Maki

நெஞ்சத்தில் ஆயிரம் வடுக்களை சுமந்த படியே இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம்

உறவுகளே சற்று நில்லுங்கள் உங்களைத்தான்
ஆம் உங்களைத்தான் அழைத்து பார்க்கின்றேன்.

என் குரல் கேட்டும் நீங்கள் தள்ளி தள்ளி செல்வது எனக்கு தெரியாமல் இல்லை. என் உறவே நீ என்னை விட்டு தொலை தூரம் சென்ற பின்னும் இறுதிவரை எனக்காக குரல் கொடுத்தாய் ஆனாலும் அந்த இறுதி யுத்த நாளின் பின் உன் நினைவில் நாம் இல்லாமல் போய்விட்டேமே?

தேசியத்தின் மீது நீ கொண்ட அசையா நம்பிக்கை தகர்ந்ததால் நீ கோபப்படுவதாய் பலரும் பொய் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் எனக்கு தெரியும் உனக்கு எம்மை பற்றிய அக்கறையை விட உனது கனவுகள் சிதைபட்டதே கவலை என்று.

ஆம் இருபது ஆயிரம் உயிர்கள் பலியானதால் மிகவும் மனமுடைந்த தலைவன் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அமைதி வழி செல்ல..

அதை உனக்கு உரியவர்கள் சரியாய் சொல்லாமல் விட்டதன் விளைவால் அல்லது அவர்களுக்கு தெரிந்தும் உன்னை வீதியில் படு வாகனத்தை, தொடரூந்தை நிறுத்து என உன்னை தூண்டி விட்டதால் ஆவேசம் கொண்டு புலத்தின் களத்தில் நின்ற நீ

தலைவனின் தூர நோக்கத்தை அறியாமல் அதைப்பற்றி அக்கறை இன்றி வெற்றி வெற்றி, மீட்பு மீட்பு என்ற ஒலி எழ வேண்டும் என்று எண்ணியபடியே வீதிகள் தோறும் புலிக்கொடிகளை அசைத்த உறவே

சரியான திட்டமிடலின்றி வீதியில் இறங்கி என்ன கண்டாய். உன்னையும் முட்டாளாக்கி போராட்டத்தையும் சிதைத்த கூட்டத்தின் சித்தாந்தத்தை இந்த உலகம் அங்கீகரித்ததா. இவ்வளவு கொடுமை இப்பவும் இங்கு நடக்கும் போதும் அதை உந்த உலகம் கேட்டதா சும்மா உன்னையும் என்னையும் நம்பவைக்க உவங்கள் நடத்தும் நாடகங்கள் தான் உதெல்லாம் என்பததை நீ மறக்காதே…

சிந்தித்துப் பார்

உங்கள் வீதிமறிப்பு, உண்ணா விரதம், தமிழகத்தின் ஆதரவு என்று ஒருகூட்டம் ஆடிய நாடகங்களின் புகைப்படங்கள் தானே தலைவனையும் எம்மையும் நம்பவைத்து இன்று எங்களின் உயிரிலும் மேலான உயிரையே எங்களிடமிருந்து பறித்துவிட்டதே..

உன்னைத்தான் அழைக்கின்றேன்.!

எந்தன் குரல் உனக்கு கேட்கவில்லையா?

இல்லை என்னைப்பற்றி அக்கறை உனக்கு இல்லையா!

உன் கோபத்துக்கு நான் ஆளாக என்ன காரணம்!

அடிமை வாழ்வை நான் அழைக்கவில்லை உறவே,

இந்த அடிமை வாழ்வை நீயும் உன்னை நம்பிய தேசமுமே என் மீது திணித்தது. உன்னை நம்பியபடியே காய்களை நகர்த்திய தேசம் உன்னிடமும் சிங்கள தேசத்திடமும் ஒரே நேரத்தில் தோல்விகண்டது.

நான் உன்னைக்குறை கூறவில்லை.

உன்னை குறை கூற வேண்டும் என்பது எனது நோக்கமில்லை உறவே,

தாய் நாடு தீயில் எரிந்த போது நீ எழுந்து நின்ற போராடினாயே, எமக்காக குரல் கொடுத்தாயே அந்த நன்றிக்காய் தான், இந்த மடலை வரைகின்றேன்.

நெஞ்சத்தில் ஆயிரம் வடுக்களை சுமந்த படியே முள்ளிவாய்க்கால் சந்தி தாண்டி நந்திக்கடல் தண்ணீர் தாண்டிய போது தாகம் எடுத்தது. பசி வயிற்றை கிள்ளியது. முடியும் வரை நடந்தோம் முடியாத போது இருந்தோம். மாங்காய்களை உணவாக்கினோம், மோட்டை நீரை பருகினோம். பிணங்கள் நிறைந்த பூமியின் குருதிக்குள்ளால் நாங்கள் எம் அடிமை வாழ்வு நோக்கி புறப்பட்டோம்.

இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். அப்பா வவுனியாவில் இறந்த போது பிள்ளை என்னால் கொள்ளியிட முடியவில்லை. அகதி முகாம் என்ற பெயரில் என்னை அடைத்து வைத்திருக்கின்றது சிங்களம்.

என் நேச உறவே, பாசப்பிணைப்பே,

உன் சக்திக்கு மீறி நீ எதையும் செய்ய வேண்டாம், உன்னால் முடிந்ததை செய்,

பணத்தை அள்ளி கொட்டவேண்டாம், பாசத்தில் எமக்காய் மீண்டும் நீ குரல் கொடு.!

வீதிகள் தோறும் பதாதைகள் பிடி, விழவில்லை ஈழம், அது அக்கினிக்குஞ்சாய் காலம் கடந்தாவது எழும் என்று உரத்து சொல்லு!

முட்கம்பி வேலிகள் உடைபட, சிறகுகள் விரிக்கும் ஆசை எமக்குமுண்டு!

உறவோடு ஆசையோடு கதை பேச எனக்கும் ஆசை!

எம் பெண்களின் மானம் காக்கும் பொறுப்பு எனக்குமுண்டு!

ஆனாலும் என்னோடு இந்த பொறுப்பு உனக்கு உண்டு

உன்னால் மட்டுமே நாம் மீட்க்கப்படுவோம். உன்னால் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை எமக்கும் உண்டு எனவே கோபம் தவிர், வேற்றுமை களை நாளைய எதிர்காலத்தை எமக்கு அமையாதியாக்க இன்று நீ குரல் கொடு….

இறுதியாய் ஒரு ஆசை .. நான் சின்னவன்…

ஈழம் எண்டு என்ரை அப்பப்பா எழுதி கீறிக் காட்டியதை பார்த்து தெரிந்த எனக்கு எங்கட வேங்கைகள் ஈழத்தை தலைவரின் தலைமையில் ஆண்டதை கண்ணால் கண்டவன் எண்ட உரிமையோடு சொல்லூறன்..

எங்கடை மண்ணில் மாவீரர்களின் கல்லறைகள் எல்லாம் சிங்கள ஆமிக்காறன் சிதைத்துப்போட்டான் ஆனாலும் இப்போ அந்த கல்லறைகளெல்லாம் என்ரை நெஞ்சுக்குள்ளும் உன்ரை நெஞ்சுக்குள்ளும் கோவிலாக குடிகொண்டிருக்கு என்பதை எப்போதும் மறவாதே…

மனதை தேற்றிக்கொள் நாங்கள் உயிராய் நேசித்த அந்த உயிர் இப்போ எங்களிடம் இல்லை …. ஆனால் அந்த உயிர் விதைத்துச் சென்ற விடுதலைத் தீ இப்பவும் இங்கும் உங்கும் உலகமெங்கும் அணையாமல் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த ஆத்துமாவின் இலட்சியம் நிச்சயம் நிறைவேறும்…

அந்த ஆத்துமா பலருக்கு உயிர் பிச்சை கொடுத்து நல்ல வாழ்வை கொடுத்தது. அந்த ஆத்மாவோடு கூட இருந்த பலர் கிளிநொச்சிக்கு ஆமி வந்த போதே அந்த ஆத்துமாவை தனித்து விட்டீட்டு ஆமிக்காரனோடை போய் சேந்துகொண்டு இப்போ அந்த ஆத்துமாவாலதான் போராட்டம் தோத்ததென்று கதைக்கிறாங்களாம்

அன்புறவே அதை நீ நம்பாதே…..

என்ன செய்வது தூற்றுவார் தூற்றட்டும் நீ துணிந்து நில்…

உண்மைக்காய் உழை…

ஆன

மறந்துவிடாதே எம்மையும் உன்னையும் இந்த உலகத்துக்கு காட்டிய அந்த ஆத்துமா இப்ப எங்களுக்கு ஒரு குறியீடு மட்டும் தான்..

இதை நீ நெஞ்சில் நிறுத்தி எங்கை உயிரிலும் மேலான அந்த உயிருக்கும் சேர்த்து உன் நெஞ்சினில் விளக்கு கொழுத்தி வழிபடு…

அந்த உன்னத ஆத்துமா உன்னை வழிநடத்தும்…

மகிழினி
ஆனந்தகுமாரசாமி முகாம்
செட்டிகுளம்.


source:tamilspy