சமீபத்திய பதிவுகள்

முட்கம்பி வேலி கடந்து வந்து விட்டார்கள்; ஆனால், இனி...?

>> Thursday, December 17, 2009

 
 

கிழக்கு இலங்கையைச் சேர்ந்தவர் வைரமுத்து பவானி.

தனது உறவினர் ஒருவரின் திருமணச் சடங்கிற்காக மூன்று வருடங்களின் முன்னர் வடக்கிற்கு அவர் போயிருந்தார்.

கடந்த செப்டெம்பர் மாதம் வரையில் அவரால் தனது சொந்த இடத்திற்குத் திரும்பி வர முடியவில்லை; வடக்கில் நடைபெற்ற போரில் சிக்கிக்கொண்டார்.

குண்டுத் தாக்குதலால் தன்னுடைய குடும்பத்தில் 6 உறுப்பினர்களையும், தனது கால்கள் இரண்டையும் அவர் பறிகொடுத்துவிட்டார்; அந்த நிலையிலும் பல மாதங்களை, மக்கள் நிரம்பி வழிந்த தடுப்பு முகாம்களில் அவர் கழிக்க வேண்டி இருந்தது.

இப்போதும் கூட - அரச அதிகாரிகளின் கடும் கண்காணிப்புக்கு மத்தியிலேயே அவர் வாழ்கிறார்.

தடுப்பு முகாமிலிருந்து அவர் கிழக்குக்குத் திரும்பிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் தனது வீட்டிற்கு வந்து பார்த்துச் செல்கிறார்கள் என பவானி கூறுகிறார்.

"வன்னியில் நான் எங்கு போனேன், அங்கு என்ன செய்தேன் என்பது பற்றி அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்" என்றார் பவானி.

அவருக்கு 25 வயதாகிறது; தனது சகோதரியின் வீட்டுத் தரையில் அமர்ந்தபடி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்; சோர்வையும் சலிப்பையும் விரட்டுவதற்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

போருக்குப் பின்னரான சிறிலங்காவில் அரசின் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையைக் கட்டி எழுப்ப அல்லல்படும் இலட்சக் கணக்கான மக்களில் ஒருவர் தான் பவானி.

வைரமுத்து பவானி [ படம் - நன்றி: Associated Press ]

அமெரிக்காவி்ல் வெளிவரும் The Philadelphia Inquirer ஏட்டிற்காக Associated Pressநிறுனத்தின் எரிக்கா கினெட்ஸ் [ Erika Kinetz ] எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக் கட்டுரையி்ல் மேலும் எழுதப்பட்டுள்ளதாவது:

நாட்டின் வடக்கில் நடைபெற்ற இறுதிப் போரில், படையினர் முன்னேறிய போது விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் 300,000 தமிழ் மக்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். 

இந்த தமிழ் அகதிகளில் பெரும்பாலானவர்கள் இன்று எதிர்காலம் பற்றிய உறுதியின்மையின் பல்வேறு தளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

சிறிலங்காவின் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்காகப் போராளிகள் நடத்திய கால் நூற்றாண்டு காலப் போரில் 80,000 முதல் 100,000 வரையான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுவிட்டன.

கடந்த மே மாதத்தில் அந்தப் போராளிகள் தோல்வியடைந்த பின்னர், சனக் கூட்டத்தால் நிரம்பி வழிந்த முகாம்களில் சிறிலங்கா அரசு மக்களை மந்தைகள் போன்று அடைத்து வைத்தது.

அவர்களுடன் பல போராளிகளும் அடைக்கப்பட்டு இருந்தார்கள். 

இந்த முகாம்களின் நிலைமை குறித்து மனித உரிமை அமைப்புக்களும் மேற்கு நாடுகளும் குறை கூறி வந்தன; இது தமிழ் மக்கள் எல்லோருக்கும், சட்டவிரோதமாகக் கூட்டுத் தண்டனை வழங்கப்படும் செயல் என அவை தெரிவித்தன.

அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, முகாம்களை ஜனவரி மாத இறுதியில் மூடிவிடுவதாக சிறிலங்கா அரசு அறிவித்தது. 

ஆனால், ஏற்கனவே தமது சொந்த இடங்களுக்குக் திரும்பியவர்கள் கூட காவல்துறையினரின் அனுமதி இன்றி எங்கும் பயணிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது வீடுகளுக்குப் படை அதிகாரிகள் அடிக்கடி வந்து பார்த்துச் செல்கிறார்கள். 

இழுத்துச் செல்லப்பட்ட அல்லது தெரிந்தே படையினரால் விசாரணைக்கு எனக் கூட்டிச் செல்லப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் குறித்த செய்திக்காகப் பலர் காத்துக் கிடக்கிறார்கள். 

இவ்வாறு அகதிகள் அரசினால் கண்காணிக்கப்படுவதும் அவர்களது வருமானத்திற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு தவறுவதும் இன ரீதியான பிரிவினைப் பதற்றத்தை மீண்டும் ஏற்படுத்தி விடுமோ என மனித உரிமைகள் குழுக்கள் அஞ்சுகின்றன. 

"இடம்பெயர்ந்த 300,000 மக்களையும் அவர்களது உறவினர்களையும் இந்தச் செயல்கள் மனமுடைய வைத்துள்ளன" என்றார் மீனாட்சி கங்குலி [ Meenakshi Ganguly ]. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அவர் [ researcher at the Human Rights Watch ]. 

"தங்களுடையது அல்லாத, நம்பிக்கை வைக்க முடியாத அரசு ஒன்றின் கீழ் தாம் வாழ்கிறார்கள் என்று அந்த மக்கள் எண்ணத் தலைப்படுகிறார்கள்" எனக் கவலை தெரிவித்தார் அவர். 

சிறிலங்காவில் உள்ள 20 மில்லியன் மக்களில் பெரும்பான்மையாக இந்துக்களைக் கொண்ட தமிழர்கள் 18 விழுக்காட்டினரே.

பெரும்பாலும் பௌத்தர்களை உள்ளடக்கிய பெரும்பான்மையினரால் தாங்கள் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர் எனத் தமிழர்கள் பல பத்தாண்டுகளாக முறையிட்டு வருகின்றனர். 

அதேசமயம் - அகதிகள் அரசிடம் இருந்தும் தொண்டு அமைப்புகளிடம் இருந்தும் உதவிகளைப் பெற்று வருகின்றார்கள் என்று புனர்வாழ்வு மற்றும் பேரிடர் உதவி அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். 

"போரின் கடைசிப் பகுதியில் இடம்பெயர்ந்த பின்னர் வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பக்கத்து நாடான இந்தியா தகரக் கூரைகளையும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் 25,000 ரூபா பணத்தையும், 6 மாதங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களை உலக உணவுத் திட்டமும் [ World Food Program ] வழங்கி வருகின்றன" என்றார் அமைச்சர்.

விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். 

அகதிகளில் பலர் விடுதலைப் புலிகள் ஏற்படுத்திய துன்பங்களையும் தாங்கியவர்கள்.

சண்டை நடைபெற்ற பகுதிகளில் இருந்து தப்பியோட முயன்ற மக்கள் போராளிகளால் சுடப்பட்டார்கள் என்றும் தமது பிள்ளைகள் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 

6,000 சிறுவர்கள் பலவந்தமாகப் படைக்குச் சேர்க்கப்பட்டார்கள் என ஐ.நா. சிறுவர் அமைப்பு UNICEF குற்றஞ்சாட்டி உள்ளது. 

"அங்கே பிள்ளைகளை வளர்ப்பதென்பது, ஆடு மாடுகளை வளாத்துக் கொல்லக் கொடுப்பது போன்றது" என்றார் சுகதாஸ் ராஜ்வதனி.

34 வயதான அவர், கடந்த ஒக்டோபரில் தான் தனது சகோதரியின் வீடு அமைந்துள்ள துறைமுக நகரான திருகோணமலைக்குத் திரும்பி இருக்கிறார்.

பிள்ளைகளைப் பிடித்துச் செல்ல போராளிகள் வந்த போது - தனது குழந்தைகளை ஒரு குழிக்குள் மறைத்து வைத்து, அதன் மேல் இரும்புத் தகடு ஒன்றைப் போட்டு மூடி - அந்த இரும்புத் தகட்டுக்கு மேலே உலைப் பானையை வைத்து அவர் மறைத்துள்ளர்.

ஒரு நாள் இரவு தமது கூடாரத்திற்கு அருகில் இருந்த கூடாரத்திற்கு வந்த பேராளிகள், அங்கிருந்த சிறுவனைப் பிடித்துச் செல்வதற்குத் தடையாக இருந்த அவனது தந்தையைச் சுட்டுக்கொன்றனர் என்று ராஜ்வதனி கூறுகிறார். 

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பையன் "இவங்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேணும்" என்று உரக்கக் கத்தினான் என அந்த நினைவுகளை மீட்கிறார் ராஜ்வதனி.

அப்போது - அங்கிருந்தர்கள் எல்லோரும் - தமது கைகளில் கிடைத்த தடிகளை எடுத்துக் கொண்டு போராளிகளைத் துரத்தித் துரத்தித் தாக்கத் தொடங்கினர். இந்தக் குழப்பம், கொந்தளிப்புகளுக்கு நடுவே ராஜ்வதனியின் குடும்பம் நீரேரியைக் கடந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பி வந்தது. 

அந்தச் சமயத்தில் - இரு தரப்பிலிருந்தும் பீரங்கிக் குண்டுகள் வீசப்பட்டதாக அவர் கூறுகிறார். அவருக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த பெண் எறிகணைச் சிதறல் தாக்கி அப்படியே தலைகுப்புற தண்ணீருக்குள் வீழ்ந்துள்ளார். 

"எங்கள் முன்னாள் வீழ்ந்து கொண்டிருந்த பிணங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு நாங்கள் தொடர்ந்து நடந்தோம்" - ராஜ்வதனியின் குரல் இறுகுகிறது.

தனது வீட்டில் இருப்பது குறித்து இப்போது மகிழ்ச்சியடைகிறார் ராஜ்வதனி; சுற்றிவர மதில் சுவர்கள் கட்டப்பட்ட அந்த வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் அவர் தங்கி இருக்கிறார்.

அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே இருப்பதை அவரால் நிறுத்தவே முடியவில்லை. 

ஆனால், எவருக்கும் எந்த வருமானமும் கிடையாது; தனது இரண்டு தங்க வளையல்களை அடகு வைத்துப் பெற்ற 30,000 ரூபாயுடன் தான் அவரது முழுக் குடும்பம் காலந் தள்ளுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கில் போர் முடிந்துவிட்ட போதும் கூட - தமது இடங்களுக்குத் திரும்பியதில் இருந்து, மிகச் சிலரால் மட்டுமே வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை இங்கு பெற முடிந்துள்ளது; அதிலும் பெண்களின் நிலை மிகச் சிரமமானது. 

சசிகலா சிவராஜாவும் அவரது கணவரும் வடக்கே சென்று வேலை தேடிக்கொள்ளலாம் என்று விரும்பி மட்டக்களப்பில் உள்ள தமது சிறிய கிராமத்தை விட்டு 2006 ஆம் ஆண்டு வெளியேறினார்கள்.

கடந்த ஓகஸ்ட் மாதம் சசிகலா திரும்பி வந்தார்; அவரது கணவர் வரவில்லை. இப்போது அவரும் இரண்டு குழந்தைகளும் நிவாரண உணவை நம்பியும் அவரது சகோதரியின் உதவியை நம்பியுமே வாழ்கிறார்கள். 

பவானியின் வேலை வாய்ப்பு நிலவரமோ மிகக் கேவலமாக உள்ளது. உள்ளுர் தேவாலயம் ஏற்பாடு செய்திருந்த தையல் வகுப்புக்களில் கலந்துகொள்ளும் ஆர்வம் அவருக்கு முன்னர் இருந்தது; ஆனால், இப்போது அவர் செய்வதறியாது இருக்கிறார்.

ஏனென்றால் - "அந்த தையல் இயந்திரங்களை இயக்குவதற்குக் கால்கள் வேண்டுமே...".

தொடர்பான செய்திகள்:

முட்கம்பிச் சிறையிலிருந்து விடுதலை; ஆனால், தமிழர்கள் கொடுத்த விலை...

11,000 முன்னாள் புலிப் போராளிகள் வெளித் தொடர்புகள் ஏதுமின்றி "இரகசிய முகாம்"களில் அடைப்பு: நிலைமை கேள்விக் குறி

படங்களால் ஒரு செய்தி: வளமான மண்ணிலிருந்து வரண்ட நிலத்திற்கு

11,000 முன்னாள் புலிகள் சிறையில்: 200 பேருக்கு விசாரணை; மிகுதி எல்லோருக்கும் விடுதலையாம்

source:puthinappalakai


--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP