சமீபத்திய பதிவுகள்

ஒரு தேனீர் கோப்பையின் சுயசரிதை

>> Friday, April 25, 2008

ஒரு தேனீர் கோப்பையின் சுயசரிதை

காட்சி -1

ஒரு காலத்தில் நான் மண்ணுக்குள் மண்ணாக இருந்தேன்.
என் ஆண்டவர் என்னை நிலத்திலிருந்து வெட்டியெடுத்து தன் கைகளினால் என்னை தட்டி, கசக்கினார், பிசைந்தார். அது எனக்கு மிகுந்த வேதனையாய் இருந்தது. உடனே நான் "ஆண்டவரே போதும்
";என்று கூச்சலிட்டேன்.
என் ஆண்டவரோ என்னைப் பார்த்து புன்முறுவலுடன் "பொறுத்திரு" எனக் கூறினார்.

காட்சி -2

அதன் பின் அவர் என்னை சுழலும் ஒரு சக்கரத்தில் வைத்து சுற்றத் தொடங்கினார். எனக்கோ என் தலை சுற்றத் தொடங்கியது. உடனே ஆண்டவரை நோக்கி நிறுத்துங்கள் என கெஞ்சினேன்.
என் ஆண்டவரோ என்னைப் பார்த்து புன்முறுவலுடன் "பொறுத்திரு" எனக் கூறினார்.


காட்சி – 3

ஒருவிதமாக என்னை ஒரு பாத்திரமாக வனைந்து முடிந்ததும்
அதிலிருந்து என்னை வெளியே எடுத்தார். இனி எல்லாம் முடிந்தது என நினைத்துக் கொண்டிருந்த போது, சற்றும் எதிர்பாராத விதமாக அவர் என்னை எரியும் அக்கினி சூளைக்குள் தள்ளினார். ஐயோ! என் உடல் வெந்து வேகத்தொடங்கியது என்னால் தாங்க முடியாமல் நான் ஐயோ என அலரத்தொடங்கினேன்.
என் ஆண்டவரோ என்னைப் பார்த்து புன்முறுவலுடன் "பொறுத்திரு" எனக் கூறினார்.


காட்சி – 4

சில நிமிடங்களில் அவர் என்னை வெளியில் எடுத்தார். எனக்கு நிம்மதி, பெருமூச்சு விட்டேன். என்னைத் தம் கரங்களில் ஏந்திய வண்ணம் என் முகத்திலும் உடலிலும் பலவர்ண நிறங்களைப் பூசத்தொடங்கினார். அந்த வர்ணங்களின் கொடுர மணத்தினால் எனக்கு மயக்கம் வரத்தொடங்கியது. ஒருவிதமாக என்னில் நிறம் தீட்டி முடித்ததும் என்னை மறுபடியும் அக்கினி சூளைக்குள் வைத்தார். இம்முறை அந்த சூளையின் வெப்பம் முன்னைவிட பலமடங்கு அதிகமாக இருந்தது. அக்கினிக்குள் நான் அழிந்து விடுவேன் என எண்ணியவனாக, இனி என்னால் முடியாது என புலம்பினேன்.
என் ஆண்டவரோ என்னைப் பார்த்து புன்முறுவலுடன் "பொறுத்திரு" எனக் கூறினார்.


காட்சி - 5

என்னால் ஒருவார்த்தை கூட பேசமுடியாதவனாக, என் நம்பிக்கையாவும் அற்றுப்போனவனாக, எல்லாம் அழிந்துபோயிற்று என எண்ணிக்கொண்டிருந்தபோது… அக்கினியின் சுவாலை மெதுவாக அணைந்துபோயிற்று…சூளையின் கதவுகள் மெல்ல திறந்தன…
என் ஆண்டவர் என்னைப் பார்த்து புன்முறுவலுடன் எல்லாம் முடிந்தது எனக்கூறி என்னை வெளியே எடுத்து ஒரு கண்ணாடி அலுமாரிக்குள் என்னை வைத்து, "மகனே நீ சென்ற அனுபவங்கள் வேதனையானவை ஆனாலும் அவை உன்னை ஒரு உறுதியுள்ள மனிதனாக மாற்றும் என்பதை அறிவேன். நீ அனுபவித்த ஒவ்வொரு வேதனையின் சூழ்நிலையிலும் உன் மேல் என் கண்ணை வைத்து, உன்னை காத்து வந்தேன்" எனக்கூறி முடித்தார்.

அங்கிருந்த ஒரு கண்ணாடியில் என் அழகு தோற்றத்தை பார்த்ததும் ஆச்சரியத்தினால் வாயடைத்துப்போனேன். எப்படியோ இருந்த என்னை இப்படியாய் மாற்றிய என் ஆண்டவருக்கு நன்றி சொல் வார்த்தை இன்றி தவித்தேன்.

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினமும் வனைந்திடுமே


("சத்திய வசன சஞ்சிகையின்" கடந்தமாத இதழில் வெளிவந்தது)
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP