சமீபத்திய பதிவுகள்

சபரிமலையில் தெரியும் மகரஜோதியும், மகர விளக்கும்

>> Sunday, January 30, 2011



                   பரிமலையில் தெரியும் மகரஜோதியும், மகர விளக்கும் வேறு வேறென கூறப்படுவது உண்மையா?

மகரஜோதி தானாகவே தெரிகிறதா? அல்லது எப்படி உருவாகிறது?

மகரஜோதி  காண்பதற்காக புல்மேட்டுப் பகுதிக்குப் போய் 104 பக்தர்கள் பலியான சம்பவத்தின் வழக்கு குறித்து கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது... விழி பிதுங்கிப்போன சபரிமலை தேவசம் போர்டு, ""மகர விளக்கும் மகரஜோதியும் பக்தர்களின் நம்பிக்கையாக கருதப்பட்டு வருவதால் இதில் எந்த விளக்கமும் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறோம்'' என பணம் கொழிக்கும் சபரிமலையைத் தற்காத்துக்கொள்ளும் பதிலையே தந்தது.

கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனும் ""மகரஜோதி என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மகரஜோதி வடிவில் பக்தர்கள் கடவுளைக் காண்கிறார்கள். எனவே இதை மதத்தலைவர்களை வைத்தோ, விஞ்ஞானிகளை வைத்தோ விசாரணை செய்ய அவசியமில்லை...'' என பத்திரிகைகளிடையே பேட்டிளித்தார்.

ஆனால் கேரள கூட்டுறவுத்துறை அமைச்சர் சுதாகரனோ...  ""மகரஜோதியை பொன்னம்பம்பல மேட்டில் அங்குள்ள ஆதி வாசிகள்தான் ஏற்றுகிறார்கள். அது மத நம்பிக்கைக்குரிய பிரச்சினை என்பதால் தலையிட விரும்பவில்லை'' என்று ஒதுங்கிக் கொண்டார்.

இதைக் கேட்டு சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரோ, ""மகர விளக்கு வேறு மகர ஜோதி வேறு.  மகர ஜோதி என்பது வானில் அந்நாளில் உதிக்கின்ற நட்சத்திரம். மகர விளக்கு என்பதுதான் பொன்னம்பல மேட்டில் ஏற்றப்படுவது...'' என கொடுத்த புது விளக்கம் மூலமாய் மகர ஜோதியை அய்யப்ப பக்தர்கள் தம் நம்பிக்கையிலிருந்து வெளியேற்றிவிடக் கூடாது என்ற தன் அக்கறையை ரகசியமாக வெளிப்படுத்தினார்.

இப்படியான நிகழ்வுகளுக்குப் பிறகு... "ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ந் தேதி மாலை 6.40 மணியளவில் பொன்னம்பல மலையில் தோன்றும் ஒளியைத்தானே மகர ஜோதி என நாம் தொலைக்காட்சிகளிலும், நேரடியாகவும் பார்த்தோம்' என நாடெங்கும் உள்ள அய்யப்ப பக்தர்களும், பொதுமக்களும் குழம்பிப்போனார்கள்.

உண்மையில் சபரிமலை மகர ஜோதியின் ரகசியம் என்ன? மகர விளக்கு  என்பது என்ன?  என்ற கேள்விகளோடும், மகர ஜோதியின் உண்மையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற தவிப்போடும் -இதுவரை மகர ஜோதி காண வந்து பலியாகிப் போன பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறதே என உயிர்களின் மீதான  கரிசனத் தோடும், சபரிமலை பொன்னம்பல மேட்டிற்குள் செல்ல நக்கீரன் உறுதியெடுத்தது, களமிறங்கியது. தொடர்ந்து பல வருடங்களாய் மகர ஜோதி பொய்யான ஜோதி என போராடிக்கொண்டிருக்கும் சுகுமாரனும் நம்மோடு வருவதாய்ச் சொல்ல... லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் "சாமியப்பா  அய்யப்பா... சரணமப்பா அய்யப்பா...' என சரணம் சொல்லியபடியே கேரளாவில் எந்த பத்தினம்     திட்டா வழியாக சபரிமலையின் பம்பைக்குச் செல்கிறார்களோ... அதே வழியிலேயே  நாம் பயணித்தோம்.
இந்தப் பயணம் நக்கீரனின் அசாத்தியமானப் பயணம். அய்யப்பன் மீதான பக்தியில், எங்கிருந்தோ விரதம் இருந்து, குழந்தை  குட்டி களோடு வரும் மனித உயிர்கள் ஒரு புழுவாக நெரிசலில் மிதிபட்டு மடிவதைக் காணச் சகியாமலேதான், இந்தப் பயணத்தை நக்கீரன் தேர்ந்தெடுத்தது. விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுது பயணம் கடும் பனிக் கிடையே ஆரம்பித்தது. ஒரு குறிப்பிட்ட தூரம் வரை காரில் பயணிக்க முடியும் என்பதால், கேரள -மலையாள நண்பர்களையும் கூட்டிக்கொண்டு, வாடகைக் காரை அமர்த்திக் கொண்டு சென்றோம்.

சபரிமலை -பம்பைக்குப் போகும் வழியில் பிலாப்புள்ளி என்ற இடத்திலிருந்து வலது புறமாய் பிரியும் பாதைதான்  மகர ஜோதி தெரியும் பொன்னம்பல மேட்டிற்கு செல்லும் வழி. அதன் ஊடாக அந்த அடர்காட்டுக்குள்  பயணத்தைத் தொடர்கிறோம்.


அந்த குறுகலான பாதையில் கார் லைட் வெளிச்சத்தில் தெரிகின்றன, பாதையெங்கும் கொட்டிக் கிடக்கும்  யானைகளின் சாணிகள். இடையிடையே குரங்குகளும், சில வகையான பாம்புகளும் நாம் கடக்கும் பாதையை மறித்து கடக்கின்றன. அந்தக் குறுக்குப் பாதையில் நின்று மறிக்கிறது ஒரு காட்டெருமை. பிரேக்கை அழுத்திக்கொண்டு ஆக்ஸிலேட்டரை முறுக்கும் நம் கார் டிரைவரின் சாமர்த்திய சப்தத்தில்  பாதையை விட்டு விட்டு மரங்களுக்குள் ஓடிப்போனது காட்டெருமை.

வெகு தூரத்தில் கேட்கும் யானைகளின் பிளிறல்கள் அடிக்கடி நம் காரின் பின்னாலும் கேட்கிறது. திடீரென ஒரு வளைவில் நம் கார் நிறுத்தப்படுகிறது. அந்த இடம் ஃபாரஸ்ட் செக் போஸ்ட். "எவிடே நிங்களு போறது' என கேட்கும் செக்போஸ்ட் ஃபாரஸ்ட்காரனிடம் "குமுளியா'னு என டக்கென சொல்கிறார் நம் நண்பர்.

காரினுள்ளான அந்த ஃபாரஸ்ட்காரரின் தேடலுக்குப் பிறகு அவரிடமிருந்து அனுமதிச் சீட்டு வாங்கிக்கொண்டு மறுபடியும் பயணம் தொடர்ந்தது.

போகப்போக அந்த அடர்காடு ஒரு பெரும் மலையாகிவிட்டது. மலையேற முடியாமல் திணறிக்கொண்டு மலையேறும் நம் கார், ஒரு மாட்டு வண்டியின் வேகத் திற்குக் குறைந்து போனபோது மலையில் வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. மலைக்குள்ளான அந்தப் பயணத்தில் எந்த விலங்கு நின்று நம்மை மறிக்குமோ என நமக்குள்  ஒரு பயம் படரும் போதெல்லாம் தூர தெரியும் பாறைகள் எல்லாம் யானைகளாகத் தெரிந்தன.


காக்கி டேம், யானைத்தோடு டவர், பச்சைக்காணம், பாம்படம் செக்போஸ்ட் என 120 கி.மீ. கடந்து போய்க்கொண்டிருக்க... கொச்சு பம்பா என்ற இடத்தோடு நம் வண்டி நின்றது.  அந்தப் பொன்னம்பல மேட்டிற்குப் போக குறுக்கு வழி இங்கேதான் இருக்கிறது என்ற சுகுமாரனின் தகவலோடு காரை விட்டு இறங்கினோம்.

பொன்னம்பல மேட்டின் கீழ் நிற்கும் நாம்... ஆகாசம் தொடும் பொன்னம்பல மேட்டு மலையை பிரமிப்பாய்  பார்த்தபடி, அந்த மலைக்குக் கீழ் வசிக்கும் மனிதர் களிடம் மகர ஜோதியைப் பற்றி கேட்க ஆரம்பித்தோம்.

கோணிப் பையில் விறகுகளை திணித்துக் கொண்டிருந்த அந்த அம்மா, ஏதோ ஒரு ஜந்துவைப்போல நம்மைப் பார்த்துவிட்டு அந்த குடிலினுள் நுழைந்து விட்டார். 

தன் நண்பர்களோடு மீன் பிடிக்கச் சென்று கொண்டிருந்த  சிஜு என்ற இளைஞனிடம்,  "இந்த மகர ஜோதியைப் பற்றி இங்குள்ள நீங்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்' என்க... ""இதேபோலதானு இவுடே ஒரு லோக்கல் டி.வி.காரு வந்து மூணு  ஆளுக்காருகிட்ட மகர ஜோதியின்டே மர்மம் குறிச்சு கேட்டுட்டுப் போயி. அது டி.வி.ல வந்தப்போ, ஆ மூணு ஆளுக்காரையும் அடிச்சு போலீஸ்  கேஸாயிட்டு ஜெயில்ல அடைச்சு. அதுகொண்டு இப்போ  நிங்களிடத்து நான் எந்தெங்கிலும் பரைஞ்சா போலீஸ் என்னை  கொன்னு களையும்'' என்று ஒதுங்கிக்கொண்டான். 

இலங்கையிலிருந்து அகதியாய் வந்து பொன்னம்பல மேட்டின் கீழ்  குடியிருக்கும் தமிழரான  முதியவர் சிவலிங்கத்திடம் கேட்டபோது...  ""30 வருஷமா இங்கேதான் குடியிருக்கேன்.  மகர ஜோதியோட  உண்மைய சொல்லியே ஆகோணும்.  ஏன்னா... மகர ஜோதிய நம்பி நெரிசல்ல சிக்கி நிறைய பேரு செத்துப்போறத பாத்தா கஷ்ட மாயிருக்கு'' என்கிறவர்... ""ஜனவரி 14-ந் தேதி காலையில  பெரிய பெரிய அலுமினியப் பாத்திரங்களோடு நாலஞ்சு ஜீப்ல ஆளுக போவாங்க. பொன்னம்பல மேட்டு உச்சிக்குப் போய் தங்கிக்குவாங்க. மாலையில அந்தப் பாத்திரங்கள்ல கற்பூர கட்டிகளைப் போட்டு நாலஞ்சு பேரு  சேர்ந்து கற்பூர ஒளி தெரியற அந்த அலுமினியப் பாத்திரத்தத் தூக்கிப் பிடிப்பாங்க. அதுதான் மகர ஜோதி. 

பொன்னம்பல மேட்டில் அய்யப்பன்  ஒளியா இப்படித்தான் தோன்றி சபரிமலையிலும்,  புல்மேட்டிலும்  மகர ஜோதி காண காத்துக் கிடக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு காட்சியளிக்கிற அநியாயம் நடக்கிறது. இதெல்லாம் பணத்துக்காக செய்யறாங்க. நீங்கதான் இதை அப்பாவி மக்களுக்குத் தெரியப்படுத்தணும்'' என்று  ஒரு பெரும் உண்மையைப் போட்டு உடைத்தபோது நாம் பெரும்  அதிர்ச்சிக்குள்ளானோம்.

அவரிடம் பேசிவிட்டு, தலை தெரியாத பாம்பொன்று நெட்டுக்குத்தலாய் தொங்கிக் கொண்டிருப்பதைப் போல  கிடக்கும் பொன்னம் பல மேட்டின் நுனி வாலைப்பிடித்துக் கொண்டு ஏறத் தொடங்க முயற்சித்தபோது நம்மை மறித்த மலையாள ஆள் ஒருவர்... "இதுக்குள்ள போகாம் பெற்றில்லா... மீறி போனா ஃபாரஸ்ட்காரங்க சுட்டுக் கொல்லும்' என மிரட்டியதுடன்... நாம் என்ன செய்கிறோம் என கண்காணிக்க  மரத் திற்குப் பின்னால் நின்றுகொண்டார்.  நாமும் பொன்னம்பல மேட்டிற்குள்  நுழையாதது      போல் பாவ்லா காட்டிவிட்டு  திரும்பவும்  பாம்பின் நுனி வாலைப் பிடித்து வனத்துறையால் போடப்பட்டிருக்கும் "நோ என்ட்ரி' போர்டைத் தாண்டினோம். நாம் நடக்கும் அந்தக் குறுகலான  பாதையில் நம் மீது தேரைகள் எகிறி எகிறிக் குதிக்கின்றன.

தின்று செரிக்க முடியாமல், நெளிய முடியாமல் ஊர்ந்து போனது பெரிய பாம்பொன்று.  மிதிபடும் இலைகளின் சத்தத் தோடும், யாரும் பேசாமல் மிக ரகசியமாகச் சென்று கொண்டிருந்தோம். கொஞ்ச தூரம் நடந்தபோது, அந்த மலையாள ஆள், நம்மை மிரட்டிய... "சுட்டுக் கொல்லும்' என்ற வார்த்தை எங்களுக்குள் செரிக்க முடியாமல், அந்தப் பாம்பைப் போலவே  ஊர்ந்துகொண்டிருந்தது என்பதுதான் உண்மை.

இந்த பயத்தோடு நடக்கிற நமக்கு இன்னும் பயத்தை  கூட்டவோ என்னவோ ஒரு மேட்டில்   நின்று காடே அதிரப்  பிளிறியது ஒரு யானை. அவ்வளவுதான்... ஏற்கனவே நடப்பதையே ஓடுவது போல  செய்துகொண்டிருந்த நாம் இப்போது ஓட்டமெடுத்தோம். பாவம் நம்முடன் வந்தவர்களில் இரண்டு பேர் வயதானவர்கள். அவர்களும் நமக்கு சரி சமமாகவே ஓடிவந்தார்கள்.  மலை மீது நடப்பது  தெரியும். மலையில் ஓடுவது என்பது புதிதுதான்.  கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் நடந்து பொன்னம்பல மேட்டு பாம்பின் முக்கால்வாசி உடலைத் தொட்டாகிவிட்ட சமயம் ஒரு இடத்தில் பதுங்கினோம்.

அங்கே கண்காணிப்புக் கோபுரம்  ஒன்று இருந்ததுதான் நம் பதுங்கலுக்குக் காரணம். சிறிது நேரம் நோட்டம்விட்ட நாம் கண்காணிப்புக் கோபுரத்தில் யாரும் இல்லாததை உறுதிபடுத்திய பின்பே பாம்பின்  தலையைப் பார்க்க  மேற்கொண்டு மிக மிக நெட்டுக்குத்தலாய் இருக்கும் மலையில் ஏறினோம். அங்கிருந்துதான் எங்களுக்குள் பேச்சுக் கிளம்பியது.

நம்மிடையே பேசத் தொடங்கிய சுகுமாரன்,  ""பொன்னம்பலமேடு  மனுஷங்க யாரும் போக முடியாத மலை. அங்கே அய்யப்பனின்  வாகன      மான புலிகள் நிறைய இருக்கிறதுன்னு சொல்லிக் கிட்டிருக்கறவங்க எதுக்கு இந்த மலைப்பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைச்சிருக்காங்க. இங்க நான் வர்றது அஞ்சாவது தடவ''  என அதிர்ச்சி கொடுக்கிறவர்... "இதோ... இதோ... இதுதான் பொன்னம்பல மேடு உச்சி' என்றபோது  நடந்து வந்த கால்வலியெல்லாம், பயமெல்லாம் காணாமல் போக... பாம்பின் தலையைப் பார்த்தோம். சபரிமலையிலிருந்து பொன்னம்பல மேட்டைப் பார்த்தவர்களே  இருக்கிற நிலையில் நாம் மட்டும்தான் பொன்னம்பல மேட்டிலிருந்து 2000 அடிக்கு  கீழ் ஒரு வெளிச்சப் புள்ளியாய் தெரிகிற சபரிமலையைப் பார்த் தோம்.

பொன்னம்பல மலையின் நுனிப்பகுதியில் ஒரு சின்ன திட்டு கட்டப் பட்டிருந்தது. அந்தத் திட்டை கை நீட்டிக் காட்டும் சுகுமாரன்,  ""இந் தத் திட்டுதான் சபரிமலை தேவசம் போர்டுக்கும் கேரள அரசுக்கும் பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது'' என்றவரிடம்... ""முத        லில் மகர ஜோதி என்பது என்ன? மகர விளக்கு என்பது என்ன? அதைச் சொல்லுங்கள்'' என்றபோது...
""ஆதி காலத்திலிருந்தே மகர மாசம் பிறக்கும் ஜனவரி  14-ந் தேதி பொன்னம்பல மேட்டில்  ஒரு நட்சத்திரம் தோன்றும். அந்த நட்சத்திரம் வருவதற்கு முன்னால் கிருஷ்ண பருந்து வட்டமிடும்... பின்வரும் அந்த நட்சத்திரமே மகர விளக்கு. அதான் அய்யப்பன்னு சொல்லப்பட்டது. பின்னாளில்  பொன்னம்பல மேட்டில் ஆதிவாசிகள்  இருந்தபோது  அவர்கள் ஏதோவொரு  நிகழ்வுக்காக  அங்கே மலையுச்சியில்  குறிப்பிட்ட அதே நாளில் தீபம் ஏற்றியிருக்கிறார்கள்.


இதை சபரிமலையில் நட்சத்திரத் தைப் பார்க்க வந்திருந்தவர்கள்  அய் யப்பன் ஒளியா  காட்சி தர்றாரு. இது    மகர ஜோதின்னு கன்னத்துல  போட்டுக் கிட்டத தேவசம் போர்டு பார்த்தாங்க. அதையே மகர ஜோதியாவே வச்சுக் கிட்டவங்க முதல்ல செய்த காரியம், பொன்னம்பல மேட்டிலிருந்த ஆதிவாசிகளை விரட்டி  னாங்க. 2000 அடிக்கும் மேலாக இருக்கும் சபரிமலையிலிருந்து பொன்னம்பல மேட்டைப் பார்த்தால் வானத்தை முட்டுவது போல இருக்கும். அதனால்  ஜோதி ஏற்றும் போது அது வானத்திலிருந்து  வருவதாகவே பக்தர்கள் நம்புவார்கள் என தேவசம் போர்டு பிளான் செய்தது. அதன்பின்னரே அந்த மலை யாரும் நுழைவதற்குத் தடை செய்யப்பட்டு தேவசம்போர்டோட பண மலையாகிப் போனது.

இப்போ இந்தப் புல்மேட்டுல 104 பேர் பலியான சம்பவத்திற்குப் பிறகே தங்கள் கற்பூர ஜோதி குட்டு வெளியாகறதனாலேயே தங்கள் மலை வருமானத்தைத்     தக்க வைத்துக்கொள்ள... புதிதாய்ச் சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள். மகர ஜோதி என்பது  நட்சத்திரம், மகர விளக்குங்குறதுதான் பொன்னம்பல மேட்டில்  ஏற்றப்படுவதுன்னு...'' என சிரிக்கிறவர் ""இதிலும் ஒரு         பொய் என்னன்னா..  ஆதிவாசிகள்தான் மகர விளக்கு ஏத்தறாங்கன்னு.. ஆனா  யார், ஏத்தறாங்கன்னு  நான் சொல்றேன்.

1980-ல் மகரஜோதி பொய்னு  சொல்லி நானும், என் ஃப்ரெண்ட் பாபுவும் இந்த பொன்னம்பல மேட்டுக்கு ரகசியமாய் வந்தபோது... நாங்கள்  நினைத்தது போலவே இங்கே ஆதிவாசிகள் வசிக்கவில்லை. இங்கே வந்த ஜீப்புகளில் ஒரு ஜீப்பில் சபரிமலை தேவசம்போர்டு என்று எழுதப் பட்டிருந்தது. அந்த வண்டி எண் கூட கே.ஆர்.பி.2951, இன்னொரு ஜீப்பில்  போலீஸ் எஸ்கார்ட்ஸ் என்று எழுதப்பட்டிருந்தது. அந்த வண்டி எண் கே.சி.எப்.2672. கூடவே வனத்துறை வண்டி, எலக்ட்ரிசிட்டி போர்டு வண்டி என்று இன்னும் சில ஜீப்புகளில் பெயர் இருந்தது. அவர்கள் எல்லோரும் இணைந்து பெரிய பெரிய அலுமினிய பாத்திரங்களைத் தூக்கிக்கொண்டு  மேலே நடந்தார்கள். அவர்கள் பின்னாலேயே நடந்த நாங்கள் இந்த உச்சிக்கு அவர்கள் வந்த பின் அவர்களின் செயல்களைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட் டோம். மது பாட் டில்களை எடுத்து அருந்தத் தொடங் கியவர்கள் இங்கேயே படுத்துக்கொண்டார் கள். நாங்கள் வெகு நேரம் காத்திருந்தோம்.

மாலை 5 மணிக்கெல்லாம் எழுந்தவர்கள் அந்த அலுமினியப் பாத்திரங்களில்  கற்பூரக் கட்டிகளைக் கொட்டி கற்பூர மலையை அந்த அலுமினியப் பாத்திரத்திற்குள் உரு வாக்கினார்கள். சரியாய் 6.40 மணிக்கு மலையின்  நுனியில் நின்று (இதோ நான் செய்வது போல...) தீபத்தை உயர்த்திப் பிடித்தார்கள்.  பின்பு இன்னொரு அலுமினியப் பாத்திரத்தை எடுத்து எரியும் தீபத்தின் மீது கவிழ்த்தார்கள். பின்பு சில நொடிகள் கழித்து கவிழ்த்த அலுமினியப் பாத்தி ரத்தை எடுத்தார்கள்.  இதேபோல இன்னும் இரண்டு முறை செய்தார்கள். அவ்வளவுதான்... ஆகப்பெரும் வேலை யொன்றை  முடித்த நிம்மதியோடு மலையை விட்டு இறங்கத் தொடங்கி னார்கள்.

அப்போது இந்தத் திட்டு கட்டப்படவில்லை. சபரிமலையில் அய்யப்பனுக்கு  தீபாராதனை காட்டும் போது...  பொன்னம்பல மேட்டு மலையில் ஓடும் ஆற்றில் குளித்து எழுந்து அய்யப்பன் ஒளியாய் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் என்ற புராணக் கதையை நம்பி பல மூலை களிலிருந்தும் சபரிமலைக்கு ஜோதி பார்க்க வரும் லட்சக்கணக்கான மக்களிடமிருந்து வசூல் செய்வதற் காகவே இந்த பொன்னம்பல மலையை கேரள அரசு பயன்படுத்துவதைப் பார்த்து மனம் நொந்து போனோம். அதுவும் எப்படி... மகர ஜோதி யினுடைய ஒளி புனிதம் என்று  "சாமியே சரணம் அய்யப்பா' என்று பக்தர் கள் கன்னத்தில் போட்டுக் கொண்டிருக்க... "இவர் களோ கிண்ணத்தில் மது ஊற்றி குடித்துக் கொண் டாடி கற்பூரக் கட்டி களைப் போட்டு தானாய் வரும் ஜோதி என பக்தர்களை ஏமாற்று கிறார்களே' என வருந்தி னோம். அதற்கடுத்த வருடம் 25 பேராய் வந்தபோது...  பொன்னம்பல மலையுச்சி யில் துப்பாக்கி முனையில் போலீஸ்காரர்கள் எங்களைப் பிடித்தார்கள். அடித்துத் துவைத்தார்கள். மிகக் கொடூரமாய்  துன்புறுத்தினார்கள்.

என்னை அடிக்கும்போது அவர்கள் சொன்னார்கள். "மலையாளத்துக்காரனான  நீங்க ஒரு பைசா கூட  உண்டியல்ல போடமாட்டீங்க. ஆனா தமிழுக்காரனுகளும், தெலுங்குக் காரனுகளும், கன்னடக்காரனுகளும் கொண்டு வந்து காசு கொட்றத  நீங்க எதுக்குடா  தடுக்கறீங்க'ன்னு  சொல்லியே அடிச்சாங்க.

அடிச்சுக் கொண்டுவந்து மலைக்கு வெளியே தூக்கி வீசிட்டுப் போனாங்க.  3 மாசம்  ஆஸ்பத்திரியில கிடந்த நான் திரும்பவும் மகரஜோதின்னு கற்பூர தீபத்தை காட்றத படம் எடுக்கணும்னு வெறியோட போய் படம் புடுச்சு லோக்கல் பத்திரிகைகளிடம் கொடுத்தபோது யாரும் பிரசுரிக்கலை. மக்களோட நம்பிக்கைய  முதலீடா வச்சு கோடிகள்ல கொழிக்கிற கேரளா அரசையும்,  தேவசம் போர்டோட முகத் திரையையும் எப்படியாவது கிழிக்கணும்னு போராடிக்கிட்டு இருந்தேன்.

அதுக்குள்ள 1999-ல 54 பக்தர்கள் பலியான சம்பவம் அறிந்து ஸ்பாட்டுக்கு ஓடினேன். நிஜமாய் நான் அழுதுவிட்டேன். தான் மட்டுமில் லாமல் தன்னுடைய 4 வயது சிறுவனை கூட்டிக்கொண்டு பொய்யான  இந்த ஜோதியை உண்மை என நம்பி  வந்த ஒரு அப்பாவையும்,  அந்த 4 வயது சிறுவனையும் ஓலைப்பாயில் சடலமாய் சுற்றி அனுப்பி னோம். இதற்குக் காரணம் மகர ஜோதிதான். அப்போதைய சம்பவத்தைப் போலவே தான் இப்போது புல்மேட்டில் 104 பேர் பலியானதுக்கு காரணமும் இந்தப் பொய்யான மகர ஜோதிதான். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இது உங்களுக்கு ரகசியம். எங்களுக்கு இல்லை. இந்த மகர ஜோதி தானா வர்றதில்லை. ஏற்றப்படுதுன்னு எங்க மலையாளிக எல்லாத்துக்கும் தெரியும். அதனாலதான் சபரிமலையில் இதுவரைக்கும் இறந்தவங்கள்ல மலையாளிக ரெண்டோ, மூணோதான். அதுகூட அவங்க பக்தருக இல்லை. உங்களுக்கு வழிகாட்டி சம்பாதிக் கிற கைடுக. "பணத்த வந்து எங்க மாநிலத்துல கொட்ற உங்ககிட்ட  எதுக்கு மகரஜோதி உண்மைய சொல்லணும்'னுதான் மலை யாளிக பலரும் நெனைக்கிறாங்க'' என்று கொந்தளிக்கிறவர்... ""கேரள அரசும், தேவசம் போர்டும் இனியும் பொன்னம்பல மலையை வைத்துக்கொண்டு பிசினஸ்  பண்ண முடியாது.  பணத்திற்காக உயிரை மதிக்காத இவர்கள் மீது எங்கள் அமைப்பு ஐகோர்ட்டில வழக்குப் பதிவு செய்திருக் கிறது.  தண்டனை வாங்கித் தரும்வரை ஓயமாட்டோம்'' என அந்தப் பொன்னம்பல மேட்டிலேயே  நம்மிடம் சத்தியம்  செய்தார் சுகுமாரன்.

""நாங்க மலையாளப் பத்திரிகைகளை நம்பறது இல்லை.  நீங்க தமிழ்  பத்திரிகை. அதுவும் நக்கீரன்ங்கிறதாலதான் உங்ககூட வந்தோம்.  நாங்க கைகூப்பி, கேட்டுக்கறது என்னன்னா... தயவு செய்து இனியும் உங்க தமிழ் மக்களும்,  ஆந்திர மக்களும், கன்னட மக்களும் மகரஜோதி உண்மைன்னு நம்பி இங்க வரவேணாம். வந்து மரிக்க வேணாம். உங்க மாநிலத்துலயே ஒரு அய்யப்பன் கோயில் கட்டி கும்பிடுங்க.  அதையேதான் நாங்க கேட்டுக்கிறோம்'' என்கிறார்கள் குருவிலானும், புருஷோத்தமனும்.

மலையைவிட்டு இறங்கத் தொடங்கியிருந்தபோது... இருள் பிடித்துக் கொண்டிருந்தது எங்களை.  மலைவிட்டு கீழிறங்கி அந்த மலையைத் திரும்பிப் பார்த்தோம். "கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை'  என்கிற அய்யப்ப பக்தர்களின் சரணத்தில்  நமக்கு ஒரு கேள்வி எழும்பியது. கல்லும் முள்ளும் யார் காலுக்கு மெத்தை என்பதுதான் அது? அதற்கான  பதில் கேரள அரசிடமும், சபரிமலை தேவசம்போர்டிடமும் மட்டுமே இருக்கிறது.

பக்தியில் திளைக்கும் மக்களை  பணம்காய்க்கும் மரமாக நினைப்பதைத் தடுத்து உண்மையை மக்களிடையே எடுத்துச் சொல்வதற்காகவே  இந்தப் பயணத்தைச் செய்தது நக்கீரன்.  கேரள அரசு வேண்டுமானால் தடை செய்யப்பட்ட பகுதி என்று பொன்னம்பல மேடுவை பொன் மேடு தயாரிக்கப் பயன்படும் மெத்தையாக்கிக் கொள்ளலாம். ஆனால் உண்மைகளுக்காக எங்கேயும்  நடக்கும் நக்கீரனின் கால்களுக்கு அந்தப் பொன்னம்பல மேடு வெறும் சொத்தைதான்.

-அருள்குமார்
படங்கள் : ஞானசேகரன்


source:nakkheeran
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP