சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் எதனையும் தெரிவிக்க மாட்டோம்: சிவ்சங்கர் மேனன்
>> Saturday, January 17, 2009
|
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இடையே தற்போது நடைபெற்று வரும் உக்கிரமான போரை நிறுத்துவதற்கு உடன்படிக்கை ஒன்றை செய்யுமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் எதனையும் இந்தியா வழங்காது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவை நேற்று வெள்ளிக்கிழமை காலை சந்தித்த பின்னர் கொழும்பில் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே சிவ்சங்கர் மேனன் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விபரித்தார். புலிகளுடனான போரை நிறுத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகமவிடம் கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் நீண்டகால வரலாறு கொண்டவை. அதன் அடிப்படையில்தான் பேச்சுக்கள் நடைபெறுகின்றன என அந்த நேர்காணலில் கூறினார் சிவ்சங்கர் மேனன். இதேவேளை, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சிவ்சங்கர் மேனன் இன்று சந்திக்கவுள்ளார். இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிமசிங்க மற்றும் சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களையும் சிவ்சங்கர் மேனன் சந்திப்பார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. |
0 கருத்துரைகள்:
Post a Comment