சமீபத்திய பதிவுகள்

சீனாவில் 2 தமிழர்களுக்கு மரண தண்டனை

>> Tuesday, June 3, 2008


சீனாவில்
2 தமிழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து ஆகுமா?


பீஜிங், ஜுன்.3-

சீனாவில், 2 தமிழக வாலிபர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதற்கு, இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மரண தண்டனை

தமிழ்நாட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர், அஸ்கர் மியான். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர், ஹுசேன் மைதீன். போதை பொருட்களை சீனாவிற்கு கடத்திய வழக்கில், தமிழகத்தை சேர்ந்த இந்த இரு வாலிபர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், சீனாவின் ஜ×வோஹாய் மக்கள் கோர்ட்டில் இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும்படி தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தண்டனை தேதி அறிவிக்கப்படாததால், இரு வாலிபர்களும் சீனாவில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

மத்திய அரசு நடவடிக்கை

இதற்கிடையில், அஸ்கர் மியான் குடும்பத்தினர், அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்து, ஜெயில் தண்டனை விதிக்கும்படி கோரி, வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சகம் மூலம் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதைத்தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் மூலம் இருவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பேரில், சீனாவில் காங்சோ நகரில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவர், சிறையில் இருக்கும் இரு தமிழர்களையும் சந்தித்து பேசுவதற்கு சீன கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது. இந்திய தூதரக அதிகாரி வருகிற 6-ந்தேதி அவர்களை சந்தித்து வாக்குமூலம் பெற இருக்கிறார். சீனவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி இந்த தகவலை உறுதி செய்து இருக்கிறார்.

தனித்தனி வழக்கு

அஸ்கர் மியான், ஹுசேன் மைதீன் இருவரும் தனித்தனி வழக்குகளில், சீனாவின் வெவ்வேறு மாகாணங்களில் கைது செய்யப்பட்டனர். சீன சுங்க அதிகாரிகளால் அஸ்கர் கடந்த பிப்ரவரி மாதத்திலும், ஹுசேன் மார்ச் மாதத்திலும் கைது செய்யப்பட்டனர்.

அஸ்கர் வைத்திருந்த சூட்கேசில் இருந்து 1301 கிராம் ஹெராயினும், ஹுசேனின் வயிற்றில் இருந்து 300 கிராம் எடையுள்ள ஹெராயினும் கைப்பற்றப்பட்டதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இரண்டு வழக்குகளிலும், அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதித்து, கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு கூறப்பட்டது.

சகோதரர் பேட்டி

அஸ்கர்மியான் இந்த வழக்கில் சிக்கியது குறித்து அவருடைய சகோதரர் காஜாமுகமது கூறியதாவது:-

"தாய்லாந்தில் சமையல்காரராக வேலை செய்வதற்காக கடந்த 2003-ம் ஆண்டில் அஸ்கர் புறப்பட்டுச் சென்றார். அப்போது சுல்தான் என்பவரும் அவருடைய மகன் சலீம்கான் இருவரும் அஸ்கரை சந்தித்து லண்டனில் வேலை வாங்கித் தருவதாக கூறி இருக்கிறார்கள்.

உடனடியாக அஸ்கர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு, அதற்காக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வாங்கிக் கொடுத்து இருக்கிறார். பணத்தை பெற்றுக்கொண்ட சுல்தான், அஸ்கரை கம்போடியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைத்து இருக்கிறார். அங்கிருந்து சீனா வழியாக, லண்டனுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

சீன அரசு கடிதம்

கம்போடியாவில் ஏறத்தாழ 2 ஆண்டுகள் தவித்த அஸ்கர் அங்கு கிடைத்த வேலைகளை செய்து காலம் தள்ளி இருக்கிறார். கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி அன்றுதான் கம்போடியாவில் இருந்து சீனா செல்வதாக அஸ்கர் எங்களுக்கு டெலிபோன் மூலம் தகவல் தெரிவித்தார்.

அதன்பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீன அரசிடம் இருந்து வந்த கடிதத்தை பார்த்தபிறகுதான், அவர் போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய விவரம் தெரியவந்தது.

அப்பீல்

உடனடியாக நான் சீனாவுக்கு சென்று அஸ்கரை பார்க்க முயன்றேன். ஆனால், சிறையில் அவரை பார்க்க முடியவில்லை. எனது சகோதரர் நிரபராதி. சுல்தான்தான் அவரை ஏமாற்றி கடத்தல் வழக்கில் சிக்க வைத்து விட்டார். சூட்கேசில் போதைப்பொருள் இருந்தது நிச்சயம் அவருக்கு தெரிந்திருக்காது.

எங்கள் குடும்பத்தின் ஏழ்மை நிலையையும் வயதான பெற்றோரின் நலன் கருதியும் கருணை அடிப்படையில் அஸ்கருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யும்படி சீன அரசிடம் தற்போது அப்பீல் செய்து இருக்கிறோம்.''

இவ்வாறு காஜா முகமது கூறினார்.

ஹுசேன் சிக்கியது எப்படி?

மரண தண்டனை அடைந்த மற்றொரு தமிழக வாலிபரான ஹுசேன் மைதீன், 2007-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி அன்று பிடிபட்டார். 3 மாதங்களில் 4-வது முறையாக சீனாவுக்குள் நுழைந்தபோது அவர் சுங்க அதிகாரிகளின் பிடியில் சிக்கினார். நிவி என்ற நைஜீரிய நண்பரின் கையாளாக, போலி பெயரில் போதை மருந்து கடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

போதை பொருளை விழுங்கி கடத்திச்சென்றால், டெல்லி திரும்பியதும் 1000 டாலர் (ஏறத்தாழ ரூ.40 ஆயிரம்) தருவதாக நிவி அவரிடம் கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=416598&disdate=6/3/2008

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP