சமீபத்திய பதிவுகள்

வரலாற்றுச்சுவடுகள்:இலங்கை தமிழர் வரலாறு-4

>> Thursday, July 2, 2009

இலங்கை மீது கரிகால்சோழன் நடத்திய படையெடுப்பு முக்கியமானது.

சங்க காலத்தில் புகழ் பெற்று விளங்கிய சோழ மன்னர்களில் தலைசிறந்தவன் கரிகால்சோழன்.

படையெடுப்பு


 
அவன், இலங்கை மீது படையெடுத்தான். அங்கு ஆண்ட சிங்கள மன்னனை முறியடித்தான். தன் வெற்றிக் கொடியை பறக்கவிட்டான்.
பின்னர் 12,000 சிங்களர்களை சிறைப்படுத்தி தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தான். அவர்களைப் பயன்படுத்தி, திருச்சிராப்பள்ளி அருகே, காவிரியின் குறுக்கே "கல்லணை''யைக் கட்டினான். உலகத்திலேயே மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை'' விளங்குகிறது.

கஜபாகு

கரிகாலன் படையெடுப்பின்போது, சிங்கள இளவரசன் கஜபாகு சிறுவனாக இருந்தான். (கஜபாகு என்றால், யானையைப் போன்ற கைகளை உடையவன் என்று பொருள்)

அவன் கி.பி. 112-ம் ஆண்டில் இலங்கை அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

அவன் ஒருநாள் நகர சோதனைக்குச் சென்றபோது, ஒரு வீட்டில் விதவைப் பெண் ஒருத்தி உரத்த குரலில் அழும் சத்தம் கேட்டது. அந்தப் பெண்ணை கஜபாகு சந்தித்து, "ஏன் அழுகிறாய்?'' என்று கேட்டான்.

"பல ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னன் ஒருவன் இலங்கை மீது படையெடுத்தான். அந்த சோழ மன்னன், சிங்களர் பலரை சிறைப்பிடித்து, தமிழ்நாட்டில் அணை கட்டுவதற்காக அழைத்துச் சென்றான். அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வரவேயில்லை. சோழனுடன் போன என் பிள்ளைகளும் திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்களோ என்று நினைத்து அழுதேன்'' என்றாள், அந்தப் பெண்மணி.

இதைக்கேட்டு கஜபாகு ஆத்திரம் அடைந்தான். கரிகால்சோழனைப் பழிவாங்குவதாக சபதம் செய்தான்.

பெரும் படை திரட்டினான். சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான்.

இதற்கிடையே கரிகால்சோழன் இறந்து விட்டான்.

சோழப் படைகளுடன் கஜபாகு கடும் போர் புரிந்து, சிறைபிடிக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் சிங்களவர்களை மீட்டான். பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில், ஆயிரக்கணக்கான தமிழர்களை சிறை பிடித்து வந்து, இலங்கையில் குடியேற்றினான்.

இலங்கை மீது கரிகால்சோழன் படையெடுத்துச் சென்றது, வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்ச்சி. மற்றவை, "பூஜாவலி'' என்ற இலங்கை நூலில் காணப்படும் தகவல்கள்.

கண்ணகி

இந்த கஜபாகு, தமிழ்நாட்டுக்கு வந்து, "கண்ணகி விழா''வில் கலந்து

கொண்டதாக, சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, இலங்கையில் கண்ணகிக்கு சிலை எடுத்து வழிபாடு செய்தான் என்றும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை, சிங்கள மன்னன் துட்டகாமினி தோற்கடித்தான் அல்லவா? அதன்பின், அப்பகுதியை தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி அரசாண்டதாக வரலாறு கூறுகிறது. ஏழு தமிழ் மன்னர்கள் இவ்வாறு அங்கே ஆட்சி நடத்தியுள்ளனர்.

மணிமேகலை

சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலை. இவளுடைய வரலாற்றை விவரிக்கும் "மணிமேகலை'' காப்பியத்தில், பழங்கால இலங்கை பற்றி குறிப்புகள் வருகின்றன.

மணிமேகலை, காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒரு பூங்காவில் மயக்கம் அடைந்து விழுந்தாள். மணிமேகலா தெய்வம், அவளை மணிபல்லவம் தீவுக்கு தூக்கிச்சென்றது.

(இலங்கையின் வடபகுதி அருகே, காரைத்தீவு என்ற தீவு உள்ளது. இந்தத் தீவுதான், பழங்காலத்தில் `மணிபல்லவம்' என்று அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.)

அந்தத் தீவில் இருந்த பெரிய புத்தர் சிலையை மணிமேகலை வணங்கினாள். அருகில் ஒரு பெரிய பொய்கை இருந்தது. பவுர்ணமி நாளில் இதில் இருந்து `அமுதசுரபி' என்ற அட்சய பாத்திரம் வெளிப்பட்டது. உணவை எடுக்க எடுக்க, தொடர்ந்து உணவு வந்து கொண்டே இருக்கக்கூடிய அதிசய பாத்திரம் அது.

அமுதசுரபியைக் கொண்டு, ஏராளமானவர்களுக்கு உணவளித்தாள், மணிமேகலை.''

இவ்வாறு மணிமேகலை காப்பியம் கூறுகிறது.

பல்லவர் படையெடுப்பு

இலங்கை மீது, நரசிம்மவர்மர் காலத்தில் நடந்த பல்லவர் படையெடுப்பு பற்றிய விவரங்கள், தமிழக கல்வெட்டுகளில் உள்ளன.
தமிழகத்தில் கி.பி. 630-660-ல் ஆட்சி புரிந்த நரசிம்மவர்மர் காலத்தில், இலங்கையில் இருந்து மானவன்மன் என்ற அரசன் அவரிடம் அடைக்கலம் கோரி வந்தான்.

இலங்கையில், மணிமகுடம் யாருக்கு என்று மானவன்மனுக்கும், அவன் சகோதரன் அட்டதத்தனுக்கும் போட்டி ஏற்பட்டது. இதில் தோல்வி அடைந்த மானவன்மன் இலங்கையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டான்.

மானவன்மன், நரசிம்மவர்மரிடம் தஞ்சம் அடைந்து, தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டான். அந்த சமயத்தில், சாளுக்கிய அரசன் புலிகேசி ஆண்ட வாதாபி மீது நரசிம்மவர்மர் படையெடுத்துச் சென்றார். அவருக்கு மானவன்மன் உதவியாக இருந்தான்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், மானவன்மனுக்கு உதவியாக ஒரு படையை இலங்கைக்கு நரசிம்மவர்மர் அனுப்பினார். ஆனால் அந்தப் படை முறியடிக்கப்பட்டது. தோல்வியுடன் மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தான், மானவன்மன்.

நடந்ததை அறிந்த நரசிம்மவர்மர், ஒரு பெரும் படையை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பினார். அந்தப் படையிடம் அட்டதத்தன் படை தோற்றது. மானவன்மன் இலங்கை அரசன் ஆனான்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP