சமீபத்திய பதிவுகள்

பு லம்பெயர் நாடுகளில் முளைவிடும் புதிய துரையப்பாக்கள்

>> Tuesday, November 10, 2009

 

சமீபகாலமாக அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கினால் மாத்திரமே எமது இலக்கை அடைய முடியும் என்ற போர்வையில் சில தமிழ் புத்தபிரான்கள் தமிழ் மக்களிடையே போதனை நடத்தி வருகின்றனர். தடுப்பு முகாமில் உள்ள மக்களை விடுவிக்கவும், குழந்தைகளைப் பராமரிக்கவும், மற்றும் பல்வேறு உதவிகளை ஈழத்துத் தமிழர்களுக்கு செய்வதற்கு அரசாங்கத்தின் உதவி தேவை என இவர்கள் நாக் கூசாமல் பல பரப்புரைகளை பிரித்தானியத் தமிழர்களின் மனதில் விதைத்து வருகின்றனர். சிங்கள அரசின் கால்களில் விழுந்தால் நன்மை என்றால் விழுந்துவிடலாம் என்கின்றனர்.

யாருடைய ஏற்பாடு?

முள்ளிவாய்க்காலில் உக்கிரபோர் நடந்தவேளை தமிழ் நாட்டில் தமிழர்கள் பொங்கி எழா வண்ணம் ஊழல் பல செய்த இலங்கை துணைத்தூதர் ஹம்சா தற்போது பதவி உயர்வுபெற்று மகிந்தவால் பிரித்தானியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.

புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக பிரித்தானிய வாழ் தமிழர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள், பிரித்தானிய தமிழர்களின் போராட்டங்களால் இலங்கை அரசு இன்றுவரை பல அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது என்றால் அது மிகையாகாது. அப்படியான ஒரு கால கட்டத்தில் பிரித்தானிய தமிழர்களின் போராட்டத்தை உடைத்து, மக்களைப் பிளவு படுத்தி போராட்டத் திறனைக் குறைப்பதற்காக சிறப்புச் செயலாளராக மகிந்தவால் ஆசி வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவரே இந்த ஹம்சா. இவர் தனது நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளார். அதற்கேற்றால் போல ஆட சிலர் தயாராகி வருகின்றனர்.

யார் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கப்போகிறார்கள்?

அதாவது யார் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கப் போகிறார்கள், இதை வெளிப்படையாகப் பேச இவர்கள் ஏன் தயங்குகிறார்கள். பல்வேறு மட்டத்தில் பிரித்தானியாவில் இயங்கும் சில அமைப்புகளில் உள்ள சில புல்லுருவிகளே தற்போது அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் நோக்கைக் கொண்டவர்களாக கானப்படுகின்றார்கள். இவ்வாறு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கப்போவதாகக் கூறும் சிலர், பிரித்தானியப் பொதுமக்களின் சுயவிபரக் கோவைகளையும் வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ளவேண்டும். பல்வேறு காரணத்திற்காக பொது மக்களின் சுய விபரங்களை திரட்டிவைத்திருக்கும் சில சிறிய அமைப்புகளில் உள்ளவர்கள் இவ்வாறு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் பட்சத்தில், இந்த விபரங்கள் எவ்வளவு வீதம் பதுகாப்பாக பேணப்படும் என்பதில் பெரும் ஐயப்பாடு காணப்படுகிறது.

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கினால் எதைச் சாதிக்க முடியும்?

இவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கினால் எதைச் சாதிக்க முடியும் என எண்ணுகின்றனர்? தந்தை செல்வா காலம் முதல் ஏமாற்றப்பட்டு வரும் தமிழினம் பல துரோகங்களைச் சந்தித்துள்ளது. விடுதலைப் புலிகளால் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட யுத்த நிறுத்த அறிவிப்புகள் நிராகரிக்கப்பட்டது, எள்ளி நகையாடியது சிங்களம். இறுதி நேரம் வரை புலிகளையும், மக்களையும் முடிந்தவரை அழித்தொழித்த சிங்கள அரசுடன் சேர்ந்தியங்கி இனி என்ன லாபம்? சர்வதேச அனுசரணையுடன் ஒழுங்கு செய்யப்பட்டு, வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளின் தலைவர்களை கொன்ற சிங்களத்திடம் நாம் எதனை எதிர்பார்க்க முடியும். அன்று கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சிங்கள அரசு, இனிக்கொடுக்கப்போகும் வாக்குறுதியை காப்பாற்றுமா? இதை இனியும் நாம் நம்பலாமா?

அரசியல் சாராத அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? இதில் சுயநலமே மேலோங்கியுள்ளது. அதாவது விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், தமிழர்களுக்கும் புலிகளுக்கும் உதவிய சிலர், தற்போது தம்மை பாதுகாத்துக் கொள்ள இலங்கை அரசுடன் இணைந்து சிங்கள தேசிய அரசியல் நீரோட்டத்தில் நீச்சலடிக்கப்பார்க்கிறார்கள் என்பதே யதார்த்தமாகும். இப்படியான ஒரு விதையை முதலில் விதைத்து, அதனை அறுவடை செய்யக் காத்திருக்கிறார் ஹம்சா. இதற்கு துணைபோகும் சில அமைப்புக்களின் பிரதி நிதிகள் தமது கொள்கைகளை மீள் பரிசீலனை செய்வது நல்லது. 

எந்த விடயங்களில் அவர்கள் அரசுடன் ஒத்துப்போக உள்ளனர் என அவர்கள் பகிரங்கமாகத் தெரிவிக்கவேண்டும். அதை இணைந்து போவதன் மூலமாக மட்டுமா சாதிக்க முடியும் என்ற விவாதத்திற்கு பதிலளிப்பது நல்லது. புலம் பெயர் நாடுகளில் உள்ள இவ்வாறான அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசுடன் தேசிய நீரோட்டத்தில் இணைந்தால், நாளை இவர்களையே ஒரு உதாரணமாகக் காட்டி இலங்கை அரசு உலக நாடுகளிடம் இலங்கையில் ஒரு இனப் பிரச்சனையே கிடையாது என்ற தொனியில் பேசும் வாய்ப்புகள் உள்ளது. எமது போராட்ட வரலாறும், நாட்டுக்காய் உயிரிழந்த போராளிகளையும் உங்கள் மனதில் ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். அவர்கள் திரு உருவப்படத்திற்கு முன்னால் நின்று நாம் செய்வது சரியா எனச் சிந்தியுங்கள். மாவீரர்கள் உங்கள் மனதை தூய்மையாக்குவார்கள்... அந்த சக்தி அவர்களுக்கு உண்டு.

புலத்தில் புதிதாக முளைத்திருக்கும் புத்தபிரான்களே சிங்கள அரசின் தேசிய நீரோட்டத்தில் கலக்க இருக்கும் உங்கள் முடிவால் எமது தமிழினம் கவிழ்ந்துவிடக் கூடாது.

உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது 
athirvu@gmail.com


source:athirvu


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP