சமீபத்திய பதிவுகள்

புலம்பெயர் தேசங்களில் தோற்கடிக்கப்படுமா மாவீரர் நினைவு தினம் ?

>> Saturday, October 15, 2011

 

 

சொலமன் மன்னரின் அவையில் ஒரு விசித்திரமான வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒரு பிள்ளைக்கு உரிமை கோரி இரண்டு தாய்மார்கள் அரசனிடம் நீதி கோரினார்கள். சொலமன் மன்னருக்கோ ஆச்சரியம். ஒரே பிள்ளைக்கு இரண்டு அம்மாக்கள் எப்படி இருக்க முடியும்? என்று அரசவை குழப்பமுற்றது. 

அந்தப் பிள்ளையை நானே பெற்றேன் என்று ஒரு தாயும், இல்லை... இல்லை, அந்தப் பிள்ளைக்கு நானேதான் தாய் என்று மற்றவரும் அடம் பிடித்தனர். முடிவாக, சொலமன் மன்னன் ஒரு தீர்ப்பை வழங்கினான். அந்தப் பிள்ளையை இரு கூறாக்கி, இருவரிடமும் பகிர்ந்து கொடுக்கக் கட்டளையிட்டான்.

போர் வீரன் ஒருவன் வாளை உருவி, அந்தப் பிள்ளையை இரு கூறாகப் பிளப்பதற்குத் தயாரானான். உடனே, ஒரு தாய் மன்னனின் காலில் வீழ்ந்து கதறினாள். 'மன்னா! அது என் பிள்ளையே இல்லை... அதனை அவளிடமே கொடுத்து விடுங்கள்' என்று கதறினாள். மற்றப் பெண்ணோ, மன்னனின் கட்டளையை நிறைவேற்றப்போகும் போர் வீரனின் கையில் பயத்துடன் வீறிடும் குழந்தையையும் பழிவாங்கும் நிறைவுடன் சிரித்தாள். 

மன்னன் எழுந்தான், வீரனைத் தடுத்து நிறுத்தினான். தன் காலில் வீழ்ந்து கதறிய அந்தத் தாயை ஆதரவுடன் தூக்கி நிறுத்தினான். பிள்ளையை அவளிடமே கொடுக்கும்படி கட்டளையிட்டதுடன், மற்றப் பெண்ணைச் சிறையில் அடைக்கும்படி கட்டளையிட்டான். 

இது இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட வரலாற்றுச் சம்பவம். அதே போன்றதொரு வரலாற்றுச் சம்பவத்தைப் புலம்பெயர் தமிழர்கள் எதிர்கொண்டுள்ளார்கள். அங்கே, போர் வீரன் கைகளில் அலறிய குழந்தையின் நிலையில்தான் எங்கள் தேசத்தின் ஆன்மாக்களின் மாவீரர் தினம் இன்னொரு கொலைக் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கே, அந்தப் பிள்ளைக்கு உரிமை கோரிய இரண்டு தாய்மாரின் நிலையில், இங்கே இரண்டு அணிகள் மாவீரர் தினத்துக்கு உரிமை கோரி, மக்கள் முன் தங்கள் பக்க நியாயங்களைத் தெரிவித்து வருகின்றார்கள். மக்கள் மன்றத்தில் தீர்ப்புக்கான நாள் நெருங்கி வருகின்றது. பெற்றவள் ஜெயிப்பாளா? மற்றவள் ஜெயிப்பாளா? நீதி வெல்லுமா? அநீதி வெல்லுமா? என்று தமிழீழம் மௌனமாக அழுகின்றது. 

முள்ளிவாய்க்கால் வரையிலும், அதற்குப் பின்னர் நடைபெற்ற இரு மாவீரர் தினங்களையும் நாங்களே எழுச்சியுடன் நடாத்தினோம். எங்கள் மீது தவறு இருந்தால் தண்டியுங்கள். அதற்காக மாவீரர்களையும், தமிழ் மக்களையும், தேசியத் தலைவர் அவர்களையும் தண்டித்து விடாதீர்கள் என்று விடுதலைப் புலிகளின் புலம்பெயர் கட்டமைப்புக்கள் கண்ணீர் விட்டுக் கதறுகின்றன. 
மறு பக்கத்தில், மாவீரர் தினம் எங்களுக்கே உரியது. நாங்கள்தான் அதை நடாத்துவோம் என்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் கே.பி.யினால் உருவாக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தலைமைச் செயலகம் என்ற இரு அணிகளின் கூட்டு உரிமை கோருகின்றது. 

அதற்காக, அவர்கள் சில குற்றச்சாட்டுக்களையும் தமிழ்த் தேசிய தளங்கள் மீது சுமத்துகின்றார்கள். மறு பக்கத்தில், தமிழ்த் தேசியத் தளம் சார்ந்தவர்கள், தேசியத் தலைவரின் அங்கீகாரத்துடனும், அனுமதியுடனும் இவ்வளவு காலமும் மாவீரர் தின நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருகின்றன. இதில், குற்றம் காண்பிப்பவர்கள் தேசியத் தலைவர் மீதே குற்றப் பத்திரிகை வாசிப்பது போன்றது என்கிறார்கள். குழுவாக இணைந்து நின்று தமிழ்த் தேசிய தளங்கள்மீது குற்றப்பத்திரிகை வாசிப்பவர்களில் பலர், கடந்த 2010 மாவீரர் தினம் வரையும், அதற்குப் பின்னரும் மாவீரர் தின நிகழ்வு நடைபெற்ற விதம் குறித்தோ, அதில் மாற்றம் தேவை என்பது குறித்தோ தமிழ்த் தேசிய தளங்களுடனோ, அல்லது மக்களுடனோ எந்தக் கருத்துப் பகிர்வும் நடாத்தவில்லை. இவர்கள், தற்போது உள் நோக்கத்தோடும், பின்புல அறிவுறுத்தலுடனும் மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்கும், மக்களைப் பிளவு படுத்துவதற்கும் முயற்சி செய்கின்றார்கள் என்று மக்கள் மத்தியில் பரவலாகக் கேட்பவர்களுக்கு இவர்கள் எந்தப் பதிலும் சொல்வதாக இல்லை. 

மாவீரர் தினம் நடைபெறும் விதம் குறித்த கருத்துப் பகிர்வு உள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு, அதில் மாற்றங்கள் தேவையானால் ஜனநாயக முறைப்படி தீர்மானங்களை முன்னெடுத்திருக்க வேண்டும். மாறாக, மாவீரர் தினத்தை நாங்கள்தான் நடத்துவோம். மக்களுக்குக் கணக்குக் காட்டுவோம் என்று கூறுபவர்கள், இந்த வருட பிற்பகுதியில் தாங்கள் நடாத்திய சில விழாக்களின் கணக்குகளை எதற்காக மக்கள் முன் வைக்கவில்லை என்ற கேள்விக்கும் பதில் தரத் தயாராக இல்லை. பிரான்சில் மட்டும், இவர்களால் நடாத்தப்பட்ட 'தமிழர் விளையாட்டு விழா'வில் ஒரு இலட்சம் ஈரோ வரை கிடைத்ததாக இவர்களே தெரிவித்திருந்தார்கள். அந்த ஒரு இலட்சம் ஈரோக்களுக்கு என்ன நடந்தது? என்ற தமிழ் மக்களது ஆதங்கத்திற்கு இதுவரை எந்தப் பதிலும் வழங்கப்படவில்லை. 

ஆகையால், இவர்களது கணக்குப் பார்க்கும் கணக்கில் எங்கேயோ இடிக்கின்றது. மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்காக இந்தக் கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது என்பதே மக்கள் மத்தியிலான பொது அபிப்பிராயமாக உள்ளது. 'தேசியத்தைக் காப்பாற்றுவதற்காக...' என்ற இவர்களது கோசமும் மாவீரர் தினச் சிதைவு முயற்சியின் ஒரு அங்கமே தவிர வேறொன்றும் இல்லை என்பதே பலரது அபிப்பிராயமுமாக உள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவின்போதும், அதற்குப் பின்னரும் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், எத்தனையோ ஊர்வலங்கள், எத்தனையோ நடை பயணங்கள் என தமிழ்த் தேசிய தளத்தில் தொடர்ந்து நடைபெறும் எந்தப் போராட்டங்களிலும் இவர்களது முகத்தைக் காணவில்லையே? தமிழீழ மக்களது விடிவுக்கான, தமிழீழ மண்ணின் விடுதலைக்காக என நடைபெற்ற அத்தனை போராட்டங்களையும் உதாசீனம் செய்த இவர்களா இப்போது போராடப் புறப்பட்டுள்ளார்கள்? என்ற பல கேள்விகளும் மக்கள் மத்தியிலிருந்து எழுப்பப்படுகின்றன. 

கேள்விகள் பல எழுந்தாலும், பிள்ளையைக் கூறுபோடுவதில் குறியாக இருந்த அந்தப் பழிகாரி போலவே, மாவீரர் தினச் சிதைவை நோக்கி இந்தக் குழுவினர் ஆவலுடன் நகர்கின்றனர். இந்த மாவீரர் தினச் சிதைவு முயற்சி தமிழீழ மக்களின் இறுதி நம்பிக்கைக்கு வைக்கப்படும் ஆணி என்பதை யாரும் நிராகரித்துவிட முடியாது. இந்த ஆணி உண்மையாகவே அடிக்கப்படுமானால், சிங்கள தேசத்திற்கான முள்ளைவாய்க்கால் வெற்றி பூரணப்படுத்தப்படும். சிங்கள தேசம் தமிழ்த் தேசியத்தின் இன்னொரு எழுச்சியை எதிர்பார்த்து அச்சப்படாத நிம்மதியைப் பெற்றுவிடும். ஏனென்றால், தமிழீழ மக்களின் உயிர் நாடியாகவும், தமிழீழ விடுதலைக்கான எழுச்சி வேதமாகவும் மாவீரர்களே உள்ளார்கள். 

அதனால்தான், சிங்கள அரசு மாவீரர் துயிலும் இல்லங்களை அழிப்பதில் பெரும் அக்கறை செலுத்துகின்றது. இங்கும், மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்காகக் களம் இறங்கியுள்ளது. இதில் யார் பக்கம் நின்று தமிழ்த் தேசியத்தையும், மாவீரர் கனவையும் தக்க வைத்து, தேசியத் தலைவர் அவர்களது இலட்சியப் பாதையில் பயணிக்கப் போகின்றோம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும். 

- அகத்தியன்


source:athirvu


--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP