ராஜசேகர ரெட்டியின் மரணத்தில் சதியா?பற்றி எரியும் ஆந்திரா !!!
>> Thursday, January 7, 2010
ஐதராபாத் : "ராஜசேகர ரெட்டியின் மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்திற்கு, பிரபல நிறுவனத்தின் சதியே' என, "டிவி' சேனல் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டதால், ஆந்திராவில் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பெட்ரோல் "பங்க்'களை அடித்து நொறுக்கினர்.
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலுங்கு செய்தி சேனலான "டிவி-5' நேற்று பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. அதிகம் பிரபலமாகாத வெப்சைட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இந்தச் செய்தியை வெளியிட்டது. அதில், ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதற்கு பிரபல தனியார் நிறுவனத்தின் சதியே காரணம் என, தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான, "சாக்ஷி டிவி' உட்பட வேறு சில "டிவி' சேனல்களும் இதே செய்தியை வெளியிட்டன.
இந்த விவகாரம், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத், கடப்பா, விஜயவாடா, எலுரு உட்பட ஆந்திராவின் பல பகுதிகளில் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான சில்லறை விற்பனைக் கடைகள், பெட்ரோல் "பங்க்'கள் மற்றும் மொபைல் டவர்களை அடித்து நொறுக்கி, சூறையாடினர். அதுமட்டுமின்றி, ராஜசேகர ரெட்டியின் மரணத்தில் சதி இருப்பதாகக் கூறி, இன்று "பந்த்' நடத்தப் போவதாக கடப்பா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது. ""ரெட்டியின் மரணத்தில் உள்ள உண்மையை வெளிக்கொணர வேண்டும். அவரின் மரணம் தொடர்பான விசாரணை மெதுவாக நடக்கிறது. அதை விரைவுபடுத்த வேண்டும். உண்மையை வெளிக்கொண்டுவர வலியுறுத்தி நாளை (இன்று) "பந்த்'திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்,'' என கடப்பா மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ் பாபு கூறினார்.
source:dinamalar
--
www.thamilislam.co.cc
Read more...