சமீபத்திய பதிவுகள்

உறுதி செய்யப்பட்டுவிட்டது:ஈழத்தில் நடந்தது படுகொலை!

>> Monday, April 18, 2011



விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் மூலமாக ஓர் இன அழிப்பு முயற்சியை இலங்கை அரசு திட்டமிட்டு நடத்தியது என்று தமிழ்ச் சமூகம் கூறிவந்தது. உலகில் பலரும் இதை இனப்படுகொலை என்றார்கள். சமூக ஆர்வலர்களும் மனித உரிமை அமைப்புகளும் இதைப் போர்க்குற்றம் என்று வரையறுத்தார்கள். சிலர் மனித உரிமை மீறல்கள் என்றார்கள். இப்படியாக, இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து கொண்டே வந்திருக்கின்றன.

 எத்தனையோ புகார்கள், கோரிக்கைகள் வந்த பிறகும் ஐ.நா.வுக்கு மட்டும் தமிழர்கள் மீது கரிசனம் பிறக்கவில்லை என்று குறைகூறப்பட்டது. 2009-ம் ஆண்டு மே 18-ம் தேதி நந்திக்கடலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் கொடூரமாக முடிவுக்கு வந்தபிறகு, ஓராண்டு வரை ஐ.நா. எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. முக்கிய அரசியல் தலைவர் படுகொலை செய்யப்பட்டால்கூட அவசர அவசரமாக விசாரணைக் குழு அமைத்துப் புலனாய்வு செய்வதுதான் ஐ.நா.வின் வழக்கம். இங்கே பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் போர் என்ற பெயரில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டபோது, ஐ.நா. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

 போர் முடிந்து சுமார் 13 மாதங்களுக்குப் பிறகு இது தொடர்பாக நிபுணர் குழுவை ஐ.நா. அமைத்தது. இந்தோனேஷியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மார்ஸýகி தாரூஸ்மன் தலைமையிலான இந்தக் குழுவில் தென்னாப்பிரிக்க மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

 பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல இது விசாரணைக் குழு அல்ல.  இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் என்கிற ரீதியில் விசாரணை நடத்துவது இதன் நோக்கமுமல்ல. இலங்கை அரசை அதன் கடமைக்குப் பொறுப்பாக்குதல் என்கிற அடிப்படையிலேயே இந்த நிபுணர்குழு பணியாற்றியது. அதுவும் ஐ.நா.வின் பொதுச் செயலருக்கு ஆலோசனை வழங்குவதற்காக மட்டுமே. இந்த அளவிலாவது ஒரு குழு அமைக்கப்பட்டதே என்பதில் பலருக்குத் திருப்தி ஏற்பட்டது என்பதையும் மறுக்க முடியாது.

 கடந்த மார்ச் 31-ம் தேதியே இந்தக் குழு தனது அறிக்கையைத் தயாரித்து விட்டது. விசாரணைக் குழுக்களைப் போல இந்த நிபுணர் குழு செய்தியாளர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை. கடந்த 12-ம் தேதி தனது அறிக்கையை நேரடியாக ஐ.நா.பொதுச் செயலர் பான் கீ மூனிடம் வழங்கியது. அவரும் அதை வெளியிடவில்லை. ஐ.நா.வில் இருக்கும் இலங்கை அரசின் பிரதிநிதிகளுள் ஒருவரான ஷவேந்திர சில்வாவிடம் அறிக்கையின் ஒரு பிரதியை அவர் ஒப்படைத்தார்.

 இப்படிப்பட்ட ரகசிய அறிக்கை எப்படியோ அண்மையில் ஊடகங்களில் வெளியானது. இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு ஆதரவானதாகக் கருதப்படும் "தி ஐலேண்ட்' பத்திரிகை இந்த அறிக்கையை வெளியிட்டது. ஐக்கிய நாடுகள் சபையோ, இலங்கை அரசோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதால், இதுவே உண்மையான அறிக்கையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

 விடுதலைப் புலிகளுக்கு எதிரான உச்சகட்ட போரை, "நெருக்கடியில் உள்ள அப்பாவிகளை மீட்கும் நடவடிக்கை' என்றே இலங்கை அரசும் ராஜபட்சவும் கூறிவந்தனர். பொதுமக்கள் கொல்லப்படக்கூடாது என்கிற கொள்கையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர்கள் கூறினர்.

 ஆனால் ஐ.நா.வின் அறிக்கையில் இதற்கு நேர் எதிரான கருத்து கூறப்பட்டுள்ளது. சர்வதேச மனிதநலச் சட்டத்தையும் மனித உரிமைச் சட்டத்தையும் இலங்கை ராணுவமும் விடுதலைப்புலிகளும் மீறியிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றில் சில போர்க்குற்றங்கள் என்கிற வரையறைக்குள் வரும் அளவுக்கு மிகக் கொடிய குற்றங்கள் எனவும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

 2008-ம் ஆண்டு செப்டம்பர் முதல் போர் முடிவுக்கு வரும் வரையில் வன்னிப் பகுதியில் நடந்த சம்பவங்கள் பற்றி இந்த அறிக்கை விளக்கியிருக்கிறது.

 வன்னிப் பகுதியில் முன்னேறிச் சென்ற ராணுவம் மிக அதிக அளவில் குண்டுகளை வீசி, பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கொன்றிருக்கிறது. இந்தக் குண்டுவீச்சில் இருந்து தப்பியோடிய சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் பொதுமக்கள் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கிக் கொண்டனர். இவர்களையே விடுதலைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தி இலங்கை ராணுவத்தின் தாக்குதலைச் சமாளித்தனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

 அப்பாவிகள் கொல்லப்படுவதை எதிர்த்த ஊடகங்களையும் விமர்சித்த சமூக ஆர்வலர்களையும் இலங்கை அரசு பல்வேறு வழிகளில் மிரட்டியும் துன்புறுத்தியும் அடக்கியிருக்கிறது. மர்மான "வெள்ளை வேன்களை' பயன்படுத்தி அரசுக்கு எதிரானவர்களைக் கடத்திச் செல்லும் நடவடிக்கைகள் நடந்திருக்கின்றன. இப்படிக் கடத்தியவர்கள் காணாமலேயே போயிருக்கிறார்கள்.

 ஐ.நா.வின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் மிக முக்கியமான தகவல், 3 பாதுகாப்பு வலயப் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றியது. கடுமையான தாக்குதல் நடக்க இருப்பதால், இந்தப் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் சென்று விடுமாறு ராணுவம் முதலில் பொதுமக்களை அறிவுறுத்தியது. இந்தப் பகுதியில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது என்றும் ராணுவம் உறுதியளித்தது. இதனால், பல இடங்களில் சிதறிக்கிடந்த மக்கள் இந்தப் பகுதிகளில் குவிந்தனர்.

 இந்தப் பகுதிகளைப் பற்றிய தெளிவான வரைபடமும் உளவுத் தகவல்களும் ராணுவத்திடம் இருந்தன. அப்படியிருந்தும், பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்த ஐ.நா. மையமும் உணவு வழங்கும் பகுதியும் ராணுவத்தால் குண்டுவீசித் தகர்க்கப்பட்டன.

 காயமடைந்தவர்களுக்கு உதவி செய்வதற்காக வந்த செஞ்சிலுவைச் சங்க கப்பல் நின்று கொண்டிருந்த கடற்கரைப் பகுதியிலும் இலங்கை ராணுவம் சரமாரியாகக் குண்டுகளை வீசியது. இந்தக் கப்பல் வருவது குறித்த தகவல் ஏற்கெனவே இலங்கை அரசுக்கும் ராணுவத்துக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராணுவத்தின் உளவுப் பிரிவுக்கும் இதுபற்றித் தெரியும். அப்படியிருந்தும் கப்பலையொட்டிய கடற்கரைப் பகுதியில் குண்டுகள் வீசப்பட்டன என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது.

 வன்னியில் இருந்த எல்லா மருத்துமனைகளும் தாக்குதலுக்கு இலக்காகின. இது தவறுதலாக நடந்ததாகக் கூற முடியாது. மருத்துவமனைகள் எங்கெங்கு இருக்கின்றன என்பது ராணுவத்துக்கு நன்றாகவே தெரிந்திருந்தும், குறிவைத்து இந்த மருத்துவமனைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

 இதுபோன்ற தாக்குதல்களால் உணவு, மருந்து வினியோகம் ஆகியவை முடங்கின. வன்னிப் பகுதியில் யாருக்கும் அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளும் கருவிகளும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் ராணுவம் மிகவும் கவனமாகவே இருந்தது.

 போர் நடந்த பகுதியில் சிக்கியிருந்த மக்களின் எண்ணிக்கை வேண்டுமென்றே குறைத்துக் கூறப்பட்டது. இதன் பிறகு தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. முடிவில் 2009-ம் ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலத்தில் மட்டும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும் பகுதியினர் யாரென்றே அடையாளம் காணப்படவில்லை.

 போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகும் அரசின் கொடுமைகள் நிற்கவில்லை. போரில் இருந்து தப்பியவர்கள் பிரத்யேக முகாம்களில் அடைக்கப்பட்டனர். அடையாளம் காண்கிறோம் என்கிற பெயரில் அனைவரும் சித்திரவதை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகள் என்கிற சந்தேகத்தின் பேரில் முகாம்களில் இருந்து பிடித்துச் செல்லப்பட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.

 முகாம்களில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததால் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட சித்திரவதை முகாம்கள் போலவே இவை இருந்தன என்று ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

source:dinamani

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP