usaஅகதி முகாம்களில் இருக்கும் தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் போர் நடந்த போது அந்த பகுதியில் இருந்து வெளியேறிய 2 லட்சத்து 80 ஆயிரம் தமிழர்களை பல்வேறு முகாம்களில் அடைத்து வைத்து உள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு செல்ல இதுவரை அனுமதிக்க வில்லை.

அவர்கள் அங்கிருந்து வெளியேறி விடாதபடி முள்வேலி அமைத்து ராணுவத்தினர் காவலுக்கு நிற்கின்றனர்.

இந்த முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட வில்லை. இத்தனை பேர் தங்குவதற்கு வசதியான இடமும் ஒதுக்கவில்லை. ஆடு, மாடுகளை போல ஒட்டு மொத்தமாக அடைத்து வைத்து உள்ளனர்.

இந்த நிலையில் அங்கு பலத்த மழை பெய்தது. இதனால் அகதி முகாம்கள் முழுவதும் தண்ணீர் தேங்கி வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் நோய் ஏற்பட்டு 5 பேர் பலியாகி உள்ளனர். தண்ணீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்பட்டு பலர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் எரிக்சாவர்ட்ஸ் கூறியதாவது:

இலங்கையில் மக்களின் அடிப்படை சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் எந்த நாடாக இருந்தாலும் சரி ஒரு இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களை அந்த இடத்திலேயே மீண்டும் குடியமர்த்த வேண்டும் இது தான் நீதியாகும். ஆனால் அதை இன்னும் இலங்கை அரசு செய்ய வில்லை.

தற்போதைய மழையால் முகாமில் உள்ள மக்கள் பெரும் துன்பத்தில் சிக்கி உள்ளனர். இன்னும் பருவ மழை பெய்ய இருக்கிறது. இதனால் நோய் பரவி ஆபத்து ஏற்படலாம். எனவே முகாமில் உள்ள தமிழர்களை உடனே விடுவித்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்