சமீபத்திய பதிவுகள்

ஈழம்:வெற்றி தந்துள்ள வெறி

>> Sunday, January 31, 2010

'மகத்தான வாக்கு வித்தியாசத்தில் வென்று மறுபடியும் இலங்கை அதிபராகி இருக்கிறார் மகிந்தா ராஜ பக்ஷே!

இலங்கையில் 1972-ம் ஆண்டில் இருந்து அதிபர் ஆட்சி முறை நடைமுறையில் இருக்கிறது. வில்லியம் கோபல்லா, ஜெயவர்த்த னே, பிரேமதாசா, விஜேதுங்கே, சந்திரிகா குமாரதுங்கே ஆகியோரின் வரிசையில் கடந்த 2005-ம் ஆண்டு அதிபரானார் மகிந்தா ராஜபக்ஷே. 2012-ம் வருடம் வரை அவர் பதவியில் இருக்கும் நிலையில், விடுதலைப் புலிகளுடனான போரில் பெற்ற வெற்றியை முன்னிறுத்தி முன்னதாகவே தேர்தலை சந்தித்தார். கடந்த ஜனவரி 26-ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில், இரண்டாவது முறையாக வெற்றி பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் புதிய சாதனையும் நிகழ்த்தியிருக்கிறார்.

தேர்தல் முடிவில் ஃபொன்சேகா சார்ந்த ஐக்கிய தேசிய முன்னணியின் தொண்டர்கள்கடுமை யான விமர்சனங்களை முன்வைத்துக் கொந்தளிக் கின்றனர்.

ஐ.தே.க. செயலாளரான திஸ்ஸ அத்தனாயக்காவிடம் பேசினோம். ''இலங்கையில் தேர்தல் ஜனநாயகமான முறையில் நடக்காது என்பது நாங்கள் எதிர்பார்த்ததுதான். அதனால் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பார்வை யாளர்களை தேர்தலைக் கண்காணிக்க வரும்படி அழைத்திருந்தோம். அவர்கள் வராத நிலையில்... ஆசிய நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் தேர்தலைக் கண்காணித்தனர்.

இந்தத் தேர்தலில் சிறுபான்மை இனமான தமிழர் மற்றும் முஸ்லிம்களுக்கு இருந்த 35 லட்சம் வாக்குகள் ஃபொன்சேகாவுக்கே ஆதரவாக இருந்தன. அதனால் சிறுபான்மை வாக்குகளை திட்டமிட்டுத் தடுத்தது ராஜபக்ஷே தரப்பு. தேர்தல் தினத்தன்று யாழ்ப்பாணம், நல்லூர், மாணிக்பாய், கோண்டாவில் போன்ற தமிழர் பகுதிகளில் அதிகாலை இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தொடர்ச்சியாக 13 குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஆவரங்காலில் உள்ள த.தே.கூ எம்.பி-யான சுரேஷ் பிரேமச்சந்திரன் வீட்டிலும் தாக்குதல் நடந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்பதற்காகவே பேருந்து சேவைகளை சுத்தமாக நிறுத்தினர்; ரயில் சேவைகளும் தடை செய்யப்பட்டிருந்தன. வன்னி மாவட்டம் பண்டாரிக்குளம் கிராமத்தில் சுமார் 10 ஆயிரம் பேரை வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தியிருக்கிறது ராணுவம். கிழக்கில் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கவச வண்டிகளையும் ராணுவத்தையும் நிறுத்தி, போர் சூழல் கணக்காய் மக்களை பயமுறுத்தியிருக்கிறார்கள். மலையகத்தில் தமிழர் பகுதிகளில் மக்களின் வாக்காளர் அடையாள அட்டைகள் மொத்தமாக பிடுங்கப்பட்டு, கள்ள ஓட்டுப் போட பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

மொத்தமுள்ள 35 லட்சம்சிறுபான்மையினர் வாக்குகளில் வெறும் 6 லட்சம்வாக்குகள் மட்டுமே பதிவாகியிருக்கிறது. பதிவானவற்றில் 70 சதவிகித வாக்குகளை ஃபொன்சேகா பெற்றிருக்கிறார் என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். முழு வாக்குகளும் பதிவாகியிருந்தால், தேர்தல் முடிவே மாறியிருக்கும். அதிபரின் சகோதரரான பசில் ராஜபக்ஷே, தேர்தல் ஆணையர் தயானந்த திஸாநாயக்கவை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆட்டுவித்திருக்கிறார். வாக்கு எண்ணும் இடங்களில் எங்கள் முகவர்களை அனுமதிக்கவேயில்லை. பிற வேட்பாளர்களுக்கு விழுந்த வாக்குகளையும் ராஜபக்ஷேவுக்கு விழுந்ததாகக் கணக்குக் காட்டி அவரது வாக்கு சதவிகிதத்தை உயர்த்தியிருக்கிறார்கள்!'' என குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டே போனார்.

'இதுகுறித்து இலங்கை அரசியல் விமர்சகர்களின் கருத்து என்ன?' என்று அவர்களிடம் பேசினோம்.

''இந்தத் தேர்தலில் சில சிங்களக் கட்சிகளையும், தமிழ்க் கட்சிகளையும் அரசியல்ரீதியாக தோற்கடித்திருக்கின்றனர் மக்கள். தற்போது ஃபொன்சேகாவை பொதுவேட்பாளராக நிறுத்திய ஐ.தே.கூ இடம்பெற்றிருந்த ஜே.வி.பி., ஜாதீக ஹெல உறுமய போன்ற முக்கியமான சிங்களக் கட்சிகள், கடந்த 2005 தேர்தலில் அதிபர் ராஜபக்ஷேவுக்கு ஆதரவான கூட்டணியில் இருந்தன. அதோடு, தமிழர்கள் முற்று முழுதாகத் தேர்தலைப் புறக்கணித்திருந்தனர். அப்போது ராஜபக்ஷே 50.29 சதவிகித வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றிருந்தார். எந்தப் பெரிய கூட்டணியும் இல்லாமல் தமிழர் வாக்குகளும் கிடைக்காமலேயே ரணில் 48.43 சதவிகித வாக்குகள் பெற்று மயிரிழையில் தோற்றிருந்தார். அந்தக் கணக்குடன் ஒப்பிடும்போது இந்த முறை ஜே.வி.பி., ஜாதீக ஹெல உறுமய போன்ற சிங்களக் கட்சிகள் ஃபொன்சேகாவையே ஆதரித்தன. தமிழர் வாக்கு வங்கியை வைத்திருக்கும் த.தே.கூ. அவரையே ஆதரிக்க... ஃபொன்சேகா மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றே எல்லோரும் கணித்தனர். ஆனாலும் ராஜபக்ஷே மீண்டும் ஜெயித்துவிட்டார். விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றிக்கு முழு நாயகனாக ராஜபக்ஷேவையே சிங்கள கிராமப்புற மக்கள் நினைத்ததுதான் இதற்கு முதல் காரணம். சிங்களக் கட்சிகளான ஜே.வி.பி-யின் கோட்டையாகக் கருதப்படும் திஸ்ஸமஹராம, ஐ.தே.கட்சியின் மீரிகம, ஜ.ஹெ.உறுமயவின் மொனராகலை போன்ற பகுதிகளில்கூட ராஜபக்ஷேவுக்குத்தான் மிக அதிக வாக்குகள் கிடைத்துள்ளன!

ராஜபக்ஷே தரப்பு... 'த.தே.கூட்டமைப்புடன் சில ரகசிய ஒப்பந்தங்களை ஃபொன்சேகா செய்து கொண்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் புலிகள் மீண்டும் தலை தூக்குவார்கள்...' என பிரசாரத்தில் முன்னிலைப்படுத்தி அந்த ஒப்பந்த நகல்களையும் சிங்கள மக்களுக்கு வீடு தோறும் நோட்டீஸாக வழங்கியிருந்தது. இது சிங்கள மக்களின் இன வாதத்தைத் தூண்ட... அவர்கள் ராஜபக்ஷேவுக்கே வாக்களித்திருக்கிறார்கள். தேர்தலில் 13 லட்சம் அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்குவதாக ஃபொன்சேகா கூறியிருந்த நிலையில், 2,500 ரூபாய் மட்டுமே ஊதிய உயர்வு வழங்குவதாக ராஜபக்ஷே கூறியிருந்தார். இருந்தாலும் அரசு ஊழியர்களின் வாக்குகள் ராஜபக்ஷேவுக்குத்தான் விழுந்திருக்கின்றன!'' என்கிறார்கள்.

ஃபொன்சேகாவின் அடுத்த கட்ட 'மூவ்' குறித்து அவர் ஆதரவுப் பேச்சாளரான மனோ கணேசனிடம் பேசினோம். ''தேர்தலில் பல்வேறு அடக்குமுறைகளினால் ஆளும் தரப்பு வெற்றி கண்டுள்ளது. தற்போதைய நிலையில் ஃபொன்சேகாவின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை... அதனால் சில காலம் அவர் ஏதாவது ஒரு வெளிநாட்டில் வசிக்கலாம் என எண்ணுகிறார். தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட்டதற்காக ஒருவரை கைது செய்ய நினைப்பது ஜனநாயகத்தைக் கொல்வதற்கு சமமாகும்!'' என கொதித்தார்.

இதற்கிடையில் போர் காலங்களில் இலங்கை ராணுவத்துக்கு ஃபொன்சேகாவின் மருமகனின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட ஆயுத பேரங்களில் பெருமளவு ஊழல் இருப்பதாகச் சொல்லி அவரையும் அவர் மருமகனையும் கைது செய்யும் முடிவிலிருக்கிறாராம் பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே. இந்த ஆயுத பேர குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கெனவே நாம் ஜூ.வி-யில் எழுதியுள்ளோம்!

தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர் சிவாஜிலிங்கத்திடமும் பேசினோம். ''ஏற்கெனவே மூன்று தசாப்த காலமாக இனவாதத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இது மிகவும் கெட்ட காலம்! தமிழ் மக்களைக் கொன்று குவித்து... அதன் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த ராஜபக்ஷே, தற்போது சிங்களப் பேரினவாதத்தின் பெரிய ஆதரவால் அசுர பலத்துடன் அதிபராகியிருக்கிறார். இது வேதனையில் வெந்து மடியும் தமிழர்களை இன்னும் கொடுமைக்கு உள்ளாக்குவதற்கான ஆரம்பம். தமிழ் மக்களுக்கு கேடயமாக இருந்த புலிகளும் இல்லாத நிலையில்... இனி எங்கட தமிழ் சொந்தங்களை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் எனத் தெரியவில்லை. அதற்கான வழிகளும் புலப்படவில்லை!'' என நா தழுதழுக்க தேம்பினார் சிவாஜிலிங்கம்.

''கள் குடித்த குரங்கை தேளும் கொட்டிய கதையாக ராஜபக்ஷேவின் இந்த மறுவெற்றி அமைந்திருக்கிறது. ஒருபக்கம், தனக்கு வாக்களித்த சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காகவும், இன்னொரு பக்கம் வெற்றி கொடுத்திருக்கும் வெறியில் தன் தமிழர் வேட்டையைத் தொடரவும் ராஜபக்ஷே அரசுக்கு தூண்டுதல் கிடைத்திருப்பதாகவே தோன்றுகிறது. இந்த தருணத்திலும்கூட உலக நடுநிலையாளர்களும், அங்கீகாரத்துக்குரிய அமைப்புகளும் இலங்கை யில் நேரடியாக இறங்கி தமிழர்களின் நேற்றைய - இன்றைய நிலைமை குறித்த உண்மைகளை ஆராயாவிட்டால், மிச்சம் மீதியுள்ள தமிழர்களின் 'நாளை' என்பது மிகப் பெரிய அவலமாகிவிடும்'' என்று கதறுகிறார்கள் இலங்கையில் உள்ள நடுநிலையாளர்கள்.

துரோகமும் பாவமும் கூத்தாடும் அந்த மண்ணில் அடுத்து என்னதான் நடக்குமோ?

- மு.தாமரைக்கண்ணன்   
 

source:vikatan
--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP