சமீபத்திய பதிவுகள்

வரலாற்றுச்சுவடுகள்:இலங்கை தமிழர் வரலாறு-5

>> Sunday, July 12, 2009

தமிழ்நாட்டின் வரலாற்றில் பொற்காலத்தைப் படைத்தவர்கள் ராஜராஜசோழனும் அவன் மகன் ராஜேந்திரசோழனும் ஆவார்கள். இவர்கள் ஏறத்தாழ இலங்கையை முற்றிலுமாக வென்று, சோழ ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக ஆக்கினார்கள். கி.பி. 982-ம் ஆண்டில், ஐந்தாம் மகிந்தன் என்ற சிங்கள அரசன் இலங்கையை ஆண்டு வந்தான். அவன், சோழர்களுக்கு எதிரிகளான பாண்டியனுக்கும், சேரனுக்கும் உதவி செய்து வந்தான்.

படையெடுப்பு

எனவே, இலங்கை மீது படையெடுக்க சோழமன் னன் ராஜராஜசோழன் முடிவு செய்தார். தன் மகன் ராஜேந்திர சோழன் தலைமையில் ஒருபெரிய கப்பல் படையை அனுப்பி வைத்தார்.

தமிழ்ப் போர் வீரர்களுடன் கப்பல்கள் இலங்கையை சென்றடைந்தன. போர்க் கப்பல்களைப் பார்த்து சிங்களர்கள் மிரண்டனர். சோழர் படையை எதிர்க்க துணிவின்றி, மன்னன் மகிந்தன் இலங்கையின் இன்னொரு பகுதியான ரோகண நாட்டிற்கு தப்பி ஓடி விட்டான். சோழர் படை, இலங்கையின் வடபகுதியை கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பகுதிக்கு `மும்முடிச் சோழ மண்டலம்' என்ற பெயர் சூட்டப்பட்டது. தலைநகரமான அனுராதபுரம் அழிக்கப்பட்டது. அதற்குப் பதிலாக பொலனறுவா நகரம் புதிய தலைநகரம் ஆக்கப்பட்டது. அதற்கு `சனநாதமங்கலம்' என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது.

சிங்கள மன்னனின் கருவூலத்தில் இருந்த நகைகள், வைர மாலைகள், அரசஅணிகலன்கள் முதலியவை கைப்பற்றப்பட்டன. உடைக்க முடியாத வாள் ஒன்று சோழர் வசமாகியது. இரண்டாவது படையெடுப்பு ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிய மகிந்தன், சும்மா இருக்கவில்லை. சோழருக்கு எதிராக பெரும்படை ஒன்றை திரட்டினான். இலங்கையில் சோழர்கள் கைப்பற்றிய பகுதியை மீட்க போர் தொடுத்தான்.

இதுபற்றி சோழ மன்னன் ராஜேந்திரனுக்குத் தெரிந்தது. அவன் கி.பி. 1017-ம் ஆண்டில் மீண்டும் இலங்கை மீது படையெடுத்தான். இரு தரப்புக்கும் இடையே பெரும் போர் நடந்தது. சோழ படைகளின் தாக்குதலை, மகிந்தன் படைகளால் சமாளிக்க முடியவில்லை. போரில் சோழர் படை வென்றது. சிங்களர் படை தோற்றது. மகிந்தனின் மணிமுடியும், அரசியின் மகுடமும் ராஜேந்திர னின் வசம் ஆகியது. அதுமட்டுமின்றி, 100 ஆண்டுகளுக்கு முன்னதாக, சிங்கள அரசனிடம் பாண்டிய மன்னன் பாதுகாப்பாக கொடுத்து வைத்திருந்த மணிமகுடத்தையும் ராஜேந்திர சோழன் கைப்பற்றினான்.

சிறையில் மகிந்தன்

போரில் தோற்றுப்போன மகிந்தன், சோழ வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு ராஜேந்திர சோழன் முன்பாக நிறுத்தப்பட்டான். ராஜேந்திரசோழன் தமிழ்நாட்டுக்கு திரும்பும்போது, மகிந்தனும் கொண்டு செல்லப்பட்டான். அங்கு சோழநாட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 12 ஆண்டு காலம் சிறையில் இருந்த மகிந்தன், சிறையிலேயே இறந்து போனான். மேற்கண்ட தகவல்கள், திருவாலங்காட்டு செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ராஜேந்திர சோழன் வெற்றியை குறிக்கும் கல்வெட்டு ஒன்று, கொழும்பு நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் இன்னும் உள்ளது. மகிந்தனை ராஜேந்திரசோழன் முறியடித்தது பற்றி, சிங்களர்களின் வரலாற்று நூலான "சூளவம்ச''த்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்தனின் மகன்

ராஜேந்திர சோழனால் சிறை பிடிக்கப்பட்ட மகிந்தனுக்கு, காசிபன் என்ற மகன் இருந்தான். போர் நடந்தபோது அவனுக்கு வயது 12. அவனை சிங்களர்கள் ரகசியமாக வளர்த்து வந்தனர். சோழ நாட்டு சிறையில் மகிந்தன் இறந்த பிறகு, காசிபனை தங்கள் மன்னனாக சிங்களர்கள் அறிவித்தனர். சோழர்களை எதிர்க்க அவன் பெரும் படை திரட்டினான்.

இதை அறிந்த ராஜேந்திர சோழன், தன் மகன் இராசாதிராஜன் தலைமையில் ஒரு படையை அனுப்பினான். கி.பி.1041-ல் நடைபெற்ற இந்தப் போரில் காசிபன் மாண்டான். சிங்களப்படை தோற்றுப்போய், சிதறி ஓடிற்று. அதன்பின், கீர்த்தி என்ற சிங்கள மன்னன் சோழர்களுடன் போர் புரிந்து தோற்றுப் போனான். அதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் அவன் தற்கொலை செய்து கொண்டான்.

பராக்கிரமபாண்டியன்

பிற்காலத்தில், சோழர்கள் புகழ் மங்கி பாண்டியர்களின் கை ஓங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், பாண்டியர்களும் இலங்கை மீது படையெடுத்தனர்.

கி.பி. 1255-ம் ஆண்டு பட்டத்திற்கு வந்த ஜடாவர்மன் வீரபாண்டியன், இலங்கை மீது படையெடுத்து வெற்றி கண்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்திய அரிகேசரி பராக்கிரமபாண்டியன் (கி.பி.1422-61) இலங்கை மீது படையெடுத்து சிங்களரை பல முறை வென்றதாக கல் வெட்டு ஆதாரங்கள் உள்ளன.

பிற்காலத்தில், விஜயநகர அரசர்களும் இலங்கையில் போரிட்டு சிங்களரை வெற்றி கொண்டுள்ளனர்.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP