சமீபத்திய பதிவுகள்

அனைத்துலக நாடுகளின் வேண்டுகோள்களை ஏற்று விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்ச போர் நிறுத்தம் அறிவிப்பு:

>> Sunday, April 26, 2009

அனைத்துலக நாடுகளின் வேண்டுகோள்களை ஏற்று விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்ச போர் நிறுத்தம் அறிவிப்பு: புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்தது
ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுத்திருக்கும் வேண்டுகோள்களை ஏற்று இன்று தொடக்கம் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். எனினும் விடுதலைப்புலிகளின்  போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

போர்நிறுத்தம் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வன்னியில் ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தினை தடுத்து நிறுத்தவும், இந்த பேரவலத்தினை தடுத்து நிறுத்தும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் சபை, ஜி-8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் விடுக்கும் வேண்டுதல்களை ஏற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை பிரகடனப்படுத்துகின்றனர்.

இதனடிப்படையில் நாம் அனைத்து வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளையும் காலவரையறையற்ற முறையில் இடைநிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளோம். சிறிலங்கா அரச படைகள் வன்னியில் தொடர்ந்து நடத்திவரும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு முரணான போர் நடவடிக்கைகளினால் எமது மக்கள் அனுபவிக்கும் துன்பம் அதியுச்ச அளவினை எட்டியுள்ளது.

ஒருபுறம் முல்லைத்தீவு கரையோரங்களில் உள்ள எமது கட்டுப்பாட்டுப் பகுதிகளை சுற்றிவளைத்து குவிக்கப்பட்டுள்ள சிங்களப் முப்படைகளினதும் தாக்குதல்களுக்குள் அகப்பட்டுள்ள 165,000-க்கும் அதிகமான மக்கள் நாளாந்தம் எறிகணை வீச்சு, வான் குண்டுத் தாக்குதல் மற்றும் பலவித போர் அச்சுறுத்தல்களுக்குள்ளாகி உயிரிழப்புக்களையும், படுகாயங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த பல மாதங்களாக திட்டமிட்ட முறையில் சிறிலங்கா அரசினால் இம் மக்களுக்கான உணவு, மருந்து மற்றும் பிற மனிதாபிமான வழங்கல்கள் இடைநிறுத்தப்பட்டமையால் பட்டினி அபாயம் ஏற்பட்டுள்ளது.

மறுபுறம், இப்பகுதிகளில் இருந்து பல வழிகளிலும் வெளியேறிய போது சிங்களப் படைகளிடம் அகப்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் அனைத்துலக விதிகளுக்கு முரணாக தடுப்பு முகாம்களிலும், இராணுவ வதைமுகாம்களிலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இம்மக்கள் அனைத்துலக விதிகளுக்குட்பட்ட பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெறாது துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் சொந்த இடங்களுக்கு சென்று குடியமர்வதற்கு சிறிலங்கா படையினர் அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் அந்த மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
மேலும், போர்முனைகளுக்கு இவ்வாறு அகப்பட்ட மக்களின் ஒருபகுதி கொண்டு வரப்பட்டு மனிதக் கேடயங்களாகப் பாவிக்கும் முயற்சிகளும் சிறிலங்கா அரச படைகளினால் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்தப் பின்னணியில், ஐ.நா. இப்பகுதிகளுக்கு மனிதாபிமான வழங்கல் வழிகளை ஏற்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகளை நாங்கள் வரவேற்பதுடன் இம்முயற்சிகளுக்கான ஒத்துழைப்புக்களை முழுமையாக வழங்கிட தயாராகவுள்ளோம்.

மேலும் ஜி-8 நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டறிக்கை, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை, இந்திய அமைச்சர்கள் வெளியிட்ட அறிக்கைகள், ஐரோப்பிய ஒன்றியத்தின் அழைப்பு என்பனவற்றினை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்.

இன்று ஏற்பட்டுள்ள வன்னி பேரவலங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து மக்களின் இழப்புக்களை நிறுத்தி, மனிதாபிமான வழங்கல்களை விநியோகிப்பதனை உறுதிப்படுத்துவதற்கு போர் நிறுத்தப்பட்ட சூழல் அவசியமானது என்கின்ற அனைத்துலக சமூக வேண்டுதல்கள் மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.
இதற்கான முதல் முக்கிய படியாக நாங்கள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பினை இன்று விடுக்கின்றோம்.

சிறிலங்கா அரசும் இத்தகையதொரு போர்நிறுத்த ஏற்பாட்டிற்கு உடன்படுமாறு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறான போர் நிறுத்த ஏற்பாடானது மனிதப் பேரவலத்தினை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன் இன்றுள்ள மனிதப் பேரவலத்தின் பின்விளைவுகள் இலங்கைத் தீவின் மக்கள் சமூகங்கள் மீதும், பிராந்தியம் மீதும் ஏற்படுத்தக் கூடிய நீண்டகால சிக்கல்களிற்கும் முடிவுதரும் வழியினைத் திறக்கும் என்று நம்புகின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டது.

இது தொடர்பாக பேசிய இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்த நிலையில் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் கோருவது அர்த்தமற்றது என்று கூறி அதனை நிராகரித்துள்ளார்.

ஆயுதங்களை களைந்துவிட்டு, தாம் பணயமாக பிடித்து வைத்திருக்கும் பொதுமக்களை விடுதலை செய்துவிட்டு, சரணடைவது ஒன்றே விடுதலைப்புலிகளுக்கு இப்போது உள்ள ஒரே வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

மனித நேய விவகாரங்களுக்கான ஐ.நாவின் உயர் அதிகாரியான ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நிலையில் விடுதலைப்புலிகளின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP