண ஆடைகளைத் தவிர்ப்பது நல்லது.

பொள்ளாச்சியில் இருந்து காலை 6.15 மணிக்கு பரம்பிக்குளம் பேருந்து கிளம்பும். அடுத்த பேருந்துக்கு நண்பகல் 3.15 மணி வரை காத்திருக்க வேண்டும். திட்டமிட்டுக் கிளம்புங்கள்!

 
source:vikatan
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP