சமீபத்திய பதிவுகள்

இருக்கட்டும், நமக்குத்தான் `எந்திரன்` ரிலீஸ் ஆகிவிட்டதே!

>> Wednesday, October 13, 2010

தமிழ் ஈழத்தில்... மலர்ந்தது சிங்கள தேசம்! - ப.திருமாவேலன்



ப.திருமாவேலன்

மட்டக்களப்பு பன்குடா பகுதியைச் சேர்ந்த சீனித்தம்பி பத்மநாபனை, தமிழ் ஈழப்

பகுதியில் பெரும்பாலானவர்கள் அறிவார்கள். அந்தப் பகுதியில் மிக வசதியான குடும்பத்துக்காரர். தன்னுடைய செல்வத்தை எல்லாம் போராளிகளுக்கு உணவு தயாரித்துக் கொடுப்பதற்காகவே செலவு செய்தார். காட்டுப் பகுதியில் பதுங்கி இருக்கும் புலிகளுக்கு சாப்பாடு செய்து அனுப்பிவைப்பதுதான் அவரது வேலையாக இருந்தது. இந்திய ராணுவம் அங்கு இருந்தபோதும், அதே காரியத்தை சீனித்தம்பி செய்தார். அதைக் கண்டுபிடித்த ராணுவம், காலில் சுட்டு அவரைக் கைது செய்தது. ராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துபோனார். உடலைக்கூட, அவரது குடும்பத்தினருக்குத் தர வில்லை!

அப்பாவுக்கு ஏற்பட்ட நிலையை, அவரது மகள் ஷகிலா உணர்ந்தார். உடனே, அவரும் நாட்டுக்காகப் போராட புலிகள் அமைப்புக்குள் இணைந்தார். புலிகளின் மிகப் பெரிய வெற்றியாகச் சொல்லப்படும் ஆனையிறவு சமரில் சித்திரா என்று பெயரிடப்பட்டு, இவர் களத்தில் இறங்கினார். அதில் சித்திராவுக்கு விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு, அவர் புலிகள் அமைப்பில் இருந்து விலகினார். அதே அமைப்பைச் சேந்த உருத்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். 2007 ஜூலையில் மேஜர் உருத்தி, சிங்கள ராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். அப்பா, கணவர் இருவரையும் நாட்டுக்காகக் கொடுத்த அந்தப் பெண், மாவீரர் குடும்பங்களுக்கு மாதம்தோறும் தரப்படும் தொகையை மட்டும் வாங்கி, தானும் உண்டு தனது குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார். அவரது உடலில் ஏற்பட்ட பாதிப்பு காலப்போக்கில் அதிகமாகி, அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று சொன்னார்கள். அதற்கான செலவு ` 38 ஆயிரம் என்றும் சொல்லப்பட்டது.

அதற்காகப் பல இடங்களில் அலைந்தார். வெளிநாட்டில் இருக்கும் தனது உறவினர் மூலமாக அதை வாங்க முயற்சித்தார். அங்கே இருந்து பணத்தை அனுப்பிவைக்கும் சிரமத்தால், தொகை வந்து சேரவில்லை. சிகிச்சைக்கு வழி இல்லாமல், கடந்த 17-ம் தேதி சித்திரா செத்துப்போனார். அவரது இரண்டு பிள்ளைகளும் அநாதையாக நிற்கின்றன. இது தனிப்பட்ட ஒரு சித்திராவின் கதை அல்ல; ஓர் இனத்தின் கதை. ஒவ்வொரு குடும்பத்திலும் உழைக்க முடிந்தவர் அனைவரையும் போர் தின்று துப்ப... மற்றவர்கள் பிழைக்க வழி தெரியாமல் கிடப்பதுதான் இன்றைய ஈழத் தமிழனின் நிலை!

சொந்த தேசத்து மக்களை இப்படிச் சூன்யத்தில் தள்ளிவிட்ட இலங்கை அரசாங்கம், மகிழ்ச்சியாக இருக்கிறது. `ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அம்மக்களைக் கொல், அவர்கள் வாழும் மண்ணைக் கைப்பற்று` என்பதுதான் அரசியல் பாசிசத்தின் அரிச்சுவடி. இன்றைய ஈழத்தில் அதுதான் நடந்தது. இன்னும் ஒரே ஆண்டில், `மலர்ந்தது சிங்கள தேசம்` என்ற அறிவிப்பை அவர்கள் செய்ய இருக்கிறார்கள். பயங்கவாதத்துக்கு எதிரான போர் என்று சொல்லி, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது போர் தொடுக்கப்பட்டது. அந்த அமைப்பை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார்கள். அதற்குப் பிறகாவது வடக்கு, கிழக்கு, யாழ்ப்பாணம் பகுதி வாழ் தமிழ் மக்களை நிம்மதியாக வைத்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. அதாவது, அங்கே நடந்துகொண்டு இருப்பது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல; ஓர் இனத்துக்கு எதிரான போர் என்பதால்தான், ஈழத் தமிழர்களை இன்னும் சிறுகச் சிறுகச் சித்ரவதை செய்து கொன்று தீர்த்து வருகிறார்கள் என்றே அங்கே இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், 55 சதவிகிதத்துக்கு மேல் சிங்களவர்களைக் குடியமர்த்த வேண்டும். அடுத்த தேர்தலில் இந்தப் பகுதிகளில் சிங்கள எம்.பி-க்களே அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்" என்ற முடிவோடு, இந்தக் காரியங்கள் செய்யப்படுகின்றன.

"வடக்கு மாகாணத்தில் சிங்களவர்கள்தான் முன்னர் பெருமளவில் வாழ்ந்தார்கள். பின்னர், அவர் கள் தமிழர்களால் விரட்டி அடிக்கப்பட்டார்கள். சிங்களவர் விரும்பினால், மீண்டும் வடக்குப் பகுதிக் குப் போய் வாழலாம்" என்று பகிரங்கமாக அறிவித்து உள்ளார் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷே. "வட கிழக்கின் பாதுகாப்பு கருதி, அங்கு நிரந்தர ராணுவ முகாம்களும் படைத் தளங்களும் அமைக்கப்படும். அதில் பணிபுரியும் ராணுவத்தினர் தங்கி வாழ, அந்தப் பிரதேசத்தில் ராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படும்" என்று ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய அறிவித்தார். இப்போது வடக்கில் மட்டும் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். அதையட்டி, ஒரு லட்சம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இவர்கள் அனைவருக்கும் போர் வெற்றிக்குத் துணை புரிந்ததற்காக நிலங்கள் கொடுக் கப்பட உள்ளன. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால், சிங்கள நிறுவனங்களுக்கு பல நூறு ஏக்கர் நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. கடலோரப் பகுதி அனைத்தும் சுற்றுலாத்தலங்களாக மாற்றப்பட்டு, பீச் ரிசார்ட்ஸ் அமைக்க சிங்கள நிறுவனங்கள் உள்ளே நுழைந்துவிட்டன. மாவட்ட நிர்வாகத்தைக் கவனிக்க, அனைத்து இடங்களிலும் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இதை மேற்பார்வை செய்கிறார்கள். மாவட்டக் காணி அதிகாரிகளாக நியமிக்கப்படும் சிங்கள அலுவலர்கள், ஏதாவது ஒரு திட்டத்தின் பெயரை எழுதி, நிலங்களைத் தாரை வார்க்கும் வேலையை நித்தமும் பார்த்து வருகிறார்கள். இன்னும் ஆறு மாதங்களில் தமிழர் நிலங்கள் அனைத் தும் கபளீகரம் செய்யப்பட்டு இருக்கும். இங்கு ஒரு சென்ட் நிலத்துக்கு போலிப் பத்திரம் வைத்திருந்தால், 20 ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். ஆனால், அங்கு ஓர் இனம் வாழ்ந்த நிலப் பகுதியே வேறு பெயர்களுக்கு பட்டப் பகலில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு வருகிறது!

60 ஆண்டுகளுக்கு முன்னால் திரிகோணமலையை தமிழர் தாயகத்தின் தலைநகர் என்றே பிரகடனம் செய்தார்கள். இதைத் தொடர்ந்தே, அந்தப் பகுதியில் சிங்களவர்களை அதிகமாகக் குடியேற்ற பல்வேறு திட்டங்களைப் போட்டார்கள். 1.3 சதவிகிதமாக இருந்த சிங்கள மக்கள்தொகை, கடந்த ஆண்டு 30 சதவிகிதம் ஆனது. 81.76 சதவிகிதமாக இருந்த தமிழர் தொகை, 23.5 சதவிகிதமாக சுருங்கிப்போனது. இன்று திரிகோணமலையை, தமிழர் பிரதேசமாகவே சொல்ல முடியாது. இதே நிலைமையை மட்டக்களப்பும் அம்பாறையும் நெருங்கிக்கொண்டு இருக்கின்றன. முல்லைத் தீவும் கிளிநொச்சியும் அதே கதியை அடையப்போகின்றன. தமிழர்களின் வீடுகள் இருந்த இடங்கள் இடிக்கப்பட்டு நிலங்களாகவும், நிலமாக இருந்த பகுதிகள் வீடு கட்டும் இடங்களாகவும் வழங்கப்படுகின்றன. தன்னுடைய இடம், வீட்டைச் சட்டரீதியாக யாரும் இனி திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை.

"இலங்கைத் தீவின் எந்த இடத்திலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக் கூடாது என்பதற்கு ஏற்ப மகிந்தா அரசு மறைமுகத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் இருந்தால், தமிழ் மக்கள் தமது பாரம்பரியத் தாயகம், அதற்கான சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி கோருவார்கள். அதனை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையே இது!" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தம் சொல்கிறார்.

இதைத் தமிழர்கள் மட்டும் சொல்லவில்லை. அந்த நாட்டின் மிக முக்கியப் பத்திரிகையான சண்டே லீடர் (கொலை செய்யப்பட்ட லசந்தாவின் பத்திரிகை!) `மகிந்தாவின் சிங்களக் குடியேற்றம்` என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது. `தமிழர்கள் அதிகம் வாழும் முறிகண்டியில் 12 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இது மீண்டும் ஓர் இனக் கலவரத்தை ஏற்படுத்துவதற்கான திட்டம்` என்று சொல்கிறது அந்தப் பத்திரிகை. இந்த முறிகண்டி பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வேண்டும் என்றே புத்த விகார் நிறுவப்பட்டது. நில உரிமையாளர் புத்த விகார் அமைக்கக் கூடாது என்று நீதிமன்றம் போய் தடை வாங்கி இருக்கிறார். ஆனால், வட கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புத்த விகார்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. `யாழ்ப்பாணத்தில் அரச மரங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை வைக்கிறார்கள்` என்று சொல்கிறார் ஒரு பத்திரிகையாளர்.

மன அழுத்தம் போக்கவும் நம்பிக்கையை ஏற்படுத்தவும், புத்த பிட்சுக்கள், தமிழர் பகுதியில் மனநல வகுப்புகளை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். `இது தமிழர்களை மதம் மாற்றும் முயற்சி` என்று இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. பௌத்தர் கள் கொண்டாடும் பொசன் பண்டிகை, வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்கள்தான் தமிழர் பகுதிகளில் அதிகமாக நடக்கின்றன. கிளி நொச்சியில் நடந்த பொசன் பண்டிகையை ராணுவத் தளபதி ஊறுஊ ராஜகுரு தலைமை தாங்கி நடத்தினார்!

சகல இடங்களிலும் உயர் அதிகாரிகளாக சிங்களர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதைவிட, பள்ளிக்கூடங்களில் சிங்கள ஆசிரியர்களே அதிகமாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களிடம் பேசுவதற்காக சிங்களம் படித்தாக வேண்டிய நெருக் கடி அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் சிங்கள வழிக் கல்வியைக் கொண்டுவரவும், தமிழ்க் கல்வியை முற்றிலுமாகத் தடைபோடுவதற்கும் இது வழிவகுக்கும். முல்லைத் தீவு, அளம்பில், செம்மலை, வட்டுக்கால், முள்ளிவாய்க்கால், மாத்தளம், சாலை ஆகிய தமிழ்ப் பகுதிகள் அனைத்திலும் சிங்கள மீனவர்களே மீன் பிடிக்கிறார்கள். தமிழ் மீனவர்களுக் குப் படகும் இல்லை. வலையும் இல்லை. இருந்தும், மீன் பிடிக்கச் சென்றால், அவர்களைக் கடல்பகுதிக்கு ராணுவம் விடுவது இல்லை. இப்படி தமிழன் மொத்த மாக தண்ணீர் தேசத்தில் தத்தளிக்கிறான். "சண்டை நேரத்துல செத்திருந்தா, நிம்மதியாப் போயிருக்கும்!" என்றே ஒவ்வொரு தமிழனும் ஒப்பாரிவைக்கிறான். சமாதியில் போய் உட்கார்ந்துகொண்டு சாவை அழைப்பதுபோலவே அவர்களது வாழ்க்கை.

இருக்கட்டும், நமக்குத்தான் `எந்திரன்` ரிலீஸ் ஆகிவிட்டதே!
 
நன்றி : ஆனந்த விகடன் 



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP