சமீபத்திய பதிவுகள்

கண்டுகொள்ளப்படாத கண்டுபிடிப்பு...

>> Friday, August 21, 2009

''ஏழை சொல் அம்பலம் ஏறாது...'' என்பார்கள். சேவியர்ராஜா கதையும் அப்படித்தான்! தன்னுடைய அரிய கண்டுபிடிப்புக்காக உரிய அங்கீகாரம் கிடைக்காமல் வருடக் கணக்காக அலைந்து கொண்டிருக்கிறார் இவர்!

குமரி மாவட்டம் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சேவியர்ராஜா, மெக்கானிக்கல் டிப்ளமோ படித்தவர். படிக்கும்போதே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தவருக்கு, கல்வித் துறையில் சாதாரண கிளார்க் வேலை கிடைத்தது. ஆனாலும், ஓய்வு நேரங்களில் அறிவியல் சார்ந்த சர்வதேசப் புத்தகங்களை வாசித்து, ஆய்வுகளில் ஈடுபடுவதுமாக இருந்தவர், 'ஃப்ரீக்வென்ஸி டிரேஸ் மூவர்' (Frequency Trace Mover) என்ற கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். சர்வதேச தொலைத் தொடர் புகள் அனைத்தையும் இந்தக் கருவியின் மூலமாக நொடிப்பொழுதில் முடக்கி வைத்துவிடலாம் என் கிறார் இவர். போர்க் காலங்களில் எதிரி நாட்டின் வயர்லெஸ் சேவை, தொலைபேசி, செல்போன், இன்டெர்நெட் ஆகியவற்றையும் முடக்கி வைக்கும் திறன் கொண்டது என்று சொல்லப்படும் சேவியர் ராஜாவின் இந்தக் கண்டுபிடிப்புக்கு, இந்திய அர சாங்கம் உரிய அங்கீகாரம் வழங்கி கௌரவிக்காமல் இழுத்தடிப்பதுதான் வேதனைக்குரிய விஷயம்!

சேவியர்ராஜாவை சந்தித்துப் பேசினோம். ''வேலைக்கு போய்க்கிட்டே, ஓய்வு நேரங்கள்ல வீட்டில் உட்கார்ந்து எதையாவது புதுசா ஆராய்ச்சி செஞ்சு கட்டுரைகளை எழுதிக்கிட்டே இருப்பேன். நான் எழுதுன ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச அளவில் அறிவியல் ஆராய்ச்சிகள் சம்பந்தமான 'சயின்டிஃபிக் அமெரிக்கன்' என்ற ஜர்னலுக்கு அனுப்பினேன். முதன்முதலா என்னுடைய கட்டுரை அதில் பிரசுரமா னப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அந்த உந்து சக்தியால தொடர்ந்து ஆய்வுகளை செஞ்சேன். என்னிடம் ஏழு விதமான புதிய கண்டுபிடிப்புகள் இருந்துச்சு. 2003-ல் அப்போதைய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்திச்சு என்னுடைய கண்டு பிடிப்புகளைப் பற்றி பேசி னேன். ஆச்சர்யப்பட்ட அவர், அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸை சந்திக்க ஏற்பாடு செஞ்சார். இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச் சிப் பிரிவுக்கு என்னோட ஆராய்ச்சிகளை அனுப்பி வச்சு என்னுடைய கண்டுபிடிப்புக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து அவார்டும் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைத்தார் அமைச்சர்...'' - சொல்லிக் கொண்டே வந்த சேவியர்ராஜா, நினைவுகளின் அலைக்கழிப்பில் சட்டெனத் துவண்டு போனார். அதிலிருந்து மெதுவாக மீண்டுவந்து, ''பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஆட்டோமேட்டிக் ஏர்கிராஃப்ட் சிஸ்டம், இசட்.எக்ஸ்.புல்லட் உள்ளிட்ட என்னுடைய ஆறு விதமான கண்டுபிடிப்புகளை, 'ஏற்கெனவே இது மாதிரியான ஆய்வுகள் எங்களிடம் இருக்கு'னு சொல்லி நிராகரிச்சுட்டு, 'ஃப்ரீக்வென்ஸி டிரேஸ் மூவர்' ஆய்வை மட்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கிட்டாங்க. இந்தக் கருவி மூலமா இங்கிருந்தபடியே உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் சிறிய பகுதியிலும் தொலைத்தொடர்பு சேவையையும் எட்டிப் பிடித்து துண்டிக்கலாம். அரசாங்கத்தின் கையில் மட்டும் இது இருந்தால், சர்வதேச அளவில் இதற்கான அங்கீகா ரமும் பெற்றுவிட்டால், உலகத்தின் எந்தவொரு தவ றான தகவல் தொடர்பு சேவையையும் முடக்கிப் போடலாம். கார்கில் போர் மாதிரியான சமயங்களில் எதிரி ராணுவத்தின் தகவல் தொடர்பு வசதியை செயலி ழக்கச் செய்யக்கூடிய இந்தக் கருவியின் மகத்து வத்தை புரிந்துகொண்டு, பல தனியார் நிறுவனங்கள் இதற்கான உரிமையை என்னிடம் விலை பேச வந்தன. நான் உடன்படவில்லை. எங்கப்பா அமிர்தராஜ், ராணுவத்தில் வேலை பார்த்தவர். அதனாலதான் என்னுடைய கண்டுபிடிப்பை இந்திய ராணு வத்துக்குத் தரவே விரும்புறேன். எப்படியும் இதை ராணுவத்திடம் சேர்த்துவிடணும் என்பதில்தான் ஆர்வமா இருக்கேன்!'' என்றவர்,

''ராணுவ ஆராய்ச்சியாளர்கள் பல முறை என்னை அழைத்து விளக்கம் கேட்டாங்க. நானும் உரிய விளக்கங்களைச் சொல்லியிருக்கேன். எல்லாத்தையும் கேட்டுட்டு, 'இந்தக் கருவிக்கு காப்புரிமை வாங்கிட்டு வாங்க. நாங்க இதை ராணுவத்துக்கு எடுத்துக்கிட்டு, உங்க கண்டுபிடிப்புக்கு அவார்டு தருவோம்'னு சொன்னாங்க. காப்புரிமையும் வாங்கிட்டு, ரெண்டு வருசத்துக்கு முந்தி அதிகாரிகள் அழைத்ததின் பேரில் ஹைதராபாத் சென்று ஆராய்ச்சி யாளர்கள், விஞ்ஞானிகள் மத்தியில என்னுடைய கண்டுபிடிப்பு குறித்து விளக்கினேன். என்னோட கருத்தில் அவங்க எல்லாருக்குமே முழுத்திருப்தி இருந்துச்சு. ஆனாலும், ஏனோ எனக்கு அங்கீகாரம் குடுக்கலை. இதனால நொந்துபோய், கடந்த வருடம் அக்டோபர் மாதம் பிரதமருக்கு விளக்கமா கடிதம் எழுதினேன். அப்படியும் என்னுடைய கோரிக்கை நிறைவேறலை. அதனால்தான், என்னுடைய பதினைந்து வருட உழைப்பில் வந்த இந்த அரிய கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கொடுக்க மறுப்பதின் மர்மத்தை, நாட்டு மக்கள் தெரிஞ்சுக்கணும்கிறதுக்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புத் துறை மீது வழக்கு போட் டிருக்கேன்!'' என்றார்.

சேவியர்ராஜா தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் சமுத்திரக்கனி, அலெக்ஸ் பென்ஸிங்கர் ஆகியோரிடம் கேட்டதற்கு, ''நாட்டுக்கு பயன்படக் கூடிய புதிய கண்டுபிடிப்பை பயன்படுத்த ராணுவம் தயங்குவதற்கான காரணம் புரியவில்லை. அதனால், கருவியைக் கண்டுபிடித்த சேவியர்ராஜாவை கௌரவப்படுத்தாமல் இருந்ததற்காக பத்து கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்பட்டிருக்கு. பாதுகாப்புத் துறையின் கருத்தை அறிந்த பின்னர், முடிவை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார். பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதும், இந்தப் பிரச் னையில் முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்!'' என்றார்கள்.

சேவியர்ராஜாவின் கண்டுபிடிப்பை பாதுகாப்புத் துறை அமைச்சர் வரைக்கும் கொண்டு சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் நாம்கேட்டதற்கு, ''பொதுவாகவே, என்னிடம் யாராவது அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக உதவி கேட்டு வந்தால், அவர்களுக்கான உதவிகளைத் தட் டாமல் செய்வேன். காரணம், அவர்களிடம் என்ன திறமை இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. அதை சோதிக்கும் சக்தியும் நமக்குக் கிடையாது என்பதால், உரிய துறைகளுக்குப் பரிந்துரைப்பேன். அப்படித்தான் சேவியர்ராஜாவையும் பாதுகாப்புத் துறைக்குக் கூட் டிச் சென்றேன். அவருடைய அறிவைப் பரிசோ திக்க வேண்டியது அங்குள்ள அறிஞர்களின் கடமை. அவரிடம் நிஜமாகவே தகுதியும் திறமையும் இருக்கு மானால், அதனை முழுமையாகப் பயன்படுத்த வேண்டியது அந்தத் துறையின் கடமை. ஈகோ கார ணமாக அவருடைய திறமையை பயன்படுத்தாமல் விட்டால், அது நாட்டுக்குப் பேரிழப்பாகிவிடும் என்பதை அறிவியல் அறிஞர்களும் அரசாங்கமும் புரிந்துகொள்ள வேண்டும்!'' என்று அவரும் ஆதங்கம் காட்டிப் படபடத்தார்.

- ஆண்டனிராஜ்
படம்: ஆ.வின்சென்ட் பால்
  
  

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP