சமீபத்திய பதிவுகள்

மீண்டும் ஜின்னா... கிளம்பி விட்டது சர்ச்சை; 'பலி' வாங்கியது ஜஸ்வந்தை'

>> Wednesday, September 9, 2009



ஜின்னா சர்ச்சை மீண்டும் தலைதூக்கி விட்டது. நான்காண்டு முன், ஜின்னாவை புகழ்ந்த அத்வானி "நூலிழையில்' தப்பி, பதவியை தக்க வைத்துக்கொண்டார்; ஆனால், முப்பதாண்டு சீனியர் தலைவர் ஜஸ்வந்த் சிங்கை நீக்க கட்சி மேலிடத் தலைவர்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை.
ஜின்னா பற்றி சர்ச்சையான புத்தகம் எழுதி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜஸ்வந்த்துக்கு போன் மூலமே, அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தகவல் தரப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை, லோக்சபா தேர்தல் தோல்விக்கு யார் மேல் பழிபோடுவது என்பதில் கட்சியின் மூத்த தலைவர்களே போட்டிபோட்டு வந்தனர். தோல்வியில் இருந்து மீளாத நிலையில், இந்த தலைவர்கள் தொடர்ந்து மூத்த தலைவர்கள் மீதே பழிபோட்டு அதிருப்தியை வளர விட்டுக்கொண்டிருந்தனர்.
அவர்களில் முக்கியமான மூன்று தலைவர்களில் ஒருவர் ஜஸ்வந்த் சிங்; மற்றவர்கள், அருண் ஷோரி, யஷ்வந்த் சின்கா. சிம்லாவில் நடந்த மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மூவரும் பெரும் சர்ச்சைகளை கிளப்புவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜின்னா புத்தகம் வெளியானது, பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு வசதியாக போய் விட்டது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற அருகதை கூட கிடையாது என்று தூக்கி வெளியே போட்டு விட்டது.
இனி குரல் எழும்பாது: ஜஸ்வந்த் சிங்கை நீக்கியதன் மூலம், மற்ற இரு அதிருப்தியாளர்களுக்கு மறைமுக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது என்பதே உண்மை. ஜஸ் வந்த் இல்லாத நிலையில், யஷ்வந்த், �ஷாரி போன்றவர்கள் இனி பெரிய அளவில் குரல் எழுப்புவரா என்பது கேள்விக்குறி தான்.
அப்படியே குரல் எழுப் பினாலும், அவர்களுக்கும் இந்த கதி தான் என்பதும் தெளிவாகவே தெரிகிறது. தோல்விக்கு பொறுப் பேற்று உத்தரகண்ட் முதல்வர் கந்தூரியை விலக வைத்தது கட்சி மேலிடம்.
அடுத்து, ராஜஸ்தான் மாஜி முதல்வர் வசுந்தரா ராஜேயின் அதிருப்தியை சகிக்காத மேலிடம், அவர் வெளியேறும் நாளை எதிர்பார்த்துக்கொண்டிருக் கிறது. இப்படி, கட்சியில் அதிருப்தியை சகிக்க பா.ஜ., மேலிடமும் சரி, அதன் பின்னணியில் உந்து சக்தியாக விளங்கும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் சரி தயாராகவே இல்லை. கட்சியின் அடிப்படை கொள்கையில் கைவைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்பதில் இரண்டு அமைப்புகளும் உறுதியாக உள்ளன என்பதை, ஜஸ்வந்த் சிங் நீக்கத்தில் இருந்து தெளிவாக காட்டி விட்டன.
ஜஸ்வந்த் சிங்கை தொடர்ந்து, அவருடன் சேர்ந்து கொண்டு அதிருப்தி கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த �ஷாரி போன்றவர்களுக்கும் இதே நிலை ஏற்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை.
அத்வானிக்கும் தான்: ஜஸ்வந்த் சிங் எழுதிய புத்தகம் மூலம் அவர் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். "நான் ஏற்கனவே இந்த புத்தகத்தின் நகலை, அத்வானிக்கு அனுப்பி வைத்தேன். அப்படியிருக்கும் போது என்னை நீக்கியிருப்பது மனதில் வலியை ஏற்படுத்தி உள்ளது' என்று "டிவி'க்களில் கண்ணீர் மல்காத குறையாக பேட்டி அளித்துள்ளார்.
ஜஸ்வந்த் சிங் போலவே, அத்வானியும் ஜின்னா சர்ச்சையில் சிக்கியவர் தான். ஜின்னாவை புகழ்ந்தவர் அத்வானி என்றால், ஜின்னா பற்றிய சர்ச்சைகளை ஏராளமாக எழுப்பி, எதிர்காலத்தில் புதுப்புது சர்ச்சைகளை, இந்தியாவில் மட்டுமில்லாமல், பாகிஸ்தானிலும் எழுந்து விடுமோ என்ற அளவுக்கு "டென்ஷன்' கிளப்பியுள்ளார் ஜஸ்வந்த் சிங்.
கடந்த 2005ல், ஜின்னா ஒரு மதச்சார்பற்ற தலைவர் என்று புகழாரம் சூட்டியதற்கே, பா.ஜ., தலைவர் அத்வானி படாதபாடு பட்டார். அவர் பதவி பறிபோக இருந்தது, கடைசி நிமிடத்தில் தவிர்க்கப்பட்டது. எனினும், அவர் மீது பா.ஜ.,வில் பெரும் அதிருப்தி வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பது சந்தேகமே.
புத்தகத்தில் இருப்பதென்ன? ஜஸ்வந்த் சிங், பா.ஜ.,வில் முப்பதாண்டுகளாக இருந்து வந்தவர். ஜின்னா பற்றிய சில சர்ச்சைகளை கிளப்பி, "இந்தியா - பிரிவினை - சுதந்திரம்' என்ற தலைப்பில் புத்தகம் எழுதினார். பல மாதங்களாக இதற்கான தகவல்களை திரட்டியும்,பா.ஜ., தலைவர்களிடம் கூட பேசியும் வந்துள்ளார் இவர்.
ஆனால், புத்தகம் வெளியான போது, அவரிடம் இருந்து கட்சியை சேர்ந்த எல்லா தலைவர்களும் ஒதுங்கி விட்டனர். புத்தகத்தில் பல சர்ச்சையான விஷயங்கள் உள்ளன.
அவற்றில் முக்கியமான சில குறிப்புகள்
* ஜின்னா, இந்தியராக இருந்தார்; இந்திய மண் தான் அவரை பெரும் தலைவராக உருவாக்கியது; சாதாரணத் தலைவராக இருந்தவரை பெரிய தோற்றத்துடன் உருவாக்கி விட்டனர்.
* இந்த வகையில், "மைனாரிட்டியினர்' என்ற தவறான கோஷம், பிரிவினைக்காகவே எழுப்பப்பட்டது. அதற்காக அவர் பெடரல் தத்துவத்துடன் இந்தியாவும், அதில் ஒரு பகுதியாக முஸ்லிம்கள் தனி அதிகாரத்துடன் வாழ விரும்பினார். இந்த கோஷம், படிப்படியாக எல்லா மட்டங்களிலும் பரவி, ஐக்கிய இந்தியா என்ற பெரிய மாளிகையை தகர்க்கும் அபாயத்துக்கு போனது. இதற்கு தீர்வு என்ன? "பிரிவினை ஒன்று தான் வழி' என்கிறார் ஜின்னா. நேரு, வல்லபாய் படேல் மற்றும் காங்கிரசில் உள்ள தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்கின்றனர். இப்படித்தான் பாகிஸ்தான் உதயமானது.
* ஜின்னாவின் எதிர்ப்பு, இந்துக்களை பற்றியோ, இந்து மதத்தை பற்றியோ அல்ல; காங்கிரஸ் மீது தான். அது தான் முஸ்லிம் லீக்கின் உண்மையான எதிரியாக திகழ்ந்தது. பீகார் உட்பட சில மாநிலங்களில் இந்து - முஸ்லிம் கலவரங்கள் உருவானபோது, முஸ் லிம்களை காக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்பதை நிரூபித்தார் ஜின்னா. அப்போது தான், "இந்து ராஜ்' உருவாக்கப்படுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற் பட்டு, அதுவே, அவரை காங்கிரசில் இருந்து முஸ்லிம் லீக்குக்கு போக வைத்தது.
அவர் எதிர்ப்பு, போகப்போக தான் வெறுப்புணர்ச்சியை தூண்டிவிட்டது. அதிலும், காங்கிரஸ் தலைமை மீது அவருக்கு அதிருப்தி வேரூன்ற காரணமாகவும் இருந்தது.
* இப்படிப்பட்ட பலகட்டங்களில் மதம் என்பது ஒரு பொருளாகவே இருந்ததில்லை. அவர் தன்னை மதவாதி என்று காட்டிக் கொண்டதே இல்லை. பிரிவினைக்கு பின், அவருக்கு அப்படிப்பட்ட தோற்றத்தை பாகிஸ்தான் தந்தது. பாகிஸ்தான், தனி நாடாக ஜின்னா தேவைப் பட்டார். அதுபோல, ஜின்னாவின் தேவைகளை பூர்த்தி செய்ய பாகிஸ்தான் தேவைப் பட்டது என்பதே உண்மை.
* சில கசப்பான உண் மைகளை சொல்லித் தான் ஆக வேண்டும். பொறுப் பில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு, நாட்டின் எதிர்காலம் பற்றிய உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளுதல், பரந்த கண்ணோட் டம், திடமான குறிக்கோள் போன்றவை இல்லாததை சொல்ல வேண்டும்.
* மவுலானா ஆசாத் தன் புத்தகத்தில் எழுதியது போல, பிரிவினையை தவிர்க்க இந்தியா மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ராணுவம், வெளியுறவு, தொலைத்தொடர்பு ஆகிய விஷயங்களில் பெரும் தன்னாட்சி அளித்து தனி மாநிலங்களை அமைத்திருக்கலாம். இந்த யோசனையை மகாத்மா காந்தி ஏற்றார். ஆனால், சர்தார் படேல் ஏற்கவில்லை.
* இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்றும் இன்று தனிநாடுகள். அடிப்படையில் சில விஷயங்களை மறக்க முடியாது. கடந்து போனது, கடந்ததாகவே எண்ணினாலும், மறைந்து விடாது. புதிதுபுதிதாக விஷயங்கள் உருவாகி, புதிதாக தகவல் வெளிவரத்தான் செய்யும்.
நிறைவற்ற உண்மை இது: ஜஸ்வந்த் சிங் புத்தகம் தொடர்பான சர்ச்சை இன்னும் நீடிக்கும் என்பது உண்மை. அவர் ஜின்னா பற்றியும், பாக்., பிரிவினை பற்றியும் எழுதியுள்ள பல முக்கிய கருத்துக்களை விமர்சித்து பிரிட்டீஷ் எழுத்தாளர்கள் மற்றும் நிபுணர்கள் கூட கூற முன்வருகின்றனர். ஆனால், இந்தியாவில் உள்ளவர்கள் இன்னும் உண்மையை வெளிப்படுத்தக் கூட தயாரில்லை என்பது தான் பிரபல கட்டுரையாளர் ராஜிந்தர் பூரி போன்றவர்களின் கருத்து.
பழம்பெரும் பத்திரிகையாளர் ராஜிந்தர் பூரி, "ஸ்டேட்ஸ்மென்' பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் சில அம்சங்கள்:
1. ஜின்னா, சிறந்த மனிதர்; பிரிவினைக்கு அவர் மட்டுமே காரணமல்ல. 2. பிரிவினையை காந்தி போன்றவர்கள் எதிர்த்தனர். 3. பிரிவினைக்கு நேரு தான் முக்கிய காரணமானவர். இந்த மூன்று கருத்துக்களை தான் ஜஸ்வந்த் சிங் தன் புத்தகத்தில் கூறியுள்ளார்.
பாக்., பிரிவினை நடந்தது; பின்னர் தான் எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன. இதுவும், பிரிட்டீஷ் ஆதிக்கத்தின் எண்ணப்படி தான் நடந்துள்ளது என்பதே உண்மை. முதல் உலகப்போர் நடந்த போது அதற்கு இந்திய வீரர்களை அனுப்பக்கூடாது என்றவர் ஜின்னா. அப்படிக்கூறவில்லை காந்தி. அன்றில் இருந்தே பிரிட்டிஷார் இந்தியாவை துண்டாக்க முடிவு செய்து விட்டனர்.
பிரிவினைக்கு நேரு காரணமாக இருந்திருக்கலாம். அதுவும், உணர்ச்சி வேகத்தில் முடிவு எடுத்திருக்க வேண்டும். அவரும் பள்ளிப்பருவத்தில் இருந்து பிரிட்டீஷ் எண்ணப்படியே நடந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். "எப்போதும் மவுன்ட் பேட்டனுடன் ஆலோசிப்பார் நேரு' என்பதை, சில முக்கிய தலைவர்கள் தங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மகாத்மா காந்தியும் மற்ற தலைவர்கள் சிலரும் கூட, பிரிவினையை எதிர்த்திருக்கலாம். 1947 ஜூன் 3ம் தேதி பிரிவினை தீர்மானத்தில் கையெழுத்திட்டபோது, அவர் எதிர்க்கவில்லை. அந்த தினத்தை மவுன தினமாக அனுஷ்டித்தார் காந்தி.
முதல் நாளே, "நான் பிரிவினை தீர்மானத்தை எதிர்க்க மாட்டேன்' என்று மவுன்ட் பேட்டனிடம் உறுதி அளித்தார் என்பதும் உண்மை.
பிரிட்டீஷ் தான் காரணம்: ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவை உருவாக்க தன் வாழ்நாள் போராட்டம், உரிய பலனை அளிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், அதற்காக தன் எதிர்ப்பை காந்தி எந்த சூழ்நிலையிலும் வெளிக் காட்டவில்லை. அதிருப்தியை காட்ட காங்கிரசை கலைக்க முற்படவும் இல்லை.
பிரிவினைக்கு பின், இந்திய - பாக்., எல்லைப்பிரிப்பு கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக சர் கிரிஸ் ரெட்கிளிப் இருந்தார். அவரது செயலராக கிறிஸ்டோபர் பீமோன்ட் இருந்தார். பீமோன்ட் தனிப்பட்ட முறையில் எழுதிய சில கடிதங்களை, அவர் மகன் ராபர்ட் பீமோன்ட் கடந்த 2007ல் வெளியிட்டார்.
"பிரிவினையின் போது, பஞ்சாபில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டதற்கு வைஸ்ராய் மவுன்ட் பேட்டன் பொறுப்பேற்க வேண்டும். பிரிவினைப்படுத்தி ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக, பெண்கள், குழந்தைகள் என்று பல்லாயிரம் பேர் அடியோடு அழிக்கப்பட்டதற்கு பிரிட்டீஷ் அவசரம் தான் காரணம்' என்று 1947ல், ஒரு கடிதத்தில் கிறிஸ்டோபர் பீமோன்ட் எழுதியுள்ளார்.
இப்படி முடித்துள்ளார் ராஜிந்தர் பூரி. இவரை போல, இன்னும் சில வரலாற்று நிபுணர்கள், சுதந்திரம் பற்றிய உண்மை அறிந்த வல்லுனர்கள், உண்மைகளை இன்னும் கிளறக்கூடும்.
பாக்.,கில் புகழாரம்: இந்தியாவில் ஜஸ்வந்த் புத்தகத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது என்றாலும், பாகிஸ்தானில், அவருக்கு பத்திரிகைகள் பாராட்டுகளை குவித்துள்ளன. அதுபோல, பல பாக்., எழுத்தாளர்களும் அவரை புகழ்ந்துள்ளனர்.
வாஜ்பாய் அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது, பாகிஸ்தானுக்கு இவரை கண்டாலே பிடிக்காது. ஆனால், இப்போது ஜஸ்வந்த் புத்தகத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
"வாஜ்பாய் போன்றவர்கள் இல்லாததால், பா.ஜ., கட்சியில் நிதர்சனமான பார்வை இல்லாமல் போய் விட்டது. இன்னும் சரிவை நோக்கிப்போகிறது என்பதற்கு ஜஸ்வந்த் சிங் நீக்கமே சான்று' என்று பாக்., பிரபல எழுத்தாளர், அரசியல் ஆய்வாளர் மஸ்தான்சர் ஜாவேத் கூறியுள்ளார்.
"வாஜ்பாய்க்கு கடவுள் அருளால் கிடைத்த அரிய பரிசு, அவரின் நிதானமான அணுகுமுறையும், நிதர்சனமான தீர்வு எடுக்கும் தன்னம்பிக்கையும் தான். அப்படிப்பட்டவர்கள் இப்போது பா.ஜ.,வில் இல்லை என்பது தெரிகிறது' என்று இன்னொரு எழுத்தாளர் சயீது ஆரீப் கூறியுள்ளார்.
"பாகிஸ்தான் தந்தை ஜின்னாவை, இந்தியாவின் வில்லன் போல சித்தரித்தனர் இதுவரை. அந்த கருத்தை முறியடித்துள்ளார் ஜஸ்வந்த்' என்று பாக்., எழுத்தாளர் அகடமி தலைவர் பக்கார் சமான் தெரிவித்தார். ஆனால், ஜின்னா இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றியவர் அல்ல, பார்சி பெண்ணை மணந்தவர் , மதுப் பழக்கம் உள்ளவர் என்றெல்லாம் விமர்சித்த காலத்தை பாக்., எழுத்தாளர்கள் தற்போது மறந்து விட்டனர்.
ஜஸ்வந்த் சிங்கின் புத்தகம் இன்னும் பாகிஸ்தானில் விற்பனைக்கு வரவில்லை.
அடுத்தடுத்து வரும்: பாரதிய ஜனதாவை பொறுத்தவரை, ஜஸ்வந்த் சிங் நீக்கம் என்பது மிகவும் அதிர்ச்சியான முடிவாக இருந்தாலும், கட்சியை இப்போதுள்ள தள்ளாட்ட நிலையில் இருந்து வெளிக்கொண்டு வந்து, மீண்டும் காங்கிரசுக்கு எதிராக வலுவான சக்தியாக உருவாக்க வேண்டிய கட்டாயம் இப்போதுள்ள கட்சி மேலிடத் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஜஸ்வந்த் சிங், மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங் தொகுதியில் நின்று எம்.பி.,யானவர். கூர்க்கா தனி மாநிலம் கோரிக் கைக்கு போராடும் அமைப்புடன் கூட்டு சேர்ந்து தான் அவர் வெற்றி பெற்றார். 
ஜஸ்வந்த் நீக்கத்தால், கூர்க்கா லேண்ட் தனி மாநில கோரிக்கையை நிறைவேற்றுவதை பா.ஜ., கைகழுவி விடுமோ என்ற கவலை இப்போது அந்த அமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. ஜஸ்வந்த் சிங், கட்சி மாறாத வரை, அவர் எம்.பி.,யாக நீடிக்க முடியும். அவர் நீக்கப்பட்டாலும், அவர் மகன் மனவேந்திர சிங், இன்னமும் பா.ஜ.,வில் நீடிக்கிறார். அவர் கடந்த லோக்சபா தேர்தலில் நின்று தோற்றவர்.
ஜஸ்வந்த் சிங்கை தொடர்ந்து பா.ஜ., தலைவர்கள் இரண்டு பேர் தலை விழும் என்று தெரிகிறது. ஒருவர், அருண் �ஷாரி; மற்றவர், யஷ்வந்த் சின்கா. பா.ஜ.,வில் ஜின்னா சர்ச்சை மூட்டை கட்டப்படலாம்; அதைப் பற்றி பேசக்கூட அவர்கள் தயாரில்லை. ஆனால், ஜஸ்வ்ந்த் சிங் எழுதிய புத்தகம் இன்னும் பல சர்ச் சைகளை எழுப்பலாம் என்பது மட்டும் நிச்சயம்.2004ல் இருந்து புயல்
பா.ஜ.,வில் 2004 லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஆரம்பித்த புயல், இன்று வரை ஓயவில்லை.
அப்போது தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து வெங்கைய நாயுடு, பதவி விலகினார்; தலைவராக அத்வானி பொறுப்பேற்றார்.
மறு ஆண்டே, பாகிஸ்தான் சென்ற அத்வானி, அங்கு ஜின்னா கல்லறைக்குச் சென்று, வருகை புத்தகத்தில், "ஜின்னா மதச்சார்பற்ற சிறந்த தலைவர்' என்று எழுதியது, சங்க பரிவார் - பா.ஜ., இடையே பெரும் புயலை ஏற்படுத்தியது.
அந்த ஆண்டு இறுதியில், தலைவர் பதவியில் உட்கார்ந்தார் ராஜ்நாத் சிங். 2006 வாக்கில் தான் கட்சியில் அதிருப்தி அதிகரித்தது; ஆளாளுக்கு குற்றம் சொல்ல ஆரம்பித்தனர். கடந்தாண்டு, ராஜஸ்தான், டில்லியில் ஆட்சியை தக்கவைக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது. சமீபத்தில், லோக்சபா தேர்தல் தோல்விக்கு காரணமாக ராஜ்நாத்தை குற்றம் சாட்ட பலரும் தயாரானாலும், அவர் பதவி பறிபோவது தவிர்க்கப்பட்டது.
பார்லிமென்டில் கட்சிப் பொறுப்பில் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் நியமிக்கப்பட்டதை ஜஸ்வந்த், யஷ்வந்த், ஷோரி ஆகியோர் வெளிப்படையாக எதிர்த்தனர்.
இப்படி தொடர்ந்து கட்சியில் சர்ச்சைகள், சலசலப்புகள் தொடர்ந்த நிலையில், ஜஸ்வந்த் சிங் நீக்கம், மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சர்ச்சையின் நாயகன்: ராஜஸ்தானைச் சேர்ந்தவர் ஜஸ்வந்த் சிங்; ராணுவப் பணியில் இருந்த ஜஸ்வந்த், 42 வயதில் அரசியலில் நுழைந்தார். குறுகிய காலத்தில் பல்வேறு பொறுப்புகளில் அமர்ந்தும் விட்டார். பா.ஜ., ஆட்சிகளிலும் அவர் முக்கிய இலாகா பொறுப்புகளை ஏற்றிருந்தார். ஆர்.எஸ்.எஸ்.,ல் ஈடுபாடு இல்லை.
வாஜ்பாய் அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்தபோது, காந்தகார் விமானக் கடத்தல் விவகாரத்தில், இந்திய சிறையில் இருந்த பாக்., பயங்கரவாதிகளை விடுவித்து, ஒப்படைக்க விமானத்தில் அவர்களுடன் சென்றவர் இவர்.
ராஜஸ்தான் முதல்வராக இருந்த வசுந்தராவுக்கும், இவருக்கும் பிடிக்காது; எப்போதும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்தவர்.
பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஒருவர் அமெரிக்காவுக்கு ரகசியங்களை கசிய விடுவதாக, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது சர்ச்சையை கிளப்பியவர் ஜஸ்வந்த். அப்புறம் பல்டியும் அடித்தார்.
பொது விருந்தில் போதைப் பொருள் கலந்த பானம் பருகியதாக ஜஸ்வந்த் மீது சில மாதம் முன் குற்றச்சாட்டு எழுந்தது.
அத்வானிக்கும் சிக்கல்: பாரதிய ஜனதா கட்சிக்கு, வாஜ்பாய்க்கு பின்னர் யார் தலைமை தாங்குவது என்ற கேள்வி எழுந்தபோது அத்வானி பெயர் தான் பலருக்கும் வெளிப்படையாக தெரிந்தது. அந்த அளவுக்கு மக்களிடம் செல்வாக்கு பெற்றவராகவும் அவர் தான் இருந்தார் என்பதும் கட்சித் தலைவர்களுக்கு தெரியும்.
இந்துத்வா கொள்கையை கடுமையாக கடைபிடிப்பவர் தான் என்றாலும், மக்களின் செல்வாக்கை பெறவே தன்னை சில சமயம் மாற்றிக்கொண்டார் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால், வாஜ்பாய்க்கு அடுத்ததாக இருந்த நிலையில் அத்வானி பெற்றிருந்த மதிப்பு, இப்போது இல்லை என்பது வெளிப்படை.
அதே சமயம், அத்வானியும் லோக்சபா தேர்தல் தோல்விக்கு காரணம் என்று சிம்லா கூட்டத்தில் பேசியது, மீண்டும் அவரது தலைமைக்கு பிரச்னையை கிளப்பியுள்ளது. ஆனால், வாஜ்பாய், அத்வானி ஆகிய இருவரும் ஆர்.எஸ். எஸ்., அடிப்படை கொள்கைகளை தெரிந்து கொண்ட அளவுக்கு இன்று சங்க பரிவாரில் வேறெந்த தலைவரும் இல்லை என்பதால், அத்வானியை நேரடியாக விமர்சிக்க யாரும் முன்வரவில்லை.


source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மைக்கேல் ஜாக்சன் கை உறை 25 லட்சம் ரூபாய்க்கு ஏலம்


மெல்போர்ன், செப். 7-
பிரபல பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஜூன் மாதம் மரணம் அடைந்தார்.  கடந்த வாரம் அவரது உடல் கலிபோர்னியாவில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது மர்மச்சாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
மைக்கேல் ஜாக்சன் பாப் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் போது கைஉறை அணிவதை வழக்கத்தில் வைத்திருந்தார். கடந்த 1996-ம் ஆண்டு அவர் ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்திய போது வைரக்கற்கள் பதித்த ஒரு வெள்ளை நிற கை உறையை அணிந்திருந்தார்.
 
இசை நிகழ்ச்சி முடிந்ததும் அவர் அதை பில் ஹிப்பில் என்பவரிடம் கொடுத்துச் சென்றார். பில் அந்த கை உறையை மைக்கேல் ஜாக்சன் நினைவாக வைத்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு பில் மரணம் அடைந்தார்.
 
பில் தாயார் அந்த கை உறையை தன் பொறுப்பில் வைத்திருந்தார். மைக்கேல் ஜாக்சன் திடீரென மரணம் அடைந்ததும் பில் தாயார் அந்த கை உறையை ஏலம் விட தீர்மானித்தார்.
 
ஆஸ்திரேலியாவில் நேற்று மைக்கேல் ஜாக்சனின் அந்த கை உறை ஏலம் விடப்பட்டது. 25 லட்சம் ரூபாய்க்கு அந்த கை உறையை ஒரு தொழில் அதிபர் ஏலம் எடுத்தார்.

எதிர்பார்த்ததை விட 2 மடங்கு கை உறை ஏலம் போனதாக தெரியவந்துள்ளது.



source:maalaimalar

www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP