வித்தியாசமான விழாவில் சீன அறிஞருக்கு நோபல் பரிசு
>> Saturday, January 8, 2011
ஆஸ்லோ : சீனாவின் கடும் எதிர்ப்புக்கும், கோபத்துக்கும் இடையில் நேற்று நார்வே
தலைநகர் ஆஸ்லோவில், சீன அறிஞர் லியு ஷியாபோவுக்கு(54) நோபல் பரிசு
வழங்கப்பட்டது. சிறையில் இருக்கும் அவரைக் குறிப்பிடும் விதத்தில், மேடையில்
வைக்கப்பட்டிருந்த காலியான நாற்காலி ஒன்றில் நோபல் விருது வைக்கப்பட்டது.
சீனாவைச் சேர்ந்த பேராசிரியரும், மனித உரிமைப் போராளியும், இலக்கியப்
படைப்பாளியுமான லியு ஷியாபோவுக்கு, சர்வதேச மனித உரிமை நாளான நேற்று, நார்வே
தலைநகர் ஆஸ்லோவில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொள்ள, மொத்தம்
66 நாடுகளுக்கு நோபல் பரிசு கமிட்டி அழைப்பு விடுத்திருந்தது. லியுவுக்கு நோபல்
பரிசு அறிவிக்கப்பட்டதில் இருந்தே அதை கடுமையாக எதிர்த்து வரும் சீனா,
இவ்விழாவில் கலந்து கொண்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என
எச்சரிக்கை விடுத்திருந்தது. சீன எச்சரிக்கையையும் மீறி, இந்நிகழ்ச்சியில்
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 45 நாடுகள் கலந்து கொண்டன.
ஆனால், ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 21 நாடுகள் கலந்து
கொள்ளவில்லை. "இவ்விழா, சீன - இந்திய உறவு தொடர்பானதல்ல. இது நோபல்
அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழா. இவ்விழாவில் கலந்து கொள்ளும்
முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது' என்று இந்திய வெளியுறவு அமைச்சர்
எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கம் அளித்திருந்தார்.
பல்வேறு நாடுகளின் தூதர்கள், சீனாவால் நாடு கடத்தப்பட்ட சீன பிரமுகர்கள்,
நார்வே நாட்டு பிரமுகர்கள் மற்றும் பல உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் முக்கியப் பிரமுகர்களுக்கான நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.
அவற்றோடு, லியுவை அடையாளப்படுத்தும் விதத்தில் ஒரு காலி நாற்காலியும்
வைக்கப்பட்டது. "லியு நோபல் பரிசு பெறுகிறார்' என்று நோபல் பரிசு கமிட்டி
தலைவர் தோப்ஜோர்ன் ஜேக்லேண்ட் அறிவித்தவுடன், சபையில் எழுந்த கரவொலி அடங்க சில
நிமிடங்களாயின.
*விழாவில் பேசிய ஜேக்லேண்ட் கூறியதாவது*: இந்தப் பரிசு, சீனாவுக்கு எதிரானதல்ல.
யாரையும் புண்படுத்துவது என்பது கமிட்டியின் நோக்கமும் அல்ல. மனித
உரிமைகளுக்காக அகிம்சை வழிப் போராட்டத்தின் சின்னமாக லியு விளங்குகிறார். அவர்
எவ்விதத் தவறும் செய்யவில்லை. அவரை விடுவிக்க வேண்டும். விமர்சனத்தை
எதிர்கொள்ளும் பக்குவத்திற்கு சீனா வர வேண்டும். லியுவை சீனா விடுவிக்காததில்
இருந்தே இந்தப் பரிசு அவருக்குப் பொருத்தமானது தான் என்பது வெளியாகியுள்ளது.
இவ்வாறு ஜேக்லேண்ட் கூறினார். பின், நோபல் பரிசை லியுவுக்கான நாற்காலியில்
ஜேக்லேண்ட் வைத்தார்.
*சீனாவின் சிம்ம சொப்பனம்*
** *1954, டிசம்பர் 28ம் தேதி, சாங்சுன் என்ற நகரில் பிறந்தார் லியு ஷியாபோ.
லியு என்பது குடும்பப் பெயர்.
*** இவர் 1988ல் சீன இலக்கியத்தில் பிஎச்.டி., பட்டம் பெற்றார்.
** *சீனத் தத்துவ அறிஞரான லி ஜிஹோ பற்றி இவர் எழுதிய முதல் புத்தகம், இவரை
பிரபலப்படுத்தியது.
** *1988, 89ம் ஆண்டுகளில், கொலம்பியா, ஆஸ்லோ, ஹவாய் பல்கலைகளில் சிறப்பு
வருகைப் பேராசிரியராக பணியாற்றினார்.
** *1989ல் தியானன்மென் சதுக்கப் போராட்டம் துவங்கிய காலத்தில் அமெரிக்காவில்
இருந்த இவர், உடனே சீனாவுக்குத் திரும்பி போராட்டத்தில் கலந்து கொண்டார்.
*** அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாக மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார்.
** *1996ல் மீண்டும் மூன்றாண்டு சிறை. இம்முறை, சீனாவின் மிகக் கொடூரமான
"மறுகற்பித்தல்' சிறைக்கு அனுப்பப்பட்டார். இதே ஆண்டில் தான் லியு ஷியாவை
மணந்தார்.
*** சர்வதேச மனித உரிமை பிரகடனத்தின் 60வது ஆண்டு நாளான, 2008, டிசம்பர் 10ம்
தேதி, சீனாவின் கம்யூனிச ரீதியிலான ஒரு கட்சி ஆட்சி முறையை நீக்கிவிட்டு,
ஜனநாயக முறையிலான பல கட்சி ஆட்சி முறையை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி,
"சார்ட்டர் 08' என்ற புதிய அரசியல் சாசனத்துக்கான அறிக்கையை வெளியிட்டார்.
** *இதில், சீனப் பிரபலங்கள் 300 பேர் கையெழுத்திட்டனர். அதிகாரப்பூர்வமாக இந்த
அறிக்கையை வெளியிடுவதற்கு இரண்டு நாள் முன்பு, 2008, டிசம்பர் 8ம் தேதி லியு
கைது செய்யப்பட்டார். தொடர்ந்து தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார்.
** *விசாரணை தொடர்ந்தது. 2009, டிசம்பர் 25ல் லியுவுக்கு 11 ஆண்டுகள் சிறைத்
தண்டனை விதிக்கப்பட்டது.
** *கடந்த 2010, அக்டோபர் 8ம் தேதி நோபல் பரிசு கமிட்டி, லியுவுக்கு நோபல்
பரிசு வழங்கப்படும் என அறிவித்தது.
source:dinamalar
Read more...