சமீபத்திய பதிவுகள்

சாதிகள் இல்லையடி பாப்பா

>> Saturday, March 8, 2008

சாதிமுறை பற்றி கீதை!

பகவான் கண்ணனின் கதையை படக்கதையாக படித்தும், "பிருந்தாவனத்தின் நந்தகுமாரன் யாவருக்கும்...", "ஆயப்பாடி மாளிகையில்...", "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே..." என பாடல்களில் கண்ணனுடன் பயணித்து வெண்ணை திருடி, கோபியர்களுடன் ஆடல் பாடல் என கற்பனையில் பயணித்து உருகியிருக்கிறேன். அந்த கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை.

அர்சுனனுக்கு வந்த கடமையின் குழப்பத்தை நீக்க கிருஸ்ண பரமாத்மா நிகழ்த்திய நீண்ட பிரசங்கம் தான் கீதை. இன்று கீதையை இந்துக்களின் புனித நூலாக பார்ப்பனீயம் திணித்திருக்கிறது. கண்ணன் பற்றியும் அவன் அருளியதாக சொல்லப்படுகிற பகவத்கீதை பற்றியும் அறியும் ஆவல் அதிகமானது. 2002 ஆம் ஆண்டு முதல் இந்த அறிவுத்தேடலை துவங்கினேன். அந்த தேடல் தற்போதைய காலத்தில் வளர்ச்சி பெறுகிறது. அறிவுக்கண் திறந்து கண்ணனை ஒரு அரசியல் சூத்திரத்தில் இயங்கியவனாக பார்க்க துவங்கிய போது, குறும்பான கண்ணனின் வேடம் கலைந்து, அவனது புல்லாங்குழல் உடைந்து கொடிய வில்லாக மாறுகிறது. கீதையை மேலோட்டமாக பார்க்கையில் நல்லவையாக தென்படுகிறது. ஆழ்ந்த சிந்தனைக்கு பின்னர், அதே வார்த்தைகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியல் சூத்திரத்தை கொண்டுள்ளதை அறிய முடிகிறது. அதன் தொடர்ச்சியாக கீதையின் அடிமைக் கட்டுகள் என்ற பதிவை தொடர்ந்த பதிவு இது.

பார்ப்பனீய மதத்தின் தத்துவங்கள் குலவழிபாடு, நாட்டார் தெய்வங்கள் என வழிபடும் மக்களையும், ஒடுக்கப்பட்ட மக்களையும் வேதங்கள் பெயரில் அடக்கி வைத்திருக்கிறது. இந்த வேதங்கள் கர்மா, தர்மம் என மக்கள் மனதில் விதைத்துள்ள நம்பிக்கைகள் ஆழமானது. அவற்றிலிருந்து விடுபட இயலாத அளவு கடவுளை முன்னிறுத்தி பார்ப்பனீயவாதிகள் தங்களுக்கு சாதகமான கதைகளை, புராணங்களை புனைந்துள்ளனர். பகவத்கீதையும் இதற்கு விதிவிலக்கல்ல. சாதியாதிக்க அடக்குமுறையான வர்ணாஸ்ரம தர்மத்தை கீதை மிக அழுத்தமாக போதிக்கிறது. இந்த கருத்தை விவாதங்களில் முன் வைக்கிற வேளைகளில் பார்ப்பனீய சிந்தனையாளர்கள் கீதையில் எந்த இடத்திலும் சாதி இல்லை என்று சாதிக்க முனைகிறார்கள்.

கீதைக்கு திராவிடர் கழகத்தின் வீரமணி அவர்களது பொருளுரையை சொன்னால் விடுவார்களா இன்றைய வலையுலக பார்ப்பனீய சிந்தனையாளர்கள்? ஆகவே, காஞ்சி மகாப்பெரியவரின் விளக்கவுரையிலிருந்து சில பகுதிகள்... (மேற்கோள் காட்டப்படுகிற பகுதி (தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகம்) என்ற புத்தகத்திலிருந்து, வேதம், பிராம்மணரல்லாதார் விஷயம் என்ற தலைப்பிலிருந்து எடுக்கப்பட்டவை) . இனி மகாப்பெரியவர் பேசுகிறார்...

"பிராம்மணன் தவிர மற்றவர்கள் பரிசுத்தியாக வேண்டாமா?அவர்களுக்கு இந்தக் கர்மாநுஷ்டானம் அத்யயனம், இவை இல்லையே என்றால், அவரவருக்கும் அவரவர் செய்கின்ற தொழிலே சித்தசுத்தியைத் தருகிறது. எந்த ஜாதியானாலும், தங்களுக்கு ஏற்பட்ட கர்மாவை (தொழிலை)ச் செய்து அதை ஈச்வரார்ப்பணம் பண்ணினால் ஸித்தி அடைந்து விடுகிறார்கள்."


பார்ப்பனீய மதத்தின் படி சூத்திரர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழிலை (கர்மாவை) செய்தால் அவர்களுக்கு ஸித்தி கிடைக்குமாம். அதை மீறி வேறு வேலை செய்தால் அவர்களுக்கு ஸித்தி இல்லையா? வேதனையுடன் "இது என் கர்மா(ம்)" என நொந்தபடியே மலம் அள்ளியும், பிணங்களை புதைத்தும், அழுக்கு துவைத்தும், முடிவெட்டியும், கழை பிடுங்கியும் வேலை செய்பவன் காலங்காலமாக அதே அவலத்தில் வாழவேண்டுமா? சமூகத்தில் அனைவரும் உடல்நலமுடன் வாழ தங்களை வருத்தி உழைக்கிற மக்கள் மனித மரியாதை இல்லாமல் நாயை விட கேவலமாக நடத்தப்படுவதை பொறுத்து அதே தொழிலை தொடர்ந்து செய்யவேண்டுமா? கர்மாவை மீறுவது கூடாதது என சங்கராச்சாரியார் சாதிக்கிற வர்ணாஸ்ரம முயற்சி இங்கு அம்பலமாகிறது.

இன்னும் கேளுங்கள் மகாபெரியவரின் வார்த்தைகளில்...

"இந்த விஷயத்தை பகவான் கீதையில் (xviii.46) தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ

யுத்தம் செய்வது, காவல் காப்பது முதலான தொழில் ஒருத்தனுக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்னொருவன் வியாபாரம் செய்கிறான், பசுவை ரக்ஷிக்கிறான். வேறொருவன் இந்த நாளில் தொழிலாளர்கள் என்று சொல்கிற labour force ஆக இருக்கிறான். பிராம்மணன் சமூகத்துக்காகச் செய்ய வேண்டிய தொழில் என்ன? இந்த லோக ரீதியில் மற்றவர்கள் தொழில் செய்கிறார்கள். ஆனால் நம்முடைய பரமாத்மாவின் அநுக்ரஹந்தானே எல்லாவற்றுக்கும் முக்யமாக வேண்டியிருக்கிறது? அதை ஸகல ஜாதியாருக்கும் ஸம்பாதித்துக் கொடுப்பதற்கான காரியங்களே பிராம்மணனுக்கு ஏற்பட்டவை...."

"
...லோகரீதியிலேயே இவன்தான் (பிராமணன்) எல்லா வித்யைகளையும், சாஸ்திரங்களையும், மற்ற எல்லார் செய்கிற தொழில் முறைகளையும் நன்றாகப் படித்து, அவரவர்க்கும் உரிய தொழிலை அவரவர்களுக்குச் சொல்லி கொடுக்க வேண்டும். Teaching (கற்றுக் கொடுப்பதே) இவன் (பிராமணன்) தொழில். மற்ற தொழில்களை இவனே (பிராமணனே) செய்யாமல், அவற்றைப் பற்றிய நூல்களைப் பயில மட்டும் செய்து, அததற்கு உரியவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதோடு நிற்கவேண்டும். மற்றவர்களின் சரீரத்தைக் காப்பாற்றுகிற காவல் காரியம், வியாபாரம், உடலுழைப்பு முதலியவற்றைவிட, அவர்களுடைய தொழில் முறை, வாழ்க்கை நெறி இவற்றையே காப்பாற்றிக் கொடுப்பதன் மூலம், அவர்களுடைய மனஸையும், அறிவையும் ரக்ஷித்துக் கொடுப்பதான இந்தத் தொழில் ரொம்பவும் பொறுப்பு வாய்ந்ததாக இருக்கிறது....
"

சூத்திரன் உடலுழைப்பு செய்வதற்கும், பிராமணர்கள் கற்றுக்கொடுக்கவும் என்ற சாதி அடிமை முறையை கீதை வலியுறுத்துகிறது என்பது இதிலிருந்து விளங்குகிறது. பிராமணர்களுக்கு என தனி வேலை, சத்திரிய சாதியினருக்கு தனி வேலை, வைசியனுக்கு தனி வேலை, சூத்திரனுக்கு தனி வேலை என கீதை சொல்லுகிற கர்மாவை (தொழிலை) மேற்கோள் காட்டி இறந்து போன மகாபெரியவர் சங்கராச்சாரியார் (தி.க.வீரமணி அல்ல) சொல்லியிருக்கிறார். கர்மாவை மீறுவது சித்தியடைய தடையாகும் என்பது பார்ப்பனீய மத கோட்பாடு. நம் மக்கள் மத நம்பிக்கையில் ஊறியவர்கள், தெய்வகுற்றம் என எல்லாவற்றிற்கும் பணிந்து அடக்குமுறையான இந்த வர்ணமுறையை ஏற்று வாழ்க்கையில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தலைமுறைகள் பல தொலைத்தவர்கள்.

BadNewsIndia என்ற வலைப்பூவில் சாக்கடையில் இறங்கி கழிவை அள்ளி எடுக்கிற ஒரு இளைஞனின் படமும், கழிவறையிலிருந்து மனித மலத்தை அள்ளி எடுக்கிற ஒரு முது வயது பெண்மணியின் படமும் போட்ட
மனிதர்களா நாமெல்லாம்? தூ!!! என்ற பதிவை படித்தேன். சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட அந்த பதிவில் சம்பந்தபட்ட பேரூராட்சியின் தலைவரையும், அரசையும் இந்த நிலைக்கு கடிந்திருந்தார். இந்த சமூக அக்கறை பாரட்டப்படக்கூடியது. ஆனால் சம்பந்தப்பட்ட பதிவர் இப்படிப்பட்ட கொடுமைகளுக்கான அடிப்படை காரணத்தை புரிந்து கொள்கிறாரா தெரியவில்லை.

அந்த பதிவில் சங்கராச்சாரியின் வரிகளை பிரதிபலிக்கிற சில வரிகள்...

"மனித கழிவை சுத்தப்படுத்தும் வேலை செய்வது ஒடுக்கப்பட்டவனோ இல்லை 'உயர்' ஜாதிக்காரனோ, அதை விடுங்கள். யாராவது செஞ்சுதான ஆவணும். என்ன இயந்திரம் வந்தாலும், மனிதனின் தயவு இல்லாமல் எந்த வேலையும் நடக்காது. "

இந்த வேலையை ஏன் ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டுமே செய்ய வேண்டும்? இதே கருத்தைத் தானே கீதையும் வேதங்களும் கூட வலியுறுத்துகிறது? இயந்திரங்கள் வந்தால் கூட இந்த வேலையை குறிப்பிட்ட மக்கள் மட்டுமே செய்ய வைக்கப்படுவார்கள். ஏன் மற்றவர்கள் இந்த வேலையை செய்யக்கூடாது அல்லது செய்ய முன் வரவில்லை? இந்த வேலைக்கான தொழில் நுட்பம் அவசியமானது அதில் மாறுபாடில்லை. இயந்திரம் வந்தால் எல்லா சாதியினரும் இந்த தொழிலை செய்ய முன் வருவார்களா? இதை பார்ப்பனீய மதம் அனுமதிக்குமா? ஒடுக்கப்பட்ட மக்கள் பூசை செய்ய அனுமதிக்காத பார்ப்பனீயவாதிகள், அதே தொழிலை செய்யுங்கள் உங்களுக்கு வாளியும், கூடைக்கும் பதிலாக தொழில்நுட்பம் தருகிறோம் என்பதன் பொருள் என்ன? ஒடுக்கப்பட்ட மக்கள் இப்படிப்பட்ட சலுகைகளை/உதவிகளை எதிர்பார்க்கவில்லை. சகமனிதனாக முழு விடுதலையே ஒடுக்கப்பட்ட மக்களின் தாகம்.

மனித கழிவை மனிதனே சுமக்கும் இந்த அவலம் தென்தமிழகம் முதல் பார்ப்பனீயவாதிகளின் கோட்டையான வட இந்தியா வரை இன்றும் நடைபெறுகிறது.

கீதை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புனித நூலல்ல. பார்ப்பனீயத்தின் அரசியல் சூத்திரம். என் மாயக்கண்ணனின் வேடம் கலைகிறது...

(கலைவது இன்னும் தொடரும்)

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

2 கருத்துரைகள்:

Anonymous March 17, 2008 at 1:13 PM  

hmmm then how com valmiki, the author of ramayana considered as brahmin. he was a hunter.

something was not interpretted properly right?

தெய்வமகன் March 17, 2008 at 8:22 PM  

உண்மைதான் நண்பரே நீங்கள் சொல்லும் விஷயம் யோசிக்க வேண்டியதே

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP