இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது மற்றும் அரசியல் கருத்து இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது என்பன தொடர்பில் உள்நாட்டில் உள்ள தமிழர்களுடன் மட்டுமல்ல வெளிநாடு வாழ் தமிழர்களுடனும் சிறிலங்கா அரசு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் றொபேர்ட் ஓ பிளேக் பிபிசி செய்திச் சேவைக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.

மேலோட்டமாகப் பார்க்கும்போது, அமெரிக்க அரச தரப்பு அதிகாரி கூறிய இந்தக் கருத்து புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களின் கருத்துக்கள் தொடர்பில் அமெரிக்கா கரிசனைகொள்வது போலவும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்குக் கைமேல் பலன் கிடைத்தது போன்ற ஓர் அர்த்தத்தை வெளிப்படுத்தினும், அந்த வாக்கியங்களுக்குப் பின்னால் தொக்கிநிற்கும் பல அர்த்தங்கள் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்துக்குத் தொடர்ந்தும் இருந்துவருகின்ற தீராத அச்சத்தின் வெளிப்பாடுகளே ஆகும்.

தமிழ்மக்களின் போராட்டம் தொடங்கிய ஐம்பது வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைச் சீர்தூக்கிப்பார்த்தால் அந்த இனம் கடந்துவந்த பல்வேறு கசப்பான பாதைகளைத் தெரிந்துகொள்ளலாம். காலனித்துவ ஆட்சியகன்ற நாள்முதல் சிங்கள மேலாதிக்க வெறிபிடித்த இனவாத அரசின் கைகளில் அகப்பட்ட தமிழினம் தொடர்ச்சியாக அடக்குமுறைகளையும் அநீதிகளையும் சந்தித்துவந்தது.

அரசியல், பொருளாதாரம் உட்பட அனைத்து விடயங்களிலும் தமிழ்மக்கள் மீது சிங்கள ஆட்சியாளர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களுக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிராக தமிழ் அரசியல் தலைவர்கள் அன்று குரல் எழுப்பினார்கள். தமது இனத்தின்மீது திணிக்கப்படும் துன்பச்சுமைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். சிறிலங்காவை ஒரு ஜனநாயக நாடாக மதித்து அதன் விழுமியங்களைப் பேணியவண்ணம் சிறுபான்மை இனமொன்றுக்கு எதிரான பெரும்பான்மையினத்தின் இந்த அட்டூழியங்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட குரல் கடைசிவரை சிங்கள மேலாதிக்கத்தினால் கேட்கப்படவில்லை.

சிங்கள தேசத்தின் இந்த வன்முறை அரசியலுக்கு எதிராக வன்போக்குடைய தமிழ் அரசியல்தலைவர்கள் தமது அடுத்த கட்டப்போராட்டத்தைத் தொடங்கினர். தமது மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஓர்மத்துடன் போராடினார்கள். வெளிநாடுகளின் கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறிலங்காவின் மீது இராஜதந்திர அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான அகிம்சை வழிப்போராட்டங்களை நடத்தினார்கள்.

எதற்குமே உரிய பதில் கிடைக்கவில்லை. மாறாக, கேள்விகேட்ட தமிழ் அரசியல்தலைவர்களுக்கு எதிராகவும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களுக்கு எதிராகவும் அரச ஆசீர்வாதத்துடனான வன்முறைகள் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்டன.

தமது மக்களின் உரிமைகளையும் அபிலாசைகளையும் அரசியல் அந்தஸ்தினையும் பெற்றுக்கொள்வதற்கு ஜனநாயக வழியிலான போராட்டங்களை மேற்கொண்டு சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிரான தமது நிலைப்பாட்டை அகிம்சை வழியில் வெளிப்படுத்தி எதுவுமே நல்ல பலனை தரவில்லை என்ற நிலையில், தமக்கு முன்னுள்ள கடைசி வழியாகவே தமிழ்மக்கள் ஆயுதவழிப்போராட்டப் பாதையில் தள்ளப்பட்டார்கள். அவர்கள் ஆயுதப்போராட்டத்திற்கு சென்றதுகூட சிங்கள மக்களுக்கும் சிங்கள படையினருக்கும் எதிராக போராடுவதற்காக அன்று. தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான வன்முறைகள், தமிழர் தாயகத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆக்கிரமிப்புகள், தமிழ்மக்களின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் ஆகியவற்றின் மீதான அடக்குமுறைகள் போன்றவற்றிலிருந்து தமிழ்மக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவேயாகும்.

அமைதிவழிப்போராட்டங்கள் அனைத்துமே தோல்வியடைந்த நிலையில் தமது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டநிலையிலேயே தமிழினம் ஆயுதப்போராட்டத்தையும் தனது இலட்சியப்பாதைக்கான கருவியாகப் பயன்படுத்தத் தலைப்பட்டது.

தமிழினத்தின் இந்த வரலாற்றுப் பின்னணியில் அமெரிக்க அரச அதிகாரி கூறியுள்ள கருத்தை நோக்கினால் அதில் பொதிந்துள்ள வியாக்கியானத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதாவது புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களின் மனநிலை என்பது இன்றைய நிலையில் பல உணர்ச்சிகளின் மொத்தவடிவமாக உள்ளது என்பதை பன்னாட்டுச் சமூகம் நன்கு உணர்ந்திருக்கிறது.

சிங்கள தேசம் நடத்தி முடித்திருக்கும் போரில் தமது இனத்தின் பல்லாயிரக்கணக்கான உறவுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். விடிவு பெறவேண்டும் என்று எதிர்பார்ப்புடன் இருந்த தமது இனத்தின் 90 சதவீதமானவர்கள் சிங்களத்துச் சிறைகளிலும் முகாம்களிலும் திறந்த வெளிச் சிறைகளிலும் அடக்குமுறைக்குக் கீழ் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 30 வருடங்களுக்கு மேலாக தமது இனத்தின் ஆதார சக்தியாக போராடிவந்த தமிழர்சேனையும் கண்முன்னால் பார்த்துப்பார்த்துக் கட்டி வளர்த்த அழகான தேசமும் அழிந்துசிதைந்து கிடக்கிறது. இவ்வளவு கொடூரம் தமது இனத்துக்கு நடைபெற்றும் சர்வதேச சமூகம் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் நீதிஉலகம் தம்மை திரும்பிப்பார்க்கவில்லை. மாறாக இதனை முனைப்புடன் செய்துமுடித்த சிறிலங்கா அரசுக்குப் பல்வேறு வழிகளிலும் உதவியளித்து தமிழர்களை மீண்டும் சிங்கள தேசத்தின் காலடியில் போட்டுச்சென்றிருக்கிறது என்று -

புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்கள் வேதனையுடனும் துக்கத்துடனும் இருக்கின்ற அதேவேளை தமது இனத்தையும் தமது இனத்தின் ஆயுதப்போராட்டத்தைச் சிதைத்த சிங்கள அரசுக்கு பல்வேறு வகைகளிலும் உதவியளித்த பன்னாட்டுச் சமூகத்தின் மீது மிகுந்த சீற்றத்துடனும் இனிமேல் தமது மக்களுக்கு விடிவு கிடைக்கவேண்டும் என்றால் இதே பன்னாட்டுச் சமூகத்தின் ஆதரவு கட்டாயம் தேவை என்ற உண்மையையுணர்ந்துபொறுமையுடனும் இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் இந்தப் பன்னாட்டுச் சமூகத்துக்குத் தெரிந்திருக்கிறது.

புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களது சக்தியினது தாக்கம் எத்தகையது என்பதும் அதன் வெளிப்பாடு கடந்தகாலங்களில் என்ன வடிவங்களில் வெளிப்படுத்தப்பட்டது என்பதையும் சர்வதேச சமூகம் உன்னிப்பாகக் கவனித்துவருகிறது.

இன்றைய காலகட்டத்தில், தாயகத்தில் உள்ள தமது உறவுகளுக்கு விடிவு வேண்டி பன்னாட்டு சமூகத்திடம் – தமிழினம் தாயகத்தில் 30 வருடங்களுக்கு முன்னர் எவ்வாறான போராட்டஙக்ளை மேற்கொண்டதோ அதோபோன்று – ஜனநாயக வழிகளில் – அமைதி ஊர்வலங்களை நடத்தியும் உண்ணாநிலைப் போராட்டங்களை மேற்கொண்டும் – தமது உறவுகளின் விடிவுக்காகக் குரல் எழுப்பும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு அதன் நியாயமான விண்ணப்பங்கள் மறுக்கப்படுகையில் -

புலம்பெயர்ந்துவாழும் தமிழ்ச் சமூகத்தின் அடுத்தடுத்த தலைமுறைகள் இந்த நிராகரிப்புகளின் வெளிப்பாடாக விரக்தியுற்று பாதகமாக பாதையில் பயணித்துவிடக்கூடாது என்பதில் தாம் பொறுப்புடன் செயற்படவேண்டும் என பன்னாட்டுச் சமூகம் – சிறிலங்காவில் போர் முடிந்த கையோடு – அக்கறைகொண்டுள்ளது. சிறிலங்காவில் போர் முடிந்தபின்னர் வெளிநாடுகளிலுள்ள தமிழர் தரப்புகளோடு தொடர்ச்சியாகத் தொடர்புகளை வைத்திருக்கவேண்டும் என்றும் அதன் மூலம் அவர்களின் கருத்துப்பரிமாறல்களையும் தமிழர்களுக்கான தீர்வு என்ற விடயத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்றமாதிரியானதுமான நோக்குடன் செயற்பட்ட சில நாடுகளின் கைகளை மீறி சில சம்பவங்கள் சிறிலங்காவுடன் இணைந்த அதன் நேசநாடுகளின் ஆசீர்வாதங்களுடன் நடைபெற்று முடிந்திருக்கின்றன.

இவையெல்லாம், புலம்பெயர்ந்துவாழும் தமிழ்மக்களைத் தொடர்ச்சியாக அழுத்தத்தில் வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளாகவும் அதுவே தமக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் சிறிலங்கா அரசு எண்ணினாலும் பன்னாட்டுச் சமூகம் இதனை ஆரோக்கியமானதாக நோக்கவில்லை. இதன் வெளிப்பாடுகளில் ஒரு கருத்தாகவே அமெரிக்க அரச அதிகாரி அண்மையில் பூடகமாக தனது செய்தியைத் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், தமிழினம் என்றைக்கும் எங்கேயும் வன்முறையை விரும்பிய சமூகமாக இருந்ததில்லை. தனக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு எதிராகவும் தனது இருப்பினைப் பாதுகாப்பதற்காகவும் ஆயுதம் தரித்ததே தவிர, பழிவாங்கும் படலத்தோடு இரத்தவெறி பிடித்த இனமாக இருந்ததில்லை. இருக்கப்போவதுமில்லை. சிறிலங்காவுக்கு எத்தனையோ நாடுகள் ஆயுதங்களைக் கொடுத்து தமக்கு எதிராகப் போரிட உதவுகிறார்கள் என்ற காரணத்திற்காக விடுதலைப்புலிகள் கொழும்பில் எந்த நாட்டுத் தூதரகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியதாக வரலாறு இல்லை. அதற்காக அது அவர்களால் இயலாது என்ற நிலையில் இருக்கவில்லை.

தமிழினம் தனது உரிமைகளுக்காகப் போராடிய இனம். தொடர்ந்தும் போராடும் இனம். நீதியின் வழியில் சென்றே தனது இலட்சியத்தை அடையுமே தவிர , தமிழீழத்தைச் சிறிலங்காவிடமிருந்து 'வெள்ளைவானில்' கடத்திசெல்லப் போவதில்லை

 

source:tamilspy