சமீபத்திய பதிவுகள்

உங்கள் அருகில் உளவாளி இருக்கலாம்!-டேஞ்சர் இந்தியா... டெரர் ஸ்டோரி!

>> Thursday, December 3, 2009

உங்கள் அருகில் உளவாளி இருக்கலாம்!
டேஞ்சர் இந்தியா... டெரர் ஸ்டோரி!

ரியாக ஓர் ஆண்டு ஆகிறது- 10 தீவிரவாதிகள் மும்பையை முற்றுகையிட்ட தினம், நவம்பர் 26. தீவிரவாத முற்றுகை என்பதுகூடத் தொடர்ந்து நடப்பதுதான். ஆனால், மும்பை பக்கமே வந்து பார்க்காத அந்தப் 10 பேருக்கும் அந்த நகரத்தைப்பற்றியும் தாஜ் ஹோட்டலின் ஒவ்வொரு முனையும் தெரிந்திருந்ததுதான் அதிர்ச்சியான விஷயம். ஹோட்டலை மீட்கக் களத்தில் குதித்த போலீஸிடம் இல்லாத வரைபடங்களைக்கூட அவர்கள் வைத்திருந்தார்கள். இதையெல்லாம் திரட்டுவதற்காகத் தனி டீம் இருப்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அப்படிப்பட்ட சில உளவாளிகள் சமீபகாலமாகச் சிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் கைதாகியுள்ள டேவிட் ஹெட்லியைப் பார்த்து, இந்தியாவின் முகமே இருட்டில் உறைய ஆரம்பித்திருக்கிறது. இந்தியாவின் இதயத்தையே ஆயுதங்களால் அசைத்துப்பார்க்க அமெரிக்காவில் இருந்தபடி அத்தனை காரியங்களையும் பார்த்தவராகச் சுட்டிக்காட்டப்படும் டேவிட்டுக்கு, அங்கும் இங்கும் போய் வர எந்தச் சிக்கலும் இல்லை. அவருடைய நட்பு வட்டாரத்தில், மும்பையில் வளரும் முக்கிய பாலிவுட் புள்ளிகள் இருப்பதுதான் வேதனையான விஷயம்.

இந்திப் பட அதிபர் மகேஷ் பட்டின் மகன் ராகுல் பட், பாலிவுட் நடிகர்களான இம்ரான் ஹாஸ்மி மற்றும் கரண்கபூர் ஆகியோருக்கும், 'தாம்தூம்' நாயகி கங்கணா ரணாவத்துக்கும் இந்த டேவிட் ஹெட்லியுடன் தொடர்பு இருப்பதாக தேசியப் புலனாய்வு ஏஜென்சி சந்தேகப்படுகிறது. அமெரிக்காவில் நிரந்தரமாக வசித்து வந்த அவரையும் அவரது நண்பராக இருந்த ரணாவத்தையும் முதலில் அந்நாட்டு அதிகாரிகள்தான் சந்தேகப்பட்டார்கள். ரணா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர். நீ யார், என்ன என்று விசாரித்தபோது, டேவிட் அதிர்ச்சியான தகவலைச் சொன்னார். ''தெற்கு மும்பையில் 'சியாம் நிவாஜ்' என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் நான் ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்தேன். வெளிநாட்டு வேலைக்கு ஆள் அனுப்பும் ஏஜென்சி வைத்திருந்தேன். பாக். தூதரக அதிகாரிகளுக்கும் எனக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதைவைத்து அவர்களுக்குப் பல தகவல்களைத் தந்து வந்தேன். அவர்கள்தான் என்னை இங்கு அனுப்பிவைத்தார்கள்'' என்றார் டேவிட். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்ப்பு, மும்பை ஹோட்டல் தாக்குதல் இரண்டுக்கும் தகவல் பரிமாற்றம் செய்த சூத்திரதாரியாக டேவிட் ஹெட்லியைச் சந்தேகப்படுகிறார்கள். அங்கிங்கெனாதபடி எங்கும் அந்நிய உளவாளிகளால் இந்தியா நிறைந்திருப்பது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வருகிறது. முக்கியமான அதிகாரிகளில் ஆரம்பித்து, எதுவும் தெரியாத அப்பாவிகள் வரை உளவு பார்க்கப் பயன்படுத்தப்படுகிறார்கள். கறுப்பு ஆடுகளின் நடமாட்டம் கணக்கற்ற எண்ணிக்கையில் கூடிக்கொண்டே போகிறது.

'நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது அவரது அலுவலகத்தில் ஒருவர் வேலை பார்த்தார். அவர் அமெரிக்க உளவாளியாகச் செயல்பட்டார். இந்திய அணு ஆயுத ரகசியங்கள் ரகசியமாக அவர் மூலம் கடத்தப்பட்டன' என்று ஜஸ்வந்த் சிங் சொன்னார். இது சர்ச்சை ஆனதும் பிரதமர் மன்மோகன் சிங், 'ஆள் யார்?' என்று கேட்டார். 'தனியாக உங்களிடம் மட்டும் சொல்வேன்' என்றார் ஜஸ்வந்த். ஆனால், அதையும் கடைசி வரை சொல்லவில்லை. வெளிப்படையாகச் சொல்லி, அமெரிக்காவின் கோபத்தைத் தாங்க அவராலும் முடியாது. அதற்காக அப்படியரு ஆள் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று சொல்லிவிட முடியாது. பிரதமர் அலுவலகத்தில் இருந்த தேவன் சந்த்மாலிக் என்ற அதிகாரி மீது நான்கு ஆண்டுகளுக்கு முன் திடீர் சந்தேகம் எழுந்தது. வெளிநாட்டு ஒற்றரோ என்ற சந்தேகத்தில் அவரைக் கண்காணித்தார்கள். உடனேயே அவர் தலைமறைவானார். விசாரணையில் அவர் வங்காளி என்பதும் பங்களாதேசுக்குச் சில தகவல்களைத் தொடர்ந்து அளித்த தகவலும் கிடைத்தது. 1999 முதல் 2005 வரை இந்தக் காரியங்களை எந்தச் சிரமமும் இல்லாமல் பார்த்திருக்கிறார். ரவீந்தர் சிங் என்ற அதிகாரி மீதும் இதுபோன்ற சந்தேகம் பாய்ந்ததும் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அமெரிக்கா பறந்திருக்கிறார். 2002-ம் ஆண்டில் மட்டும் 12 அதிகாரிகள் மீது ரகசியங்களை விற்றதாகப் புகார்கள் பதிவானதாம். அமெரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இஸ்ரேல், சீனா, இலங்கை ஆகிய நாடுகளும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை மையமாகக்கொண்டு இயங்கும் பயங்கரவாத இயக்கங்களும் 'எல்லா வசதிகளையும்' செய்து கொடுத்து, தனக்கான ஒற்றர்களை இந்தியா முழுவதும் உருவாக்கிவைத்து இருக்கின்றன.

தகவல் திரட்டுவதற்காகவே ஒற்றர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆபரேஷன்களில் இவர்கள் இறங்க மாட்டார்கள். சுதன் சுதாகர் என்ற ராணுவ வீரர் மீது உயர் அதிகாரிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் திடீர் சந்தேகம் வந்தது. ராணுவத்தில் சாதாரணமான கேர்டர் சோல்ஜர்கள் மற்ற உலக விஷயங்கள் குறித்து அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால், தனக்கு மேலுள்ள அதிகாரிகளை அடிக்கடி சந்தித்து ஏதோ சந்தேகங்கள் கேட்பது மாதிரி பேசியபடியே இருந்தாராம். தேவை இல்லாத இடங்களிலும் அவரைப் பார்த்திருக்கிறார்கள். உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டது. உறுதிப்படுத்த முடியவில்லை என்றாலும், நம்பிக்கைக்கு உரியவர் இல்லை என்பதால் சஸ்பெண்ட் செய்தார்கள். வேறு ஒரு தேடுதல் வேட்டையில் இவரது பெயரும் சிக்கியது. ஆளை வளைத்தது போலீஸ். அதற்குள் உஷாராகித் தப்பிவிட்டார் சுதன் சுதாகர். அவரது வீட்டில் காஷ்மீர் எல்லையில் ஏவுக¬ணைகள் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் இடங்களைக் குறிக்கும் வரைபடம் இருந்தது. ஐந்து சிம் கார்டுகளைக் கைப்பற்றினார்கள். ஒரு சிம்கார்டில் நேபாள நாட்டு எண்கள் மட்டுமே இருந்தன. இதே மாதிரி தெரிந்தும் தெரியாமலும் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த வரிசையில் டெல்லி விமான நிலையத்தில் ஜாபர் என்ற சையது அமீர் அலி கைதானான். அவனிடம் மீரட் ராணுவத் தளத்தின் வரைபடம் இருந்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கராச்சியில் இருந்து நேபாளம் போய் அங்கிருந்து டெல்லிக்கு வந்திருக்கிறான். லக்னோவில் ஓராண்டு தங்கியிருந்து, பின்னர் டெல்லி மானசரோவர் பூங்கா அருகில் ஒரு இன்டர்நெட் சென்டரில் டெக்னீஷியனாக வேலைக்குச் சேர்ந்து உளவு வேலை பார்த்ததாக ஒப்புக்கொண்டு இருக்கிறான். அவனுக்கு பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்றவை சிரமம் இல்லாமல் கிடைத்துள்ளது. இதுபோன்ற ஊடுருவல் இஸ்ரோ வரை நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட உயர்மட்ட ஆட்களில் ஆரம்பித்து, கீழ்நிலை அதிகாரிகள் வரை உளவாளிகளாக எப்படிச் சிக்குகிறார்கள்? என்று சென்னைப் பல்கலைக்கழகப் பாதுகாப்பு மற்றும் போர் திறனியல் துறைத் தலைவர் கோபால்ஜி மால்வியாவைக் கேட்டபோது, அவர் சொல்லிய தகவல்கள் பயத்தை அதிகப்படுத்தின.

"எதிரி நாடுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு உள்நாட்டில் இருந்து தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கப்படுகிறது. உள்ளூர் தொடர்பு ஏதும் இன்றி இந்தப் பயங்கரவாதிகள் ஊடுருவுவது இல்லை. உள்நாட்டில் இப்படி உதவுகிறவர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுபற்றி முழுவதுமாக நமது உளவுத் துறைக்குத் தெரியவில்லை. ஆனாலும், எந்த மாதிரியான ஒத்துழைப்பு, பொருட்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நம் உளவுத் துறை கண்காணித்துக்கொண்டே வருகிறது. இந்தத் தகவல் கொடுப்பவர்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது. சித்தாந்தம், மதம், மொழி போன்ற ஒற்றுமைகள், அடிப்படைவாதம் போன்றவற்றைக்கொண்டு தேர்வு செய்கின்றன. இவர்களுக்கு மூளைச்சலவை செய்து, தங்கள் செயலுக்குத் தயார்படுத்துகிறார்கள். இவற்றுக்கும் மேலாகப் பணம் முக்கியப் பங்காற்றுகிறது. இன்ஃபார்மர்களாக இருப்பதற்குப் பணம் அதிக அளவில் கொடுக்கப்படுகிறது.

முன்பெல்லாம் தகவல் பரிமாற்றம் என்பது சிக்கலானதாக, எளிதில் கண்டுபிடிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், தற்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், பயங்கரவாதிகளின் தகவல் பரிமாற்றமும் நவீனமாகிவிட்டது. இவர்களை லேப்டாப் டெரரிஸ்ட் என்கிறோம். அவர்களிடம் அதிநவீன செயற்கைக்கோள் போன், இன்டர்நெட், நவீன வாக்கிடாக்கி உள்ளது. இந்த நிலையில் தகவல் பரிமாற்றத்தைக் கண்டறிவது, இடைமறித்துத் தகவல்களைப் பெறுவது என்பது மிகவும் சிக்கலாகிவிட்டது.

இருப்பினும், உளவுத் துறையை நவீனப்படுத்துவதன் மூலமும், உளவுத் துறையினருக்குச் சமீபத்திய கருவிகளை வாங்கிக் கொடுப்பதன் மூலமும் இந்தத் தகவல் பரிமாற்றத்தை ஓரளவுக்குக் கண்டறியலாம். பயங்கரவாதி நவீன மெஷின்கன் வைத்திருக்கிறான், நாம் 303 ரைபிள் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மும்பை தீவிரவாதச் சம்பவத்தில் பலியான கார்கரேகூட காலாவதியான புல்லட் புரூஃப் ஜாக்கெட் அணிந்திருந்தார். ஹெல்மெட் 18-ம் நூற்றாண்டு பழமைவாய்ந்தது. நம்முடைய உளவுத் துறைக்கு நிறையத் திறமை உள்ளது. அதைவைத்துப் பல தகவல்களைச் சேகரிக்கிறது. ஐ.பி, ரா, நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி, ஆர்மி இன்டெலிஜென்ஸ், நேவி இன்டெலிஜென்ஸ், மாநில உளவுத் துறை என்று நிறைய உளவு அமைப்புகள் நம்மிடம் உள்ளன. ஆனால், இவர்களுக்குள் போதுமான ஒருங்கிணைப்பு இல்லாததும் ஒரு பிரச்னைதான். எனவே, போதுமான நவீன கருவிகள், உளவு நிறுவனங்களுக்குள் ஒருங்கிணைப்பு, உளவுத் துறையில் உள்ளவர்களுக்குப் போதுமான பயிற்சி இருந்தால் மட்டுமே இதுபோன்ற உளவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும்'' என்றார்.

பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு முதல்படி இதுபோன்ற கறுப்பு ஆடுகளைக் களை எடுப்பதுதான்!

 

source:vikatan

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP