சமீபத்திய பதிவுகள்

மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்

>> Monday, May 31, 2010


அவினாசி : மழை பொழிய வேண்டி, அவினாசி அருகே குமாரபாளையத்தில் தவளைகளுக்கு திருமணம் செய்யப்பட்டது. குமாரபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் இந்த வினோத திருமணத்தில், தண்டுக்காரன்பாளையம், அவிநாயிபுதூர், தாளக்கரை, தொட்டியனூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். திருமணத்துக்காக இரு தவளைகள் தயாராக பிடித்து வைக்கப்பட்டிருந்தன.நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நிகழ்ச்சிகள் துவங்கின. கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, ஆண் மற்றும் பெண் தவளைக்கு தனியாக பச்சைத் தென்னை ஓலைகளால் குடிசை கட்டப்பட்டது. குமாரபாளையம் புதுக்காலனியினர் மணமகள் வீட்டாராகவும், பழைய காலனியினர் மணமகன் வீட்டாராகவும் இருந்தனர். திருமண நிகழ்ச்சியில் செய்யப்படுவதைப் போலவே நிச்சயதார்த்தம், முகூர்த்த கால் நடுதல் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று காலை 6 மணி முதல் மீண்டும் பூஜைகள் செய்யப்பட்டு, நாதஸ்வர மேளம் முழங்க 6.30 மணிக்கு பெண் தவளைக்கு, ஆண் தவளையை வைத்திருந்தவர் தாலி கட்டினார். மணமகள் தவளைக்கு சீதனமாக சிறிய மாலையும், துண்டு துணியும் அணிவிக்கப்பட்டது. திருமணத்தையடுத்து, இரு வீட்டாரும் மணமக்களுடன் ஊர்வலமாக தண்டுக்காரன்பாளையம் குளத்துக்குச் சென்றனர். முற்றிலும் வற்றிப் போய், செடி, கொடி, முட்புதர்களுடன் மண்டிக் கிடந்த குளத்திற்கு நடுவில், சிறிய குழி வெட்டி தண்ணீர் நிரப்பினர். மணமக்களுக்கு பூஜை செய்யப்பட்டு, தேங்காய், பழம் உடைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. கூடியிருந்த இரு வீட்டாரும் ஒரே குரலில், "மழை பெய்ய வேண்டும்' என்று கூறி, தவளைகளை அக்குழியில் விட்டனர். ஒரே "ஜம்ப்' அடித்த இரு தவளைகளும் அங்கிருந்து "எஸ்கேப்' ஆகிவிட்டன. மணமக்கள் வீட்டார் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்.தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைத்த மணியாட்டி ரங்கசாமி கூறுகையில், ""கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், இதேபோல் மழை பெய்யவில்லை. உடனே தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தோம்; நன்றாக மழை பெய்து குளம் நிரம்பியது. அதே போல் இப்போதும் செய்தோம். எங்களது பிரார்த்தனையால், கண்டிப்பாக மழை பெய்யும் என்று நம்புகிறோம்,'' என்றார்.


source:dinamalar

--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails
Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP