சமீபத்திய பதிவுகள்

ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் இரண்டு சதவீதம் மட்டுமே

>> Thursday, October 2, 2008

ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் இரண்டு சதவீதம் மட்டுமே. ஆனால் கலவர மாவட்டமான கண்டமால் பகுதியில் முப்பது சதவீத கிறிஸ்தவர்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தில் 1971-ல் ஆறு சதவீதம் இருந்த அவர்கள் 2001-ல் 27 சதவீதமாக உயர்ந்தார்கள். வறுமையின் பிடியில் அல்லல் படும் ஆதிவாசிகளும் தலித்களும் பெருமளவில் வாழும் இம்மாவட்டத்தில் கிறித்தவ மிஷினரிகளின் வருகைக்குப்பின் ஏராளமான பள்ளிக் கூடங்களும் இதர கல்வி நிலையங்களும் எழும்பின. கூடவே தொழிற் பயிற்சி நிறுவனங்களும் மருத்துவ மனைகளும் பெருகின. இதன் மூலம் அம்மக்கள் கவரப்பட்டு தங்களைக் கிறித்தவ மதத்துக்கு மாற்றிக் கொண்டனர். அப்படி மாறியவர்களில் பெருவாரியானவர்கள் கல்வி கற்றுத் தேறினார்கள். ஆதிவாசி கிறித்தவ இளைஞர்கள் ஆங்கில புலமையில் தேர்ச்சி பெற்றனர். அவர்களது பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த முன்னேற்றம் மற்ற மக்களையும் கிறித்தவத்துக்கு மாறத் தூண்டியது. வறுமைக் கோட்டுக்கு மேல் இருக்கும் 25 சதவீத) மக்களில் பெருவாரியானவர்கள் கிறித்தவர்களாக மாறினர். ஆனால் மதம் மாறிய கிறித்தவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினர் தங்களுக்கு அரசு உதவிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு ஆவணங்களில் தங்களை ஹிந்துக்கள் என்றே காட்டி வந்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மூன்று கிறித்தவர்களின் ரெவின்யூ ரிக்கார்டுகளில் அவர்கள் ஹிந்துக்களாக பதிவு செய்யப்பட்டிருப்பது இதற்கு ஒரு சான்றாகும்.

கண்டமால் மாவட்டத்தில் ஆதிவாசிகளும் பன்னா என்ற தலித் இனத்தினரும் வசித்து வருகின்றனர். இவர்களை கிறித்தவத்துக்கு கட்டாய மத மாற்றம் செய்வதாகக் கூறி தீவிர இந்துத்துவ வாதிகள் இம்மாவட்டத்தைத் துவம்சம் செய்து விட்டனர். மதம் மாற்ற முடியாது மனம் மாற்றத்துடன் வருபவர்களை நாங்கள் அரசின் சட்டங்களுக்கு உட்பட்டுதான் ஏற்றுக் கொள்கிறோம்- கல்விக்கும் சமூக சேவைக்கும் தான் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம் என்று கிறித்தவ சபைகள் இதனை நியாயப் படுத்துகிறது. ஒரிசாவில் மதமாற்ற தடை சட்டம் உள்ளதால் எளிதில் மதம் மாற்றுவது என்பது இயலாத காரியம். மதம் மாற வேண்டுமெனில் அரசின் பல துறைகளில் அனுமதி பெற்று சட்டப் பூர்வமாக மட்டுமே மாற்ற முடியும் என்பதால் கட்டாய மதமாற்றம் என்பது ஆதாரமற்ற குற்றச் சாட்டாகும் என்றும் கூறுகின்றன மிஷினரிகள்.

தற்போதைய கலவரத்துக்குக் காரணம் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதியின் கொலையாக இருந்தாலும் ஏற்கெனவே இங்கு கிறித்தவர்களுக்கும் தீவிர இந்துத்துவ வாதிகளுக்குமிடையே பகைமை புகைந்து கொண்டுதான் இருந்தது. காண்டமல் மாவட்டத்தில் சுமார் 120 வருடங்களாக செயல்பட்டு வரும் கிறித்தவ மிஷினரிகளின் முன்னேற்றத்தை முடக்க 1960 களில் திரிசூலப் போர் என்ற பிரகடனத்துடன் சங்பரிவாரின் பிரதிநிதியாக லட்சுமணானந்த சரசுவதி இங்கு ஆசிரமம் அமைத்தார். முதலில் செக்காபடிலும் பின்னர் ஜலாஸ்படிலும் ஆசிரமம் அமைத்து ஏராளமான நலத் திட்டங்களும் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்களும் தங்கும் விடுதிகளும் துவங்கி நடத்தினார். இதன் மூலம் கிறித்தவ முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த பாடுபட்டார். ஆனால் கிறித்தவ மிஷினரிகள் நடத்தும் கல்வி நிலையங்களும் மருத்துவ மனைகளும் தரும் சேவையில் கவரப்பட்ட மக்கள் தீவிர ஹிந்துத்துவ வாதிகளின் அழைப்பைப் புறக்கணித்தனர். கிறிஸ்தவ மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்த சுவாமி இன்னொரு பிரச்சாரத்தையும் முடுக்கி விட்டார். பசுவதைத் தடை சட்டத்தை கிறித்தவர்கள் மீறுவதாகக் கூறி இருதரப்பினர் மீதும் மோதலுக்கு வித்திட்டார். சுவாமிக்கும் கிறித்தவர்களுக்கும் இது நேரடிப் பகையை ஏற்படுத்தியது.

ஒரிசா மாநிலம் ஜென்மாஷ்டமி விழாவில் மூழ்கி இருந்தபோது ஆகஸ்டு 23 இரவு ஜலாஸ்பட் ஆசிரமத்தில் சுவாமி லட்சுமணானந்தா கொலை செய்யப்பட்டார். முப்பதுக்கும் அதிகமானோர் ஆசிரமத்தில் நுழைந்து குரூரமாக சுவாமியைக் கொலை செயடதனர். கூட இருந்த நான்கு நபர்களும் கொலை செய்யப்பட்டனர். சுவாமியின் ஒரு கால் வெட்டி எறியப்பட்டது. முன்னர் இருமுறை சுவாமியை கொல்ல சதி நடந்தது. கொலை செய்யப் படுவதற்கு சில நாட்களுக்கு முன் ஆசிரமத்திற்கு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. சுவாமி நேரடியாக காவல் நிலையம் சென்று புகார் மனு அளித்திருந்தும் அவருக்குப் போலீஸ் காவல் தரப்படவில்லை.ஒரிசாவில் கிறிஸ்தவர்களைத் தவிர மற்ற அனைத்து வகுப்பினரும் சுவாமியைக் கிறிஸ்தவர்கள் கொன்றதாக நம்புகின்றனர். சென்ற டிசம்பரில் 'பாராகாம'வில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பஜ்ரங்தள் தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகளின் உதவியுடன் நடத்திய பதிலடிதான் சுவாமியின் கொலை என்றும் ஒரு தரப்பு நம்புகின்றது. ஆனால் மாவோயிஸ்டுகள் இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாலும் சங்பரிவாரும் அதன் கிளை அமைப்புகளும் அதை ஒத்துக் கொள்ளவில்லை. கிறிஸ்தவர்களின் சேவை மாவோயிஸ்டுகளுக்குக் கிடைத்து வருவதால் மாவோயிஸ்டுகள் கிறிஸ்தவர்களை ஆதரிக்கிறார்கள். சுவாமியின் கொலைக்குப் பின்னால் சுவாமியின் ஆட்களின் கரங்கள் தான் செயல்பட்டுள்ளது என்றும் கொலைக்கு சில நாட்களுக்கு முன் சுவாமிக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து புகார் செய்யப்பட்டும் போதிய பாதுகாவல் தராதது மர்மமாக உள்ளதாகவும் கிறிஸ்தவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள் பாமர மக்கள். பகை அடங்காமல் சங் பரிவார்கள். கிறிஸ்தவ மக்கள் பதட்டத்தில் இப்படியாக ஒரிசா தத்தளிக்கிறது. அரசின் பாகுபாடற்ற நியாயமான சட்டத்தின் கரங்களால் தான் நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் வராமல் பாதுகாக்க முடியும் என நடுநிலையாளர்கள் கோருகின்றனர். இந்திய மக்களின் சாந்தமான வாழ்வுக்காக எல்லாம் வல்ல இறைவனை நாமும் வேண்டுவோமாக.

குறிஞ்சியார்
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP