அல்லாஹ் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல
>> Sunday, January 24, 2010
"அல்லாஹ்" என்ற வார்த்தையை கிறிஸ்தவர்களும் பயன்படுத்தலாம் என்று மலேசிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது. அல்லாஹ் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமான வார்த்தை அல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முஸ்லிம்கள் தவிர மற்றவர்கள் அல்லாஹ் என்ற வார்த்தையைப் பிரயோகிக்க அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பாக நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கத்தோலிக்க வார இதழ் ஒன்று இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. அல்லாஹ் என்ற வார்த்தையை தங்களது இதழில் குறிப்பிடக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் தடை விதித்திருப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, இது தொடர்பாக அரசிடம் ஆலோசனை செய்து, மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். நீதிமன்றத் தீர்ப்பையடுத்து இனி தனது செய்திகளில் அல்லாஹ் என்ற வார்த்தையை ஹெரால்ட் நிறுவனம் பயன்படுத்திக் கொள்ள முடியும். அரசியல் நிர்ணய சட்டப் பிரிவு 31-ன் கீழ் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதாக நீதிபதி லா பீ லான் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த அல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்க உள்துறை அமைச்சருக்கு அதிகாரம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகைகளுக்கு கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் உண்டு. அப்படிப்பட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையைப் பிரயோகிக்கக் கூடாது என்று தடை விதிக்க முடியாது. அல்லாஹ் என்ற வார்த்தையைப் பிரயோகிப்பதன் மூலம் அது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அது எவ்விதத்தில் என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டது என்றும் நீதிபதி கூறினார். கடந்த ஆண்டு ஜனவரி 7-ம் தேதி ஹெரால்டு பத்திரிகைக்கு அனுமதி அளித்தது. ஆனால் அல்லாஹ் என்ற வார்த்தையைப் பிரயோகிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது. இதை எதிர்த்து அப்பத்திரிகை உரிமையாளர் பிப்ரவரி 16-ம் தேதி வழக்கு தொடர்ந்தார். அதில் அல்லாஹ் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான வார்த்தை அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார் source:tamilkural அல்லாஹ் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல: மலேசிய நீதிமன்றம்
--
www.thamilislam.co.cc