சமீபத்திய பதிவுகள்

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி! பத்திரிகை நிறுவனங்கள் மன்னிப்பு கோரின! – 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு

>> Friday, July 30, 2010

லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி 2009 ஆம் ஆண்டு லண்டனில் வாழும் இலங்கை தமிழர்கள் பிரிட்டிஷ் நாடாளுமன்ற வளாகத்தின் முன் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக பரமேஸ்வரன் 23 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.

ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின் போது அவர் இரகசியமாக பர்கரை சாப்பிட்டதாக லண்டனில் வெளியாகும் டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கு எதிராக பரமேஸ்வரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் இன்று வியாழக்கிழமை லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது சம்மந்தப்பட்ட இரு பத்திரிகைகளின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்களும் தாங்கள் வெளியிட்ட செய்திக்கான ஆதாரங்கள் இல்லை என்று ஒப்புக் கொண்டார்கள். இது குறித்த மறுப்பை வெளியிடவும், பரமேஸ்வரனுக்கு 77,500 ஆயிரம் ஸ்ரேலிங் பவுண்ட் நஷ்ட ஈடு தரவும் அந்த இரு பத்திரிகைகளும் ஒப்புக்கொண்டதாக பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மேக்னஸ் பாயிட் தெரிவித்தார்.

இந்த பத்திரிகைகளின் பொய்ச்செய்தி காரணமாக, கடந்த எட்டு மாதங்களாக தான் மிகுந்த அவமானங்களை சந்தித்ததாகவும், இந்த நிலையில் இன்று வந்துள்ள தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பரமேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

போராட்டத்தின் போது பல தமிழ் அமைப்புக்கள் பங்கேற்றாலும் தனக்கு தனிப்பட்ட முறையில் அவை உதவ முன்வரவில்லை என்றும், வெற்றிபெற்றால் வக்கீல் சன்மானம் என்ற அடிப்படையிலேயே தான் வழக்கறிஞரை அமர்த்தி இந்த வழக்கை எதிர்கொண்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக பரமேஸ்வரன் அளித்த பேட்டி:

இலங்கையில் தமிழ் மக்கள் மீதான யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக, 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி, இலங்கைத் தமிழ் அகதி பரமேஸ்வரன் சுப்பிரமணியம் அவர்கள் பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு முன்பாக 23 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

9 அக்ரோபர் 2009 அன்று டெய்லி மெயில் என்ற‌ பத்திரிகை, பரமேஸ்வரன் சுப்பிரமணியம் மீது உண்மைக்குப் புறம்பான பாரிய அவதூறு குற்றச்சாட்டு ஒன்றைப் பிரசுரித்திருந்தது. "உண்ணாவிரதியின் 7 மில்லியன் பிக் மக்" என்று தலைப்பிடப்பட்ட அந்தச் செய்தியில், திரு.சுப்பிரமணியம் தனது உண்ணாவிரத காலத்தில் இரகசியமாக பேகர்களைச் சாப்பிட்டதாக பொய்யான குற்றம் சுமத்தப்பட்டிருந்ததுடன், அவரது இந்த‌ ந‌ட‌வ‌டிக்கையால் காவ‌ல்துறையின‌ர் பொதும‌க்க‌ளின் ப‌ண‌த்தினை விர‌ய‌மாக்க‌ நேரிட்ட‌தாக‌வும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சண் பத்திரிகை இணையத்தளத்தில், "உண்ணாவிரதி இதை விரும்பினார்" என்ற செய்தியில் மீண்டும் இதே பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்று பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மக்னஸ் போய்ட் இன்று இலண்டன் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் சண் மற்றும் டெய்லி மெயில் பத்திரிகைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள், குறித்த குற்றச்சாட்டுக்கள் உண்மையில் பொய்யானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன், குறித்த தவறான செய்தியைத் திருத்திக் கொள்வதற்கும் விருப்பம் தெரிவித்தார்கள்.

இரு பத்திரிகைகளும் பரமேஸ்வரனிடம் மனப்பூர்வமாகவும், முழுமையாகவும் மன்னிப்புக் கோரி இருப்பதுடன், அவரது சட்டச்செலவுகள் உட்பட கணிசமான இழப்புக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளனர்.

பரமேஸ்வரன் இன்று கூறியதாவது:

"இந்தப் பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு விட்டதால் எனது மனச்சுமை குறைக்கப்பட்டுள்ளதுடன், நான் மீண்டும் எனது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப ஆரம்பிக்க முடியும்.

கடந்த 8 மாத காலமாக எனது வாழ்க்கை தாங்கிக்கொள்ள முடியாத சிரமங்கள் நிறைந்ததாக இருந்ததுடன், அந்தக் காலகட்டங்களில் எனது சொந்தவாழ்வை முடித்துக்கொள்ளும் அளவிற்குக் கூட சிந்தித்து இருக்கிறேன்.

குறித்த பத்திரிகைகள் பிரசுரித்த பொய்யான செய்திகளின் விளைவாக, என்னில் எந்தத் தவறும் இல்லாதபோதும், நான் எனது நண்பர்களை இழந்தேன். எனது குடும்பத்தினரால் கைவிடப்பட்டேன். அத்துடன் தமிழ் சமூகத்தினரால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன்.

குறித்த இரு பத்திரிக்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து அப் பத்திரிகைகள் பிரசுரித்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை எனது உண்ணாவிரத காலத்தில் எனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும், என்னை மதித்து என்னுடன் உதவியாக நின்றவர்களுக்கும் நிருபிக்க வேண்டியது எனது கடமை என்பதை நான் உணர்ந்தேன்.

தற்பொழுது இரு பத்திரிகைகளும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானவை என்பதை அறிவித்துள்ளதுடன், மன்னிப்பும் கோரியுள்ளன என்பதால், அந்த மக்கள் பத்திரிகைகளின் மன்னிப்புக்கோரலை ஏற்றுக்கொள்வதுடன் நான் எந்தத்தவறும் செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்வார்களென நான் மனப்பூர்வமாக நம்புகிறேன்.

ஈழத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த தமிழ் உறவுகளுக்காக நான் மேற்கொண்ட 23 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் எனது தியாகம் உண்மையானது. இந்தச் சோதனையான தருணத்தில் என்னுடைய நேர்மையை சந்தேகப்படாமல் என்னுடன் துணை நின்ற அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்."

பரமேஸ்வரனின் வழக்கறிஞர் மக்னஸ் போய்ட் இன்று தெரிவித்துள்ளதாவது:

பொய்யான குற்றச்சாட்டுக்கள் பிரசுரிக்கப்பட்டதிலிருந்து இந்த 8 மாதங்களாக அந்தச் செய்திகள் தமிழ் சமுதாயத்திலும் அதனைத் தாண்டியும் ஏற்படுத்திய அவப்பெயர், சந்தேகம், அவநம்பிக்கை என்பவற்றுடனேயே பரமேஸ்வரன் வாழ வேண்டி இருந்தது.

இரு பத்திரிகைகளும் இறுதியில் உண்மையை உணர்ந்து கீழிறங்கி வந்து தாம் பரமேஸ்வரனிற்கு உருவாக்கிய மனவேதனைக்கும், துன்பத்திற்கும் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளதையிட்டு நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.என்றார்.

source:nerudal
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP