எதிர்பாரா தாக்குதலை அதிபர் புஷ் சொல்லாலும் செயலாலும் சமாளித்த விதம் சிறப்பாக இருந்தது
>> Tuesday, December 16, 2008
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், ஜனவரியில் பதவி ஓய்வு பெறுவதற்கு முன்பாக முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஈராக் சென்று, ஈராக்கிய பிரதமருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ஈராக்கியத் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் திடீரென்று தனது காலணிகளை அதிபர் புஷ் மீது வீசியெறிந்து அவரைத் திட்டினார்.
அதிபர் புஷ் சட்டென குனிந்து கொண்டதால், இரண்டு காலணிகளும் அவர்மீது படாமல் பின்னால் சுவரில் இடித்து விழுந்தன.
"இது ஈராக்கிய மக்கள் தரும் பிரியாவிடை முத்தம், நாயே," என்று கூறிவிட்டு அந்த ஈராக்கியச் செய்தியாளர் ஒரு காலணியை முதலில் வீசினார்.
இரண்டாவது காலணியை வீசியபோது, "கைம்பெண்களுக்காகவும் அனாதைகளுக் காகவும், ஈராக்கில் கொல்லப்பட்ட அனை வருக்காகவும்," என்று கூறிய செய்தியாளர் சைடியை பாதுகாவலர்கள் மடக்கினர்.
பிற்பாடு பேசிய திரு புஷ், "உங்களுக்கு விவரங்கள் வேண்டுமானால், அவர் வீசியது 10ம் அளவு காலணி," என்று கிண்டலாகக் கூறினார்.
"காலணியை வீசியவரைப் பற்றிச் சொல்லவிடுங்கள். இது கவனம் ஈர்க்கும் வழிகளில் ஒன்று. அரசியல் கூட்டத்திற்குச் சென்று, மக்கள் உங்களைப் பார்த்து கத்தச் செய்வதைப் போன்றது இது...
"இங்குள்ள செய்தியாளர்கள் அனைவரும் மிகவும் வருந்தினர். இச்சம்பவம் ஈராக்கிய மக்களைப் பிரதிநிதிக்கவில்லை என்று அவர்கள் கூறினர். சுதந்திர சமூகத்தில், தங்களிடம் கவனத்தைத் திசைதிருப்ப விரும்புவோர் இப்படித்தான் செய்வார்கள்," என்றார் திரு புஷ்.
எதிர்பாரா தாக்குதலை அதிபர் புஷ் சொல்லாலும் செயலாலும் சமாளித்த விதம் சிறப்பாக இருந்தது.
ஈராக்கிய பயணத்தின்போது, திரு புஷ்ஷும் ஈராக்கியப் பிரதமர் மலிகியும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டனர்.
ஈராக்கில் இருந்து 2011ம் ஆண்டுக்குள் அமெரிக்கப் படைகளை மீட்டுக்கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.
