`முயற்சிகள் தோற்பதில்லை-தியேட்டர் கேண்டீனில் சர்வராக வேலை பார்த்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்
>> Sunday, May 18, 2008
`முயற்சிகள் தோற்பதில்லை'
தியேட்டர் கேண்டீனில் சர்வராக வேலை பார்த்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்
6 முறை தோல்வியை தழுவி 7-வது முறையாக வெற்றி பெற்றார்
சென்னை, மே.18-
சென்னை தியேட்டர் கேண்டீனில் சர்வராக வேலை பார்த்த இளைஞர் ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். அதிலும் 6 முறை ஐ.ஏ.எஸ். தேர்வில் தோல்வியை சந்தித்து தனது 7-வது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்.
கடைசி வாய்ப்பில் வெற்றி
2007-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ். தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து 79 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வெற்றிவாகை சூடிய கே.ஜெயகணேஷ் என்ற இளைஞரும் ஒருவர்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஐ.ஏ.எஸ். தேர்வில் 6 முறை தோல்வியை தழுவி, விடாமுயற்சியுடன் செயல்பட்டு 7-வது தடவையில் வெற்றிக்கனியை பறித்துள்ளார். அவருக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கடைசி வாய்ப்பே அவருக்கு வெற்றியின் விளிம்பாகவும் அமைந்தது. வாழ்க்கையில் முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதற்கு இவரது வெற்றி ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
கிராமத்து இளைஞர்
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகணேஷ். இவரது தந்தை கிருஷ்ணன் சோலூரில் தோல் தொழிற்சாலை ஒன்றில் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். தாயார் கலாவதி. ஜெயகணேஷ் தனது ஆரம்பக்கல்வியை சொந்த கிராமத்தில் உள்ள இந்து மிஷன் பள்ளியில் படித்தார். ஆம்பூரில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு, குடியாத்தத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படித்தார். இதைத்தொடர்ந்து வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து 2000-ம் ஆண்டு முடித்தார்.
அதன்பின் பெங்களூரில் உள்ள டூல்பாம் டெக்னிக்கல் கம்பெனியில் ஒரு ஆண்டு சூப்பர்வைசராக பணிபுரிந்தார். என்ஜினீயராக இருந்த போதிலும் கலெக்டராக வேண்டும் என்பது இவரது கனவாக இருந்து வந்தது. அதன்காரணமாக தனது வேலையை விட்டு விட்டு மீண்டும் சொந்த கிராமத்திற்கு வந்தார். அங்கிருந்து கொண்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்தார். 2001-2004 வரை ஊரில் இருந்தவாறே தேர்வு எழுதினார். ஆனால் வெற்றிபெற முடியவில்லை.
கேண்டீனில் வேலை
இருந்தாலும் மனம் தளராமல் கண்டிப்பாக ஒருநாள் கலெக்டராவோம் என்ற தன்னம்பிக்கையுடன் மீண்டும், மீண்டும் முயற்சித்தார். அதன்பிறகு 2004-ம் ஆண்டு சென்னை வந்து அண்ணாநகரில் உள்ள அரசு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் உள்பட 3 ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டார்.
அதன்பின் தங்குவதற்கும், சாப்பாட்டு செலவிற்கும் பணம் தேவை என்பதால், 2004-ம் ஆண்டு சத்யம் தியேட்டரில் முதல் மாடியில் உள்ள கேண்டீனில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு டீ, காபி மற்றும் திண்பண்டங்கள் சப்ளை செய்வது, பில் போடுவது போன்ற பணிகளை செய்து வந்தார். இதன் மூலம் அவருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் சம்பளம் கிடைத்தது.
இதற்கிடையே ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் விடாமுயற்சியுடன் படித்து வந்தார். அவருக்கு 6 வாய்ப்புகள் கழிந்தும் வெற்றி கிடைக்கவில்லை. கடந்த ஆண்டுதான் அவருக்கு கடைசி வாய்ப்பாக இருந்தது. எனவே மிகவும் கடுமையாக தனது அனைத்து உழைப்பையும் செலுத்தி இரவு, பகல் பாராமல் படித்தார். அவரது முயற்சிக்கு பலனும் கிடைத்தது. ஐ.ஏ.எஸ். தேர்வில் 6 முறை தோல்வியை தழுவியவர், 7-வது தடவையில் வெற்றிபெற்றார். அவருக்கு அகில இந்திய அளவில் 156-வது ரேங்க் கிடைத்துள்ளது.
தனது சாதனை குறித்து கே.ஜெயகணேஷ் (வயது 29) கூறியதாவது:-
மறக்க முடியாது
எங்கள் ஊர் மிகச்சிறிய கிராமம். அங்குள்ள மக்களுக்கு நான் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதற்கு ஏற்ற பணி ஐ.ஏ.எஸ்.தான் என்பதை நான் தீர்மானித்தேன். அதனால்தான் இந்த பணிக்காக முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளேன். இனி என்னால் முடிந்தவரை மக்களுக்கு சமூக சேவை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதே எனது லட்சியம். நான் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றது பற்றி என் பெற்றோரிடம் கூறியபோது மிகவும் சந்தோஷப்பட்டனர். அவர்கள் நான் ஒவ்வொரு முறை தோல்வி பெறும் போதும் அவர்கள் எனக்கு உற்சாகமூட்டியதை மறக்கமுடியாது. அதேபோல நான் வேலை பார்த்த கேண்டீனில் உள்ள சகஊழியர்களும், வாச்மேனும் தேர்வுக்கு சென்ற போது சந்தோஷமாக வழியனுப்பியதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.
தங்கையை படிக்க வைப்பேன்
என்னைப்போல கிராமத்து மாணவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி அதிகாரிகளாக வரவேண்டும் என்பதே என்ஆசை. அவர்களுக்குத்தான் மக்களின் பிரச்சினைகளைப்பற்றி முழுவதுமாக தெரியும். யாராக இருந்தாலும் 2 ஆண்டுகள் விடாமுயற்சி எடுத்து படித்தால் இந்த தேர்வில் வெற்றி பெறலாம். அதற்கு பட்டப்படிப்பு படிக்கும்போதே தகுந்த பாடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். நான்கூட பள்ளியில் தமிழ் வழியில் தான் படித்தேன். ஆங்கிலம் ஓரளவு தெரிந்தால் கூட வெற்றிபெறலாம்.
என் தம்பி நரேஷ்குமார் பி.ஏ., படித்து வருகிறார். என் தங்கை ஜெகதீஷ்வரி பி.காம் படித்து வருகிறார். மற்றொரு தங்கை பாரதி பிளஸ்-2 வரை படித்து உள்ளார். அவருக்கு திருமணமாகிவிட்டது. இருப்பினும் இனி அவரை அஞ்சல் வழியில் பட்டப்படிப்பு படிக்கவைக்க முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு ஜெயகணேஷ் கூறினார்.
கல்லூரியில் பேச அழைப்பு
ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் நிறுவனத்தலைவர் ஜெகத்ரட்சகனின் ஸ்ரீராமானுஜர் என்ஜினீயரிங் கல்லூரி சார்பில் அதன் நிர்வாக அதிகாரி லீலா செழியன் ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிபெற்ற ஜெய்கணேஷுக்கு வாழ்த்து தெரிவித்து மலர் கொத்து வழங்கினார். தங்கள் கல்லூரியில் நடக்கும் ஒரு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். தேர்வில் கலந்து கொள்ளும் வகையில் நம்பிக்கைïட்டவும், ஊக்குவிக்கும் வகையிலும் நல்ல உரையை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=413413&disdate=5/18/2008
0 கருத்துரைகள்:
Post a Comment