சமீபத்திய பதிவுகள்

கம்ப்யூட்டர் கேள்வி - பதில்

>> Wednesday, March 2, 2011


கேள்வி: எனக்கு பல நண்பர்கள் தங்களிடம் உள்ள வேர்ட் 2010 தொகுப்பில் தயாரிக்கப்பட்ட வேர்ட் பைல்களை (.docx) அனுப்புகிறார்கள். என்னிடம் வேர்ட் 2003 தான் உள்ளது. அவர்களிடம் .ஞீணிஞி பார்மட்டில் அனுப்புங்கள் என்று கேட்பது சரியல்ல. இந்த பைலின் பார்மட்டை எப்படி மாற்றுவது?
-டி. தண்டபாணி, தேனி.
பதில்: உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது. உதவியாக அனுப்பும் பைலை, இந்த பார்மட்டில் தான் அனுப்பு என்று கேட்க சங்கடமாகத்தான் இருக்கும். கவலைப்படாதீர்கள், மாற்றுவதற்கு எளிதான வழி உள்ளது. http://www.doc. investintech.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். சென்றவுடன், நீங்கள் பார்மட் மாற்ற வேண்டிய பைலை அப்லோட் செய்திடவும். உடன் பைல் பார்மட் மாற்றப்பட்டு உங்களுக்கு டவுண்லோட் செய்திடும் வகையில் தரப்படும். வேகமாகவும் எளிதாகவும் நடக்கும். எந்த கட்டணமும் இல்லை. நம்மைப் பற்றியோ, நம் இமெயில் முகவரி குறித்தோ (இது போன்ற வசதிகள் தரும் மற்ற தளங்களைப் போல) தகவல் கேட்பதில்லை. நீங்கள் மாற்ற விரும்பும் பைலின் அளவைப் பொறுத்து மாற்று வதற்கு நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இருந்தாலும் வேகமாகவே மாற்றம் நடைபெறுகிறது. இந்த தளத்தில் இன்னும் சில பார்மட் மாற்றங்களுக்கும் உதவி தரப்படுகிறது. என்ன என்ன மாற்றங்கள் என அறிய, தளம் சென்று பார்க்கவும். 

கேள்வி: ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துப் பயன்படுத்தி வருகிறேன். நிறைய அஞ்சல்கள் நெருக்கமாகப் பட்டியலிடுவதால், எந்த மெயிலில் கர்சர் நிற்கிறது என்று தெரிய வில்லை. கர்சருக்கு வண்ணம் கொடுக்க முடியுமா?
-இரா. செண்பகமூர்த்தி, மேலூர்.
பதில்: இந்த பிரச்னை எனக்கும் வெகு நாட்களாக இருந்தது. கர்சரை வண்ணத் தில் கொண்டு வர முடியாது. ஆனால் கர்சர் எந்த மெசேஜில் இருக்கிறதோ, அந்த வரியை, வண்ணத்தில் கொண்டு வர முடியும். இதே போல இன்னும் சில வசதிகளைத் தரும் Better Gmail2 என்னும் சிறிய தொகுப்பினை, இறக்கிப் பதிந்து கொள்ளவும். இதில் சில ஆட் ஆன் தொகுப்பு வசதிகளும் கிடைக்கின்றன. உங்கள் கர்சர் இருக்கும் மெயில் வரியை வண்ணத்தில் காட்டுவதுடன், இன்னும் எத்தனை மெயில்களைப் படிக்கவில்லை என்பதையும், மெயில்களில் இணைக்கப்பட்டுள்ள பைல்களின் பெயர்களையும் காட்டும். 

கேள்வி: இன்டர்நெட் தளங்களின் பெயர்களை அமைக்கையில், பெயரை மட்டும் அமைத்து கண்ட்ரோல் மற்றும் என்டர் தட்ட.com என்ற துணைப்பெயருடன் உள்ள தள முகவரி அமைக்கப்படுகிறது. .net என்ற துணைப் பெயர் கொண்ட தளப் பெயரினை அமைக்க சுருக்கு வழி உள்ளதா?
-டி.வினிதா சுரேஷ், மேட்டுப் பாளையம்.
பதில்: அமைக்கலாமே. .net போல மற்றவற்றில் முடியும் தளங்களின் பெயர்களை அமைக்கவும் சுருக்கு வழிகள் உள்ளன. "www" and ".net" என அமைய ஷிப்ட் + என்டர் தட்டவும். அடுத்து "www" and ".org" என அமைய கண்ட்ரோல்+ஷிப்ட்+என்டர் தட்டவும். 

கேள்வி: சில இணைய தளங்களின் மொத்த பக்கத்தினையும் அப்படியே பிரிண்ட் ஷாட் செய்திட முடியவில்லை. பகுதி, பகுதியாகத் தான் கிடைக்கிறது. இதற்கு சுருக்கு வழி அல்லது ஷார்ட் கட் கீ தொகுப்பு உள்ளதா?
-ஜே. அமனுல்லா, கம்பம்.
பதில்: நீங்கள் கேட்பது பிரிண்ட் ஸ்கிரீன் ஷாட் என நினைக்கிறேன். எந்த பிரவுசரும் இதற்கான வசதியைத் தன்னி டம் வைத்துள்ளதாகத் தெரியவில்லை. அப்படியே பிரிண்ட் ஸ்கிரீன் கொடுத்தால், திரையில் தெரியும் பகுதி மட்டுமே பைலாகக் கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க ஒரு தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் புரோகிராம் துணையைத்தான் நாட வேண்டும். ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு, Talon குரோம் பிரவுசருக்கும் இணையத்தில் கிடைக்கின்றன. இந்த புரோகிராம்கள் எங்கு உள்ளன என்று ஒரு சர்ச் இஞ்சின் மூலம் தேடி அறிந்து பயன்படுத்தவும்.

கேள்வி: என் பாஸ் நான் தயாரிக்கும் டாகுமெண்ட்களில், திடீரென டேபிள் கேட்பார். பின் அதனையே டெக்ஸ்ட்டாக வேண்டும் என்பார். இது போல மாற்றச் சொல்கையில், நேரம் செலவழித்து பார்மட்டிங் அல்லது டைப் செய்திட வேண்டிய துள்ளது. இதற்கு சுருக்கு வழி உள்ளதா?
-பெயர் தராத வாசகி, புதுச்சேரி.
பதில்: கவலைப்பட வேண்டாம். உங்கள் விருப்பத்தினை நிறைவேற்ற வேர்ட் ஒரு வழி வைத்துள்ளது. வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் ஒன்றை அழகாக உருவாக்கி அதில் டேட்டாக் களையும் டைப் செய்த பின்னர் அதில் உள்ள சொற்களையும் பிற டேட்டா வினையும் டெக்ஸ்ட்டாக கட்டங்கள் ஏதுமின்றி மாற்றலாம்.
இதற்கு சம்பந்தப்பட்ட டேபிளை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின்னர் Table மெனுவில் இருந்து Convert என்னும் கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் சப் மெனுவில் "Convert Table to Text" என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் தேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்த பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடினால் டேபிள் டேட்டாக்கள் டெக்ஸ்ட்டாக மாறி இருப்பதனைப் பார்க்கலாம். உங்கள் நேரமும் உழைப்பும் வீணாகாமல் இருப்பதனையும் உணரலாம்.

கேள்வி: நான் தினந்தோறும் எக்ஸெல் புரோகிராமினைப் பயன்படுத்தி என் அலுவலக வேலைகளைப் பார்க்கிறேன். இதில் உள்ள டிபால்ட் செல் அகலம் என் வேலைகளுக்குப் போதவில்லை. சற்று கூடுதல் அகலத்துடன் செல் இருக்க என்ன வழிகளைக் கையாள வேண்டும்?
-டி. தாமோதரன், மதுரை.
பதில்: அநேகமாக இது பலரின் பிரச்னையாக இருக்கும் என்று எண்ணுகிறேன். செல் அகலத்தினை அவரவர் விருப்பப்படி மாற்றி, அதனையே டிபால்ட் எனப்படும் மாறா நிலையில் வைத்துக் கொள்ளலாம். இதற்கு Format மெனு சென்று Column என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு துணை மெனுவினைக் காட்டும். இதில் Standard என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Standard Width என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் எந்த அகலத்தில் செல்கள் அமைய வேண்டுமோ அதனை அமைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இவ்வாறு செய்தவுடன் உங்கள் ஒர்க் ஷீட்டின் செல்கள் அனைத்தும் நீங்கள் குறிப்பிட்ட அளவிற்கு அட்ஜஸ்ட் செய்யப்படும். ஆனால் இதற்கு முன் நீங்கள் ஏதேனும் ஒரு செல்லின் அகலத்தினை நீங்களாக மாற்றி வைத்திருந்தால், அது அப்படியே அதே அகலத்தில் இருக்கும்.

கேள்வி: என் வீட்டு விசேஷங்களின் வீடியோ பைல்கள் என்னிடம் உள்ளன. இவற்றில் என் நண்பர்கள் வந்து சென்ற அளவிலான காட்சிகளை மட்டும் கட் செய்து, தனி பைலாக அவர்களுக்கு அனுப்ப விரும்புகிறேன். இதற்கான புரோகிராம் ஏதேனும் இலவசமாகக் கிடைக்குமா?
-ஆர். தங்க பாண்டியன், காரைக்கால்.
பதில்: இதற்கான புரோகிராம்கள் சில இணையத்தில் கிடைக்கின்றன. முற்றிலும் இலவசமாகவும், இயக்க எளிதாகவும் உள்ள புரோகிராம் ஒன்றைச் சொல்கிறேன்.
வீடியோ கட்டர் என்ற புரோகிராம் இலவசமாக http://www.freevideocutter. com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்திடவும். பின்னர், புரோகிராமினை இயக்கியவுடன், "Open Video" என்ற கட்டளையைக் கிளிக் செய்து கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் வீடியோ பைலை இப்போது தேர்ந்தெடுக்கவும். வீடியோ கட்டர் புரோகிராம் அந்த வீடியோவின் பார்மட், பிட் ரேட், பிளே ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைப் படித்தறிந்து, வீடியோ தம்ப்நெயில் படங்களை ஸ்லைடுகளாக உருவாக்கும். ட்ரேக் பாரில் இடது பக்கம் எந்த ஸ்லைடிலிருந்து கட் செய்திட வேண்டும் என்பதனைக் குறிக்கவும். வலது பக்கம் முடிந்திடும் ஸ்லைடைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் செய்திட விரும்பும் பார்மட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் வீடியோ கட்டளை கொடுக்கவும். MPEG4, DivX, MP3, FLV, WMV என்ற பார்மட்கள் அனைத்தையும் இது கையாள்கிறது. நீங்கள் பதிய விரும்பும் பார்மட்டினையும் இதில் முடிவு செய்திடலாம். பின் நீங்கள் குறிப்பிடும் பைல் பெயரில், தேர்ந்தெடுத்த பார்மட்டில் வெட்டப்பட்ட வீடியோ காட்சி பைலாகக் கிடைக்கும். ஆடியோ மட்டும் வேண்டும் என்றாலும், அதனை எம்பி3 பைலாக சேவ் செய்திடலாம்.

கேள்வி: வைரஸ் குறித்துப் படிக்கையில் ரெப்ளிகேஷன் என்று ஒரு சொல்லைக் கையாள்கின்றனர். இது எதனைக் குறிக்கிறது. வைரஸ் எழுதப் பயன்படுத்தும் முறையா? அல்லது பாதிப்பு ஏற்படுத்தும் தன்மையினையா?
-ஆர். ஜெயப்பிரகாஷ், பாண்டிச்சேரி.
பதில்: பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை ஒரு வைரஸ் பாதித்தவுடன், அது தன்னையே காப்பி செய்து கொள்ளும் பணியில் இறங்கும். இதைத் தான் ரெப்ளிகேஷன் (Replication) என்று அழைக்கின்றனர். பின்னர், அந்தக் கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களையும் இது பாதிக்கும்; இமெயில் முகவரிகள் மூலமாக மற்ற கம்ப்யூட்டர் களையும் பாதிக்கும். அடுத்த கம்ப்யூட்டரை அடைந்தவுடன் இதே வேலையை மேற்கொள்ளும். இவ்வாறு சில நிமிடங்களில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களில் பரவி கெடுதல் வேலையை நடத்தும். தன்னைத்தானே காப்பி செய்திடும் வேலையை இந்தச் சொல் குறிக்கிறது. 

source:dinamalar

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP