சமீபத்திய பதிவுகள்

இலங்கை - அடுத்த சர்வாதிகாரி யார் ?

>> Tuesday, January 19, 2010

 

யுத்த வாசமும் ரத்த வாசமும் மாறுவதற்கு முன்பே ஆதாயம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் இலங்கை அரசியல்வாதிகள்!

இலங்கை நாட்டின் ஜனாதிபதி தேர்தல் இம்மாதம் 26-ம் தேதி நடக்க இருக்கிறது. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து வர வேண்டிய தேர்தல் இது. ஆனால், வெற்றியை அறுவடை செய்ய உடனே நடக்கிறது. ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி சார்பில் இப்போதைய ஜனாதி பதியான மகிந்தா ராஜபக்ஷேவும், பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் சார்பில் முன்னாள் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகாவும் தமிழ் எம்.பி-க்களில் ஒருவரான சிவாஜிலிங்கமும், புதிய இடதுசாரி முன்னணியின் வேட்பாளர் டாக்டர் விக்ரமபாகு கருணாரட்னவும் போட்டியில் இருக்கிறார்கள். ஆனாலும், முக்கியப் போட்டி மகிந்தாவுக்கும் ஃபொன்சேகாவுக்கும்தான்!

"30 ஆண்டுகளாக இலங்கையை அச்சுறுத்தி வந்த பயங்கரவாத இயக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்னுடைய சாதனை" என்று மகிந்தா சொல்ல, "அந்தச் சாதனையைச் செய்துகாட்டிய ராணுவத் தளபதி நான்தான்" என்று ஃபொன்சேகா உரிமை கொண்டாட... "இதற்கு எந்தத் தனி மனித னும் உரிமை கொண்டாட முடியாது" என்று மகிந்தா மறுபடி பாய, தேர்தலின் முக்கியப் பிரச்னையே வடகிழக்கில் நடந்த யுத்தமாகத்தான் இருக்கிறது. மகிந்தா, ஃபொன்சேகா இருவரையும் சிங்கள வர்கள் தங்களுக்கு இணக்கமான சக்திகளாகத்தான் பார்க்கிறார்கள். 'சிங்கள மன்னன் துட்டகைமுவின் வாரிசு' என்று மகிந்தா சொல்லப்படுகிறார். அதே சமயம், யுத்தம் காரணமாக இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சுணக்கம், அந்நிய நாடுகளின் உதவிகள் மறுப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், இறுதிக்கட்ட யுத்த காலத்தில் மட்டும் 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் மரணம், 20 ஆயிரம் வீரர்கள் உடல் ஊனமானது எனச் சிங் களவர்கள் கவலைப்பட எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கேவைவிட ஒரு லட்சம் வாக்குகள்தான் மகிந்தா கூடுதலாகப் பெற்றிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் அசைக்க முடியாத வாக்குகளை வைத்துள்ள கட்சிகளாக உள்ளன. எனவே, சிங்களவர் வாக்குகள் சரிபாதியாகப் பிரிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கொழும்பு பத்திரிகையாளர்கள் நினைக்கிறார்கள்.

"தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 391 உறவினர்களையும், 115 அமைச்சர்களையும்கொண்ட ஆட்சி இது" என்று முன்னாள் பிரதமர் ரணில் குற்றம்சாட்டுகிறார். "ஜனாதிபதியாக வருவதற்கு முன்னால் சொல்லிக்கொள்வது மாதிரி, சொத்துக்கள் இல்லாத மகிந்தாவுக்கு இன்று கொழும்புவைச் சுற்றிலும் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன" என்று ஜே.வி.பி. சொல்கிறது. 'நியூயார்க்கில் 70 கோடி ரூபாய் செலவில் சொகுசு மாளிகை ஒன்று மகிந்தா குடும்பத்தினர் தங்குவதற்காகக் கட்டப்பட்டுள்ளது' என்று சிங்களப் பத்திரிகையான 'லங்க இரித' கூறுகிறது. சுனாமி நிதி மோசடிகள், மாவிலாறு நஷ்டஈடு முறைகேடுகள், தேசிய அடையாள அட்டை டெண்டர் ஆகிய ஊழல் குற்றச்சாட்டுகளை ஃபொன்சேகாவின் ஊடகப் பேச்சாளர் அனுர குமார திஸாநாயக்க பகிரங்கமாகச் சொல்கிறார். இலங்கையில் உள்ள முக்கியமான வருவாய் இனங்களை மகிந்தா குடும்பம் கைப்பற்றியுள்ளதாக அங்குள்ள பத்திரிகைகள் எழுதுகின்றன.

இதுபோன்ற குற்றச்சாட்டுகள் ஃபொன் சேகா மீதும் வைக்கப்படுகிறது. அவர் தன் மனைவிக்கு 40 லட்சம் மதிப்பிலான காரை வாங்கித் தந்ததாகவும், இலங்கைக்கு கோடிக்கணக்கான மதிப்பு ஆயுதங்கள் வாங்கியதற்கான தரகராக அமெரிக்காவில் இருக்கும் ஃபொன்சேகாவின் மருமகன் செயல்பட்டு பல கோடிகள் சம்பாதித்த தாகவும் குற்றப்பத்திரிகை வாசிக்கப் படுகிறது.

இந்த இரண்டு தரப்பும் கிளப்பும் பீதி, 'இலங்கையில் ராணுவ ஆட்சி வர இருக் கிறது' என்பதுதான். "ஃபொன்சேகாவை ஜனாதிபதி ஆக்கினால், அடுத்த ஆறாவது நிமிஷத்தில் நாட்டில் ராணுவ ஆட்சியைக் கொண்டுவந்துவிடுவார். இன்று அவரோடு வலம் வரும் ரணில் உட்பட அனைவரை யும் கைது செய்து சிறையில் அடைத்துவிடு வார்" என்று மகிந்தா கட்சி மந்திரிகள் மேடைதோறும் தூசி கிளப்பி வருகிறார் கள். "ராணுவ ஆட்சியைக் கொண்டுவர வேண்டும், இவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால், நான் ராணுவத் தளபதியாக இருந்தபோதே செய்திருப்பேன். ஜனாதிபதி ஆகித்தான் அதைச் செய்ய வேண்டும் என்பதல்ல. ராணுவ ஆட்சியை மறைமுகமாகக் கொண்டுவரப்போவது மகிந்தாதான். ஜனாதிபதி தேர்தல் முடிந்து, அடுத்து நடக்கப்போகிற பொதுத் தேர்தலில் ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக இருந்த நான்கு பேர் மகிந்தா கட்சி சார்பில் போட்டியிடப்போகிறார்கள். ஓய்வுபெற்ற 24 ராணுவ அதிகாரிகளுக்கு அரசாங்கத்தில் பதவிகள் தரப்பட்டுள்ளன. இதுதான் ராணுவ ஆட்சிக்கான மறைமுக அடையாளங்கள்" என்று ஸ்கூப் நியூஸை அமைதி யாகத் தட்டிவிடுகிறார் ஃபொன்சேகா.

"கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகை யாளர்களை யார் கொன்றது என்பதை நான் ஜனாதிபதி ஆன 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து வழக்கு தாக்கல் செய்வேன்" என்றும் இவர் சூடு ஏற்றுகிறார் .

இவர்கள் இருவருக்கும் மத்தியில் புதுச் சிக்கலாக வந்தவர் சிவாஜிலிங்கம். தமிழ்த் தேசக் கூட்டமைப்பு என்ற பெயரால் ஒன்றுபட்டு இயங்கிய தமிழ் எம்.பி-க்கள் 22 பேருக்குள் குழப்பம் ஏற்பட்டு, இவர் மட்டும் தனியாகப் பிரிந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். "தமிழர்கள் வாக்கு, ரணிலுக்கு ஆதரவான ஃபொன்சேகாவுக்குத்தான் விழும். ஃபொன்சேகா நல்லவரா, கெட்டவரா என்பதைவிட, மகிந்தா வெற்றிபெறக் கூடாது என்றுதான் தமிழர்கள் நினைக்கிறார்கள். இந்த அடிப்படையில் தமிழர் வாக்குகளை மொத்தமாக ஃபொன்சேகா வாங்கிவிடுவதைத் தடுப்பதற்காகத்தான் மகிந்தா தூண்டுதலில் சிவாஜிலிங்கம் போட்டியிடுகிறார்" என்கிறார்கள் அங்குள்ள பத்திரிகையாளர்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி-க்களை அலரி மாளி கைக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் மகிந்தா. இதில் இரா.சம்பந்தன், சேனாதிராஜா ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். "கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ தடவை உங்களைச் சந்திக்க நேரம் கேட்டோம். ஒருதடவைகூட நீங்கள் எங்களைச் சந்தித்ததில்லையே?" என்று இவர்கள் சொல்ல, "அடுத்து ஆட்சிக்கு வந்ததும் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதையே நான் தமிழர்களுக்கு நிச்சயமாகச் செய்வேன்" என்று மகிந்தா வாக்குறுதி தர, "இப்படிப்பட்ட வாக்குறுதிகளை நம்பி ஏமாந்ததுதான் தமிழர்களின் வரலாறு" என்று இவர்கள் பதில் தர, மோதலில் முடிந்தது அந்தச் சந்திப்பு.

"தடுப்புக் காவலில் கனகரட்சனம் என்ற தமிழ் எம்.பி. இருக் கிறார். அவரையாவது விடுதலை செய்யுங்கள்" என்று கோரிக்கை வைத்துவிட்டு, இவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள். "அடுத்த முறை உங்கள் இருவரையும் அமைச்சர்களாகப் பார்க்க வேண் டும்" என்று மகிந்தா ஆசை வலையும் வீசியிருக்கிறார். "நாங்கள் இப்படியே இருக்கிறோம்" என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். அப்படியே இருப்பார்களா என்று தெரியவில்லை. இவர்களை ஃபொன்சேகா அணி சார்பில் ரணிலும் அழைத்துப் பேசி இருக்கிறார். அநேகமாக, இந்த அணியை தமிழ்க் கூட்டமைப்பு ஆதரிக்கும் சூழ் நிலை இருக்கிறது.

இடதுசாரிகள் வேட்பாளராக நிற்கும் விக்ரமபாகு கருணாரட்ன குரல் கொஞ்சம் கம்மியாகவே ஒலிக் கிறது. "மகிந்தா, ஃபொன்சேகா இருவரும் தேச பக்தி இல்லாதவர்கள். இரண்டு பேருமே அந்நிய நாடுகளின் கூலிகள்" என்கிறார் இவர். சிங்களர், தமிழர் என இரண்டு தரப்பிலும் உள்ள கொள்கைவாதிகள் சிலரது ஆதரவு மட்டுமே விக்ரமபாகுவுக்கு இருக்கிறது.

இந்தக் கொண்டாட்டங்களுக்கும் தமிழர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முள்வேலி முகாமில் இருந்த வர்களில் சுமார் ஒரு லட்சம் பேர், தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட் டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பலர் வேறு முகாம்களிலும் தங்கவைக் கப்பட்டுள்ளனர். அரசாங்கக் கணக் கின்படி 88 ஆயிரம் பேர் முள்வேலி முகாம்களில் இருக்கிறார்கள். இவர்கள் வாக்களிக்க 68 வாக்குச்சாவடிகள் கிளிநொச்சிப் பகுதியில் அமைக்கப்பட் டுள்ளன. இவர்கள் தங்களது பெயர் களைப் பதிவுசெய்ய டிசம்பர் 24-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டது. ஆனால், மொத்தமே 22 ஆயிரத்துக்கும் குறைவானவர்கள்தான் இந்த விண்ணப்பத்தைக் கொடுத்துள் ளார்களாம். சாப்பாடு இல்லை, மாற் றுத் துணி இல்லை, மருந்து மாத்திரை கள் இல்லை, கடத்திச் செல்லப்பட்ட உறவினர்கள் - பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த மக்களுக்கு வாக்களிக்க விருப்ப மும் இல்லை. 'யாரு ஜனாதிபதியாக வந்தாலும், எங்க வாழ்க்கை மாறப் போறதில்லை. இப்படி எத்தனையோ தேர்தல்களை நாங்களும் பார்த்தாச்சு. எத்தனையோ ஜனாதிபதி மாறியாச்சு. எங்க வாழ்க்கை மட்டும் மாறவே இல்லை' என்ற வருத்தக் குரல், கடல் அலைகளைத் தாண்டி வருகிறது.

அடிப்பவன் மாறலாம். வாங்குபவன் ஒருவனே


source:vikatan


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP