சமீபத்திய பதிவுகள்

ஊட்டியில் உலக சாதனை நிகழ்த்தப்பட்ட சோலைக்கு சோதனை: "சுவாசத்தை' தேடும் கின்னஸ் பூங்கா

>> Tuesday, June 7, 2011


ஊட்டி : ஊட்டியில், கடந்த 2002ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்ட கின்னஸ் பூங்கா, சாதனை நிகழ்த்தப்பட்டதற்கான சுவடு கூட தெரியாமல், தனது பொலிவை இழந்து நாசமாகி காட்சியளிக்கிறது.


நீலகிரி மாவட்டத்தின் சோலை வனங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த, மாவட்ட கலெக்டராக சுப்ரியா சாஹூ இருந்த காலகட்டத்தில், ஊட்டி அருகே உள்ள குருத்துக்குளி கிராமத்தில், கடந்த 2002ம் ஆண்டு 32 ஹெக்டர் பரப்பில் 43 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. இச்சாதனைக்காக திட்டமிடும்போதே, எந்தளவிற்கு சாத்தியம் என்ற கேள்வி எழுந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மரங்களை வளர்த்தால் வனம் செழிக்கும் என்ற நோக்கத்தில் இதற்காக ஆதரவு தெரிவித்தார்கள். இத்தனை ஆதரவோடு, கல்வெட்டிலும், வருங்காலத்திலும் பெயர் இடம்பெறுமே என்ற எண்ணத்தில், வெறும் விளம்பரத்திற்காக மட்டும் இதற்கு அடித்தளமிட்டு வேலையை துவக்கியது அப்போதைய மாவட்ட நிர்வாகம். திட்டம் என்னவோ பிரமாதமானது தான்; ஆனால், அதற்கு எந்த வழிவகையையும் நிர்வாகம் ஆராயவில்லை. இத்தனை மரக்கன்றுகளை நட உள்ளோமே இவற்றை யார் பராமரிப்பது; எங்கிருந்து நிதி ஆதாரம் திரட்டுவது; கடைசி வரை இதற்கு யார் பொறுப்பேற்பது போன்ற எதற்கும் தொலைநோக்கு சிந்தனையோடு செயல்படவில்லை. இதற்காக திட்டமிட்டு எதனையும் செய்யாமல் விட்டுவிட்டதால், இன்று நீயா, நானா, நாங்கள் ஏன் பார்க்கவேண்டும் என்ற பூசலில் நாசமாகி காடாகிப்போனது கின்னஸ் பூங்கா.


சாதனை நிகழ்த்தப்பட்டு சில மாதங்களுக்கு பின்பு, இதனை பராமரிப்பதில் கடும் "பனிப்போர்' துவங்கியது. மரக்கன்றுகள் நடப்பட்ட இடம், கால்நடை துறைக்கு சொந்தமானது என்பதால் வனத்துறையினர், "கண் துடைப்பு பணியாக' இந்த பூங்காவில் உள்ள நாற்றுக்களை பராமரித்து வந்தனர். அதனால், இந்த பகுதி கால்நடை மேய்ச்சல் நிலமாக மாறியதுடன், அங்கு நடப்பட்ட பெரும்பாலான மர நாற்றுக்கள் வாடியும், அழிந்தும் நாசமாகின. இதனை தொடர்ந்து, பொது மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குரல் கொடுத்த காரணத்தால், கடந்த 2004ம் ஆண்டு இப்பூங்காவை வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, மாநில அரசும், நீலகிரி மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்து, வனத்துறை சார்பில் பூங்காவில் நாசமான நாற்றுக்களை மாற்றி, புதிய நாற்றுக்களை நட்டு பராமரிக்கப்பட்டது. எனினும், நீலகிரியில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் வன விலங்குகள், பிற கால்நடைகளின் நடமாட்டத்தால், இப்பூங்கா மீண்டும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இதை தவிர, இப்பூங்காவை பராமரிப்பதும், பனிக்காலத்தில் பனித்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏராளமான ஊழியர்கள் வேண்டும் என்பதால், வனத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும், இதற்கென மலை பகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ஒதுக்கப்பட்ட சொற்ப நிதி, வேலை ஆட்களுக்கு கூலி கொடுக்க கூட பற்றாக்குறையாக இருந்தது.


இந்நிலையில், "கின்னஸ் பூங்காவை பராமரிப்பது மட்டுமல்லாமல் இதனை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக மாற்றினால், அதில் கிடைக்கும் வருவாயில் இவற்றுக்கான அனைத்து பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளலாம்,' என பல்வேறு தரப்பில் இருந்தும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கடந்த 2002ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், உலக சாதனையாக நிகழ்த்தப்பட்ட இந்த பூங்காவை சுற்றுலா மையமாக மாற்றுவதில், கடந்த தி.மு.க., அரசுக்கு ஆர்வமில்லை. இதுகுறித்து அப்போதைய சுற்றுலா அமைச்சர் சுரேஷ் ராஜானிடம் ஊட்டியில் தெரிவித்த போதும், இதற்கான பணிகளை மேற்கொள்ளவில்லை. உள்ளூர் அமைச்சராக இருந்த ராமச்சந்திரனும் இதனை சுற்றுலா தலமாக மாற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், "கின்னஸ் பூங்கா' கடந்த 5 ஆண்டுகளில் காட்டுச்செடிகளின் முற்றுகையில் சிக்கி தனது தனிப்பொலிவை இழந்து காணப்படுகிறது.


இங்கு நடப்பட்ட 43 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு நீர் இறைக்க அமைக்கப்பட்டுள்ள தொட்டி மழை காலத்திலும் வறண்டு காணப்படுகிறது. வேலிகள் இல்லாத நிலையில், கால்நடைகளும், ஆட்களும் தாராளமாக உலா வரும் இடமாகவும் இப்பகுதி மாறியுள்ளது. இந்த பகுதியில் "கின்னஸ்' சாதனை நிகழ்த்தப்பட்டதற்கான "சுவடு' கூட இல்லாத அளவுக்கு இந்த இடம் மாறியுள்ளது. மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இங்கு கட்டப்பட்டுள்ள ஊழியர்கள் அறையும் பூட்டப்பட்டு காணப்படுகிறது. இங்குள்ள நுழைவாயிலுக்கு அருகில் உள்ள அறிவிப்பு பலகையை பார்த்தால் தான், இங்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட சாதனை தெரியவரும்.இத்தகைய சூழ்நிலையில், மோசமாகி உள்ள கின்னஸ் பூங்காவுக்கு "ஆக்ஸிஜன்' பாய்ச்சி, அதனை மீண்டும் பொலிவாக்க வேண்டிய கட்டாயம், இந்த அரசுக்கும், இந்த மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா துறை அமைச்சருக்கும் உள்ளது. இங்கு உருவாகும் சோலைவனம் மழையை உருவாக்கவும், சுத்தமான "காற்றை' பரப்பும் இடமாக மாறும் என்பதில் ஐயமில்லை


source:dinamalar


--
http://thnamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP